பெண்பா
பெண்பா
பெண்பா :
நிலாவையும்,
நில்லாது தூரும் மழையையும் -
பெண்களை விட ஆண்களே அதிகம்
ரசிக்கின்றனர் !
அதில், அப்படி என்ன அழகு
இருந்துவிடப்போகிறது - என்ற கேள்வி,
ரசிக்கத்தெரியாதவர்களுக்குள்
எப்பொழுதும்
உலாவிக்கொண்டேயிருக்கும் .
அன்றொரு நாள்,
பெய்து தீர்த்த மழை,
குளிர் பூசிய காற்று,
மென்மையாய் கலங்கிய முழுநிலா,
நிலத்தில் பூச்சிரிக்கும் புற்களில்,
தேங்கி வாழ்ந்த சிற்சில
மழைநீர்த்துளிகள்,
அதன் ஊடே ஓடி ஓடி ஒழிந்து பேசும்
தவளையின் குமுறல்மொழி,
வீட்டின் மேற்க்கூரையில் இருந்து,
கடைசி துளிவரை மறக்காமல் வடியும்
நீர்ச்சத்தங்கள்,
ஒரு நாள் மட்டும் உயிர் பேசும்
ஈசலினத்தின் சிறகுதிர்வுகள் என ,
என் அந்த நேர நிமிடங்கள்,
பேரழகாய் தான் இருந்தது.
காதலித்துக்கொண்டிருந்தேன் -
காதலியென்பவள் இல்லாமலேயே !
சில வானிலை மாற்றங்கள் -
ஏதோ ஒரு வகையில்,
காதலை தூண்டாமல்
நகர்வதேயில்லை .
அது,
மனதை - சில மெல்லிய
பாடல் வரிகளை
முணுமுணுக்கத்தான் வைக்கிறது .
உலகில்,
அவளை வேறாரும்
என்னளவு ரசித்திருக்கவும் மாட்டார்கள் -
ரசித்து ரசித்து வர்ணித்திருக்கவும்
மாட்டார்கள் !
நொடிக்கொருமுறை அவளை ரசித்து
தீர்த்துக்கொண்டுதான் இருந்தேன் .
அவளுக்கு உடலில்லை - உருவமில்லை
ஆனால் உயிருண்டு -
உணர்வுண்டு !
காதல் சார்ந்த , என் செயல்பாடுகள் -
பிறர் பார்வைக்கு என்னை ஒரு
மனநிலை குறைவானவன் போலவே
காட்சிப்படுத்தும் .
நான் நிலவை ரசிப்பவன் இல்லை -
அந்நிலாவின் காதுகளுக்குள் சென்று,
அவளை பற்றியே பேசித்தீர்ப்பவன் !
நான் மழையை ரசிப்பவன் இல்லை -
அம்மழையின் துளியை விட அவளே
மிதமானவள் , இதமானவள் என்று
புகழுரைப்பவன் !
சில நேரங்களில் எதையாவது கிறுக்கி,
அதற்க்கு கவிதை என்று பெயர் வைத்து,
அதனோடும் பேசித்தீர்ப்பேன் -
அவளை மட்டும் .
இன்னும் இதுமாதிரியான சில
மனநிலை சரியில்லாத
செயல்பாடுகளில் - சிறந்தவன் நான் !
இரவு நேர படுக்கையில் கூட ,
அவள் என் தலையணை ஆவாள் !
இப்படித்தான் என் நாட்கள் -
அவளோடும் அவள் புகழோடும்
பிழைத்துக்கொண்டிருந்தது !
கற்பனை -
காட்சியில் இருந்து பிறந்ததா ?
இல்லை, காட்சிதான் -
கற்பனையில் இருந்து பிறந்ததா ?
நேரம் 10.30 இரவு,
தனியாக தொலைதூரம் நடந்து சென்றே
ஊர் ரசிக்கும் பழக்கமுள்வன் நான்.
சாலையோர மின்கம்பத்தில் உள்ள
ஒரு மின்விளக்கு ,
எனக்கு வயதாகிவிட்டது -
அதனால் என்னை மரணம்
அழைக்கிறது என்று,
அதற்க்கு தெரிந்த மொழியில்
மினுமினுத்துக்கொண்டே
அணைந்துவிட்டது .
யாருமில்லா சாலை .
எனக்கு கொஞ்சம் பதைபதைக்கும்
பயம் .
இரவும் இருளும் எனக்கு
மிகப்பிடித்தமான ஒன்றுதான் .
ஆனால் சில அமானுஷ்ய பயங்கள்
உள்ளவன் நான் .
அந்நேரம் கூட,
அவள் நினைவுப்புலம்பல்கள் தான்
எனக்கு பெருந்துணை !
எப்படியோ அந்த சாலையை
கடந்து வந்து -
என்னை சற்று பயமுறுத்திய
அந்த இருளை பார்த்து
சின்னதாய் ஒரு முறுவல்
எறிந்துவிட்டு தான் வந்தேன் .
நேரம் கொஞ்சம் தீர்ந்துபோயிருந்தது .
தனிமையில் நடந்து செல்வதின்
காரணம் கூட காதல் தான் !
சில இரவு பகல்
இப்படித்தான் நகர்ந்து கரைந்தது .
என் காதல்,காமம்,தோழமை,
பொழுது,நினைவு என
எல்லாவிலும் அவளே
ஆட்க்கொண்டிருந்தாள் !
அவள் நிற்கும் பேருந்து
நிலையங்களுக்கு -
பூக்காடு என்றே பெயர் வைக்கலாமே !
விவரம் தெரியாத குழந்தை முகம்
கொண்டவள் போல நின்றிருந்தாள்,
அவள் - அந்த பேருந்து நிலையத்தில் .
உலகில், பெண்கள் ஏராளம் தான் -
ஆனால் ஆசையை தாண்டிய காதல்,
ஒருத்தியிடம் மட்டுமே நிகழ்வதன்
ரகசியம் என்னவோ !
வெறும் கற்பனைகளிலும்
கவிதைகளிலும் என்னோடு
வாழ்ந்திருந்தவள் -
நிஜமானவளாய் நிற்பதை கண்ட நான்
என்னாகியிருப்பேன் !
மூச்சின் வேகம் சற்று ஏறியிருந்தது.
மழை இல்லையென்றாலும் மனதை
சூழ்ந்தது மழை வாசம் .
கண்கள் - ஊரையே ஏமாற்றி,
அவளை அவ்வப்போது
என் பார்வைக்குள்
பத்திரப்படுத்திக்கொண்டேயிருந்தது .
உயிருக்குள் ஒரு நிலநடுக்கம்.
உலகுக்கு, என் உணர்வின் மொழி
புரிந்தால் - என்னை ஏளனம் செய்தே
நகைத்திருக்கும் -
ஏன் இந்த உயிர்நடுக்கம் என்று .
ஆனால் இதுவரை தீராத சந்தேகம் -
என் கவிதைக்குள் ஒளிர்ந்திருந்தவள்
எப்படி என்னெதிரே காட்சிப்பட்டாள் !
அவளை காணும் வரை,
நான் நம்பிக்கையற்றவனாய்த்தான்
இருந்தேன் -
நான் நே(யோ)சிப்பவளை என்னால்
சந்திக்க முடியுமா என்று !
அதுவரை - மெதுவாய் , மென்மையாய்
நடந்து திரிந்த என் பாத வேகம்,
பன்மடங்காகின .
நிலைப்படவேயில்லை
என் மனம் .
இப்படியெல்லாம்
என் உணர்வுகளோடு உள்ளார்ந்து
போராடிக்கொண்டிருக்கும்பொழுதே,
ஏதோ ஒரு நிமிடம்,
ஏதோ ஒரு பேருந்து பயணம்,
அவளை கவர்ந்து சென்றுவிட்டது !
என் கண்கள் கூட கவனிக்காமல்
விட்டுவிட்டது !
r>
மறுநாள் அதன் மறுநாள் என
நாட்கள் மிக மெதுவாக
அவள் நினைவாக
அவள் போக்கில்
அசைந்துக்கொண்டிருந்தது !
உடல் உருவம் இல்லாத பொழுதே
ஏராளக்கவிதை கிறுக்கிய என் காதல் -
அவள் அகம் கண்ட பின்னர்
ஓய்ந்திருக்குமா என்ன !
உலக கவிஞர்களையெல்லாம்,
ஒரு ஓரமாய்
அப்புறப்படுத்திக்கொண்டிருந்தது -
அவளுக்கான என்
மென்மையான , மேன்மையான
கற்பனைக்கவிதைகள் !
அதில் ஒன்றுதான் -
அவளிடம் நீட்ட வேண்டும் என்று எழுதிய
கவிதை தான் இது ......
பூக்களை ரசிக்கும்
மங்கைகளுக்கு மத்தியில் ,
பூக்களே ரசிக்கும்
மங்கைதான் என்னவள் !
அவளுக்காக என்றபொழுது மட்டும்,
கற்பனைகளும் கவிதைகளும்
கரைவதேயில்லை !
அவள் மீது கொஞ்சம் கோபம் தான் -
அவள் மீது அதீத காதல் சிந்தும் என்னை
ஏன் அடையாளம் காணாமல் சென்றாள்
என்று !
அதன் பிறகு ,
எத்தனையோ மழை , குளிர் , மனம் என
எல்லாவிலும் அவள் பிம்பங்கள்
அசைந்துகொண்டுதான் இருந்தது .
இனிமேல்,
அவள் காணக்கிடைக்கமாட்டாள்
என்ற அதிருப்தியிலும்,
சில நாட்கள் வெறுமையின்
வெளிச்சத்தில் கூட வாழ்ந்து முடிந்தது .
அந்த என் அதிருப்தியை அப்படியே
வீசியெறியச்செய்தது - எதிர்பாராத
அவள் மறுமுறை சந்திப்பு !
சுட்டெரிக்கும் வெள்ளை வெயில் நடுவே,
கனநீர் மழை போல நடை
பூத்துக்கொண்டிருந்தாள்,
ஒரு தார்சாலையில் !
என் நெற்றியில் -
விடாது கொட்டி தீர்த்த,
வியர்வை கூட ,
அவளை பார்த்த பின்,
எனக்குள் குளிர் பூசியது போலவே
ஒரு நிகழுணர்வு .
வருகிறாள்
வாசம் செய்கிறாள்
மறைகிறாள்
இந்த முறை,
அவள் வாசத்தின் விரல்களை
இறுக்கமாக பிடித்து -
அவள் பின்னாலேயே என் பாதங்களை
பயணப்படுத்தினேன் .
அவள் பணியிடம் கண்டுணர்ந்தேன் .
அவளை பற்றியே பேசிப்பேசி
பல இரவுகளை இம்சித்திருக்கிறேன் !
ஒரு நாள் -
ஏதோ ஒரு வேகத்தில் அவளிடம்
என் காதலை சொல்ல நிமிர்ந்தேன் -
ஆனால் அவள் கண் பார்த்து
கவிழ்ந்தேன் .
மண் பார்த்து நகைத்தேன்.
எனக்கே தெரியாமல்
எப்படியோ சொல்லி முடித்தேன் .
பதிலே இல்லை .
இலையில் தங்கா நீர்த்துளி போல -
என் நிழல் மீது சாய்ந்திருந்த
அவள் நிழலை,
அபகரித்து
அழைத்து
பிரித்து
எடுத்து
விலகி சென்றாள் !
ஒரு தனியறையில் என்னை நானே
திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தேன் .
சரியாக சொல்லவில்லையா ?
முறையாக பேசவில்லையா .
முழுவதும் சொல்லாமல்
போனேனா ?
இன்னும் தெளிவாக
சொல்லியிருக்க வேண்டுமா ?
கவர்ச்சியாக சொல்லவில்லையா?
கவிதையா சொல்லியிருக்க
வேண்டுமா?
இன்னும் பல கேள்விகளோடு
என்னை நானே உள்ளுணர்வுகளால்
தண்டித்துக்கொண்டிருந்தேன் .
மறுநாள் மட்டுமில்லை -
சில நாள் வரை அவள்,
பதில் எடுத்து வராத புறாவை போலவே
சிறகெடுத்து விரைந்தாள் !
கவிதை கற்பனை என
அவள் நிகழ்கனவுகளோடு
வழக்கம்போல என் நாட்களை
தீர்த்துக்கொண்டிருந்தேன்.
ஒருநாள் மாலையில்,
மழையில்
சிறுவர்களோடு
விளையாடிக்கொண்டிருந்தேன்.
அந்த மழையிலும் கூட
ஒரு ஒளியாக அவள் வருகை
தென்பட்டது .
என் முகம் துடைத்தேன்.
தலை திருத்தினேன் .
மீசை வருடினேன் .
என் எதிரில் வந்தாள்.
நின்றாள்.
விழித்தாள்.
மொழித்தாள்.
அவள் பேசியது இதுதான் ....
நான் உன்னை வெறுத்து
விலகினாலும்,
நீ என்னை வெறுத்து
விலகினாலும்,
என்னை நீ மறப்பது
சுலபமா?
கடினமா ?
....... என்று கேட்டாள் !
மறப்பது ஒன்றும் கடினமில்லை,
ஆனால் ஏன் மறக்கவேண்டும்.......
என்று கேட்டேன் .....
ஒழிந்தும் ஒழியாத
ஒரு ஆள்மயக்கும் புன்னகை வீசி,
வந்த வழியே மறைந்தாள் .
அன்றிலிருந்து அவள் என் அன்றில்
ஆனாள் !
என் கவிதை
என்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டது !
இரு பாதங்கள் நான்காகின.
இதழ் கூட இதமாகின,
இரவெல்லாம் சுகமாகின,
அழகெல்லாம் அவளாகின !
பெண் சார்ந்த எல்லாம் அழகு தான்.
அப்படித்தான் பெண்பெயரும் !
சில நாள் காதலுக்கு பின்தான் -
அவள் பெயரையே அறிந்தேன்
அவள் பெயர் பெண்பா
(எனக்கு தெரியாமலேயே - அவ்வப்போது அவள் என்னையும் ரசித்திருக்கிறாள் .
சில நாட்களுக்கு பின் அவள் தான் என்னிடம் சொன்னாள் )
அவளே என் நெடுங்கால நிகழரசி
காதல் - உணர்வுகளின் தகவமைப்பு !