மரபணு...!
மரபணு...!


#சிறுகதை...!
மரபணு...!
மும்பை ஏர்போர்ட்டிலிருந்து வெளிவந்து, டாக்ஸி பிடித்து ஹோட்டல் மூன் லைட் வந்தடைந்தேன். வண்ண விளக்குகளின் நடுவே மூன்லைட் நிமிர்ந்திருந்தது.
லவுஞ்சில் காத்திருந்த ஒரு அழகுக் கிளி,"சார், நீங்க டாக்டர் நவ்நீத் தானே?" என்று வினாவில் மொழிந்தது.
"எஸ்" என்று இழுத்தேன்.
"சார், ஐயாம் மிருதுளா! இந்தக் கான்ஃபரன்ஸின் ஆர்கனைஸர்ஸ் கமிட்டியில் நானும் ஒரு மெம்பர். வெல்கம் டாக்டர்!" என்று மிருதுக்கை குலுக்கியது. எனக்கு இன்னும் திருமணமாகாத காரணத்தால், அந்த இதமான மின்சாரத் தீண்டலில் ஒரு இன்ஸ்டன்ட் காதலுக்குள் சென்றேன்.
"தே...தேங்க் யூ!" குழறினேன்.
"சார், நான் உங்களுடைய 'The role of SSRI in the management of OCD' என்னும் article படித்திருக்கிறேன்!"
"நீங்க சைக்கியாட்ரிஸ்டா?"
"இல்லை டாக்டர், நானும் என்ஃபிரண்ட்ஸூம் சேர்ந்து ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்கிறோம்!"
"சாரி, உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேனா?"
"நோ டாக்டர். இதுதான் என் வேலை! கான்ஃபரன்ஸ் முடிந்த பின் உங்களைச் சந்திக்கிறேன் டாக்டர்!" என்ற அந்த தேவதைக்கு என்னிடம் பேசும் ஆர்வம் அவள் கண்களில் தெரிந்ததை உணர்ந்தேன்.
மாலை ஏழு மணி! மீண்டும் அந்த அழகு மயில் திடீரென என்முன் தோன்றி,"OCD பற்றிய உங்க ஸ்பீச் பிரமாதம் டாக்டர்" என்றது.
"மற்றவர்களுக்கு இது பிரமாதமாகத் தெரியும். ஆனால், டாக்டர்களுக்கு இது மிகச் சாதாரணமான ஒரு ஸ்பீச்!"
"நோ டாக்டர். மும்பையின் லீடிங் சைக்கிட்ரிஸ்ட் டாக்டர் மல்ஹோத்ரா உங்களைப்பற்றிப் புகழ்ந்து தள்ளிவிட்டாரே!"
"அது அவருடைய பெருந்தன்மை! சரி, உங்களுக்குச் சிரமமில்லையென்றால் எனக்கு மும்பையைச் சுற்றிக் காட்ட முடியுமா?"
மாலை நேரத்தில் அந்த தேவதையுடன், மின் விளக்குகளின் வண்ண அணிவகுப்பில் மிளிரும் மும்பை வீதிகளில் நடப்பது, சொர்க்கத்தில் நடப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.
"வித் பிளஷர் டாக்டர்! இருங்கள் ஐந்து நிமிடத்தில் வருகிறேன்.
வந்தாள்!
முதலில் கேட் வே ஆஃப் இந்தியா சென்று, புறாக்களுக்கு ஸ்நாக்ஸ் வாங்கிப்போட்டோம். பின் மரைன் ட்ரைவ் முடித்துவிட்டு, இப்போது டின்னருக்காக தாஜில் எதிரெதிரே அமர்ந்திருக்கிறோம்.
"OCD பற்றிச் சொல்லுங்கள் டாக்டர்!"
"நீங்கள் உண்மையிலேயே இதைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறீர்களா? அல்லது எனக்கு 'இன்ட்ரஸ்ட்டான டாபிக் பற்றிப் பேசப் பிடிக்கும்' என்பதற்காகக் கேட்கிறீர்களா?"
"மை காட்! நீங்க சைக்கியாட்ரிஸ்ட் அல்லவா? அதனால் தான் இப்படிக் கேட்கிறீர்கள்! இரண்டுக்கும் என்ன வித்தியாசம் டாக்டர்?"
"முதலாவது காரணமாக இருந்தால் நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீர்கள். இரண்டாவது காரணமாக இருந்தால் உங்கள் கவனம் சிதறும்!"
"நூற்றுக்கு நூறு உண்மை. என் ஃபிரண்ட் ஒருத்திக்கு OCD ப்ராப்ளம் இருப்பதாக டாக்டர் மல்ஹோத்ரா ட்ரீட் பண்ணிக்கிட்டிருக்கார் டாக்டர்!"
"OCD ங்கறது obsessive compulsive disorder என்பதோட ஷார்ட். இது நம்ம நாட்ல சுமாரா மூன்று கோடிப் பேருக்கு இருக்கு. ஒரு மனிதனை அவனுடைய வேலையைச் செய்யாமல் முடக்கிப்போடும் மனவியாதி. ஒருவருக்கு இடைவிடாமல் திரும்பத்திரும்ப ஒரே எண்ணமோ அல்லது பயமோ மூளையில் உற்பத்தியாய்க்கிட்டே இருக்கும். அதனால் ஒரு டென்ஷன் ஏற்படும். இது obsession! இந்த டென்ஷனைக் குறைக்க அவன் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட செயல்களை, இதை rituals என்போம், தொடர்ந்து செய்வான். இது compulsion!"
"உதாரணமா ஏதாவது சொல்லுங்க டாக்டர்!"
"உங்கள் தோழி எதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்கிறார்?"
"அவள் தினமும் தன்னுடைய அபார்ட்மெண்ட்டை பூட்டிவிட்டு, சரியாகப் பூட்டிவிட்டோமாவென ஒரு நூறு முறையாவது செக் பண்ணுகிறதாகவும், அதன் பின், வராண்டா டைல்ஸ் ஒவ்வொன்றின் நடுவிலும், தன் காலை சரியாக டைல்ஸின் மையத்தில் வைத்திருக்கிறோமா என சரி பார்ப்பதாகவும் அருகிலுள்ளவர்கள் பார்த்து ட்ரீட்மெண்ட்டுக்கு அழைத்து வந்து விட்டார்கள்!"
"சரியாகச் செய்திருக்கிறார்கள். அடிக்கடி நிறையத்தடவை பூட்டைச் செக்பண்ணுவது, வீட்டினுள் யாரேனும் நுழைந்து விடுவார்களோ என்ற obsession. பூடடைச் செக் பண்ணுவதும், டைல்ஸின் மையத்தில் காலை வைத்து நடந்தால், திருடன் எவனும் வரமாட்டான் என்பது ritual. இது பிறருக்கு மடத்தனமாகத் தெரியலாம். OCD உள்ளவர்கள் தன் டென்ஷனைக் குறைக்க இதைச் செய்துதான் ஆகவேண்டும்! இது போல் பல செயல்கள் உண்டு. எந்த ஒரு செயலையும் தொடர்ந்து அடிக்கடி செய்து, அதனால் டென்ஷனானாலோ, நேரம் விரயம் ஆனாலோ ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை அணுகுவது நல்லது!"
இரவு உணவு முடிந்தபின்,"குட்நைட் டாக்டர்" சொல்லிவிட்டு, என் இதயத்தில் கொஞ்சூண்டு எடுத்துக்கொண்டு கிளம்பியது அந்தப் பூங்குயில்.
அடுத்தநாள் எலிஃபன்ட்டா கேவ்ஸ் ஃபெர்ரியில், எங்கள் அழைப்புகள், 'நவ்நீத், மிரு' என்று பரிணாம வளர்ச்சி பெற்றது.
மூன்றாவது நாள் பீச் மணலில் உட்கார்ந்து கொண்டு, சுடச்சுட பாவ்பாஜியைக் கையில் வைத்துக் கொண்டு, அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டேன்.
"மிரு, என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?"
அவள் முகத்தில் சிறிது நாணம் தவழ்ந்தது.
"என்ன திடீர்னு?"
"என்னைப்பற்றி நான் சொல்லி விடுகிறேன். எந்தக் கெட்ட பழக்கமும் எனக்கில்லை. என் சம்பாத்யத்தில் உன்னை ஓரளவு வசதியாக வாழவைக்க என்னால் முடியும்!"
"எனக்கும் உங்கள் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கு நவ்நீத். அதைக் காதல் இல்லைன்னு உறுதியாகச் சொல்ல முடியாது!"
பெண்கள் எவ்வளவு புத்திசாலித்தனமாகச் சொற்களை உபயோகிக்கிறார்கள். ஆண்களை விட அவர்களுடைய intuitive brain ஐயும் language brain ஐயும் ஆண்டவன் நன்றாகப் படைத்துவிட்டான். ஒவ்வொரு பெண்ணும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்தான்! நான் உள்ளுக்குள் மகிழ்ந்தேன்.
"நவ்நீத், எங்கள் வீட்டுக்கு இப்ப வர்றீங்களா?"
அவள் வீட்டை வந்தடைந்தோம். கதவைத் திறந்த பெண்ணைப் பார்த்ததும் என் முகத்தில் அதிர்ச்சி! ஆனந்தம்! பதினைந்து வருடங்களுக்கு முன் தன் காதலனுடன் வீட்டைவிட்டுச் சென்ற என் உடன் பிறந்த சகோதரி ஷியாமளா! எனக்கும் என் அக்காவிற்கும் பதிமூன்று வயது வித்தியாசம்! எனக்கு ஏழு வயதாய் இருக்கும் போது சென்றவள்! அவள் முகம் அப்படியேதான் இன்றும் அழகோடு பொலிவோடு இருக்கிறது. என்னைச் சிறுவயதில் மிக அன்பாகப் பார்த்துக் கொள்வாள். வீட்டில் அவள் காதலுக்கு ஒப்புக்கொள்ளாததால் என் பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியேறினாள். அவள் சென்ற பிறகு வெகு நாட்கள் அவளை நினைத்து நான்அழுதிருக்கிறேன்.
அவளுக்கு என் வளர்ச்சியால் என்னை அடையாளம் தெரியவில்லை! என் உணர்வுகளை அடக்க முடியாமல்,"ஷியாமா அக்கா! நல்லாருக்கியா? நான் உன் தம்பி நவ்நீத்!" என்று தழுதழுத்தேன். ஷியாமா அக்காவிற்கும் சட்டென்று புரிய,"டேய் நவ்நீத்! நீதானா? எப்படி வளர்ந்திட்டே? அப்பா அம்மா நல்லா இருக்காங்களா?" என்னை அரவணைத்து ஆனந்தக்கண்ணீர் விட்டாள்!
"ஹலோ பாசப் பறவைகளா? நான் ஒருத்தி இங்கே இருக்கேன்!"
மிருதுளாவின குரல் கேட்டுத் திரும்பினோம்.
மிருதுளா முகத்தில் மகிழ்ச்சி! என்னைப் பார்த்த பார்வையில் காதல் தெரிந்தது.
அடுத்தநாள் நான் ஊருக்குக் கிளம்பம்முன், மிருதுளா நாணத்துடன் என்னை வழியனுப்ப என்னுடன் டாக்ஸியில் வந்தாள்.
"என்ன மௌணம் நவ்நீத். உங்களைத் திருமணம் செய்து கொள்ள எனக்கும் விருப்பம்தான். முதன் முதலில் உங்களைப் பார்த்த போதே என் மனதைப் பறி கொடுத்துவிட்டேன்!"
"மிரு நீ என் அக்காவின் பெண். நாம் திருமணம் செய்து கொண்டால், ஒரே விதமான மரபணுக்கள் காரணமாக, நமக்குப் பிறக்கும் குழந்தைகள் குறைகளுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், நாம் திருமணம் செய்து கொள்ளாமலிருப்பதே நல்லது!"
மிருதுளாவின் கண்களில் கண்ணீர்! "நாம் சந்திக்காமலே இருந்திருக்கலாம் நவ்நீத்!"
"இந்த மூன்று நாட்களை என் வாழ்நாளில் எப்போதும் மறக்க முடியாது மிரு. நீ வேறு யாராவதாக இருந்திருந்தால் கண்டிப்பாக நீதான் என் மனைவி. ஒரு டாக்டராக இருந்து கொண்டு என்னால் எதிர்காலச் சந்ததிக்குப் பிரச்னைக்ள் கொடுக்க முடியாது மிருதுளா! என்னை மன்னித்து விடு!"
-