DEENADAYALAN N

Classics

4.8  

DEENADAYALAN N

Classics

Thank You Teacher! (தமிழ்)

Thank You Teacher! (தமிழ்)

4 mins
359


 

 


Thank You, Teacher! (தமிழ்)

(My Transformation By My Teachers)

 கோவை என். தீனதயாளன்

 

அப்பொழுதெல்லாம் LKGயும் கிடையாது, UKGயும் கிடையாது! வலது கையை எடுத்து தலைக்கு மேல் செலுத்தி இடது காதைத் தொட்டால் ‘ஒன்னாம்ப்பு’ (ஒன்றாம் வகுப்பு) சேர்ந்து விடலாம். பள்ளியில் சேர புறப்படும் முன் அப்பா கையை இழுத்து இழுத்து எப்படியாவது காதைத் தொட வைத்து விடுவார். பள்ளி செல்லும் வழி நெடுக ‘காது தொடு முயற்சி’க்கான பயிற்சியை கொடுத்துக் கொண்டே வருவார். ‘காதைத் தொடாவிட்டால் பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்களே! ஒரு வருடம் வீணாகி விடுமே..’ என்று கவலைப் பட்டுக் கொண்டே வருவார்.


எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கோவை ஒப்பணக்கார வீதி நகராட்சி ஆரம்பப் பள்ளி. என்னுடைய முதல் டீச்சர் – முதலாம் வகுப்பு டீச்சர் - ‘விஜயா’ டீச்சர்! பார்க்க சற்று ‘கடு கடு’ என்று இருப்பது போல் இருக்கும். ஆனால் கடிந்து கொண்டதாக ஞாபகம் இல்லை. அவர் கரும்பலகையில் எழுதும் ‘அ’வையும் ‘ஆ’வையும் சிலேட்டில் பெரிதாக எழுதி அவரிடம் எடுத்துச் சென்று காண்பித்தால், சாக்பீசில் ஒரு பெரிய ‘டிக்’ அடித்துக் கொடுப்பார் பாருங்கள் ‘பத்மஸ்ரீ’ பட்டம் கிடைத்தது போன்று  பெருமையாக இருக்கும்.


அதை அழிக்காமல், மிகுந்த பிரயத்தனப்பட்டு, பத்திரமாக எடுத்துச் சென்று அப்படியே வீட்டில் அம்மா அப்பாவிடம் காட்டும் பொழுது, அவர்கள் ஏதோ நான் நிலவில் நடந்து விட்டு வந்தது போல் நெட்டி முறித்து ‘த்ருஷ்டி’ கழிக்கும் போது, ஏதோ ‘பத்மபூஷன்’ பட்டம் பெற்றது போல் மனம் துள்ளிக் குதிக்கும். அதன் பின் பாப்பாத்தி டீச்சர் (எங்களுக்கு தூரத்து சொந்தம் என்று நினைவு), ராஜேஸ்வரி டீச்சர், சுலோச்சனா டீச்சர், நாகரத்தினம் டீச்சர் என்று எவ்வளவோ டீச்சர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.


ஒரு வழியாக ஐந்தாம் வகுப்பு முடித்து, அப்போதைய ‘யூனியன் உயர் நிலை’ப் பள்ளியில் (இப்போதைய CSI உயர் நிலைப் பள்ளி) தேர்வு எழுதி ஆறாம் வகுப்பு சேர்ந்த முதல் நாள். கையில் ஒரு தாளுடன் வந்த ‘அண்ணா’ வாத்தியார் வந்தார். என் வகுப்பில் இருந்து சுமார் பத்து பெயர்களை சொல்லி ‘நீங்க எல்லாரும் என்னோட வாங்கடா’ என்று அழைத்து சென்ற போது சற்று பயமாக இருந்தது. ஆறாம் வகுப்பு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பத்து பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட வகுப்பில் நிறுத்தி, ‘நீங்க எல்லாம் அதிர்ஷ்டக்காரனுகடா.. இது ஆறாம் வகுப்பு ‘A’ பிரிவு. ஆங்கில மீடியம். போட்டித் தேர்வில் ஆங்கிலத்தில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால் உங்களுக்கு இந்த அதிர்ஷ்டம்’ என்று அண்ணா வாத்தியார் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை. ஏனெனில் ஆங்கில மீடியம் தமிழ் மீடியம் என்றெல்லாம் எனக்கு யாரும் எதுவும் சொல்லித் தந்ததில்லை.


அப்புறம் தான் விளையாட்டு ஆரம்பமாயிற்று! அதுவரை எல்லாவற்றையும் தமிழில் மட்டுமே படித்து வந்திருந்த எனக்கு…


(ஐந்தாம் வகுப்பில் மட்டும் - ஒரே ஒரு பாடம் ஆங்கிலம்

s.. h.. i.. r.. t.. – ஷர்ட்;

b.. l.. u.. e.. s.. h.. I.. r.. t.. - ப்ளு ஷர்ட்;

g.. i.. r.. l.. – கேர்ள்;

b.. o.. y.. - பாய்;)


…எல்லாமே ஆங்கிலம் என்ற போது தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. தமிழ் தவிர எல்லாப் பாடமும் ஆங்கிலத்தில் தான்! நான் ஆறாம் வகுப்பு விஞ்ஞான புத்தகத்தில் முதன் முதலில் பார்த்த ‘cut chewing animal’ படமும் பாடமும் எனக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. விஞ்ஞான ஆசிரியர் ‘ஜோசப் துரைராஜ்’ அவர்கள் அதை நடத்துவார். ஊஹும்.. ஒன்றுமே புரியாது.


(அப்ப்ப்..பா.. எதுக்கு சார் அவ்வளவு பெரிய்ய்ய்ய்ய்..ய மீசை! உங்களைப் பார்த்தாலே பயம். அதிலும் நாற்காலியில் உட்காராமல் எப்போதும் மேசையின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு, கையில் பிரம்புடன் பாடம் நடத்தும் பொழுது. உங்கள் பக்கம் நான் திரும்பவே மாட்டேன்..’)


ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை ‘ரொம்ப நல்லா படிக்கிற பையன்’ என்கிற அடைமொழியோடு படித்து விட்டு, இப்போது ஆங்கில மீடியத்தில் நடத்துவது ஒன்றுமே புரியவில்லை என்றவுடன் அழுகை அழுகையாக வந்தது.


‘பொன்பாண்டியன்’ சார் எடுத்த சோசியல் பாடம் மட்டும் என்ன வாழ்ந்தது? Mesopotamia (மெசபொடோமியாவும்), deccan plateau (தக்காண பீட பூமியும்), peninsula (தீபகற்பமும்) பாடாய்ப் படுத்தின.


If a person does one work in ten days, in how many days..) கணக்கு வாத்தியார் White&white – எப்போதும் வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட் மட்டுமே அணிவார் – சண்முகம் சார், எம்ஜியாருக்கு நம்பியார் போல் எனக்கு பெரிய வில்லனாக தோற்றம் அளித்தார்.


என் இன்னொரு ஆசிரியர் - ஆறு முதல் எட்டு வரை என் வகுப்பு ஆசிரியர். வகுப்பு ஆசிரியர் மட்டுமின்றி மூன்று வருடங்களும் ஆங்கில ஆசிரியரும் கூட. அவர்தான் எல். புஷ்பராஜ் சார் அவர்கள். அவர் நடத்தும் ‘க்ராமர் கச்சேரி’ பள்ளி முழுவதும் பிரசித்தம்! அதாவது ஆங்கில இலக்கணம் (active-passive, direct-indirect, degrees of comparison, subject, predicate, object, noun, gerund..!) ஒரு அத்தியாயம் நடத்தி முடித்து அடுத்த நாள் கேள்வி கேட்பார். எல்லோரும் நின்றபடி ஒரு கை முட்டியை நீட்டிக் கொண்டு இருக்க வேண்டும். அவர் பிரம்பை நீட்டிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் அருகில் வந்து கேள்வி கேட்பார். சரியாகச் சொன்னால் அடுத்த ஆளுக்குப் போய் விடுவார். தவறாகச் சொன்னால் ஒரே அடிதான்.. முட்டி பழுத்து விடும்.



என்ன பார்க்கிறீர்கள்? என்னடா இவன்! எல்லா ஆசிரியரையுமே குறை சொல்லிக் கொண்டே இருக்கிறானே என்றா? உண்மைதான் ஒரு காலத்தில் எனக்கு சிம்ம சொப்பனமாகிய விளங்கிய இது போன்ற ஆசிரியர்கள்தான், என் வாழ்க்கையை இன்றைய நேர்மையான ஒழுக்கம் நிறைந்த அறிவார்த்தமான வாழ்க்கையாக உருமாற்றம் செய்து, எனக்கு வழங்கிய மகான்களாக இருக்கிறார்கள்.



பின்னாளில் பாடங்களை எளிதாகப் புரிய வைத்ததோடு நட்புடனும் விளங்கி தைரியம் அளித்த துரைராஜ் சார் அவர்களையும், பள்ளிப் பாடங்களை எளிமையுடன் நடத்தியதுடன், சாரண இயக்கத்தில் என் தோழர் போல் விளங்கிய பொன்பாண்டியன் சாரையும், கணக்குப் பாடத்தை சிறந்த முறையில் கற்பித்த கையோடு, அவ்வப்போது ராமாயணம், மகாபாரதம் இவற்றிலிருந்து எங்களுக்கு கதைகள் சொல்லி ஒழுக்கத்தைக் கற்பித்த எங்கள் சண்முகம் சாரையும் என் வாழ்நாளில் மறக்க முடியாது.



இன்னும் குறிப்பாக எங்கள் வகுப்பு ஆசிரியர் திரு எல். புஷ்பராஜ் சார் அவர்கள் இல்லையெனில் என் இன்றைய ஆங்கில அறிவும், ஒழுக்கமும் எனக்கு வாய்த்திருக்காது. அந்த மகானின் ‘க்ராமர் கச்சேரி’ வைத்தியத்தால்தான் நான் இன்று ஆங்கிலத்தில் புத்தகமும் கதைகளும் எழுதும் அளவிற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறேன்! அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!


#ThankyouTeacher விஜயா டீச்சர், ராஜேஸ்வரி டீச்சர், நாகரத்தினம் டீச்சர்,துரைராஜ் சார், பொன்பாண்டியன் சார், சண்முகம் சார், புஷ்பராஜ் சார்!


‘ஆசிரியர் தினம்’ என்கிற ஒரு நாளில் அடக்கி விடக்கூடிய பணிகளல்ல ஆசிரியர்களின் பணி. அது மகத்துவமானது. நினைந்து நினைந்து மனம் கனிந்து காலங்காலமாய் உருக வேண்டிய உணர்வு!


அதைப் போலவே ‘நன்றி ஆசிரியர்’ என்று, ஒரு முறைக்காக சொல்லக் கூடிய உணர்வு அல்ல இந்த நன்றி. அது நம் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்து அவர்களை நினைவுறுத்திக் கொண்டே இருக்கக் கூடிய ஒரு உண்ணதமான நினைவு!




கோவை என். தீனதயாளன்

9994291880




Rate this content
Log in

Similar tamil story from Classics