Arivazhagan Subbarayan

Abstract Comedy Drama

5.0  

Arivazhagan Subbarayan

Abstract Comedy Drama

அண்டார்டிகாவில் தமிழன்...!

அண்டார்டிகாவில் தமிழன்...!

4 mins
166



நாசா விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் நடத்திய ஆய்வில் திருக்குறள் பக்கம் ஒன்று கிடைத்துள்ளதாம். பனியில் புதைந்திருந்த இதை கார்பன் டேட்டிங் செய்து பார்த்தபோது இதன் வயது மூன்றாயிரம் முதல் நான்காயிரம் என்று தெரியவந்தது.

இது வெளியே வந்தால் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்று நிரூபணமாகிவிடும் என்பதால் நாசா அதை அழித்துவிட முயற்சி செய்கிறது.

😁😀😂😃(இந்த டுபாக்கூர் மேட்டர் பற்றி கோர்ட்ல கேஸ் நடந்தா எப்படியிருக்கும் என்ற கற்பனையில் விளைந்த கதை...எழுத்தாளர் ஜீனியஸ் சுஜாதா ஸ்டைலில்! (ரொம்ப ஓவரோ?)


  பத்து மணிக்கு பிஸியான சென்னையில் ஹைகோர்ட் வளாகத்தில் அந்தக் குறிப்பிட்ட ஒரு கோர்ட் ரூமில் கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது. இந்த மாதிரி ஒரு கேஸை இந்தக் கோர்ட் இதுவரை பார்த்ததேயில்லை.

ஐம்பத்தாறு வயது மதிக்கத்தக்க, முன் பாதியில் வழுக்கை விழுந்த அந்த ஜட்ஜ் பிராஸிக்யூஷன் தரப்பு லாயரைப் பார்த்து,

  "மிஸ்டர் திலீப்! நீங்க இப்ப சாட்சியை விசாரிக்கலாம்" என்றார்.

  ஜட்ஜ் குறிப்பிட்ட அந்த திலீப் சின்ன வயதில் பெரிய மொத்தக் கண்ணாடி அணிந்திருந்தான். விட்னஸ் ஸ்டாண்ட் அருகே சென்று

சாட்சியைப் பார்த்து,

 "திருக்குறள் புத்தகத்தில் பக்கங்கள் இருப்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?"

 "ஒப்புக்கொள்கிறேன்"

  "நாசா என்ற அமைப்பு உள்ளதை ஒப்புக்கொள்கிறீர்களா?"

  "இருக்கிறது"

  "அண்டார்டிகாவில் பனி உள்ளது. சரிதானே!"

  "சரிதான்"

  "கார்பன் டேட்டிங் என்ற முறையின் மூலம் ஒரு பொருளின் வயதைக் கண்டறியலாம். சரியா?"

  "சரி"

  திலீப் நீதிபதியை நோக்கி,"தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!"

  

  டிஃபன்டன்ட் பகுதியில் அமர்ந்திருந்த நிஷாந்த் விக்னேஷ் பக்கம் திரும்பி," இப்ப என்ன செய்யப்போறிங்க பாஸ்" என்றான்.

 "யாருடா இவன்? பார்க்க சின்னப்பையனா இருக்கான்?"

 "பேரு திலீப் பாஸ். நியூலி அப்பாயிண்டட். அஞ்சு கோல்டு மெடல் வாங்கியிருக்கான்!"

 "ரொம்ப கத்துக்குட்டியா இருக்கான். மூணு நிமஷத்துல ஒடைச்சிருவேன்!"

  "ஆனாலும் உங்களுக்கு கான்ஃபிடன்ஸ் ரொம்ப ஜாஸ்தி பாஸ்!"

 விக்னேஷ் ஒரு ஏ4சைஸ் பேப்பரை எடுத்து அதில் நாசர் என்று எழுதினான். ர் என்ற எழுத்தில் புள்ளியை சிறிதாக வைத்தான்.

 "என்ன பாஸ் பண்றீங்க?"

 "இந்தப்புள்ளி சாட்சி கண்களுக்கு மட்டும் தெரியும். மத்தவங்க யாருக்கும் தெரியாது!"

"அதுனால என்ன பாஸ்?"

அதற்குள் ஜட்ஜ், "மிஸ்டர் விக்னேஷ்,நீங்க இப்ப சாட்சிய கிராஸ் பண்ணலாம்" என்று அறிவிக்க,

 "இப்ப பாரு வேடிக்கைய" என்ற விக்னேஷ் எழுந்து விட்னஸ் ஸ்டான்ட் அருகில் சென்றான்.

தன் கையில் வைத்திருந்த ஏ4 பேப்பரில் எழுதியிருந்ததை ஜட்ஜ் முதற்கொண்டு கோர்ட்டில் இருந்த அனைவருக்கும் காட்டினான். பின் சாட்சியிடம் திரும்பி அந்தப் பேப்பரைக் காட்டி, "தெரியுமா?" என்று ஒற்றை வரியில் ஒரு கேள்வி கேட்டவுடன் அந்தப் பேப்பரை சுக்கு நூறாகக் கிழித்து அருகில் இருந்த டஸ்ட் பின்னில் போட்டான்.

 "தெரியும் சார். எங்கூடப் படிச்சவன். ஈரோட்ல டாக்டரா இருக்கான்"

"நல்லா யோசிச்சு சரியாச் சொல்லுங்க"

 "சரிதான் சார். என்னோட ஸ்கூல் மேட். அவன் நல்லாப் படிச்சு டாக்டராயிட்டான். நான் சரியாப் படிக்காம பிஸ்னஸ் வந்துட்டேன்!"

 கோர்ட்டில் பார்வையாளர்கள் பகுதியிலிருந்து சின்ன சலசலப்பு.

விக்னேஷ் நிஷாந்தைப் பார்த்துக் கண்ணடித்தான். நிஷாந்த் முகத்தில்,' அடப்பாவி மனுஷா பாஸ்" எக்ஸ்பிரஷன் காட்டினான்.


 விக்னேஷ் ஜட்ஜ் பக்கம் திரும்பி, "ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!" என்றான்.

 அப்போது பிராஸிக்யூஷன் தரப்பிலிருந்து திலீப் 'இதில் ஏதோ உள்குத்து வேலை இருக்கிறது' என்று நினைத்ததால் உடனே எழுந்து, "அப்ஜெக்ஷன் யுவர் ஆனர். வாயால் கேட்க வேண்டிய கேள்வியை ஏன் எழுதிக் கேட்க வேண்டும்?" என்றான்.

 விக்னேஷ், "உலக விஷயங்களைப் பற்றிப் பேசும்போது சாட்சிக்குப் படிப்பறிவு இருக்கிறதா? என்பதை டெஸ்ட் பண்ண எழுதிக் கேட்டேன். என்ன யுவர் ஆனர், இதெல்லாம் ஒரு கேள்வியா?" என்று சற்று எரிச்சல் காட்டினான்.

 நிஷாந்த் 'பாஸ் நீங்க ஜெகதலப்பிரதாபன்' முழி முழித்தான்.

 "அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட். யூ மே புரொசீட் மிஸ்டர் விக்னேஷ்"

 "தேங்க் யூ யுவர் ஆனர்!"

விக்னேஷ் சாட்சி பக்கம் திரும்பி, "திருக்குறள் புத்தகம் படிச்சிருக்கீங்களா சாரி பார்த்திருக்கீங்களா?"

 "பாத்திருக்கேன் சார்!"

 "இந்த மாதிரி பேப்பர்ல பிரிண்ட் போட்ட திருக்குறள் புத்தகமா?"

 "ஆமா சார்"

 "அண்டார்டிகாவில் கண்டுபிடிச்ச பேப்பரும் இது மாதிரிதான் இருந்ததா?"

 "ஆமாம் சார்"

 "சாரி மூவாயிரம் வருஷம் முன்னாடி ஓலைச்சுவடில தான் வள்ளுவர் குறளே எழுதினாரு!"

விக்னேஷ் ஜட்ஜ் பக்கம் திரும்பி,"ப்ளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ஆல்ஸோ யுவர் ஆனர்!"

 பின் சாட்சியைப் பார்த்து திடீரென்று, "சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை எங்கே சென்றிருந்தீர்கள்?" என்றான்.

 திலீப் பதறிக் கொண்டு எழுந்து, "அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! டிஃபன்ஸ் லாயர் கேஸிற்கு சம்பந்தமில்லாத கேள்வி கேட்கிறார்"

 ஜட்ஜ் விக்னேஷைப் பார்த்து, "என்ன மிஸ்டர் விக்னேஷ், இந்தக் கேள்வி அவசியமா?"

  "கண்டிப்பாக அவசியம் யுவர் ஆனர்! சாட்சி சூழ்நிலையைப் புரிந்துகொள்ளும் விதத்தில் தவறு இருப்பது முதல் இரண்டு கேள்விக்கான பதில்களில் தெரிவதால் இந்தக் கேள்வி தேவை யுவர் ஆனர்!"

 "சரி ஆனால் என்ன சம்பந்தம்?"

 "என்ன சம்மபந்தம் என்பதை அடுத்துக் கேட்கப்போகும் கேள்வி மூலம் நிரூபிக்கிறேன் யுவர் ஆனர்!"

 "ஓ கே புரொசீட்!"

 திலீப் தொய்வாக அமர்ந்தான்.

விக்னேஷ் சாட்சி பக்கம் திரூம்பி மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

 "என்னோட கேர்ள் ஃபிரண்டோட டேட்டிங் போயிருந்தேன் சார்"

 "எதுல போனீங்க பைக்லயா?"

 "இல்ல சார். என்னோட கார்ல"

 "கார்ல பின்னாடி சீட்ல என்ன இருந்திச்சு?"

  "என்னோட கேர்ள் ஃபிரண்டுக்கு பண்ணுன்னா ரொம்பப் பிடிக்கும்.

அதனால ரெண்டு பாக்கெட் ஸ்வீட் பண் வாங்கிப் பின்னாடி சீட்ல போட்டிருந்தேன்."

  "அத உங்க கேர்ள் ஃபிரண்ட் பாத்தாங்களா?"

 "ஆமாசார் பாத்தாங்க!"

 "பாத்துட்டு என்ன சொன்னாங்க?"

 "கார்ல பண்ணோட டேட்டிங்? போறமான்னு கிண்டலடிச்சாங்க!"

"அப்புறம் என்ன சொன்னாங்க?"

"கார் பண் டேட்டிங்னு பாட ஆரம்பிச்சுட்டாங்க! ஜாலியா இருந்துச்சு!"

 "சரி இருந்துக்குங்க நல்ல விஷயம்தான். அப்ப கார்பன் டேட்டிங்னா நீங்க இதைத்தான் மீன் பண்றீங்களா?"

 "ஆமா சார்!"

 "எங்க ஸ்டே பண்ணீங்க?"

 "பாண்டிச்சேரில அண்டார்டிகா ரிசார்ட்ல சார்!"

 பார்வையாளர்கள் பகுதியில் மீண்டும் சலசலப்பு. ஜட்ஜ் சுத்தியல் தட்டி "ஆர்டர், ஆர்டர்"என்றதும் அடங்கியது.

 "ரிசார்ட்ல நீங்க திருக்குறள் புத்தகத்தோட ஒரு பக்கத்தப் பாத்தீங்களா?"

 "ஆமா சார் பார்த்தேன்! என்னோட கேர்ள் ஃபிரண்ட் கூட யாரு இத புக்லருந்து கிழிச்சதுன்னு கோபப்பட்டாங்க சார்!"

 "செவ்வாய்க் கிழமை சாயங்காலம் எவர்கிரீன் ரெஸ்டாரெண்ட்ல உஙக கேர்ள்ஃபிரண்டோட சாப்டீங்களா?"

 "ஆமா சார்! அதெப்டி உங்களுக்குத் தெரிஞ்சது?"

 "அப்ப" பத்ரிகையாளர்கள் பகுதியைச் சுட்டிக் காட்டி,"அங்க சின்ன தலையோட நெறைய முடியோட பச்ச கலர் டீஷர்ட் போட்டுக்கிட்டு ஒருத்தர் நிக்கறாரே, அவரு உங்கள்ட்ட பேசினாரா?"

 "ஆமா சார்!"

 " நீங்களும் உங்க கேர்ள் பிரண்டும் என்ன பேசிக்கிட்டிருந்தீங்க?"

 "அண்டார்டிகாவுல திருக்குறளோட பக்கத்தப் பார்த்தமே, அந்தத் திருக்குறள் மூவாயிரம் வருஷம் பழைமையானது. அப்டீன்னு சொல்லிச்சு சார்!"

 "சரி அப்றம்?"

 "நாங்க பில் பே பண்ணிட்டுக் கிளம்பறப்ப அவரு வந்தார் சார். 'அண்டார்டிகாவுல திருக்குறள் பக்கமா' அப்டின்னு கேட்டார் சார்!"

 "அப்ப உங்க கேர்ஃபிரண்ட் எங்க இருந்தாங்க?"

 "அவங்க ரெஸ்டாரண்ட் எண்ட்ரஸீக்குப் போயிட்டாங்க!"

 "அப்ப நீங்க என்ன கேட்டீங்க?"

 "கார் பண் டேட்டிங் சக்ஸஸா இல்லையான்னு!"

 "அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?"

 "சக்ஸஸ்ன்னு. அதக்கேட்டதும் மகிழ்ச்சியிலே நானும் பின்னாடியே

ஓடிட்டேன் சார். பாவம் அந்த ரிப்போர்ட்டர் கூப்ட்டத நான் காதிலயே வாங்கல!"

 விக்னேஷ் டயர்டாகி,"தட்ஸ் ஆல் யுவர் ஆனர்! கையில் வைத்திருந்த ஒரு நியூஸ் பேப்பர் கட்டிங்கைக் காட்டி,"இது புரளிப்புயல் பத்திரிகைல அந்த ரிப்போர்ட்டர் எழுதினது!" என்று ஜட்ஜிடம் அந்தப் பேப்பர் கட்டிங்கை நீட்டினான்.

 ஜட்ஜ் அதைப்படித்துவிட்டு அந்த ரிப்போர்ட்டரைப் பார்த்து முறைத்து,

 "நௌ த கோர்ட் ஈஸ் அட்ஜோர்ன்ட் டில் நெக்ஸ்ட் மன்டே!"

 விக்னேஷீம் நிஷாந்த்தும் கேஸ் கட்டுகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். சென்னை வானம் பெண்களின் கூந்தல் நிறத்தைத் தன்னில் கொண்டிருந்தது. வானத்தின் விழிகள் ஆனந்தக் கண்ணீரைக் கொட்டத் தயாராக இருந்தது.

 நிஷாந்த்,"பிரில்லியண்ட் பாஸ்!" என்றான்.

 "மழைவரப் போகுது. சீக்கிரம் காருக்கு ஓடுடா!"

 ஓடிக்கொண்டே,"அந்த செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ரெஸ்டாரெண்ட் மேட்டர் எப்டி பாஸ்?"

 "புரளிப் புயல் பேப்பர்ல அந்த மேட்டர் பாத்தேன். கோர்ட்ல அந்த ரிப்போர்ட்டரைப் பார்த்தேன். செவ்வாய்க்கிழமை அந்த ரெஸடாரெண்ட்டுக்குத்தான் போவான். ஸோ டூ ப்ளஸ் டூ!"

 "இருந்தாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம் பாஸ். சும்மா விட்ருந்தீங்கன்னா நம்ம தமிழுக்குத்தான பாஸ் பெருமை!"

 "அடப் போடா இதுலயாடா தமிழுக்குப் பெருமை! மொதல்ல வீட்ல தமிழ்ல டாக்குங்கடா. அப்றம் தமிழுக்குப் பெருமை தானா வரும்!"

      

  



Rate this content
Log in

Similar tamil story from Abstract