balaji venkat

Drama

5  

balaji venkat

Drama

ராமனும் கோதையும்

ராமனும் கோதையும்

5 mins
566


கோதைக்கு காபி என்றால் உயிர்… அதுவும் ஐயர்க்கடை காபி… மிதமான சூட்டில் இரண்டு வாளி காபி கோதையின் முன்னே வைக்கப்பட்டது… கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து காபியை குடித்துவிட்டு மூன்று பூச்சி மாத்திரையை விழுங்கியது.. கோதையின் கன்னத்தில் முத்தமிட்டு ராமன் காபி எப்படி? என்று அன்போடு யானையை தழுவிக்கொண்டே கேட்டார்.. கோதை திருப்தியாக தலையாட்டினாள்…


இந்தாங்க இது கோதைக்கி என்று அண்ணாச்சி பழத்தை நீட்டினாள் சிறுமி ஸ்ரீநிதி.தினமும் யானையை பார்ப்பதற்காகவே ஏதாவது பழம் கொண்டுவருவாள்.இன்று ராமன் அதை வாங்காமல் நின்றார்.ஸ்ரீநிதி முகம்வாடி போனாள். இன்னிக்கி நீ கொடுக்கிறியா? என்றார்.. எனக்கு பயமா இருக்கே என்றால் மழலை வழிய.. ராமன் சிரித்துக்கொண்டே நான் இருக்கேன்ல நீ கொடு என்று சொல்லிவிட்டு யானையின் காதில் ஏதோ கூறினார்.. யானை தலையை ஆட்டிவிட்டு அந்த சிறுமியின் இரண்டு அடி உயரத்திற்கு குனிந்து கொண்டது.


 ஸ்ரீநிதி பயத்தோடு யானையின் அருகில் சென்றால். ம்ம்ம்ம் வாய தொற என்றார் பாகன் ராமன். யானை ஆஆஆ காட்டியது… ஸ்ரீநிதி கையை பிடித்து பழத்தை யானையின் வாயில் ஊட்டினார். நா உன்ன தொட்டு பாக்கவா என்று யானையிடம் இம்முறை அவள் பேசினாள். அது தேமேன்னு இருந்தது பிஞ்சு விரலால் யானையின் நெற்றியை ஸ்ரீநிதி வருடினாள் அந்த வருடலில் இரண்டு குழந்தையும் மகிழ்ந்து போனது. பெரிதாக ஏதோ சாதித்த சந்தோஷத்தில் ஸ்ரீநிதி தத்தக்க பித்தக்க என்று ஓடினாள் தன் தோழிகளிடம் சொல்ல..


அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு ராமன், யானை, மற்றும் ராமனின் தம்பி தேவராஜன் (இரண்டாவது பாகன்) மூன்று பேரும் கோவில் பிரகாரத்தில் சென்று கொண்டு இருந்தனர். உன் முரட்டு தனத்த அதுகிட்ட காட்டாத.. அது அன்பா சொன்ன கேட்கும் என்று தேவராஜனை கண்டித்தார். நா எவ்ளோ அன்பா சொன்னாலும் கேக்கமாட்டேந்து.. அதான் அடிக்குறேன்.என்று எங்கோ பார்த்துக்கொண்டே தேவராஜன் சொன்னான். இந்த அங்குசத்தால அத பணியவச்சுடமுடியாது அது கொழந்த மாறி அது போக்குல போய் தான் அத வழிக்கு கொண்டு வரணும்.. என்று சொல்லி கொண்டே அர்ஜுன மண்டபத்திற்குள் நுழைந்தார்கள்.அங்கு கூடியிருந்த மக்கள் யானைக்கி வழிவிட்டார்கள்.


எதிரே ஸ்ரீனிவாசப்பெருமாள் வீற்றிருந்தார்.. கோதை பெருமாளின் முன்னே சென்று தும்பிக்கையால் வணக்கத்தை சொன்னது. ராமன் யானையின் தும்பிக்கையில் சாமரத்தை (விசிறி )கொடுத்தார்.. யானை பெருமாளுக்கு சாமரம் வீசியது.. எல்லோரும் கைதட்டி வரவேற்றனர்.. கோதைக்கி ஒரே குஷி..சில குழந்தைகள் மண்டபத்தூணில் தொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தது. அவர்களின் பெற்றோர்கள் கீழே விழுந்து விடுவோனோ என்ற பதட்டத்திலே தூணை சுற்றி வந்தார்கள் 


 கோவில் அர்ச்சகர் பாகன் ராமனுக்கு வேஷ்டி மாலை அணிவித்து கோவில் மரியாதையை செய்தார்.. இதை கண்ட தேவராஜன் உள்ளுக்குள் ஆத்திரம் அடைந்தான். தனக்கு இப்படி மரியாதை இல்லையே வெறும் யானைசாணி அள்ளும் எடுபிடியாகவே இருக்கிறோமே என்று ஒவ்வொரு முறையும் ராமன் மரியாதை பெரும்போதும் அவனுள் கோபாக்னி எரிந்தது. 


மாலை வேஷ்டிகளை ராமன் தேவராஜன் கையில் திணித்தார்.. அது இன்னும் அவனுள் கோவத்தை தூண்டியது.தனக்கு இம்மரியாதை கிடைக்கவேண்டும் என்று அவன் மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தான் ராமா உன்ன EO வரச்சொன்னார் என்று ஒருவன் கூறிவிட்டு சென்றான்.


ராமன் கோவில் EXECUTIVE OFFICER (EO) முன் கை கட்டி நின்றார். சம்பளம் கரெக்ட்-ஆ வருதா? என்று கோவில் ஆஃபீஸ்ர் ராமனை பார்த்து கேட்டார். ராமன் வருது சார் என்றார்.. அப்ப ஒழுங்கா வேல பாக்கலாம்ல… ராமன் புரியாமல் விழித்தார்.. மாசத்துல பாதிநாள் விஸ்வரூப சேவைக்கி யானையை கூப்பிட்டு வராது இல்லனு சொல்றங்க..ராமன் தலைகுனிந்து கொண்டார்.. இல்லங்க சார் உடம்பு என்று ஏதோ சொல்ல வர.. கோவிலுக்கு வேல செய்யதான் உங்கள பாகனா வச்சிருக்கோம்.. இனிமே இப்படி ஆச்சுன்னா உங்கள மாத்திட்டு உங்க தம்பிய பாகனா போடவேண்டிது வரும் என்றார்.ராமன் எதுவும் பேசாமல் தலைதாழ்த்தியபடியே நின்றார்..தேவராஜன் ஆஃபீஸ்ரை பார்த்து கூலைகும்பிடு போட்டான். 


இந்த பாழபோன ஆஸ்துமா வந்து என் உயிர எடுக்குது நின்னா மூச்சு வாங்குது நடந்த மூச்சு வாங்குது என்று புலம்பி கொண்டிருந்தார் ராமன். இவன் என்னவோ ஒழுங்காவேலபாக்குறமாறி என்ன சொல்றான்.கோவில் EO னா இவருதான் எல்லாம்னு நினைப்பு.. இருக்கட்டும் பாத்துக்குறேன் என்று தன் ஜிப்பாவை மாட்டிக்கொண்டார் 


நா டவுன்க்கு போய் டாக்டர பாத்துட்டு வரேன்.. சாயங்காலம் பெருமாள் புறப்பாடு இருக்காம். கோதைய கூப்பிட்டு போய்ட்டு வந்துடு தேவராஜா என்று சொல்லி விட்டு புறப்பட்டார்.


நட நட என்று அங்குசத்தால் யானையை அடித்து கொண்டே நகர்ந்தான் தேவராஜன். கோதை வேண்டா வெறுப்பாக நடந்தாள். வீதி புறப்பாடு முன்னே யானை செல்ல பின்னே பெருமாள் நாலாயிர திவ்யப்ரபந்தம் கேட்டு கொண்டு ராஜநடையில் வந்தார்.

தூரத்தில் பொறி பட்டாணி தள்ளுவண்டிகாரன் மணி ஓசை கோதைக்கி கேட்டது. பட்டாணி என்றால் கோதைக்கி அலாதி பிரியம். சற்று வேகமாக நடந்து கடையின் முன்னே நின்றாள். தும்பிக்கையால் பட்டாணி என்று தேவராஜனை கூப்பிட்டு காட்டினாள். தேவராஜன் காலில் சுளீரென்று அங்குசத்தால் அடித்து நட எப்போ பாரு தீனி என்று கடிந்து கொண்டான்.


 கோதை காலை மாற்றி மாற்றி வைத்து அடம் பிடித்தாள். நட நட என்று மீண்டும் அடித்தான். பட்டாணியை ஏக்கத்தோடு பார்த்தாள் தும்பிக்கையால் பட்டாணி பாட்டிலை தொட்டது. ஓங்கி யானையின் நெகத்தில் அங்குசத்தால் அடித்தான் மிரண்டு கத்தியது.சுற்றியிருந்தோர் பயத்தில் நகர்ந்து கொண்டனர். நேகத்திலிருந்து ரெத்தம் வழிய தொடங்கியது. மீண்டும் மீண்டும் அடித்து துன்புறுத்தினான்.தன் முழு கோபத்தையும் அதனிடம் கட்டினான். அழுதுக்கொண்டே நடந்தது. ஒவ்வொரு முறையும் பட்டாணிகாரன் மணி அடிக்கும் போதும் கோதையால் திரும்பி பார்க்காமல் இருக்கமுடியவில்லை.


தேவராஜன் உதட்டோரம் ரத்தம் வழிய நின்று கொண்டிருந்தான் கிளி பிள்ளைக்கி சொல்றமாதிரி படிச்சு படிச்சு சொன்னா உன் புத்திய காட்டிட்டல என்று ராமன் கடுமையான கோவத்தில் வசை பாடினார் உனக்கு இங்க இனி வேல இல்ல கெளம்பு என்று சட்டையை பிடித்து தள்ளினார். தேவராஜன் தடுமாறி நின்றான். அவனுள்ளும் கோபம் எரிந்தது முறைத்து கொண்டே வெளியேறினான்.


கோதை கண்களில் கண்ணீருடன் சுவர் ஓரத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தாள். அவள் கோவமாக இருந்தால் அப்படித்தான் இருப்பாள் என்று பாகன் ராமனுக்கு தெரியும்.தும்பிக்கையால் காலில் மேயும் ஈஈஈகளை ஓடினாள். ராமன் யானையின் அருகில் சென்று தோப்புக்கரணம் போட்டார். கோதை தலையை திருப்பிக்கொண்டாள். கோதை இங்க பாரு.. கோதை என்ன பாரேன் என்று கெஞ்சினார் ராமன். கோதை ஓரக்கண்ணால் அவரை பார்த்தது. 


ராமன் தன் பையிலிருந்து ஐஸ்கிரீமை எடுத்து நீட்டினார் கோதை தன் கோவத்தை மறந்து குழந்தை போல துள்ளி குதித்தது. ஐஸ்கிரீமின் குளுமை அவளின் கோபத்தை தனித்தது. ஒரு நல்ல பாகனுக்கு தெரியும் தன் யானையை எப்படி சமாதானம் படுத்த வேண்டும் என்று. ராமன் ஒரு நல்ல பாகன். காயத்திற்கு மருந்து போட்டார். இரவு முழுவதும் ராமனின் கையை பிடித்த படியே யானை தூங்கியது..


மறுநாள் காலை விஸ்வரூப சேவைக்கி யானையாய் கூப்பிட்டு கொண்டு ராமன் போகாததால் கோவில் EO, ஸ்தல அதிகாரி சில மூஞ்சூறுகள் மற்றும் தேவராஜனும் யானை கூடத்தினுள் நுழைந்தார்கள். EO தன் கையில் இருக்கும் சீட்டை ராமனிடம் கொடுத்தார். இனிமே நீங்க யானையை பாத்துக்க வேணாம் உங்க தம்பி பாத்துப்பாரு என்றார் முகத்தில் அடித்தாற்போல். இல்ல சார் யானைக்கி உடம்பு சரி இல்ல என்றார் ராமன்.

யோவ் என்னைய எப்போ கேட்டாலும் ஒன்னு உனக்கு உடம்பு சரில்ல இல்ல யானைக்கி உடம்பு சரியில்லனு ஸ்கூல் பசங்க மாறி காரணம் சொல்ற. ராமன் தலைதாழ்த்தி நின்றார். தேவராஜனுக்கு உள்ளே அலாதி சந்தோஷம். உங்கள வயலூருக்கு மாத்திட்டேன் நீங்க நாளைலேந்து அங்க வேல பாருங்க. அங்க நீங்க எப்படி வேணுனாலும் இருக்கலாம் கேள்வி கேட்பார் இல்ல என்று நக்கலாக சொன்னார் 


நா இல்லனா யானை யார் பேச்சையும் கேக்காது சார் என்றார் ராமன். என்ன தேவராஜன் என்று EO தேவராஜனை பார்த்தார். நா பாத்துக்குறேன் சார் எப்படி வழிக்கு கொண்டு வரணுமோ அப்படி கொண்டு வந்துடலாம் என்றான் ராமனை முறைத்துத்கொண்டே. இவருக்கு எதாவது செட்டில்மென்ட் இருந்த கொடுத்து அனுப்புங்க என்று கோவில் நிர்வாகியிடம் கூறிவிட்டு EO புறப்பட்டார். 


ராமன் அழுதுகொண்டே யானையை முத்தமிட்டார் முகர்ந்து பார்த்தார் கட்டியணைத்து தழுவிக்கொண்டார் கோதைக்கு ஏதோ தவறாகபட்டது யானையின் காலை பிடித்துக்கொண்டு கோதை கோதை என் செல்லமே என்று அழுது தீர்த்தார். கோதை ஒரு தாய் போல ராமனை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டது

கோதையே தனக்கு எல்லாம் என்று எண்ணி கொண்டிருந்த ராமனுக்கு அந்த பிரிவை ஏற்றுகொள்ள முடியாமல் கோதையின் பாதங்களில் தன் உயிரை துறந்தார். இதை அறியாத யானை ராமனை முகர்ந்து பார்த்து வருடியது. ராமன் சரிந்து கீழே விழுந்தார்

கோதை அவரை தும்பிக்கையால் எழுப்பியது அவர் முகத்தை ஆட்டிப்பார்த்தது. கண்களில் நீரோடு அவரை இழுத்து தன் அருகே வைத்துக்கொண்டது. தும்பிக்கையால் மீண்டும் மீண்டும் அவரை எழுப்ப முயற்சி செய்தது.. தன் தலையை ஆட்டி மணி ஓசை எழுப்பியது.. ராமனை சுற்றி வந்தது செய்வதறியாது தவித்தது. அவர் கையை பிடித்து இழுத்து பார்த்தது ராமன் எழுந்திருக்கவே இல்லை.. கண்ணீருடன் பிளிறியது அந்த சத்தம் ஊரையே எழுப்பியது..


ஈமக்கிரியை தேவராஜனே செய்து வைத்தான்.. யானை கோதை ராமனின் வேஷ்டியை முகர்ந்து பார்த்து அழுதபடியே படுத்திருந்தது.. தேவராஜன் எவ்ளோ சொல்லியும் அது அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.. அவன் காட்டுமிராண்டி தனமாக அதை சித்தரவதை செய்தான்.. உடம்பு முழுக்க காயம்.. ஒரு வேலை கூட சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தது. ராமன் போன 10வது நாள் யானை தன் உயிரையும் விட்டது.. தன் எஜமான் சென்ற இடத்திற்கே அதுவும் சென்றது..


                                                                  பாலாஜி வெங்கடேசன் 



Rate this content
Log in

Similar tamil story from Drama