DEENADAYALAN N

Children Stories Comedy Children

4.7  

DEENADAYALAN N

Children Stories Comedy Children

ர த க ஜ து ர க ப தா தி க ள் !

ர த க ஜ து ர க ப தா தி க ள் !

5 mins
566


Comedy

ர த க ஜ து ர க ப தா தி க ள் !

(கோவை என். தீனதயாளன்)


(நகைச்சுவைக்காக மட்டும்)


இருமறாம்பட்டி ராஜ்ஜியத்துலே அந்த ராஜ்ஜியத்தோட மன்னரைக் கூட ஒருத்தருக்கு தெரியாம இருக்கலாம். ஆனா விதூஷகன் வித்யாபதியை தெரியாதவங்களே இருக்க முடியாது. ஒரு பொறந்த குழந்தையைக் கேட்டா கூட தன்னோட பொக்கை வாயைத் தொறந்து சிரிச்சிகிட்டே, விதூஷகன் வித்யாபதியை கையை நீட்டிக் காட்டும். அதெப்படி பொறந்த குழந்தை கையை நீட்டிக் காட்டும்? மன்னிக்கனும். அதை ‘சிறந்த’ குழந்தைன்னு மாத்திக்கோங்க. (அன்பு வாசகர்களே.. கதைய சொன்னா, சொன்னபடி கேட்டுகிட்டீங்கன்னா நல்லா இருக்கும். அதுலையும் ஒரு காமெடி கதையிலே லாஜிக் எல்லாம் பாத்துதான் தீருவோம்னு அடம் பிடிச்சிங்கன்னா, கதை சொல்ற என் பொழப்பு சிரிப்பா சிரிச்சிடும். அதனாலே அங்கங்கே கொஞ்சம் ‘லாஜிக்’ எல்லாம் மறந்து மனசு விட்டு சிரிச்சு சந்தோஷப் படுங்க. சரியா?)

 

ஆமா.. கதைய எங்கே விட்டோம்? ஆங்.. சரி..! அந்த விதூஷகன் வித்யாபதிக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஏன்னா அவனுக்கு அரசர்கிட்டே கொஞ்சம் செல்லம் உண்டு. அரசரோட எல்லா சபையிலேயும் வித்யாபதி ஒரு உறுப்பினன். அரச சபை, இலக்கிய சபை, நகைச்சுவை சபை என்று எல்லாவற்றிலும் வித்யாபதி இருப்பான். இதைத்தாங்கிக்க முடியாத சில சக அங்கத்தினர்கள் வித்யாபதியை மடக்கிப் போட எப்பொடா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று வலை விரித்துக் காத்துக் கிடப்பார்கள்.


வித்யாபதி குடும்பஸ்தன். மனைவி, பாட்டி, மகனோடு வாழ்பவன். அரசரின் தயவால் எந்தக் குறையும் இன்றி பரிபூரண சந்தோஷத்தோடு வாழ்ந்து வருபவன். அரண்மனையிலே ஒரு நல்ல நிலையில் அவனை அரசர் வைத்திருந்தார். ஏன்னா, விதூஷகன் வித்யாபதி இருக்கற சபையிலே நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. பிரச்சினைகளுக்கு நல்ல யோசனைகளையும் தீர்வுகளையும் சொல்லுவான்.

 இப்பிடிதான் ஒரு தடவை நகைச்சுவையாளர்கள் சபையிலே சமருப்புலவர்னு ஒருத்தரு ‘மன்னா.. நம்ம இளவரசர் நேத்துலே இருந்து ஏதோ எழுதிக் கொண்டே இருக்கிறார்! என்ன என்று கேட்டால் சொல்ல மாட்டேன் என்கிறார். என்னவாக இருக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.

 

‘அப்படியா.. சபையில் யாருக்காவது தெரியுமா?’ என்று மன்னர் கேட்டார்.

அனைவரும் திருதிருவென விழித்தனர். ‘ஆசான் குருநாதர் கொடுத்த வீட்டுப்பாடமாக இருக்கலாம்..’ என்று ஒருவர் ஊகித்தார்.


’ஊகம் தேவையில்லை.. சரியாக சொல்பவருக்கு நூறு வராகன் பரிசு!’ என்று மன்னர் வாக்களித்தார். மன்னர் அவ்வப்போது இப்படி ‘ஊக்கப் பரிசு’ அளித்து சபையை கலகலப்பாக்குவது வழக்கமான ஒன்றுதான்.


சபை மௌனமாகவே இருந்தது. யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.


‘மன்னா.. அனேகமாக வித்யாபதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்’ என்று வித்யாபதியை மாட்டி வைக்க ஒரு வலையைத் தூக்கிப் போட்டார் ஒரு வித்தகர்.


‘என்ன வித்யாபதி? நீர்தான் ஊர் சுற்றியாயிற்றே! உமக்குக் கூடவா தெரியவில்லை?’ என்று வழக்கமான கிண்டலுடன் விதூஷகன் வித்யாபதியைக் கேட்டார் மன்னர்.


‘தெ..ரி..யு..ம் ம..ன்..னா…’ என்று தயங்கித் தயங்கி வித்யாபதி கூறினான்.


‘தெரிந்தால் சொல்லித் தொலையுமேன்..’ என்று மன்னர் சற்று காட்டமாகவே கூறினார்.


‘இந்த சபையில் பெரும்பாலோருக்கு தெரியும் மன்னா.. சொன்னால் மானம் போய் விடுமே என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்’ என்றான் விதூஷகன்.


மன்னருக்கு ஆச்சரியம்.. தன் பார்வையால் சபையோரை சுற்றி ஒரு வலம் வந்தார். பெரும்பாலோர் தங்கள் தலையை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.


‘யாருடைய மானம் போகும் விதூஷகா?’ என்று மன்னர் சற்று கோபத்துடனேயே கேட்டார்.


‘வந்து.. வந்து.. மன்னா..’ விதூஷகன் வித்யாபதி தயங்கினான்.


‘சரி.. முதலில் விஷயத்தை சொல்லுமய்யா.. பிறகு மானம் போவதைப் பற்றி பேசலாம்..’ என்று மன்னர் உத்தரவிட்டார்.


‘வேண்டாம் மன்னா.. வேண்டாம் மன்னா.’ என்று விஷயம் தெரிந்த – தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த - எல்லோரும் கோஷம் போட்டார்கள்.


ஆனால் மன்னர், ‘இது அனைவருக்குமான நகைச்சுவை சபை.. இங்கே ஒளிவு மறைவுக்கு வேலை இல்லை.. விதூஷகா சொல்.. இளவரசர் நேற்றிலிருந்து ‘மாங்கு மாங்கு’ என்று என்ன எழுதிக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்டார்.


ஒரு வழியாக வித்யாபதி, ‘மன்னா, இளவரசர், அவரது ஆசான் அளித்த ‘திருப்பித் திருப்பி எழுதுதல்’ (imposition) தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் மன்னா’ என்று விஷயத்தை போட்டுடைத்தார்.


‘அப்படியா..! அப்படி என்ன தண்டனை அது? அப்படி என்னதான் திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறார் இளவரசர்?’ மன்னவர் தொடர்ந்து கேட்டார்.


‘அது வேண்டாம் மன்னா.. வேண்டாம் மன்னா..’ என்று சிலரிடமிருந்து கோஷம் எழுந்தது.


‘பரவாயில்லை.. சொல் விதூஷகா..’ என்று மன்னர் சொல்ல,


‘வந்து.. வந்து.. ‘ர த க ஜ து ர க ப தா தி க ள்’  என்னும் வார்த்தை நம் இளவரசருக்கு வாயில் சரியாக நுழையவில்லையாம். எழுதவும் வரவில்லையாம். அதனால் அவரின் ஆசான் அந்த தண்டனையை அளித்திருக்கிறார் அரசே!’ என்று விதூஷகன் வித்யாபதி ஒரு வழியாக சொல்லி முடித்தான்.


‘‘சரி.. இது உமக்கு எப்படி தெரிந்தது?’ என்று மன்னர் கேட்க


‘மன்னா என் மகனும் தங்கள் இளவரசனுடன்தான் பயில்கிறான். அவனும் வீட்டில் நேற்றிலிருந்து இந்த ‘திருப்பித் திருப்பி எழுதுதல்’ தண்டனையைத்தான் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.’ என்று விதூஷகன் வித்யாபதி சொன்னதோடு, ‘ அது மட்டுமல்ல மன்னா இதோ இந்த சபையில் அமர்ந்திருக்கிறார்களே நம் அங்கத்தினர்கள் – இவர்களின் பெரும்பாலோரின் புதல்வர்கள் நம் இளவரசரோடுதான் பயில்கிறார்கள். அவர்களும் இதைத்தான் இப்போது வீட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்’ என்றான் விதூஷகன் வித்யாபதி.


இதற்குத்தான் அரசே சொல்ல வேண்டாம் என்று சொன்னோம். இப்பொழுது பாருங்கள! இந்த விதூஷகன் வித்யாபதியால் இளவரசரின் மானம் போய் விட்டதல்லவா?’ விதூஷகன் வித்யாபதிக்கு மன்னரிடம் இருந்து ஒரு கடும் தண்டனையை வாங்கிக் கொடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த புலவர் இந்த சமயத்தை பயன் படுத்தி மன்னரிடம் போட்டுக் கொடுக்க முயன்றார்.


‘மன்னிக்க வேண்டும் மன்னா.. இதில் இளவரசரின் மானம் போகும் என்று சொல்வதை நான் ஏற்க மாட்டேன் மன்னா..’ என்று விதூஷகன் சற்றே நிறுத்தினான்.


‘அது எப்படி? ஒரு தண்டனையைப் பெறுவது என்பது மானம் போகும் விஷயம்தானே..’ என்று மன்னர் வித்யாபதியைப் பார்த்துக் கேட்டார்.


‘ஆனால்…’ என்று வித்யாபதி சிறிது இழுத்து தயங்கினான்.


‘என்ன ஆனால்..’ மன்னர் எதிர் கேள்வி கேட்டார்.


‘தாங்கள் அனுமதி அளித்தால் இது இளவரசரின் மானப் பிரச்சினை என்னும் இந்த சபையோரின் கருத்தை என்னால் உடைத்தெறிய முடியும் என்பதை நான் நிரூபித்துக் காட்டுவேன் மன்னா’ என்று வித்யாபதி சூளுரைத்தான்.


‘ஓ அப்படியா.. சரி முடிந்தால் முயன்று பார்..’ என்று மன்னர் உத்தரவு தந்தார். 


விதூஷகன் வித்யாபதி மளமளவென்று தன் பையிலிருந்து காலி ஒலைகளை எடுத்து சபையிலிருந்த சுமார் முப்பது அங்கத்தினர்களுக்கும் வினியோகித்தான்.


‘மன்னா தங்களின் அனுமதியோடு, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் நம் சபை அங்கத்தினர்களுக்கு ஒரு பரீட்சை வைக்க விரும்புகிறேன்’


‘நடத்து விதூஷகா..’ என்று மன்னர் குதூகுலத்துடன் அனுமதி அளித்தார்.


முப்பது ஓலைகளும் முப்பது அங்கத்தினர்களுக்கு அளிக்கப் பட்டது. அனைவரும் வேண்டா வெறுப்புடன் இருந்தாலும், அரசரின் உத்தரவு என்பதால் ஓலைகளை வாங்கிக் கொண்டனர்.


‘எல்லோரும் ‘ர த க ஜ து ர க ப தா தி க ள்’ என்று இந்த ஒலையில் எழுதி சமர்ப்பியுங்கள். ஒரு மணித்துளி (ஒரு நிமிடம்) மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்,, ஓலையில் அவரவர் பெயரு இருக்க வேண்டும்’ என்று அறிவித்தான் வித்யாபதி.


மன்னர் அனுமதியுடன் நடக்கும் இந்தத் தேர்வை யாராலும் புறக்கணிக்க முடியவில்லை. ஒரு நிமிடம் கழித்து ஓலைகள் சேகரிக்கப்பட்டு மன்னரின் பார்வையில் வைக்கப்பட்டது.


‘ஒவ்வொன்றாக அவற்றை எடுத்துப் படி விதூஷகா.. கூடவே அங்கத்தினரின் பெயரையும் படி’ என்று மன்னர் ஆணையிட, விதூஷகன் வித்யாபதி படிக்க ஆரம்பித்தான்.


‘அரசே.. ‘ர த க ஜ து ர க ப தா தி க ள்’ என்று நாம் எழுதச் சொல்லியிருந்தோம்.


‘ர க ஜ த து ப ர க தா தி க ள் – இப்படி எழுதி இருப்பது புசபதியார்- -

 

‘ர ஜ த து ப ர க தா ஜ க தி ள் - இது கோராசுரர்- - - -

 

‘ர ப த து ஜ ர தி தா ப க ள் - இது மருவு- - - -

 

‘ர து த க ர கா க ப க ள் - இது புலவர் கஞ்சார்ச்சர்- - - -

 

‘ர ப த து ஜ ர கா க ப த தி ள் க ள் - இது பாவலர் புஜங்கூரார் - - -’

 

ஒவ்வொன்றும் படித்தவுடன் சபையில் வெடிச்சிரிப்பு கிளம்பியது. முப்பது ஓலைகளும் படித்து முடித்தவுடன் சபையே சிரிப்பலையில் ஆடியது.                                அதே போல் ஒவ்வொரு அங்கத்தினரையும், சரியான வார்த்தைகளான

‘ர த க ஜ து ர க ப தா தி க ள்’

                                என்பதை எழுத்தில் கொடுத்து தடுமாறாமல் படிக்க சொன்னார் மன்னர்.மீண்டும் ஒரே சிரிப்பலையால் சபை நிறைந்தது. ஒவ்வொருவரும் படித்தது


 

‘ர தி த து ப ர க தா ஜ க தி ள்’ - புசபதியார்- - - -

 

‘ர க ஜ த து ப ர க தா தி க ள் ‘- பகோராஜர்- -

 

‘ர தி த து ஜ ர தி தா ப க ள் ‘- கருவனார்- - - -

 

‘ர து த து ஜ ர கா க ப த தி ள் க ள்’ - மருவு- - - -

 

‘ர தி த து ர கா க ப க ள்’  - புலவர் கண்ஜார்- - - -

 

சிரிப்பலை சற்றே ஒய்ந்த பின், வித்யாபதி அரசரைப் பார்த்து, ‘இதைத்தான் சொன்னேன் மன்னா! மானம் போனது அனைவருக்கும் தான்…’மன்னர் அறிவித்தார்: ‘விதூஷகன் வித்யாபதிக்கு மூன்னூறு வராகன்கள் பரிசளிக்கிறேன் – அந்த வராகன்களை ஒவ்வொரு அங்கத்தினரின் படியிலிருந்தும் பத்து பத்து வராகன்களை பிடித்தம் செய்து அளிக்க வேண்டும்!’


எல்லோரும் மன்னரையும் விதூஷகனையும் ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தனர்.


‘சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டுவிட்டு மன்னர் வேகமாக நடையைக் கட்டினார்.


மன்னர் சென்ற அடுத்த வினாடி, மாயமாய் மறைந்து போனான் விதூஷகன் வித்யாபதி!(ரதம் – தேர்ப் படை; கஜம் – யானைப் படை; துரகம் – குதிரைப்படை; பதாதிகள் – காலாட்படை)

 

 

கோவை என். தீனதயாளன்

 


Rate this content
Log in