DEENADAYALAN N

Comedy Classics Others

5  

DEENADAYALAN N

Comedy Classics Others

தலை உருட்டும் கலை!

தலை உருட்டும் கலை!

5 mins
770


Just a Comedy!

தலை உருட்டும் கலை!

(பழங்கதை பேசல்)

(கோவை என். தீனதயாளன்)

(Just a Joke Please)


வியப்போ வியப்பு! மகன்கள் இரண்டு பேருக்குமே பெங்களூரிலிரிந்து சென்னைக்கு மாற்றல்! அதைவிட மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! நான் பணி புரியும் மத்திய அரசு நிறுவனம் சென்னையிலிருந்து வெறும் எழுபது கிலோ மீட்டர் தொலைவில்தான் இருந்ததால், மகன்கள் வாராவாரம் வீட்டிற்கு வரலாம். நாங்களும் (நானும், மனைவியும்) நினைத்தால் சென்னை சென்று எங்கள் குழந்தைகளை பார்த்து வரலாம். ஏறத்தாழ எட்டு வருடங்கள் குழந்தைகளின் கல்லூரிப் படிப்பு மற்றும் அவர்களின் பணியிடம் காரணமாக, நாங்கள் ரொம்பவும் விலகியிருந்து, இப்போதுதான் அருகாமையில் வந்திருக்கிறோம். எனவே ஆனந்தம் பொங்கி வழிந்தது.


குழந்தைகளைப் பிரிந்து இருப்பது என்பது ஒரு கொடுமை! அவர்களின் பதினாறு வயது வரை நம்முடன் இருந்து விட்டு பின் 'படிப்பு' என்பதற்காக வெளியேறுபவர்கள் – அதன் பின் – 'பணி' காரணமாக தொலை தூர மாவட்டங்கள் அல்லது மாநிலங்களுக்கு சென்று விடுவது என்பது பெற்றோருக்கு ஆண்டவன் வழங்கும் ஒரு தண்டனையோ என்று கூட எங்களுக்கு தோன்றியது உண்டு.


வெளிநாடு சென்று பணி புரியும் குழந்தைகள் பற்றியோ – அதன் பிறகு திருமணம் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி விடுவதையோ இங்கே நான் குறிப்பிடவில்லை அந்தக் கதை.. தனிக் கதை.. சொந்தக் கதை.. சோகக் கதை! அந்த மனக்குமுறலை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வோம்.


மகன்கள் இருவரும் சென்னை வந்தவுடன் இருவரும் சென்னையில், பி.ஜி.யில்தான்(paying guest) தங்கினார்கள். ஒரு வாரம் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். மறுவாரம் நாங்கள் சென்னை போனோம். அப்புறம்.. அப்புறம் என்ன? இரண்டு மகன்களும் ஆரம்பித்தார்கள்…


'இங்கே ஒர் வீடு எடுத்து நாம் நால்வரும் ஒன்றாக தங்கிக் கொள்வோமே. ஜாலியாக இருக்கும்' என்றார்கள்.


'அதெப்படி.. என் அலுவலகம் எழுபது கிலோ மீட்டர் தொலைவு தள்ளி இருக்கிறதே.. நான் எப்படி இங்கே தங்க முடியும்?' நான் சூழலை விளக்கினேன்.


'ஏன்? கணேசன் அங்கிள், மோகன் அங்கிள் போல் நீங்களும் நாள்தோரும் சென்னையிலிருந்து சென்று வரலாமே!' என்றனர். என் மனைவியும் அவர்களுக்கு பின் பாட்டு பாடி ஒத்து ஊதினார்.


'அலுவலகத்தில் அனுமதி கிடைக்காது' என்று சொல்லி அதற்கான காரண காரியங்களை விளக்கினேன்.


'அப்படியானால் வி ஆர் எஸ் கொடுத்து விடுங்கள்' கூலாக இரு மகன்களும் கூறினார்கள்.


'மாதம் 'இவ்வளவு' சம்பளம் வாங்குகிறேன் – அதை இழக்க வேண்டுமா; இவ்வளவு சீக்கிரம் வி ஆர் எஸ் வாங்க வேண்டுமா?; என நிறைய கேள்விகள் எழுப்பினேன்.


'இனி நமக்கு பணம் தேவையில்லை.. நாங்கள் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டோம்.. நிலையில்லாத(!) இந்த வாழ்வில், நாம் சேர்ந்து இருக்கப் போகும் இந்த நான்கைந்து வருடங்கள், கடவுள், இந்த ஜன்மத்தில் நமக்கு அளித்த மிகப்பெரிய வரமாக இருக்கும்..' என நிறைய 'மன நிறைவு – நிம்மதி' யைச் சார்ந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.


பொருள் ஆசை அகன்றது! பிள்ளைகள் பாசம் வென்றது!!'நால்வரும் நலமுடன் நிம்மதியாக சென்னை பெசண்ட் நகரில் அறுபடை வீடு முருகன் கோயிலுக்கு அருகாமையில் வீடெடுத்து வசிக்க ஆரம்பித்தோம். ஒரு வருடம் கழித்து பெரிய மகனுக்கு சில மாதங்களுக்கு சுவிட்சர்லாந்து போக வேண்டியிருந்தது. (பிற்பாடு அது பல மாதங்களாக இழுத்து விட்டது. நல்ல வேளை. சிறிய மகனுக்கு எந்த மாற்றமுமில்லை. ஆனால் அவருக்கு மதியம் மூன்றுலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை பணி நேரம்.


எனவே எனக்கும் மனைவிக்கும் நிறைய நேரம் இருந்தது. பெசண்ட் நகர் பீச், பிள்ளையார் கோயில், எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அறுபடை வீடு கோயில். அஷ்டலக்‌ஷ்மி கோயில், மார்க்கெட், அது இது என்று கழிந்தாலும் இன்னும் நிறைய நேரம் மிச்சம் இருந்தது.

 

குறிப்பாக மாலை ஆறு முதல் இரவு பனிரெண்டு வரை போரடிக்காமல், மகன் வரும் வரை, பொழுதைக் கழிக்க வேண்டுமே!


எனவே மாலை ஆறு முதல் இரவு பதினோரு மணிவரை எங்கள் (சிறிய) அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியை தஞ்சம் அடைந்தோம். அந்த நேரத்தில், ஓரிரு அரிதான சந்தர்ப்பங்களைத் தவிர, அங்கு வேறு யாரும் வரமாட்டார்கள். இரண்டு நாற்காலிகளுடன் மேலே போய் விட்டால் ஏதாவது பேசி பொழுதைப் போக்குவோம்.


அப்போதுதான், இப்படி வெட்டிப் பேச்சு பேசி(!) பொழுதைக் கழிப்பதை விட, சுவாரஸ்யமாக பேசி பொழுதைக் கழிக்கும் ஒரு கலை உருவானது. அந்தக் கலை கொடுக்கும் சுவாரஸ்யமும், ஆர்வமும், மகிழ்ச்சியும், புலகாங்கிதமும், ஒரு தொலைக்காட்சி சீரியலோ, ஒரு திரைப்படமோ, ஒரு வார இதழோ, ஒரு வீடியோ விளையாட்டோ கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தோம். அந்தக் கலை எங்களுக்குள் எப்படி புகுந்தது என்பது தெரியாது. ஏனெனில் அதற்காக நாங்கள் எந்த விதமான திட்டமிடுதலும் நடத்தவில்லை. அது தானாகவே வந்து புகுந்து கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்.


அதைப் பற்றி சற்று விலாவரியாக பார்ப்போம்!'என்னங்க.. நம்ம நடைப்பயிற்சி போறப்போ சில பிரபலங்களும் வருவாங்களே பார்க்கறீங்களா?' மனைவி கேட்டார்


'ஆமாம்.. ஆமாம்.. நீலு சார், மேத்தா சார், நடிகர் பப்லு சார் தன் குழந்தையுடன், சில நடிகர் நடிகைகள், கராத்தே ஹுசைனி சார், சில மாடல் பெண்கள்/ஆண்கள், சில பிரபலங்கள் என சர்வ சாதாரணமாக போவதைப் பார்த்திருக்கிறேனே..'


'நீலு சார் எவ்வளவு படங்கள்ளே நடிச்சிருப்பாரு.. '


'அவுரு நிறைய சோ சாருடன் நடிச்சிருக்காரு.. பாலச்சந்தர் படத்துலே பெரும்பாலும் நடிப்பாரு.., 100/100 படத்துலே அவரோட 'கமிங் டு கால்குலஸ்' நகைச்சுவையை மறக்கவே முடியாது..'இப்படியாக வழியில் பார்த்தவர்களை பற்றி பேசிக் கொண்டிருந்த எங்கள் பேச்சு மற்ற சொந்த பந்தங்கள், நட்புகள், தெரிந்தவர்கள் என விரிவடைந்தது.


ஒருநாள் புது செருப்பு வாங்கிக் கொண்டு திரும்பி இருந்தோம். அன்று, 'என்னங்க.. என் தம்பியப் பார்த்திருக்கீங்க அல்ல..' என்று மனைவி ஆரம்பித்தாள்.


'யாரு அந்த 'கர்ணமகாப்ரபு' மாதிரி எப்பவும் பேசுவானே.. உன்னோட ரெண்டாவது பெரியம்மாவோட மகன்.. அவனா?'


'அவனேதாங்க..'


'அவன் சரியான 'கஞ்சமகாப்ரபு'.. ஆச்சே.. அவனை 'புதுசெருப்பு'ன்னுதானே சொல்லுவீங்க..'


'ஆமாங்க.. அவனுக்கு எப்பிடி அந்தப் பேர் வந்ததுன்னு கேளுங்க.. ஒரு தடவை எங்க சித்தி மகள் கல்யாணத்துலே இவனோட செருப்பு தொலைஞ்சு போச்சி.. இவன் ரொம்ப கடுப்பாயி ஒரு பணக்கார அம்மாவோட ஒரு ஜோடி புது செருப்பை எடுத்து பையிலே மறைச்சு வெச்சிட்டான். அந்தம்மா 'லோலோ'ன்னு கத்திகிட்டு எல்லாரோட காலையும் உத்து உத்து பார்த்துகிட்டு இருந்துச்சி.. அந்த நேரம் பார்த்து, இவன் மேலே, எல்லாருக்கும் 'கூல்ட்ரிங்க்' குடுத்துகிட்டு இருந்த ஒரு ஆள் திடீர்னு மோத, இவன் கீழ விழுந்து, அவன் பையிலே மறைச்சு வெச்சிருந்த புது செருப்பு ரெண்டும் வெளியே வந்து விழுந்துருச்சி.. அதைப் பாத்து.. அந்த அம்மா அவனை திட்ட ஆரம்பிச்சாங்க பாருங்க… இவனுக்கு ரொம்ப அவமானமா போயிருச்சி..'


'ஆமா ஆமா.. நீ சொன்ன உடனே எனக்கு ஒன்னு ஞாபகம் வருது. ஒரு தடவை என் புது செருப்பு திடீர்னு காணாமல் போயிருச்சி.. எங்க தேடியும் கிடைக்கலே.. ஐநூறு ரூபாய் போச்சேன்னு எனக்கு ஒரே கவலை ஆயிருச்சி.


மூனு நாள் கழிச்சி என் தம்பியோட நண்பன் ஒருத்தன் வந்து என் தம்பிகிட்டே, 'டேய் அன்னைக்கு ஏங்க வீட்டுக்கு வந்தப்பொ செருப்பைக் காணோம்னு தேடினையே.. எங்க நாய்தாண்டா கவ்விகிட்டு போய் கிணத்துலே போட்டுருச்சி.. இன்னைக்கி தூர் வாரினப்பொதான் பார்த்தோம்'னு சொல்லி தம்பிகிட்டு கொண்டு வந்து குடுத்தான். பார்த்தா அது என்னோட புது செருப்பு! பக்கத்துலே இருந்த என்னப் பார்த்து அன்னைக்கி ஒரு திருட்டு முழி முழிச்சி அசடு வழிஞ்ஜான் பாரு என் தம்பி.. அப்பொ இருந்து எப்பொ செருப்பு வாங்கினாலும் எனக்கு அவன் ஞாபகம்தான் வரும்.''உனக்கு சொர்ணக்கா தெரியுமில்லே..'


'ஆமா.. நம்ம கல்யாணத்துக்கு கூட தர்காபூர்ல இருந்து வந்திருந்தாங்களே..;


'கரெக்ட்.. கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடியே குடும்பத்தோட வந்துட்டாங்க.. திடீர்னு ஒரு நாள் அந்தக்காவோட 'கம்மல்' ஒன்னு தொலைஞ்சி போச்சி.. 'குளிக்கப் போகும்போது அவுத்து வெச்சிட்டு மறந்து வந்துட்டேன்.. இப்பொ போய் பார்த்தா காணோம்..' என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.


அவங்களுக்கு ஊர்லே இருந்து வந்திருந்த ஒரு அத்தை மேல சந்தேகம். அதனால 'ஜாட மாடை'யா பேசி பயங்கரமா சாபம் குடுத்துகிட்டே இருந்தாங்க. 'வெத்தலைலே மை போட்டுப் பார்த்து புடிச்சிருவேன்.. எலுமிச்சம்பழம் மந்திரிச்சி 'மூனு ரோடு முக்கு'லே பிச்சிப் போட்டன்னா எடுத்தவங்களோட கை காலெல்லாம் அதே மாதிரி பிச்சிகிட்டுப் போயிடும்' அப்பிடி இப்பிடீன்னு வசவு பாடி பயமுறுத்திகிட்டே இருந்தது.'


அதைக் கேட்ட அவங்க வீட்டுக்காரர் ,அப்பொ அப்பொ 'சரி விடு விடு' என்று சமாதானப் படுத்த முயற்சி பண்ணினார். அப்போதும் அந்தக்கா அடங்கலை. 'சரி.. நான் தான் எடுத்தேன்னு வெச்சிக்கோயேன்..' என்று அவர் சொன்னதும்,


'ஓ. சங்கதி அப்பிடியா.. அவ (எடுத்ததாக நினைக்கப் படுபவர் – அந்தம்மாவுக்கு அப்போ அம்பது அம்பத்தஞ்சு வயசு இருக்கும்) அந்த காலத்துலே உங்களுக்கு மொறைப் பெண்ணாமே.. அதனாலே, அவளக் காப்பாத்துறீங்களாக்கும்'ன்னு கணவனை 'பிலுபிலு'ன்னு புடிச்சிகிட்டாங்க.


கணவன் எவ்வளவு சொல்லியும் அடங்கவில்லை. கம்மலை விட்டு விட்டு அந்தக் 'கால காதலர்களா நீங்க' என்கிற அளவுக்கு வெளிப்படையாக கணவனையும், ஜாடையில் அந்த அம்மாவையும் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.


பொறுக்க முடியாத கணவன் , 'சனியனே.. இந்தா உன் கம்மல்' அப்பிடீன்னு வேட்டி மறைத்திருந்த தன் பட்டா பட்டி அண்டர்வேரிலிருந்து அந்த கம்மல்களை தூக்கிப் போட்டாரே பாக்கணும்! சொர்ணக்கா அப்பிடியே பேய் அறைஞ்ச மாதிரி ஆயிட்டாங்க. அந்த நேரம் பார்த்து – இவ்வளவு நேரம் சொர்ணக்கா கழுவி ஊற்றிக் கொண்டிருந்த அந்த ஐம்பது-அம்பத்தஞ்சு வயசு அம்மாவும் வர, சொர்ணக்காவுக்கு மேலும் அதிர்ச்சி. நிலைமையை எப்படியாவது சமாளிக்கணுமே. அதனாலே சொர்ணக்கா, 'அக்கா இந்த பாவி மனுஷனே பார்த்தையா..' என்று அவர் முன்னால் கணவனை வசை பாட ஆரம்பித்தாரே பார்க்கலாம்.


அவ்வளவுதான். கணவர் அங்கிருந்து ஓடியே போய் விட்டார். அதுக்கப்புறம் ஊருக்குப் போற வரைக்கும் சொர்ணக்கா கண்ணுலையே அவுரு படலையே.'இப்பிடிதாங்க.. அப்போ நாங்கெல்லாம் சின்னக் குழந்தைங்க.. ஒரு தடவை எங்க அப்பா யாருக்கோ பணம் குடுக்க வேண்டி இருந்துச்சாம். உடனே எங்க மாமாவை (அதாவது எங்க வீட்டோடவே இருந்த எங்க அம்மாவோட தம்பியை) கூப்பிட்டு பணத்தைக் கொண்டுபோய் குடுத்துட்டு வர சொல்லி அனுப்பி இருக்காரு. ஆனா பணத்தோட போன எங்க மாமா ரெண்டு நாள் கழிச்சுத்தான் வீட்டுக்கே வந்திருக்காரு. எல்லாப் பணத்தையும் கண்ட மாதிரி செலவழிச்சிட்டாருன்னு தெரிஞ்சது. உடனே கோபமாயிட்ட எங்க அப்பா அவரை நல்லா திட்டி, இவனுக்கு மூனு நாளைக்கு சோறு போடாதேன்னு கத்தி இருக்காரு. கூட எங்க அம்மாவும் மாமாவை கண்ட படி பேசிட்டாங்க. உடனே எங்க மாமா, மிகுந்த கோபத்துடன் எங்க அப்பாவைப் பார்த்து, 'இப்பொவே இப்படி பண்றீங்களே.. நீங்க எல்லாம் எப்பிடி என்னை காலம் பூராவும் வெச்சி, கடைசி வரைக்கும் கஞ்சி ஊத்தப் போறீங்க'ன்னாரே பாக்கலாம்.


அவ்வளவு கோபத்திலும் எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சிரிப்பு வந்துருச்சி. அப்புறம் அவருக்கு புத்தி மதி சொல்லி சமாதானம் செஞ்சாங்கலாம்.


இப்படி பல நாட்கள் நாங்கள் பேசிய மனிதர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.


உங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது அனுபவங்கள் இருக்கிறதா?


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in

Similar tamil story from Comedy