DEENADAYALAN N

Comedy Drama

5  

DEENADAYALAN N

Comedy Drama

Mouth வாய்ஸும் Mind வாய்ஸும்

Mouth வாய்ஸும் Mind வாய்ஸும்

4 mins
414


Light Comedy

Mouth வாய்ஸும் Mind வாய்ஸும்

(கோவை என். தீனதயாளன்)


(நகைச்சுவைக்காக)


சும்மா இருக்கும் இரண்டு பேர் எப்போதும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். அதுதான் மனித இயல்பும் கூட. அவர்களின் பேச்சு எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். யாரைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அது இரண்டு நண்பர்களாக இருக்கலாம். உறவினர்களாக இருக்கலாம். காதலர்களாக இருக்கலாம். ஏன் கணவன் மனைவியாகக் கூட இருக்கலாம். வேலையில்லாமல் இரண்டு பேர் அருகருகில் இருக்கும் போது, யாராவது ஒருவர், ஏதாவது ஒரு பொருளைப் பற்றியோ, மனிதரைப் பற்றியோ, இடத்தையைப் பற்றியோ, அலுவலகம் பற்றியோ, திரைப்படம் பற்றியோ, தொலைக்காட்சித் தொடரைப் பற்றியோ, பிக்பாஸ் பற்றியோ – ஏதாவது பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அதை கவனித்திருப்பீர்கள்தானே!


சரி அப்படி சும்மா இருக்கும் இருவர்தான் இப்போது நம் கதையின் நாயகன் நாயகியாக வரப் போகிறார்கள். நாம் பார்க்கப் போகும் அந்த ‘சும்மா’ இருக்கும் அவர்கள் வேறு யாருமல்ல. ஒரு கணவன்-மனைவிதான்.


இந்தக் கதை ஒரு சம்பாஷணை. அதாவது கணவன் மனைவி இடையே நடக்கும் ஒரு ‘கான்வெர்சேஷன்’ அல்லது உரையாடல் என்று வைத்துக் கொள்ளலாம்.இந்த உரையாடலில் கணவன் அல்லது மனைவி வெளிப்படையாக உதட்டளவில் சொல்லும் கருத்து MOUTH வாய்ஸ். ஆனால் அதே கருத்திற்கு எதிரான கருத்தை, வெளிப்படையாக சொல்லாமல், மனதிற்குள் சொல்லிக் கொள்வது MIND வாய்ஸ்.


குறிப்பு:


அடைப்புக் குறிக்குள் (Brackets) இருப்பது அவர்களின் MIND வாய்ஸ்அடைப்புக் குறிக்குள் இல்லாதது அவர்களின் MOUTH வாய்ஸ்

சரி வாருங்கள் கதைக்குள் நுழைந்து சம்பாஷணையை கேட்போம்.என்னங்க.. இவ்வளவு சீக்கிரம் ஆபீசிலிருந்து வந்துட்டீங்களே.. ஆச்சரியமா இருக்கே!’ வியப்புடன் வினவினாள் மனைவி மல்லிகா.


‘ஆமா மல்லிகா.. காலையிலே இருந்து கடுமையான வேலை. அதனாலே அனுமதி வாங்கிட்டு சீக்கிரம் வந்துட்டேன்’ என்றான் கணவன் கணேஷ்.


(ஆமா.. பெரிய்ய்ய கலெக்டர் உத்தியோகம்.. கடுமையா உழச்சாராம்.. இவுரு வேலை செய்யிற பவுசு எனக்கு தெரியாதா..)
‘ஆமா.. நீ ஏன் மல்லிகா ஒரு மாதிரி இருக்கே.. ஒடம்பு கிடம்பு சரி இல்லையா?’


‘ஆமாங்க.. காலைலே இருந்து ஒரே வேலை.. லேசா தலை வலிக்கிது’


(ஆமா.. காலைலே இருந்து பெருசா வெட்டி முறிச்சிட்டா.. தலை வலிக்கிதாம்.. இந்நேரம் ஆறு சீரியல் பார்த்திருப்பா.. அக்கம் பக்கத்துலே நாலு வீட்டுப் பெண்கள்கிட்ட அரட்டை அடிச்சிருப்பா.. நம்மளப் பார்த்த உடனே சீன் போடறா..)

வேறு வழியின்றி வழிந்து கொண்டே கணேஷே போய் காப்பி போட்டு எடுத்து வந்தான்.


‘இந்தா மல்லி.. இந்த காப்பியக் குடி.. தலைவலி சரியாப்போகும்..’

(என்ன பண்ணித் தொலைக்கிறது.. சில நேரங்கள்லே இதுங்களே ‘காக்கா’ புடிச்சுத் தொலைய வேண்டியதா இருக்கே).


‘தேங்க்ஸ்ங்க..’ காபியை வாங்கி உறிஞ்சினாள் மல்லிகா.

(சரியான தண்டம்.. கல்யாணம் ஆயி பதிமூனு வருஷம் ஆகுது.. ஒழுங்கா ஒரு காப்பி போட்டு பொண்டாட்டிக்கி குடுக்க தெரியுதா.. ஊர்லே சில கணவர்கள் சாப்பாடே பண்ணிப் போடறாங்க..)‘மல்லிகா.. நாளைக்கு சாய்ந்தரம் என் சித்தி ஊர்லே இருந்து வர்றாங்களாம்..’


‘யாருங்க.. அம்பத்தஞ்சு வயசுலேயும் கால்லே கொலுசு போட்டுகிட்டு ‘ஜலங்.. ஜலங்.. னு வருவாங்களே அந்த சித்தியா..?’


‘ஹாம்.. அவங்களேதான் மல்லி.. நல்ல ஞாபகம் வெச்சிருக்கியே..’


(ஆமா.. இது ஒரு தண்டம்.. அது ஒரு முண்டம்.. அரிசி மூட்டை.. உருண்டு உருண்டு வருவா.. உருப்படாமப் போனவ.. அப்பொ அப்பொ வந்து நாலு நாள் தங்கி நாக்கு வலிக்க முழுங்கிட்டு போகலேன்னா அதுக்கு தலை வெடிச்சிருமே..)


‘அவங்களை நாளைக்கு ஸ்டேஷனுக்குப் போயி கூட்டிட்டு வந்துருடி செல்லம்..’


‘ஒ.. சரிங்க’

(செல்லமாம் செல்லம்.. காரியம் ஆகணுமின்னா கால்லே கூட விழுவாறே.. இருக்கட்டும் ஒரு நாளைக்கு ஸ்டேஷன்லே ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு அதைத் தவிக்க விட்டுட்டுடறேன்.. அந்தம்மா ‘லோள்’ பட்டு இனி இந்தப் பக்கமே தலையை வெச்சி படுக்காமெ செஞ்சிடறேன்..)
 

‘உங்க அப்பாவுக்கு ஆஸ்த்துமா எப்பிடி இருக்கு மல்லிகா..

(கெழம்.. எப்பொப்பாரு லொக்கு லொக்குன்னு இருமி உயிரெ எடுத்துகிட்டே இருக்கும்..)


‘பரவாயில்லீங்க.. ‘

(ஆமா.. ஒரு நாளும் இல்லாத திருநாளா பெரிய அக்கறை வந்திருச்சாக்கும்... இதுக்கு பின்னாடியே ஏதாவது ஒரு தில்லு முல்லு அவஸ்தையை குடுப்பிங்கன்னு தெரியுமே..)


‘மல்லி கண்ணு.. இன்னிக்கு நைட்டுக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் சாப்பிட வர்றாங்க.. பேசாம ஹோட்டல்லே வாங்கிறலாமா..’

(இப்பிடி சொன்னாதான் இந்த லூஸு ஒத்துக்கும்)’


(அதானே பார்த்தேன்.. என்னடா என் அப்பா மேலே இந்த ஜடத்துக்கு இவ்வளவு அக்கறைன்னு)

‘வேண்டாங்க.. எதுக்கு ஹோட்டல் செலவெல்லாம்.. நானே சமைச்சுடறேன்.. (பன்னி.. எப்பொ பார்த்தாலும் யாரையாவது பெருமையா வரச்சொல்லிட்டு இங்க வந்து என் உயிரெ எடுக்கறது. என்னைக்காவது ஒரு நாள், நான் போடுற உப்புலையும் காரத்துலையும் உன்னோட நண்பர்கள் இந்த ஜன்மத்துக்கும் இந்த பக்கம் தலைய வெச்சி படுக்காமெ பண்ணிடறேன் பாரு..’)
‘உங்களுக்கு விஷயம் தெரியுமாங்க.. பக்கத்து வீட்டுக்காரி புருஷன் புது ‘பைக்’ வாங்கி இருக்காராமா’


‘(ஆமா மாடு.. எப்பொப் பாரு அவன் அதை வாங்கினான்.. இவ இதை வாங்கினாள்னு புலம்பிகிட்டே இரு.. எல்லாம் அவனவன் மாமனாரு வீட்டுலே இருந்து கொண்டு வந்து செய்யறானுக. உங்கப்பன் ஒரு வருபோக்கி மாமனாருதானே எனக்கு இருக்கு..)

அப்பிடியா.. அவன் என்னைக்கி மாட்டப் போறானோ.. எல்லாம் கிம்பளத்துலே வர்ற பணம்.. ‘பைக்’ என்ன காரே வாங்குவான்’


(அட கையாலே ஆகாத கபோதி மனுஷா.. பதிமூனு வருஷமா ஒத்த மில்லி கிராம் தங்கம் வாங்கித் தர்றதுக்கு வக்கு இல்லை.. அடுத்தவன் எதாவது வாங்கினான்னா மட்டும் அவன் லஞ்சம் வாங்குறான்.. கையூட்டு வாங்குறான்.. மாமனார் பணம் – னு, என்னவோ கூடவே இருந்து பார்த்த மாதிரி அடிச்சி உடுறது..! சரியான ஆளுய்யா நீ..)

‘ஆமா மல்லி.. உன் தங்கச்சி ஏதோ இன்டெர்வ்யூக்கு நம்ம ஊருக்கு வர்றதா சொன்னியே.. எப்பொ வர்றாளாம்…

(வந்தான்னா ஜாலியா ரெண்டு நாளைக்கு அவளெ வம்புக்கு இழுத்து கடலை போடலாம்..)’


‘இல்லீங்க இன்டெர்வ்யூக்கு பெங்களுர் வர சொல்லிட்டாங்களாம்.. அதனாலே வரலையாம்..

(கோட்டானுக்கு மூஞ்சி போற போக்கப் பாரு.. காத்து புடுங்குன பலூன் மாதிரி.. அவ வந்தான்னா எப்பொ பாரு பல்லிலிச்சுகிட்டு.. இதே மாதிரி உன் தம்பி எப்பொ வர்றான்னு நான் கேட்டா உன் மூஞ்சிய எங்கே கொண்டு போய் வெச்சிக்குவே)‘ஆமா.. என் தம்பிக்கு உங்க ஆபீசுலே ஒரு வேலை வாங்கி தரச் சொன்னேனே.. என்னாச்சுங்க..’ மல்லிகா கேட்டாள்.

(நானும் ஆறு மாசமா சொல்லிட்டு இருக்கேன்.)


(ஆமா.. அப்பிடியே அங்கே டபுள் டிகிரி முடிச்சிட்டான்.. வேலை ஒன்னுதான் பாக்கி.. படிச்சது ப்ளஸ்2.. இதுக்கு எங்க ஆபீஸுலே என்ன வேலை இருக்கும்)

‘சொல்லியிருக்கேன் மல்லிகா.. ஜி எம் பார்த்து சொல்றேன்னாரு’


(ஆமா.. எப்போ பார்த்தாலும் ஆபீஸே இவுரு தலைலதான் ஒடுதுன்னு பேசறது.. ஆனா ஏதாவது ஒரு காரியம்னா மட்டும் ஜி எம் சொல்லுவாரு, எம் டி சொல்லுவாருன்னு ‘சால்ஜாப்’ சொல்றது)
ஏங்க.. பூசாரிபுதூர்’ல ஒரு சைட் பார்த்தீங்களே.. என்னங்க ஆச்சி..? மல்லிகா கேட்டாள்.‘இருக்குமா.. ஆனா அங்கே விலை கொஞ்சம் அதிகம்ங்கறாங்க..

’(அந்த ஏரியா முழுசும் உங்க சொந்த பந்தங்கதான்.. அங்க போய் இருந்துகிட்டு என்ன செய்றது?)

அதனாலே வளசாபுரத்துலே ஒரு சைட்டைப் பார்த்துகிட்டு இருக்கேன்.


‘ஐயோ அங்கே வேண்டாங்க.. பக்கத்துலதான் ரயில்வே ட்ராக் இருக்குங்கறாங்க.. எப்பொ பார்த்தாலும் ஒரே சத்தமா இருக்குமாம்’

(எனக்கு தெரியாதா உங்களே.. அந்த ஏரியாலதானே உங்க அண்ணன், அக்கா, தம்பின்னு மூனு பேரும் இருக்காங்க... அதுக்குள்ளே வந்து நான் மாட்டிக்கணுமாக்கும்..)அதற்குள் எட்டாவது படிக்கும் அவர்களின் ஒரே மகன் க்ருஷ்ணா பள்ளியிலிருந்து திரும்பினான். பள்ளிப் பைகளை வீசி விட்டு ‘மெர்சி க்ளப்’புக்கு ஃபுட்பால் விளையாடப் போய் விட்டான்.


‘என்னங்க எப்படியாவது நம்ம மகனை ‘டீயகோ மரடோனா’, லியோனெல் மெஸ்ஸி’, ‘மொஹமட் சாலாஹ்’ இவங்களெ மாதிரி பெரிய ஃபுட்பால் ப்ளேயரா ஆக்கிறனும்ங்க.’ சீரியஸ்ஸாக கணேஷிடம் கூறினாள்.


‘கண்டிப்பா மல்லிகா.. நீ கவலையே படாதே.. அதுக்காக போன வாரம்தான் ஃபுட்பால் கோச்சிங்லே பிரபலமான ‘கன்ட்ரி க்ளப்’புலே முப்பத்தியெட்டாயிரம் ரூபாய் கட்டி நம்ம பையனுக்கு ‘மெம்பர்ஷிப்’ வாங்கிட்டேன். செப்டம்பர் பதினைந்துலே இருந்து அவனுக்கு அங்கே ரெகுலரா கோச்சிங் ஆரம்பமாகுது’


‘சூப்பருங்க..கணேஷ்னா கணேஷ்தான்’ என்று தன் கணவன் கணேஷை வாஞ்சையாய் கட்டிக் கொண்டாள் மல்லிகா.


‘எம் பொண்டாட்டி மல்லிகான்னா மல்லிகாதான்’ என்று கணேஷும் மல்லிகாவை அணைத்துக் கொண்டான்.


உரையாடலில் இரு வேறு துருவங்கள் போல் தெரிந்த கணேஷ்-மல்லிகா தம்பதியரின் இணைப்புப் புள்ளி ‘க்ருஷ்ணா’ என்பது தெரிந்தது.


அவர்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏனெனில் அவர்களுக்குள் இருப்பது மனதின் குரலுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு பந்தம்! கோவை என். தீனதயாளன்

 

 


Rate this content
Log in

Similar tamil story from Comedy