DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருப்பத்தொன்று

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இருப்பத்தொன்று

5 mins
42கவலைகளை எறி! காய்கனிகளைப் பறி! 

 

ங்கள சிறிய வயதிலிருந்து யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்த தருணங்களில் நம் மனங்களில் ஆழமாக பதிந்திருப்பது எது?


ஆறுகுளங்களில் மீன் பிடித்து மீண்டும் நீந்த விட்ட தருணங்கள்! வயல்வெளிகளில் பயிர்களைத் தொட்டு அளவளாவிய தருணங்கள்! உடனுக்குடன் பறித்து காய்கனிகளை உண்ட தருணங்கள்! நமக்கென்று சொந்தமாக நிலபுலன்கள் இல்லை என்றாலும், ஏதாவது தெரிந்தவர்கள்/உறவினர்களின் வயக்காடு தோட்டம் துறவுகளுக்கு போய் வந்த நினைவுகள், இவையெல்லாம் பசுமரத்தாணி போல் நம் மனதில் பதிந்திருக்கும்!


                                      


லாஸ்வேகாஸில் சற்று ஒதுங்கி இருந்த ஒரு இடத்தில் ‘கில்க்ரீஸ் ஆர்ச்சார்ட்’ (Gilcrease Orchard) என்று ஒரு வயல்வெளி உள்ளது. பல்வேறு காய்கறிகளும்,கனிகளும் பூத்துக் குலுங்கும் ஒரு சோலை! ‘வயல்வெளிகள் தோட்டங்கள் என்றால் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்! இதில் என்ன அதிசயம்’ என்றுதானே கேட்கிறீர்கள்?


1920ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1996ல் ‘பறி-காசுகொடு’(Pick&Pay) என்ற ரீதியில் லாபநோக்கமின்றி செயல் பட்டு வருகிறது. மக்களுக்கு விவசாய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே பிரதான நோக்கம்.


இங்கே காய்கறிகளை கனிகளை நீங்களே - ஆம் நீங்களே – நேரில் சென்று பறிக்கலாம். தேவையான வரை அங்கேயே உண்டு மகிழலாம். உங்களை கண்காணிக்கக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். இவற்றைப் பறித்து வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் மிக ஞாயமான விலையில் வாங்கிச் செல்லலாம்.


என்னென்ன காய்கறிகள் கனிகள் இருக்கின்றன? பலவற்றுள் நாம் அறிந்தவை: ஆப்பிள், பேரி(pears), மாதுளம்பழம், தர்பூஸ், பீச், இலந்தை வகை பழம் (apricots), கிர்னிபழம்(cantaloupe), தக்காளிப்பழம், பூசணிக்காய், வெள்ளரிக்காய், சீமைசுரக்காய்(zucchini), வெண்டைக்காய், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், தோட்டக்கீரைகள்(asparagus), பூண்டு போன்றவை.


பெற்றோர்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைக் குட்டிகளுடன் வருகிறார்கள். குழந்தைகளே நேரடியாக காய்கனிகளைப் பறித்து மகிழ்கிறார்கள். அவர்களுக்கு பெருமையுடன் விளைச்சலைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். தங்கள் குழந்தைப்பருவ கிராம அனுபவங்களில் மூழ்கி மகிழ்கிறார்கள். வயல்வெளிகளில், தோட்டங்களில் இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு என்று நடந்து நடந்து மகிழ்கிறார்கள்.

நடக்க முடியாதர்வளுக்கு, சுற்றிப் பார்க்க, பிரத்தியேக ட்ராக்டர் போன்ற வண்டி வசதியையும் வழங்குகிறார்கள்.


இவை, வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில், காலை 7 மணி முதல், நண்பகல் 12 மணி வரை செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.


புனிதமாலை (HALLOWEEN) கொண்டாட்டம்!

மெரிக்காவில், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 31ம் தேதி ‘ஹேலோவின்’ கொண்டாடப்படுகிறது. ‘ஹேலோவின்’ என்பது புனித மாலை என்று பொருள் படுகிறது.


பேய்… வருது… பேய்.. 

விதவிதமான பேய்த் தோற்றங்களில் வருதல், வீடுகளை பேய்வீடு போன்று அலங்கரித்தல், சாத்தான் சம்மந்தப் பட்ட காட்சிகளை சித்தரித்தல், ஒளி அலங்காரம் செய்தல், பயமுறுத்துதல், பயங்கர பேய்க்கதைகளை சொல்லுதல், பேய்ப்படங்களைப் பார்த்தல் போன்றவை இந்த கொண்டாட்டத்தில் அடங்கும். சமாதிகளுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றுதல், தேவாலயங்களுக்கு சென்று வழி படுதல் போன்றவையும் நடைபெறும்.


சில பகுதிகளில், சிறுவர்கள் சாத்தான்கள்/பேய்கள் வடிவில் உடையணிந்து, ஒவ்வொரு வீடாக செல்வார்கள். அந்த வீட்டில் அவர்களுக்கு இனிப்பு அல்லது பணம் தர வேண்டும். அல்லது அந்த வீட்டில் உள்ளவர்கள் மீதோ அல்லது வீட்டின் பொருள்கள் மீதோ குறும்புத்தனமாக ஏதாவது செய்துவிட்டுப் போய் விடுவார்களாம்.


(என் பால்ய பருவத்தில், மற்ற என் வயது ஒத்த சிறுவர் பட்டாளத்துடன், நாங்கள் வசித்த கோவையில், தாமஸ் வீதி, தெலுகு ப்ராமிண் வீதி மற்றும் சலிவன் வீதி போன்ற தெருக்களில், ஒவ்வொரு வீடாக சென்று ‘பொம்மைக் கொலு’ காட்சிகளை கண்டு களிப்போம். அந்த வீட்டில் தரும் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொடித்த பொட்டுக்கடலை-கரும்புச்சக்கரை இனிப்புக் கலவை போன்றவற்றை ருசித்து, ரசித்து உண்போம். உண்ண ஏதும் கொடுக்கவில்லை என்றால்,’பொம்மக்கோல் பட்சணம்! வீட்டப் பாத்தா லட்சணம்! அவலட்சணம்!’ என்று கத்தி விட்டு வருவோம். ஏனோ, இப்போது இது என் நினைவுக்கு வருகிறது.)


அதோடு, விதவிதமான முகமூடிகளை அணிந்து, பேய்கள், சாத்தான்கள், பூதங்கள் போன்று ஒப்பனை செய்து கொண்டு, தெருக்களில் அனைவரும் காணும் வண்ணம் உலா வருகிற ஒரு வழக்கமும் இங்கு உண்டு. சிறியவர்/பெரியவர் வித்தியாசமின்றி, ஆண்/பெண் பேதமின்றி இவ்வாறு திரிவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


லாஸ்வேகாஸில் ஃப்ரெமாண்ட் தெரு மற்றும் ‘ஸ்ட்ரிப்’ (இந்தப் பகுதிகள் பற்றி வேறு இடங்களிலும் குறிப்பிட்டிருக்கிறேன்) போன்ற பகுதிகளில் இவ்வாறு உலா வருபவர்களைக் காணவென்றே கூட்டம் அலை மோதும். உண்மையில் காணவருபவர்களைக் காட்டிலும், வேடம் அணிந்து வருபவர்களே மிக அதிகமாக இருப்பார்கள்.


நாங்கள் வேடிக்கைப் பார்க்க இந்தப் பகுதிகளுக்குப் போயிருந்தோம். சுமார் நான்கு மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. பிசாசுகளைப் போல், அகோரப் பல் வைத்த தேவதைகள் போல், பேய் ஓட்டுபவர்களைப் போல் (exorcists), எலும்புக்கூடுகளைப் போல், சாத்தான்களைப் போல், கூமாச்சி தொப்பிகளை அணிந்து மந்திரவாதிகளைப் போல், கையில் மந்திரக் கோலுடன் பேய்விரட்டிக் கிழவிகளைப் போல், விதவிதமான பயம் தரும் முகமூடிகளுடனும், அகோரப் பற்களுடனும், ரத்தம் ஒழுகும் வாய், குருதி பெருகும் கண்கள், கருகரு பேய் உடை, கழுகின் ப்ரம்மாண்ட சிறகுகளுடன், செம்பேய்கள், வெண்பேய்கள், கரும்பேய்கள், தொங்கப் போட்ட ரத்தம் ஒழுகும் நாக்குகளுடனும், இன்னும் எழுத்தில் விவரிக்க முடியாத அதி பயங்கரத் தோற்றத்துடன் நூற்றுக் கணக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுள் சிலருடன், பொதுமக்கள் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு பணமும் கொடுத்தார்கள். சில பணக்காரப் ‘பேய்கள்’ பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் இலவசமாய் போஸ் கொடுத்தார்கள்.


அது மட்டுமா? ஆங்காங்கே நடனங்கள்! பாட்டுக்கள்! இசைக்கருவி வாசிப்பாளர்கள்! ‘ட்ரம்ஸ்’ அதிர விடுபவர்கள். விளக்கு வெளிச்சங்கள்! ஒளி! ஒளி! ஒளி! ஓளி! ஒலி! ஒலி! ஒலி! ஒலி காட்சிகள்! 12.5 மில்லியன் LED விளக்குகளுடனும், 5,50,000 watt ஒலி அமைப்புடனும் நள்ளிரவில் அதிர வைக்கும் பிரம்மாண்ட அனுபவங்கள்!

 


       க்ராண்ட் கேன்யான் ‘The Grand Canyon’ பயணம்!

                    

க்ராண்ட் கேன்யான்’ என்பது உலக அதிசயங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் அமைந்திருக்கிறது. ‘கேன்யான்’ ‘Canyon’ என்றால் மலைகளுக்கு இடைப்பட்ட ஆழமான பகுதி என்று சொல்லலாம்.


                                      


இவ்வாறு பல பல மலைகளுக்கு இடையில் மிக மிக ஆழமான பகுதிகள் அமையப்பெற்ற ஒரு பிரம்மாண்டமே ‘க்ராண்ட் கேன்யான்’ என்பதாகும். சுமார் 277 மைல் நீளமும், 18 மைல் வரையிலான அகலமும், ஒரு மைல் ஆழமும் கொண்ட விஸ்தீரணத்தில் அமையப்பெற்ற இயற்கையான உலக அதிசயம். கொலராடோ மற்றும் அதன் கிளை ஆறுகளின் தொடர் தாக்குதல் மற்றும் அரிப்பின் காரணமாக, கொலராடோ பீடபூமியின் பாறைகள் நெருக்கப்பட்டு, மேல் உந்தப்பட்டு, அடுக்கடுக்காக செதில் செதிலாக செதுக்கப் பட்டு, இன்றைய இந்த அதிசய வடிவை இயற்கையாக அடைந்திருக்கிறது. சரி! எவ்வளவு காலம் இவ்வாறு இந்த தொடர் அரிப்பு நிகழ்ந்தது? குறைந்த பட்சம் பதினேழு மில்லியன் வருட காலம் என்று சொல்லப்படுகிறது!


மேற்கு திசையில் இருந்து, ஈகிள்பார்வை (Eagle Point) மற்றும் கௌனோபார்வை (Gauno Point) என்னும் இரண்டு பார்வைக் கோணங்களில் இந்த ‘க்ராண்ட் கேன்யான்’ அதிசயத்தைக் கண்டு மகிழலாம். கேன்யானின் கிழக்கு திசையில் இருந்து பார்ப்பதற்கு இன்னும் பல கோணப்பார்வைகள் கிடைக்கும்..


மலைகளை அண்ணாந்து பார்த்திருக்கிறோம். அதே மலைகள் நமக்குக் கீழே இருந்து.. அவைகளை குனிந்து பார்த்தால்… அதுவும் அடுக்கடுக்காக, செதில் செதிலாக செதுக்கப்பட்ட சரிவுகள்.. அந்த சரிவுகளுக்கு மத்தியில் மிகப் பிரம்மாண்ட – ஆதி அந்தம் உணர முடியாத ஆழங்கள்.. மீண்டும் மீண்டும் ஆழம்.. ஆழம்.. ! பார்வை பயணிக்கும் வரை அந்தம் உணர முடியாத ஆழங்கள்! கேன்யானில் பல்வேறு படிமங்கள் மற்றும் செதில்கள் அமையப்பெற்றிருக்க, அவை மஞ்சள், சிவப்பு, சாம்பல், ப்ரவுன் போன்ற எண்ணற்ற நிறங்களில் நிழற்படிவங்களாய் பிரதிபலிக்கின்றன. இடையில், தொலைவில் தெரியும் கொலராடோ ஆற்றின் அழகுத் தோற்றம் ஆளைத் தூக்கிச் சாப்பிடும்!


இந்தக் காட்சிகளை உயரமான மலைக்குன்றுகளில் ஏறி நின்று பார்க்கலாம். அது ஒரு ‘த்ரில்’! இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட ‘ஸ்கைவாக்’ (Skywalk) எனப்படும் கண்ணாடிப் பாலம் மேல் நின்று பார்க்கலாம். காலுக்குக் கீழே குனிந்து பார்த்தால் அதள பாதாளம்! கண்ணாடி வழியாக! முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் ‘த்ரில்’! இன்னும் உச்சபட்ச ‘த்ரில்’ விரும்பிகள் ‘ஹெலிகாப்டர்’ பயணம் மேற்கொள்ளலாம். மலைகளுக்கு மேல் நிலையில் இருந்து, பறவைப் பார்வையில் பார்க்கலாம். ஆழங்களின் கீழ் சென்று ஆழ்ந்து பார்த்து பிரம்மிக்கலாம். மலைகளுக்கு இடையிலான பிரதேசங்களை ஊடுருவிப்பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும், மேலும், அருகிலும் மலை முகடுகளாய் இருக்க, மலைகளுக்கு இடையிலான ஆழப் பள்ளத்தாக்குகளில் ஹெலிகாப்டரில் அமர்ந்து பறந்து திரியலாம். முகம் வெளிறி, உச்சி முடி நிமிர உணர்ச்சிப் பிளம்பாய் வெளி வரலாம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம்!


 


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 22ல் ............. தொடரும்…


Links to Previous Chapters: 1 to 20

Link To ->CHAPTER-20https://storymirror.com/read/tamil/story/attiyaaym-iruptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ge7isj3aLink To ->CHAPTER-19https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-18https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttonnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/w1h7yza8Link To ->CHAPTER-17https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnneellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/ya2hzd8cLink To ->CHAPTER-16https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll/500icvq5Link To ->CHAPTER-15https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnaintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/e3fjusfnLink To ->CHAPTER-14https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinaannnkuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/92gte56fLink To ->CHAPTER-13https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptimuunnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/qkrc8cqeLink To ->CHAPTER-12https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pnnnirennttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/8st3xzy4Link To ->CHAPTER-11https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ptinnnonnnrruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/gpv1cbdjLink To ->CHAPTER-10https://storymirror.com/read/tamil/story/attiyaaym-pttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/jtbk307cLink To ->CHAPTER-9https://storymirror.com/read/tamil/story/attiyaaym-onnnptuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/rhojyus1Link To ->CHAPTER-8https://storymirror.com/read/tamil/story/attiyaaym-ettttuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/veqm3za5Link To ->CHAPTER-7https://storymirror.com/read/tamil/story/attiyaaym-eellluoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/bmkvapm8Link To ->CHAPTER-6https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aarruoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/59qmt83zLink To ->CHAPTER-5https://storymirror.com/read/tamil/story/attiyaaym-aintuoru-paamrnnninnn-amerikkp-pynn-annnupvk-kurrippukll-koovai-ennn-tiinnntyaallnnn/luoldk3nLink To ->CHAPTER-4https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-naannnku/n8ir0y75Link To ->CHAPTER-3https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-muunnnrru/vgou2nszLink To ->CHAPTER-2https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynnt-tottr-irnnttu/9bzbu3kkLink To ->CHAPTER-1https://storymirror.com/read/tamil/story/amerikkp-pynn-tottr-onnnrru/7urar4au


Rate this content
Log in

Similar tamil story from Classics