Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்11)

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்11)

5 mins
249


இதயத்தில் ஓர் இசை...!


பாகம் 11


வினிதாவும் அருணும், அருணின் வீட்டிற்குள் நுழைந்ததும், ஹாலில் உள்ள ஸோபாவில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்த அருணின் தாய் சாரதா சத்தம் கேட்டு நிமிர்ந்து அருணைப் பார்த்ததும் மிக மிகக் குதூகலத்துடன் அவன் அருகில் வந்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டு,

"இன்னிக்கு உன்னுடைய பேட்டிங் எக்ஸலன்ட்!" சந்தோஷம் அவருடைய இதயத்தில் நிறைந்து கொள்ள அவனைக் கட்டிப் பிடித்து ஆசீர்வதித்தார். 


பக்கத்து அறையில் இருந்த அவனது தந்தை கோதண்டராமனும் அருகில் வந்து

"வாட் ஏன் எகஸ்டிராடினரி பர்ஃபார்மன்ஸ்! இன்னிக்கு நீ பின்னிட்டே!"என்று அருணின் முதுகில் தட்டி அவரும் இவர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்தார். 

"நீ மேட்ச் முடிந்தவுடன் மற்ற பிளேயர்களுடன் ஹோட்டலிலேயே இன்று இரவைக் கழிப்பாய், நாளைக்குத் தான் வீட்டிற்கு வருவாய் என்று நினைத்தோம். ஆனால் திடீரென இப்படி வந்து எங்களை ஆச்சரியப்படுத்துவாய் என்று நினைக்கவில்லை!" என்று அம்மா கேட்கவும்,


"உங்கள் இருவருக்கும் ஒரு முக்கியமான விஐபி ஒருவரை அறிமுகப்படுத்தவே வந்திருக்கிறேன்" என்று அருண் சொல்ல, அப்பொழுதுதான் முதன் முறையாக வினிதாவைப் பார்த்தார்கள் அவனுடைய தாய் தந்தை இருவரும்.


இருவர் முகத்திலும் மகிழ்ச்சி. 

"ஓ மஞ்சுவை அழைத்து வந்து இருக்கிறாயா?" என்று இவனைப் பார்த்து கூறிவிட்டு, வினிதாவை பார்த்து,"வாம்மா மஞ்சு! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. அம்மா நன்றாக இருக்கிறார்களா?" என்று வாஞ்சையுடன் சாரதா வினவவும்,


அப்பொழுது தான் அருணுக்கு உறைத்தது. 'ஓ...வினிதா மஞ்சு குரூப்ஸ் ஆஃப் ஹாஸ்பிடல்ஸ் ஓனர் டாக்டர் மஞ்சுவைப் போலவே இருக்கிறாள். அதனால் தான் வினிதாவை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டேன். இப்பொழுது அம்மாவின் வாயிலாக அதற்கு ஓர் விடை கிடைத்துவிட்டது. மை காட்! மஞ்சுவின் முகத்தை நான் எப்படி மறந்து போனேன்? வினிதாவின் மேல் உள்ள காதல் என் மூளையை மழுங்கச் செய்து விட்டது' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சந்தோஷப்பட்டான். 


இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, வினிதா அந்த  ஹாலை நோட்டமிட்டாள். ஹாலில் மாட்டியிருந்த ஒரு போட்டோவில் அருணுடைய அம்மாவுடன் தனது தாயும் இருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டாள். மற்றொரு போட்டோவில் அருணுடைய அம்மாவுடன் மஞ்சு இருப்பதைப் பார்த்து அவளுடைய ஆச்சரியம் பன்மடங்காகப் பெருகியது. போட்டோவில் அம்மாவும் மஞ்சுவும், அருணுடைய அம்மாவுக்கு எதையோ கொடுத்துக்கொண்டிருந்தனர். அருணுடைய பேச்சு இவளது சிந்தனையைக் கலைத்தது. புக் ஷெல்ஃபில் வினிதாவின் அம்மா எழுதிய நாவல்கள் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டீப்பாயின் மேல் அம்மா சமீபத்தில் எழுதிய நாவல் 'மனதில் ஒரு யுத்தம்' பாதி படிக்கப் பட்டதற்கு அடையாளமாக புக்மார்க்குடன் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அம்மாவின் மிகத் தீவிரமான ரசிகர்கள் போலும்!  


"அம்மா, இது டாக்டர் மஞ்சு இல்லை. என்னுடைய அன்பிற்கு பாத்திரமான இந்தப்பெண் வினிதா நான் தங்கியிருக்கும் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணிபுரிகிறார். வினிதாவை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும், உங்களை வினிதாவிற்கு அறிமுகப்படுத்தவுமே நான் வினிதாவை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்"


'அப்படியே மஞ்சுவை உரித்து வைத்தது போல இருக்கிறாளே இந்தப் பெண்!' அருணின் அம்மா சாரதாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை! அதை அடக்க மாட்டாமல் வினிதா விடமே கேட்டுவிட்டார். 


"சகோதரிகள் ஒருவரைப் போல் மற்றொருவர் இருப்பதில் என்ன ஆச்சரியம் ஆன்ட்டி?" வினிதாவின் இந்தப் பதிலைக் கேட்டதும் அனைவரும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.


"என்ன டாக்டர் மஞ்சு உன் சிஸ்டரா?" சாரதாவின் வியப்பு பன் மடங்கானது! "அப்படியானால் எழுத்தாளர் சியாமளா உன் அம்மாவா?"


"ஆமாம் ஆன்ட்டி மஞ்சு என் உடன் பிறந்த தங்கை எழுத்தாளர் சியாமளாவின்  மூத்த பெண் நான்!"


வினிதாவின் இந்த பதிலைக் கேட்டு அருண் செம குஷியாகி விட்டான். கடைசியில் பார்த்தால் நம்ம சியாமளா ஆன்ட்டியின் பெண்தான் வினிதா! என்ற உண்மை அவன் இதயத்தில் தேனாக உணரப்பட்டது. 


அருணின் அம்மாவும் அப்பாவும் தங்களுக்குள் ஒரு மகிழ்ச்சியான பார்வையை பரிமாறிக் கொண்டார்கள்! 'அருண் வினிதாவை தன் அன்பிற்குரிய பெண் என்று சொன்னானே அப்படியானால் இவளை அவன் காதலிக்கிறான் என்று தானே அர்த்தம்! கடவுளே என் மகன் அருணின் இதயத்தில் மீண்டும் ஒரு பெண் இடம் பிடித்து இருக்கிறாள் என்பது எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி! அதுவும் தனக்குப் பிரியமான தோழி சியாமளாவின் பெண் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா? எவ்வளவு நாட்கள் அருணின் வாழ்க்கையைப்பற்றி கவலைப்பட்டு இருக்கிறேன். நல்லவேளையாக கடவுள் இப்போதாவது கண் திறந்தாரே!' என்று மானசீகமாக கடவுளை வேண்டினார் சாரதா. 


"வாம்மா வினிதா, இப்படி வந்து ஸோபாவில் உட்கார்ந்து கொள்!" என்று அன்புடன் வினிதாவை அழைத்துத் தன் அருகில் அமர வைத்துக் கொண்டார் சாரதா. ஆசையுடன் அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து தடவி கொடுத்தார். 


"உன் வாழ்க்கையைப் பற்றி உன் அம்மா என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார்கள். உன்னுடைய பெயரை நான் மறந்துவிட்டேன். உன்னை நான் நேரில் சந்தித்தது இல்லை. அதனால் தான் நீ சியாமளாவின் பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. 

ஐ அம் சாரி வினிதா"என்று சாரதா சொல்ல,


"அய்யய்யோ ஆன்ட்டி, இதற்கெல்லாம் எதற்கு சாரி சொல்லுகிறீர்கள்?" என்றாள் வினிதா பதறியபடி! 


"அம்மாவும், தங்கை மஞ்சுவும் நன்றாக இருக்கிறார்களா? அவர்களுடன் பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. நான் பேசினால் அவர்களுடைய வேலைக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று பேசவில்லை!" அன்புடன் வினவினார் சாரதா. அவருடைய குரலில் ஒரு இதமும் மிருதுத் தன்மையும் கலந்து இருந்தது.


"அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை ஆண்ட்டி நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அம்மாவுடன் பேசலாம்"


"உன் அம்மாவும் உன் தங்கை மஞ்சுவும் உதவி செய்யவில்லை என்றால், இந்த காப்பகங்களே உருவாகியிருக்காது. அவர்கள் செய்த உதவியை எப்பொழுதும் என்னால் மறக்க முடியாது. இன்றும் அந்தக் காப்பகங்கள் நன்றாக நடைபெற அவர்கள் இருவர் மட்டுமே காரணம். நான் ஜஸ்ட் நிர்வாகம் மட்டுமே செய்கிறேன். அவ்வளவுதான். அவர்கள்தான் அனைத்து நிதி உதவிகளையும் செய்கிறார்கள்!"  


தன்னுடைய தாயும் தங்கையும் தனக்குத் தெரியாமல் இவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார்கள் என்று அறிந்து மிகவும் ஆச்சரியம் கலந்த ஒரு மகிழ்ச்சியை அடைந்தாள் வினிதா. என்ன ஒரு மனித நேயம் இருவருக்கும்! அவர்கள் இருவரின் மீதும் இவள் வைத்திருக்கும் பாசத்தின் அளவு இன்ஸ்டன்டாக அதிகரித்தது. தன் மகளிடம் கூட இவள் தாய் சொல்லவில்லை என்று எண்ணும் போது, தன் அக்காவிடம் கூட இவள் தங்கை சொல்லவில்லை என்று நினைக்கும் போது தன் அம்மாவும் தங்கை மஞ்சுவும் எந்த ஒரு விளம்பரத்தையும் எதிர்பாராது செய்து கொண்டிருக்கிற தன்னலமற்ற உதவிகளை நினைத்து இவள் உள்ளத்தில் ஒரு பெருமிதம் மலர்ந்தது. 


இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அருணின் தந்தை கோதண்டராமன் அருணிடம்

"இன்று உன் பிளான் என்ன?" என்று வினவினார். 

"நாங்கள் இருவரும் டின்னருக்குப் பிறகு வினிதாவின் அம்மா வீட்டிற்குச் சென்று அவர்களை மீட் பண்ணலாம் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் வினிதா?"


அருண் தன் அம்மாவை மீட் பண்ணலாம் என்று சொன்னவுடன் உடனடியாக ஒரு சந்தோஷப் பட்டாள் வினிதா. தன்னுடைய தாயும் தங்கையும் தனக்குத் தெரியாமல் இவ்வளவு சமூக சேவைகள் செய்திருப்பது தெரிந்தவுடன் உடனடியாக அவர்களைப் பார்க்க ஆசைப்பட்டாள். அருணே அம்மாவை மீட் பண்ணலாம் என்று உடனே அதற்குச் சம்மதித்தாள். 


"அவ்வாறெனில், நாம் வரப் போவதை முன் கூட்டியே ஆன்ட்டியிடம் சொல்லி விடு" என்று அருண் அறிவுறுத்த,


"நான் ஒரு விஐபியுடன் வருவதாக மட்டும் சொல்கிறேன். யாரென்று சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும்" வினிதா சொன்னாள்.


"வினிதா, நீ அம்மாவுடன் பேசும் போது என்னிடமும் உன்னுடைய ஃபோனைக் கொடு. நானும் உன்னுடைய அம்மாவிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்கிறேன். அவருடன் பேசி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது", என்று சாரதா அன்புடன் கேட்க,


"ஆன்ட்டி இப்பொழுது நீங்கள் பேசினால், சஸ்பென்ஸ் போய் விடும். நான் அங்கு சென்றவுடன் உங்களுக்கு ஃபோன் பண்ணி அம்மாவிடம் தருகிறேன். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுங்கள்" என்றாள் வினிதா புன்னகைத்து. அதற்கு அருணின் அம்மா சாரதாவும் அதுதான் சரி என்று மகிழ்ச்சியுடன் தலையாட்டினார்.


வினிதா தன் தாய்க்கு ஃபோன் செய்தாள். மறுபக்கம் தன் அம்மாவின் குரல் கேட்டது.


"மஞ்சு வீட்டுக்கு வந்திட்டியா?"இது அம்மா.


"இன்னும் இல்லை. வாட்ச்மேனை அனுப்பி வைத்தாகி விட்டது. டைசனுக்கும் வாட்ச்மேனையே ஃபீஃட் பண்ணச் சொல்லி விட்டேன். இன்னிக்கு உன் வீட்டிற்கு வந்து உன்னைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று இருக்கிறேன். நீ எத்தனை மணிக்குத் தூங்க ஆரம்பிப்பாய்? உனக்கு சிரமம் இல்லியே?"


"என்ன திடீர்னு அம்மா மேல் பாசம்? நான் என்றைக்கு பன்னிரண்டு மணிக்கு முன் தூங்கி இருக்கிறேன்? தன்னுடைய மகள் வீட்டுக்கு வந்தால் ஒரு தாய்க்கு சிரமம் எப்படி ஏற்படும்? மகிழ்ச்சி தானே ஏற்படும்? சாப்பிட்டு விட்டாயா?"


"இன்னும் இல்லை. நான் இன்று ஒரு விஐபியுடன் டின்னர் முடித்தபின், அந்த விஐபியை அழைத்துக் கொண்டு உன் வீட்டிற்கு வருகிறேன்"


"யார் அந்த விஐபி?"வினிதாவின் அம்மா சியாமளா சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் கேட்டார்.


"அதுதான் சஸ்பென்ஸ். வந்தவுடன் நீயே பார்த்துக் கொள்" என்று சொல்லி விட்டு ஃபோனைக் கட் பண்ணி விட்டாள் வினிதா.


அருணின் தந்தை கோதண்டராமன்,"உங்கள் இருவருக்கும் தாஜில் ஒரு டேபிள் ரிசர்வ் செய்திருக்கிறேன். நீங்கள் இருவரும் அங்கு சென்று உங்கள் டின்னரை முடித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் முன்னால் நீங்கள் இருவரும் வந்திருந்தால், என் சமையலில் இருந்து நான் தப்பித்து இருப்பேன்" என்று அவர் சமையலை அவரே கிண்டலடித்துக் கொண்டார்.


இருவரும் அருணின் தாய், தந்தையரிடம் இருந்து விடை பெற்று ஹோட்டல் தாஜை நோக்கி விரைந்தனர். ஹோட்டலில் அவளின் சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் அருணால் ஒரு அதிரடியான மாற்றத்திற்கு உள்ளாகும் என்று அவள் ஒரு போதும் நினைத்திருக்க மாட்டாள்!

               -தொடரும்


  


  




            



Rate this content
Log in

Similar tamil story from Romance