Deepa Sridharan

Drama

5  

Deepa Sridharan

Drama

குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்

குறுக்குத்தெருவும் குறுந்தாடிக்காரனும்

14 mins
441சுண்ணாம்பு உதுந்த செவத்துல தொங்கிட்ருந்த அந்த மொகக்கண்ணாடி முன்னால நின்னுக்கிட்ருந்தா தவமணி. அந்தக் கண்ணாடி ஓரம் முழுக்க கருகிப்போன சுவால மாதிரி கண் மை தேச்சிருந்துச்சு. அத்தோட நடுவுல தவமணியோட மொகம் சும்மா வெளக்கி வெச்ச குத்து வெளக்கு மாதிரி பளிச்சுன்னு சிரிச்சுது. அவ தெலக ஸ்டிக்கர் பொட்டு ஒன்ன எடுத்து தன்னோட ரெண்டு புருவத்துக்கும் நடுவுல ஒட்டிக்கிட்ருந்தா.


"இந்த குடும்ப மானத்த காத்துல பறக்கவுட சீவி சிங்காரிச்சிட்டா"ன்னு முணுமுணுத்துக்கிட்டே அலுமினிய டம்பளரை விக்டர் கையில திணிச்சா வசந்தா. "சித்தி, அம்மாவ ஒழுங்கா வூட்டுல கடக்க சொல்லு. ஊரு பயனுவல்லாம் என்னய காரி துப்புறாவனுக"ன்னு சொல்லிக்கிட்டே டீய உரிஞ்சுனா விக்டர். அவனப் பாத்துக்கிட்டே கிழிஞ்ச சேலத்தெர ஒன்னு தொங்கிட்டிருந்த ரூமுக்குள்ள நொழஞ்சா தவமணி. அங்கருந்த கயித்துக்கட்டில்ல கெடந்த தலவாணியத் தூக்கி அதுக்கு கீழருந்த, மடிச்ச துண்டு சீட்டு ஒன்ன எடுத்து தன்னோட உள்ளங்கையில வெச்சுக்கிட்டா. வெளிய வந்து சோல்னாப்பை ஒன்ன எடுத்துக்கிட்டு கெளம்புனா.


"மாரியம்மா கெழவி இன்னிக்கி உன்னய அது வூட்டுக்கு வரசொல்லிச்சு விக்டரு, நெத்திலி கொழம்பு வெச்சுருக்காம். மறக்காம போய்ட்டுவா இன்னா"ன்னு சொல்லிக்கிட்டே வெளியே போனா தவமணி. விக்டர் கையிலிருந்த டம்ளரை புடிங்கி "ம்ம்க்க்கூ"ன்னு வாயக் கோணிக்கிட்டே விடுக்குன்னு அடுப்படிக்குள்ள நொழஞ்சா வசந்தா. அரும்பு விட்ருந்த தன்னோட மீசயத் தடவி ஒதட்டோட உள்ள இழுத்து பல்லால கடிச்சுகிட்டே கண்ண சுருக்கி கண்ணாடில மொகத்த அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்கிட்டான் விக்டர்.


மழைக்கும், அஞ்சு வட்டி சேட்டுடருந்து ஒதுங்கரதுக்கும் மட்டுந்தான் அந்தத் தெருவுல கூர வூடுங்களும் ஓட்டு வூடுங்களும் இருந்துச்சு, மத்தபடி வூட்டுக்கு வெளியதான் அத்தனை சனங்களும் சமைக்கறது, துன்றது, கழுவறதுன்னு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருந்துச்சுங்க. நாயி, பன்னி, மனுசன், சேறு, சோறு, கழிஞ்சது, கிழிஞ்சதுன்னு எல்லா ஒன்னோட ஒன்னா, மண்ணோட மண்ணா அங்க சேந்துருந்துச்சு, அத்தான் சேரிங்கெறாய்ங்க போல. ஒத்த சைக்கிள் போனா ஒரு ஆளு எதிர்ல வர முடியாது. அம்புட்டு குறுக்கல் அந்த தெரு. தவமணி அவ பொடவைய சேத்துல படாம தூக்கிப்புடிச்சிகிட்டு நடந்தா.


"இன்னா தவமணி எப்ப பிரான்சுக்கு போவப்போற?"ன்னு ஒரு கொரல் நாயோட கொரைச்சலோட பிண்ணிப் பெணஞ்சு கேட்டுச்சு. தவமணி அவ சோத்தாங்கை பக்கம் திரும்பி தலைய எரக்கி கீழ பாத்தா. சைக்கிள் சக்கர கம்பி கேப்புல பொன்னுச்சாமி கெழத்தோட நக்கல் சிரிப்பு நையாம மாட்டிக்கிட்டு தொங்கிட்டுருந்துச்சு. "சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட கத்துக்குடுத்தயில்லஅஅ பிரான்ஸ்க்கு போயி ஒம்பேருலதான் சைக்கிள் கட போடப்போறேன், வரியா?" ன்னு கேட்டுக்கிடே நடந்தா தவமணி.


செல்லம்மாவும், பிலோமியும் தவமணியைப் பாத்து ஏதோ கிசுகிசுத்துக்கிட்டாளுக. தவமணி அவ உள்ளங்கையிலிருந்த துண்டுச்சீட்ட விரிச்சுப்பாத்துக்கிட்டே நடந்தா. "Can you please teach me how to ride bike?" ன்னு எழுதி வச்சிருந்தத ஒரு தடவ சொல்லிப்பாத்துக்கிட்டே விருட்டுன்னு அந்த தெருவோட மொனைக்கு வந்துட்டா. சோத்தாங்கை பக்கம் திரும்பினா. பாரதி குறுக்குத்தெருன்னு ஒரு மொன வீட்டு காம்பவுண்ட்டுல எழுதியிருந்துச்சு. சும்மா நூல் புடிச்ச மாதிரி நீஈஈஈளமா இருந்துச்சு அந்த குறுக்குத்தெரு. அந்த தெருவோட ரெண்டு பக்கமும் எடவெளியே இல்லாம கட்டுன பல்லு மாதிரி வரிசையா நாலஞ்சடுக்கு மாடி வூடுங்க.


தெரு கொஞ்சம் குண்டுங் குழியுமா இருந்தாலும் அங்கருந்த வூடுங்கல்லாம் பாக்க சும்மா பவுசா இருந்துச்சுங்க. தவமணி அந்த குறுக்குத்தெருவுக்குள்ளாற வேகமாக நடக்க ஆரம்பிச்சா. திருப்பியும் ஒரு தடவ அவ உள்ளங்கைல இருந்த துண்டு சீட்ட எடுத்து "Can you please teach me how to ride bike?" ன்னு சொல்லிப் பாத்துக்கிட்டா. அந்த தெருவோட கடைசி வீட்டுக்கு வந்து காம்பவுன்டு கதவத் தொறந்தா. அவளுக்குன்னே காத்துக்கெடந்தமாதிரி அந்த யமஹா பைக் வாசக் கதவு பக்கமா தலயத் திருப்பிக்கிட்டு நின்னுகிட்டுருந்துச்சு.


அத்த ஒரு தடவ தொட்டு பாத்துட்டு அதுக்கு அந்தாண்ட வூட்டு செவுத்துல இருந்த பைப்ப தொறந்து கால கழுவிட்டு பக்கத்துல இருந்த மாடிப்படியில ஏறி மேல் வீட்டுக்குப் போயி காலின்ங் பெல்ல அழுத்துனா தவமணி. 

ஆறடி ஒயரத்தில வெள்ளவெளேஏஏஏற்னு, நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும், ஒரு ஆளு வந்து கதவத் தொறந்தான். அவனோட சாம்பல் நெற கீத்துக் கண்ணால தவமணியப் பாத்து சிரிச்சான். அவேன் குறுந்தாடி பாக்க தமிழ் எழுத்து 'ய' மாதிரி மீசையோட சேந்துருந்துச்சு.


"குட்மார்னின்ங் டவாமணி"ன்னு அவேன் நீள முடிய பின்னால இளுத்து முடிஞ்சிகிட்டான்.

"குட்மார்னின்ங் கிலியன்"னு உள்ள நொழஞ்சா தவமணி.

"யூ ஆர் லுக்கின்ங் பியூட்டிஃபுல் டுடே"ன்னா கிலியன்.

"தான்ங்க்கியூ"ன்னு சிரிச்சுகிட்டே அடுப்படிக்குள்ள போனா தவமணி.


அந்த நாப்பது வருசத்துல அன்னிக்கிதான் தன்னய பாத்து ஒருத்தேன் அழகுன்னு சொன்னதோட பெருமிதம் தவமணியோட மூஞ்சில கொஞ்ச நேரம் விடாம ஒட்டிக்கிட்டு கெடந்துச்சு. அவ தொடப்பத்த எடுத்து வூட்ட கூட்டுனா. அவனோட ரூமுல பிரன்ச்சு பாட்டு ஒன்னு ஓடிகிட்டு இருந்துச்சு. அவேன் ரூமு ஃபுல்லா மனுசங்க போட்டோவா இருந்துச்சு. அவேன்ங் கிட்ட மட்டும் எல்லா மனுசங்களும் சிரிச்சிட்டேருப்பாங்க போல. எல்லா போட்டோலயும் வெதவெதமா, கலர் கலரா பல்லுங்க.


எல்லாரும் கையிலயோ பக்கத்துலயோ புள்ளைங்கள வெச்சுக்கிட்டு போஸ் குடுத்துருந்துச்சுங்க. அவனோட ஐடி காட தரையிலருந்து எடுத்தா தவமணி. அந்த காடுல வளஞ்ச வெளஞ்ச ரெண்டு நெல்லுகதிரு, அதுக்கு நடுவுல ஒரு ஒலக உருண்டை. அந்த உருண்டக்குள்ள ஒரு மொட்டத்தல மனுசேன் இன்னொரு மொட்டத்தல புள்ளய தூக்கிகின்னு இருக்குறாப்புல படம் இருந்துச்சு. அந்த படத்துக்கு கீழ UNICEF ன்னு எழுதியிருந்துச்சு. அதுக்குப் பக்கத்துல அவேன் போட்டோ அவேன் சின்ன வயசுல இப்ப இருக்கறதங்காட்லும் பவுசாத்தேன் இருந்துருக்கான்.


தவமணி அந்த ரூமுல இருந்த கண்ணாடிய பாத்தா. பச்ச கலர்ல செவப்பு பூ போட்ட பொடவயில பாக்க அவளும் அழகாத்தான் இருக்கா. முன்னந்தலையில கொஞ்சோ வெள்ளமுடி தெரிஞ்சாலும் மீனு மாதிரு அவ கண்ணும், எடுப்பான மோவாகட்டயும், கருப்பா மொழமொழன்னு அவ மொகமும், கொஞ்சோ பருத்த ஒடம்பும், நாப்பது வயசுன்னு சொல்லமுடியாது.

"வாட் ஆர் யூ கோயின்ங் டூ குக் டுடே டவாமணி?" ன்னு கேட்டுக்கிட்டே உள்ள வந்தான் கிலியன்.

"ரோட்டி அன்ட் சிக்கன் கறி" ன்னு அவன பாத்தா.


"த ஒன் யூ மேட் வித் பட்டர் த லாஸ்ட் மன்த்"ன்னு கிலியன் அவேன்ங்கேமராவ தூக்குனான். அவேன் யுனிசெப்புல போட்டோகிராப்பராம். தவமணி அவேன்கிட்ட வேலைக்கு சேந்த அன்னிக்கே யுனிசெப் பத்தி கேட்டு தெரிஞ்சுகிச்சு. அவேன் பிலிப்பைன்ஸ்ல இருந்தப்போ, அங்க இருந்த சின்னப் புள்ளைகல்லாம் எப்புடி பிளாஸ்டிக் குப்பய பொறுக்கி விக்குற வேலய செய்யுதுகன்னு போட்டோவ காணிச்சு கதகதயா சொன்னான். அதுங்கல்ல செல புள்ளைக பிளாஸ்டிக்க பொறுக்கறப்பவே தண்டவாளத்துல ரயில்ல அடிபட்டு செத்துருங்களாம். அத்த கேட்டு தவமணி அழுதுட்டா. ஏதோ அவேன் கேமராக்குள்ளயாது எல்லா புள்ளைங்களும் சிரிச்சுகிட்டு இருக்கட்டும்.


"நோ டுடே ஐ வில் மேக் டிபரன்ட்"ன்னு சொல்லிக்கிட்டே, துண்டு சீட்ட பாத்தா தவமணி.

"வில் யூ டீச் மீ ஹௌ டூ ரைட் பைக்"குன்னு டபக்குன்னு கேட்டா.

"ஷுஅர்.. வொய் நாட்"டுன்னு சொல்லிக்கிட்டே ஷூவ போட்டுக்கிட்டான் கிலியன்.

"மே பி இன் த ஈவினின்ங்"ன்னு அவள பாத்தான்.

தவமணி மூஞ்சி முழுக்க பல்லு.


"சீ யு அட் லன்ஞ்ச்"ன்னு சொல்லிக்கிட்டே வெளிய போனான் கிலியன்.

தவமணி அடுப்படிக்குள்ள நொழஞ்சு ஏதோ பாட்டு ஒன்ன முனுமுனுத் துக்கிட்டா.

"கெழவி நெத்திலி வாசம் நெத்திப்பொட்ட சும்மா தெறிக்கவுடுது போ"ன்னு சொல்லிக்கிட்டே விக்டர் மாரியம்மா கெழவி வூட்டாண்ட வந்து நின்னா.


"வா தங்கம் அம்மா மறக்காம சொல்லிச்சாஆஆஆஆ" ன்னு கேட்டுக்கிட்டே வாயில கொதக்கு கொதக்குன்னு மென்னுக்கிட்டுருந்த பொகயெலய துப்பிட்டு, விக்டர் தலமுடிய கையால கோதிவுட்டா மாரியம்மா கெழவி.

தட்டுல சோத்தப்போட்டு நெத்திலி கொழம்ப ஊத்தும்போதே விக்டருக்கு நாக்குல தண்ணி சொட்ட ஆரம்பிச்சிருச்சு. தட்ட வாங்கி அவதி அவதியா வாசல்லயே ஒரு வாய அள்ளி சாப்டான்.


"இந்த சிட்டியிலேயே ஓன் நெத்திலி கொழம்ப எவளாலயும் அடுச்சுக்க முடியாது கெழவி"ன்னா விக்டர்.

மாரியம்மா கெழவி அவனயே பாத்து ரசிச்சிட்டு நின்னுச்சு.

"ஸ்கூல் முடிச்சிட்டியே, காலேசுல எப்போ சேரப்போற"ன்னா மாரியம்மா கெழவி.

இப்போதைக்கு நல்லசிவம் அண்ணாச்சி அரிசி மண்டில சொல்லி அம்மா வேல வாங்கி குடுத்துருக்கு, பிளஸ் டூ ரிசல்ட்டு போட்டதும் போஸ்டல்ல காலேஞ் சேந்து படிப்பேன் கெழவி"ன்னு கைய நக்குனா விக்டர்.

"நல்லா படிலே, அதுக்குத்தேன் மல்லாடிட்டு கெடக்கு ஒங்கம்மா"ன்னு சொல்லிக்கிட்டே அவேன் பக்கத்துல வந்து ஒக்காந்துச்சு கெழவி .


"கெழவி இந்த அம்மாகிட்ட சொல்லிவையி, கன்டவன் வூட்டுக்குலாம் போயி வேல பாக்கவேனான்னு, ஊரு புல்லா அது பேரு நாரி கெடக்கு".

அடிச் செருப்பால யார பாத்து என்ன பேசுரலே? அவ கால் தூசிக்கு இங்க ஒரு செருக்கி நிக்க மாட்டாளுக"ன்னு முந்தாணைய ஒதரிட்டு எந்திருச்சுது மாரியம்மா கெழவி.

"ஒனக்கு இன்னா காது டர்ர்ர்ராயிருச்சா கெழவி, ஊரு பயலுவ பேசறது கேக்குதா இல்லயா"ன்னு கைய கழுவுனா விக்டர்.

"ஊரு பயலுவலாலே ஒனக்கு சோறு போட்டு படிக்கவெக்கிறானுவ"ன்னு கேட்டுகிட்டே ஒரு தூக்குசட்டியில நெத்திலி கொழம்ப ஊத்திச்சு கெழவி.


"மீச துளுக்கற வயசுலஅ, மானோம், ரோசோம், கொள்க, புடிவாதமும் சேந்து துளுக்குமுல்லே. அது இன்னிக்கி வெச்ச நெத்திலி கொழம்பு மாதிரி, உப்பு, ஒரப்பு புளிப்பெல்லாம் கொஞ்சோ தூக்கலாத்தேன்ங்கெடக்கும். மூனு நாலு நாளு ஆறவெச்சு துன்னா ஊறிப்போயி எல்லா ருசியும் மட்டா இருக்கும். கொஞ்ச வருசங் கழிஞ்சா நீயே எல்லாத்தயும் புரிஞ்சிங்கின்னு பக்குவமாயிடுவ தங்கம். மனச போட்டு கொயப்பிக்காத. ஒங்கம்மா பத்தரமாத்து தங்கோ. இந்தா இத்த வசந்தாக்கு குடுத்துறு இன்னா."ன்னு தூக்குசட்டிய அவேன் கையில தினிச்சுச்சு.


"ஒனக்கு எல்லாருந் தங்கந்தே கெழவி"ன்னு லுங்கிய தூக்கிகட்டிக்கிட்டு போனான் விக்டர்.

ட்ரின்ங்ங்ங்ன்னு காலின்ங் பெல் சத்தம் கேக்க வேகமா வந்து கதவ தொறந்தா தவமணி. துறுதுறுன்னு முழிச்சிக்கிட்டு வாயில கட்டவெறல சப்பிக்கிட்டு ஒட்டு துணியில்லாம இருந்த ஒரு குட்டி பையன தூக்கிட்டு வந்து நின்னா கிலியன். புள்ளய கையில வாங்கிட்டு உள்ள போனா தவமணி. தட்டுல சாப்பாட்ட போட்டு கிலியன் கையில குடுத்தா.

"ஹீ இஸ் கோயின்ங் டூ பி வித் மீ, கேன் யூ டேக் கேர் ஆப் ஹிம்"ன்னு சிக்கன கடிச்சான் கிலியன். 

பால ஆத்திக்கிட்டே "யெஸ்"ன்னா தவமணி.


சாப்டு கெளம்பறப்ப "ஐ வில் கம் அட் 6, கெட் ரெடி ஃபார் த பைக்"குன்னு கண்ணடிச்சான் கிலியன்.

தவமணி கட்டவெரல தூக்கி சிரிச்சிக்கிட்டே "ஓகே"ன்னா.

கிலியன் கெளம்புனதுக்கப்றம் புள்ளய தூக்கிகிட்டு விருட்டுன்னு பக்கத்துல இருந்த கடைக்கி போயி ரெண்டு டிராயர் சட்டய வாங்குனா தவமணி.அங்கயே ஒன்ன எடுத்து அதுக்கு போட்டுவுட்டு முத்தங் கொடுத்தா.

"இன்னா தவமணி ஒம்புள்ளயா?"ன்னு கேட்டுகிட்டே பீடிய இழுத்தான் கடக்காரன்.

நூறு ரூபாய டேபிள்ள வெச்சா. அங்கருந்த போர்டுல "சுங்கிடி புடாவை" ன்னு எழுதியிருந்தத பாத்து, இன்னாத்துக்கு புடவைக்கு எக்ஸ்ட்ரா காலு சேக்குரன்னு "ட" பக்கத்துல இருந்த தொணக்கால அழிச்சுட்டு கெளம்புனா தவமணி. கொழந்த அவள பாத்து சிரிச்சுச்சு. அத்தக்கொஞ்சிகிட்டே போனா தவமணி.


ஆறு மணிக்கா கிலியன் யாரோ ஒரு சின்ன பய்யனோட வூட்டுக்கு வந்தான். அ அவேன்ங்கையில கொழந்தய குடுத்து "டேக் கேர்"ன்னு அத்தோட ட்ரெசப் பாத்தாங் கிலியன்.

"தான்ங்ஸ் ஃபார் த டிரஸ்" டவாமணின்னு ரெண்டு பக்கமும் வளந்து தொங்குன முடிய வெரலால சீவி விட்டுக்கிட்டே சிரிச்சான்.

"லெட்ஸ் கோ" ன்னு பைக்கு சாவிய அவ கையில குடுத்தான். அந்த சாவிய ஆள்காட்டி வெரல்ல மாட்டி ஒரு சுத்து சுத்திட்டு கீழ எறங்குனா தவமணி.


பைக்க எப்படி தொறக்கனும்னு காமிச்சு குடுத்தான் கிலியன்.

"ஹலோ மிஸ்டர் கிலியன் ஹூ இஸ் தாட் சைல்ட்"ன்னு வெளிய வந்தான் அந்த வீட்டு ஓனரு.

"ஐ டோன்ட் நோ ஆனந்த்"ன்னு பைக்க எடுத்தான் கிலியன்.

ஆனந்து அவனயும் தவமணியவும் ஒன்னும் புரியாம மாறி மாறி பாத்தான். 

அதுசேரி நம்ம நாட்டுல யாருன்னே தெரியாத புள்ளைங்களுக்கா பஞ்சோ. அதுங்கள யார் தூக்கிட்டுப்போயி வித்தாலும் கேக்க நாதியில்ல, வளத்தாலும் வாழ்த்த ஆளில்ல. ஆனா எவனாச்சும் மண்ணெடுத்தா, தண்ணியெடுத்தா, சாதி மாத்தி பொண்ணெடுத்தா கலவரந்தேன்.


கிலியன் பைக்க வெளிய எடுத்து தவமணிய அதுல ஏற சொன்னா. அப்போ தவமணி பொடவயோட கால தூக்கி போடமுடியாம தவிச்சா. "ஹோ டவாமணி, திஸ் டிரஸ் இஸ் நாட் கன்வீனியன்ட்"டுன்னு பைக்க ஸ்டாண்டு போட்டு நிக்கவெச்சான்.

ரெண்டு கையயும் இடுப்புல வெச்சுட்டு அவள பாத்து "ரைட்…. கம் வித் மீ" ன்னு அவ கைய புடிச்சுகிட்டு மேல கூட்டிட்டு போனான்.

ஆனந்து அவன்ங்களையே வெச்ச கண்ணு வாங்காம பாத்துகிட்டுருந்தான். கொஞ்ச நேரத்துல தவமணி கால்ல சுருட்டி விட்ருந்த பேண்டு ஒன்னயும் தொளா தொளா சட்ட ஒன்னயும் போட்டுகிட்டு கீழ வந்தா. ஆனந்து அவள பாத்து தலைல அடிச்சுகிட்டு வூட்டுகுள்ளாற போனான்.


தவமணி பைக் மேல ஏறி ஒக்காந்தா, கிலியன் அவ பின்னாடி ஒக்காந்து ஹேண்ட் பார புடிச்சு அவளுக்கு பைக் ஓட்ட கத்துக்குடுக்க ஆரம்பிச்சான். அங்கருந்த பவுசான மாடி வூட்டுக்குள்ளருந்த சாக்கடயெல்லா அப்போ சன்னலுக்கு நடுவுல மொதந்த கண்ணுங்களுக்குள்ள ஒடிகிட்டு இருந்துச்சு.

தவமணி காத்த கிழிச்சுகிட்டு அந்த குறுக்குத்தெருவுல பைக்க ஓட்ட ஆரம்பிச்சா. அப்டி இப்டின்னு நெளிச்சு நெளிச்சு அந்த நீளமான தெருவுல பைக்க ஓட்டிட்டா தவமணி. கொஞ்ச நேரங்கழிச்சு ரெண்டு பேரும் பைக்க நிறுத்திட்டு மேல போனாங்க. அவள பாத்ததும் அந்த பய்யன் கையில இருந்த கொழந்த சிரிச்சுகிட்டே தாவிச்சு. தவமணி அத்த கையில வாங்கிட்டு ரூமுகுள்ள போனா.


"தேன்ங்ஸ் குமார்"ன்னு அந்த பய்யனுக்கு கைய குடுத்து வெளிய அனுப்புனான் கிலியன்.

தவமணி அடுப்படிக்குள்ளருந்து வெளிய வந்து "யுவர் டின்னர்"ன்னு மூடி வெச்ச தட்ட டேபிள்ள வெச்சா.

பொடவ முந்தாணய இடுப்புல சொரிகிகிட்டு பாயில தூங்கிட்ருந்த கொழந்தய தூக்கி தொட்டில்ல போட்டா.

"ஐ கீப் மில்க் இன் த பாட்டில். இப் பேபி க்ரை, கிவ் திஸ்"ன்னு பாட்டுல டேபிள்ள வச்சுட்டு கெளம்புனா.

கதவு பக்கத்துல போயி திரும்பி "தான்க்ஸ் கிலியன்"னு அவன பாத்து சிரிச்சா.

"மை பிலஷர். யூஊஊ ராக்கின்ங்"ன்னா கிலியன் அவனோட பரட்டயான முடிய கோதிவிட்டுக்கிட்டே.

தவமணி சிரிச்சுகிட்டே வெளிய போனா.


அவ வூட்டுக்குள்ள நொழயும்போதே கத்த ஆரம்பிச்சான் விக்டர்.

"இந்தம்மா இனி வூட்ட வுட்டு வெளிய போன நான் கைய அறுத்துக்குவே"ன்னு கையில கத்திய வெச்சுகிட்டு வெறிபுடிச்ச நாயாட்டங்கத்துனான் விக்டர். தவமணி படக்குன்னு அத்த புடிங்கி வெச்சா.

"இன்னா ஆச்சுன்னு இப்போ நீ கத்துற"ன்னா.


"இன்னும் இன்னா ஆகனு"ன்னு கேட்டுகிட்டே கண்ண கசக்குனா வசந்தா.

"ஒங்கம்மா பைக்க ஓட்டுறாளா இல்ல அந்த பிரன்ச்சு குறுந்தாடிக்காரன ஓட்டுறாளா"ன்னு ஊரே கேள்வி கேக்குது. தெருவுல நடக்கவே எனக்கு ஒடம்பு கூசுது"ன்னு தலைல கைய வெச்சுட்டு ஒக்காந்தான் விக்டர்.

"டேய் ஊரு பயலுக பேச்ச காதுல போடாதன்னு ஒனக்கு இம்மாந்த்தரோ சொல்லிருக்கே"ன்னு தட்டுல சோத்த போட்டுகிட்டு ரூமுகுள்ள போயிட்டா தவமணி.


வசந்தா என்னத்தயோ பொலம்பிகிட்டே பாயில படுத்தா. விக்டர் படுத்து ஒத்த கால செங்குத்தா மடிச்சு அது மேல இன்னொரு கால போட்டுக்கிட்டு, அரும்பு மீசய கடிச்சுகிட்டே மோட்டு வளயத்த பாத்துக்கிட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துல அந்த வூடு இருட்டுக்குள்ள அடங்கிருச்சு.


அடுத்த நாள் காலைல தவமணி வேகமா துணிக்கடைக்கு போய் ஒரு சுடிதார வாங்குனா.

இன்னா தவமணி பொடவ குறுந்தாடியில மாட்டியிழுக்குதா"ன்னு நக்கலா சிரிச்சுக்கிட்டே அவ கைய புடிச்சான் கடக்காரன்.

பட்டுடன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. போடுல "கரை வேட்டீ" ன்னு எழுதியிருந்தத பாத்தா தவமணி. வேட்'டீ'ல நீண்டு சுருண்டுட்டு இருந்த வால ஒட்ட அழிச்சிட்டு " டி" ன்னு வால எறக்கி விட்டுட்டு கெளம்புனா தவமணி. கன்னத்த தடவி விட்டுக்கிட்டே சுத்திமுத்தி பாத்துகிட்டான் கடக்காரன்.


"வீஈஈஈஈல்"ன்னு அழுதுகிட்டுருந்த அந்த குட்டிப் புள்ளய வெச்சுக்கிட்டு தவிச்சுகிட்டுருந்தான் கிலியன். அடுப்பாங்கரைக்குள்ள போயி நிமுசத்துல பால காச்சி அவேன் அழுகய நிறுத்துனா தவமணி.

"ஹோ பேபி"ன்னு அந்தக் குட்டிப்பயல தூக்கிபோட்டு கொஞ்சுனான் கிலியன். அது கெக்க பிக்கேன்னு பொக்கவாய காணிச்சு சிரிச்சுது.


"தான்ங்ஸ் டவாமணி"ன்னு அவ கையில புள்ளய குடுத்தான்.

"ஐ வில் டீச் யூ ஹௌ டூ மேக் மில்க்"ன்னு அவன பாத்து சிரிச்சா தவமணி.

"தட் சௌன்ட்ஸ் லைக் அ பிளான்"னு அவேன் முடிய கோதிவுட்டுகிட்டே கண்ணடிச்சான் கிலியன்.

தவமணிக்கு ஒரே சந்தோசம். இந்த ரெண்டு மாசத்துல அவ அவனுக்கு ரொட்டி சுடவும் இட்லி அவிக்கவும் கத்துக்குடுத்துருக்கா. அவளுக்கு அதுல ஒரே பீத்தலு. சேரி முழுக்க கிலியன் கைய சுட்டுக்கிட்டு ரொட்டி சுட்டதச் சொல்லி சொல்லி சிரிச்சிருக்கா.

"டவாமணி, ஐ ஹேவ் சம் வொர்க் அட் ஹோம் டுடே. டூ யூ மைன்ட் டேக்கின்ங் த பேபி அவுட் ஃபார் அ வொயில்"ன்னு தவமணி மூஞ்சிய பாக்காம அந்த பக்கம் திரும்பிகிட்டே கேட்டான் கிலியன்.


"ஓகே கிலியன்"னு கொழந்தய தூக்கிட்டு கெளம்புனா தவமணி.

ரெண்டுமண்ணேரத்துல ரத்தங்கொட்ட புள்ளய தூக்கிட்டு "கிலியன்"னு கத்திக்கிட்டே வூட்டுக்குள்ள நொழஞ்சா தவமணி. பாட்டு அலறிக்கிட்டுருந்ததுல கிலியனுக்கு சத்தங் கேக்கல. ரூமுக்குள்ள ஒரு பொம்பளயும் அவனும் மேல ஒட்டு துணியில்லாம படுத்து கெடந்தாங்க. படக்குன்னு கதவ மூடிட்டு கீழ எறங்கி போனா தவமணி. ஓடிப்போயி பக்கத்துலருந்த ஒரு கிளினிக்குகுள்ள நொழஞ்சா.


அங்கருந்த ரிசப்சனிஸ்ட்டு, "இந்தாம்மா புள்ளைக்கு நீ அம்மாவா?ன்னு கேட்டா

"இல்ல"ன்னா தவமணி.

"பின்ன யாரு இந்த புள்ள"ன்னு எரிச்சலா கேட்டா ரிசப்சனிஸ்ட்டு.

"தெரியாது"ன்னா தவமணி.


"ஆக்சிடன்டு கேசா? சொந்தமில்லன்னா பைல்ல என்னன்னு எழுதறது"ன்னு ரிசப்சனிஸ்ட்டு கேட்டு முடிக்கறதுக்குள்ள புள்ளய தூக்கிட்டு டாக்டர் ரூமுகுள்ள விருட்டுன்னு நொழஞ்சா தவமணி. ரிரசப்சனிஸ்ட்டு அவ பின்னாடியே ஓடி வந்து "டாக்டர்"ன்னு ஆரம்பிக்றதுக்குள்ள டாக்டர் அந்த புள்ளய எமர்சன்சி ரூமுகுள்ள தூக்கிட்டுபோயிட்டாரு.

கொஞ்ச நேரத்துல தவமணி கட்டுபோட்ட புள்ளயோட வூட்டுக்கு வந்தா. கிலியன் அந்த பொம்பளய வழியனுப்ப கதவ தொறந்துவிட்டுடுருந்தான்.


"வாட் ஹேப்பன்ட் டவாமணி"ன்னு புள்ளய கையில வாங்குனா கிலியன்.

"சுமால் ஆக்சிடன்ட். நௌ நோ பிராபளம்"ன்னு புள்ளய தடவி குடுத்தா தவமணி.

புள்ளய தூக்கி புல்லா செக் பண்ணாங் கிலியன். அது அவனபாத்து ஈஈஈஈன்னு சிரிச்சுது.

"பை த வே ஷீ இஸ் ப்ரிஷா"ன்னு அந்த பொம்பளய பாத்தான். அவ தவமணிக்கு கைய குடுத்தா.

"தவமணி"ன்னு அவள பாத்து சொல்லிகிட்டே கைய குலுக்குனா தவமணி.

அவேம் புள்ளயோட அவள கூட்டிட்டு கீழ எறங்குனான்.


"டவாமணி ஹெல்ப்ஸ் மீ வித் குக்கின்ங் அன்ட் க்ளீனின்ங் தி ஹௌஸ்"ன்னான். "

"அன்ட் ஷீ ஸ்பீக்ஸ் இன்ங்லீஷ்!!!"ன்னா ப்ரிஷா.

"ஷீ கேன் ஆல்சோ ரீட் அன்ட் ரைட். ஷீ லேர்ன்ட் இட் ஃப்ரம் அன் இன்ங்லீஷ் ஃபேமிலி ஷீ வாஸ் வொர்க்கின்ங் ஃபார் இன் பாண்டிச்சேரி"ன்னான் கிலியன்.


"ஹலோ மிஸ்டர் கிலியன் ஹூஸ் திஸ் லேடி"ன்னு ப்ரிஷாவ ஏற எறங்க பாத்தான் ஆனந்து.

"ஷீ இஸ் ப்ரிஷா"ன்னான்.

அவ "பை"ன்னு கதவ தொறந்து வேகமா போயிட்டா.

"இஸ் ஷீ யுஅர் வொய்ஃப்?"ன்னு மூக்குல எறங்குன கண்ணாடி வழியா கிலியன பாத்தான் ஆனந்து.

அவேன் வூடு வாடகைக்கு எடுக்கும்போது அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சு, பொண்டாட்டி வெளியூர்ல இருக்கான்னு ஆனந்துகிட்ட சொல்லி வெச்சுருக்கான்.


"நோஓஓ, ஷீ இஸ் ப்ரிஷா"ன்னு தோள தூக்கி சொல்லிகிட்டே மேல போனான் கிலியன்.

தவமணி மேலருந்து எல்லாத்தயும் கேட்டுட்டுருந்தா. அவன பாத்து சிரிசச்சுட்டு உள்ள போனா. கொஞ்ச நேரத்துல குமாரு வந்தான். தவமணி புள்ளய அவேன் கைல குடுத்துட்டு சுடிதார மாட்டிக்கிட்டு ரெடியா நின்னா. கிலியனும் அவளும் கொஞ்ச நேரத்துல பைக்குல பறக்க ஆரம்பிச்சாங்க. தவமணி அன்னிக்கு பைக்க ஓரளவுக்கு பேலன்ஸ் பன்ன கத்துக்கிட்டா. ஆனா கிலியன் கொஞ்ச நேரம் ஹேன்ட் பார்லருந்து கைய வுட்டா வண்டி கொட சாய ஆரம்பிக்கும். தவமணி நாக்க கடிச்சுக்கிட்டே சீரியசா ஓட்டுவா. இப்டியே நாலஞ்சு ரவுண்டு அடிச்சாங்க ரெண்டு பேரும். 


"யு ஆர் அ ஃபாஸ்ட் லேனர்"ன்னு அவ காது பக்கத்துல மூஞ்ச வைச்சு க்கிட்டு தோள தட்டி குடுத்தான் கிலியன்.

ஆனந்து எறங்குன கண்ணாடி வழியா அவங்கள வெச்ச கண்ணு வாங்காம காம்பவுண்டு வால்லருந்து எட்டி பாத்துக்கிட்டே இருந்தான்.


அன்னிக்கு ராவுல தவமணி வூட்டுல ஒரு சுனாமியே பொங்கி அடங்கிச்சு.

அந்த சுனாமி வெள்ளத்துலயும் தவமணி வுடாம பைக்க ஓட்ட கத்துக்கிட்டா.

ஒரு வாரத்துல தவமணி பைக்க தனியா ஓட்ட ஆரம்பிச்சுட்டா. அன்னிக்கு அந்த குறுக்குத்தெருவுல கிறுக்கி மாதிரி பைக்க அங்கிட்டும் இங்கிட்டும் ஒட்டிக்கிட்டே இருந்தா தவமணி. கிலியன் கேட்டு பக்கத்துல நின்னு "வெல்டன் டவாமணி"ன்னு கை தட்டிகிட்டே நின்னான். தவமணி பைக்க நிறுத்திட்டு சிரிச்சுகிட்டே ஓடி வந்து கிலியன கட்டி புடிச்சு "யே"ன்னு கத்துனா.

கிலியன் அவள அல்லாக்கா தூக்கி "யூ மேட் இட் டவாமணி"ன்னான்.


"இந்த கூத்துக்கு இன்னிக்கு ஒரு முடிவு கட்றேன்"னு சொல்லிக்கிட்டே விருட்டுன்னு வூட்டுக்குள்ளாற போனான் ஆனந்து. "ஹலோ விக்டர் இருக்கானா?"ன்னு ஆனந்து வூட்டுலருந்து சத்தங் கேட்டுச்சு.

தவமணி பொடவைய மாத்திகிட்டு பால ஆத்தி புள்ளைக்கு குடுத்துட்டு கெளம்புனா. அவ சோல்னா பைய சுத்திக்கிட்டே அந்த குறிக்குத்தெருவுக்குள்ள நடந்துபோனா.


அதே சாக்கட கண்ணுங்க அவள சன்னலுக்குள்ளருந்து இழுந்த்துகிட்டு இருந்துச்சு. நைட்டு தெருவெளக்குல அந்த குறுக்குத் தெருவுல பதிஞ்ச பைக்கு டையர் தடத்த பாத்தா தவமணி. சிரிச்சுகிட்டே அதுமேல நடந்து பாத்தா. சும்மா ஸ்கேல வெச்சு கோடு போட்ட மாதிரி நேரா இருந்துச்சு.


சிரிச்சுகிட்டே அந்த தெருவுலருந்து திரும்புனா. அங்க இருந்த மெடிக்கல் ஷாப்புல ஏதோ மருந்த கேட்டு வாங்கிகிட்டு அந்த சவதி ரோட்டுல பாத்து பாத்து நடந்தா. அத்தன சனமும் அவளையே பாத்துச்சு. அவ கையில இருந்த மருந்த பொன்னுசாமி கெழத்துகிட்ட குடுத்தா.


"இன்னா தவமணி குறுந்தாடி வூட்டுல வேல அதிகமோஓஓஓ" ன்னு மருந்த வாங்கி லுங்கில முடிஞ்சுகிட்டான் பொன்னுசாமி.

"நாளைக்கு டாக்டர போயி பாத்துரு பெருசு"ன்னு நடக்க ஆரம்பிச்சா தவமணி.

பிலோமி வூட்டு வெளிய தொடப்பத்த வெச்சிகிட்டு "இன்னா தவமணி குறுந்தாடியோட நல்லா ஓட்ற" போல.... பைக்க"ன்னு எச்சிய துப்புனா.


தவமணி அவ வூட்டுகுள்ள எட்டி பாத்து, "அடியே வூடு முழுக்க குப்பய வெச்சுக்கிட்டு நீ என்ன தெருவ கூட்டிட்டு கெடக்க. கைப்புள்ளகாரி வூட்ட சுத்தபத்தமா வெச்சுக்க வேனா?"ன்னு கேட்டுகிட்டே வேகமா நடந்தா.

அவ வூட்டுக்குள்ள நொழையும் போதே விக்டர் லுங்கிய தூக்கிகட்டிகிட்டு வெளிய வந்தான்.

"இந்தாம்மா நாளேலருந்து நீ அந்த குறுந்தாடிக்காரன் வூட்டுக்கு போக்கூடாது. என்னால வெளில தல காட்ட முடியல. இப்ப பைக்க ஓட்டி நீ இன்னாத்த கழட்டப்போற"ன்னு கத்துனான்.


தவமணி சோல்னா பைய ஆணில தொங்கவுட்டுட்டு பக்கத்துல இருந்த கண்ணாடியப் பாத்தா. ஹேண்ட்பார புடிச்சுருக்கற மாதிரி கை ரெண்டயும் மடக்கி வெச்சுகிட்டு கண்ண சுருக்கி கண்ணாடில பாத்து சிரிச்சுகிட்டா.

"இனியும் நீ அவேன் வூட்டுக்குப் போனஅஅஅஅ, குடும்பத்தோட நான்டுகிட்டு சாவ வேண்டியத்தா"ன்னு முந்தானய ஒதரி இடுப்புல சொருகுனா வசந்தா. தவமணி அவ கண்ண ஆழமா பாத்தா. விக்டர், மீச முடிய ஒதட்டுல இழுத்து கடிச்சுகிட்டே அவள பாத்தான்.

"இங்க பாருங்க ஊருல அவேன்ஞ்சொல்றான் இவேன்ஞ்சொல்றான்னுலாம் என்னால வேல பாக்காம இருக்க முடியாது"ன்னு முடிக்கறதுக்குள்ள, "நீ இந்த வேல பாத்து துன்றதுக்கு, நாம பட்டினி கெடந்து சாவலா"ன்னு எந்திரிச்சான் விக்டர்.

"இப்போ இந்த வேலைக்கு இன்னடா? நான் அப்டித்தான் போவேன் இன்னாங்ற"ன்னா தவமணி.


"ம்ம்ம்ம நீ அந்த குறுந்தாடிக்காரனோட தேவுடியாத்தனம் பண்றன்னு ஊரே சொல்லுதுஉஉஉ, போவியா நீ"ன்னு தவமணிய அடிக்க கைய ஓங்குனான் விக்டர்.

தவமணி அவேன் கைய மரிச்சு கன்னத்துல பளார்னு ஒன்னு உட்டா.

அவ கண்ண நேருக்கு நேரா பாக்க முடியாம தடுமாறி தல குனிஞ்சா விக்டர். அப்டியே செல மாதிரி நின்னான்.

"ஓன் புத்தி இன்னா சொல்லுதோ அத்த மட்டும் கேட்டுகிட்டு போயிட்டே இரு, ஊரு பயலுவ பேச்சு ஒனக்கு ஒரு வாய் சோறு போடாது"ன்னு சொல்லிட்டே, கிழிஞ்ச தெர தொங்குன அவ ரூமுக்குள்ள போனா தவமணி.


வசந்தா மடக்கு மடக்குன்னு தண்ணிய குடிச்சா. விக்டர் அங்க கெடந்த துருபுடிச்ச சேர் ஒன்ன தூக்கி தரையில போட்டான். அவேன் நெஞ்சு மேலயும் கீழயும் குமுறிச்சு, மீசைய கடிச்சுகிட்டே வூட்ட வுட்டு வெளிய போனான் விக்டர்.

அடுத்த நாள் மத்தியானம் நாலு மணி இருக்கும். விக்டர் அந்த குறுக்குத்தெருவுக்குள்ள வேகமா சைக்கிள ஓட்டிட்டு வந்தான். சைக்கிள நிறுத்திட்டு ஆனந்து வீட்டு கதவ தெறந்து மாடிப்படில பாஞ்சு ஏறுனான். மேல போயி "வெளிய வாம்மா"ன்னு கத்துனான்.


ஆனந்து வூட்டுக்குள்ளாருந்து வேகமா வெளிய ஓடியாந்தான். வந்த அவசரத்துல தரயில நாயி பேண்டு வெச்சுருந்தத பாக்காம மிதிச்சுட்டான். மாடிப்படிக்கு சைட்ல வாளில தண்ணி ரொம்பிகிட்டு இருந்துச்சு. அந்த பைப்ப அணச்சுட்டு மாடிப்படி கீழ நின்னு கால்ல ஒட்டியிருந்த பீய படியில தேச்சுக்கிட்டே நமட்டுச்சிரிப்போட அவேன் ஆந்த கண்ண உருட்டி காத தீட்டுனான்.

தவமணி "என்னடா?"ன்னு கதவ தொறந்தா.


"ஒனக்கும் இந்த குறுந்தாடிக்காரனுக்கும் இன்னா ஒறவு?" ன்னு கைய இடுப்புல வெச்சிக்கிட்டு கத்துனான் விக்டர்.

"ஹூ ஆர் யூ?" ன்னு கேட்டுகிட்டே கிலியன் வெளிய வந்தான்.

"சொல்லும்மா ஒனக்கும் இவனுக்கும் இன்னா உறவு"ன்னு திரும்பவும் கத்துனான் விக்டர்.

தவமணி கையில புள்ளயோட அவனயே பாத்துகிட்டு அழுத்தமா நின்னா. அவ கையில இருந்த புள்ள அவ காது கம்மல இழுத்து சிரிச்சுது.


"இப்ப சொல்ல போறியா இல்லயா"ன்னான் விக்டர்.

கிலியன் "வாட்"டுன்னு தவமணிய பாத்தான்.

அவ எதுவும் பேசாம திரும்புனா. விக்டர் அவ கைய புடிச்சு இழுத்து திருப்பி அவ கன்னத்துல அறஞ்சான். புள்ள வீவீவீல்ன்னு கத்திச்சு. கிலியன் தவமணி கைய புடிச்சு அவேன் சைட்ல தள்ளி அவள மறச்சு நின்னான். விக்டர் விருட்டுன்னு மீசைய கடிச்சுகிட்டே கீழ எறங்குனான். ஆனந்து அவன பாத்து சிரிச்சான். விக்டர் சைக்கிள்ள ஏறி சிட்டா பறந்தான்.

நேர போயி மாரியம்மா வீட்டான்ட நிறுத்துனான். "என்னலே வெறிபுடிச்ச நாயாட்டம் மூச்சு உடுற"ன்னா மாரியம்மா கெழவி.

டம்முன்னு இடி சத்தம் கூரய பிச்சுகிட்டு கேட்டுச்சு.


"அம்மா ஏன் இப்டி பண்ணுது கெழவி"ன்னு தொறந்துவுட்ட அண மாதிரி குபுக்குன்னு அழுதான். அவங்கூடவே வானமும், கெழவி வூட்டு கூரையும் சேந்துக்கிச்சு. 

"இன்னா ஆச்சு தங்கோ"ன்னு அவன கட்டிப்புடிச்சா கெழவி.

"அம்மாக்கும் அந்த குறுந்தாடிக்காரனுக்கும் இன்னா கெழவி ஒறவு"ன்னா விக்டர்.

"ச்சீ வாய கழுவு. இன்னா பேச்சு பேசறலே"ன்னு அவன மடியில சாச்சுகிட்டா கெழவி.

"ஏன் அப்பன் யாரு கெழவி"ன்னு கேட்டான் விக்டர்.


"ஓன் அப்பன் ஆத்தா எல்லா தவமணிதான்லே"ன்னா கெழவி. 

"சும்மா இத்தயே சொல்லி சத்தாய்காத கெழவி, என் அப்பன் யாருன்னு சொல்லு"ன்னு கெழவி மடியிலருந்து எந்திரிச்சான் விக்டர்.

"தோள்ள புள்ளய தூக்கி வெச்சு இதான் ஒலகன்னு எவேன் காமிக்கிறானோ அவேன்ந்தே அப்பன். ஒனக்கு யாருமில்லே இந்த ஒலகத்த காணிச்சா?"ன்னு விக்டர் மோவாகட்டய புடிச்சு கேட்டா மாரியம்மா கெழவி.

"அம்மாதா"ன்னா விக்டர்.


"அப்ப அவதாந்தங்கம் ஓன் அப்பேன்"னு அவன பாத்தா கெழவி.

"அம்மாவையும் அந்த குறுந்தாடிக்காரனயும் சேத்து வெச்சு ஊரே பேசுது கெழவி, அரிசி மண்டியில வேல பாக்க முடியல கெழவி. அவமானம் புடிங்கித்திங்குது"ன்னு ஆத்தரப்பசிக்கு மீச முடிய கடிச்சுக்க குடுத்தான் விக்டர்.


"அம்மாக்கும் அந்தாளுக்கும் இன்னா கெழவி ஒறவு?"ன்னு எகுறுனான். "ஒன்னுமில்ல தங்கோன்"னு அவன ஆழமா பாத்தா கெழவி.

"அம்மாட்ட கேட்டேன் புடிச்சு வெச்ச கல்லு மாதிரி நின்னுச்சு, கன்னத்துலா பளார்னு ஒன்ன வெச்சுட்டு வந்துட்டேன் கெழவி"ன்னு மாரியம்மா மொகத்த பாக்காம தலய குனிஞ்சுகிட்டே சொன்னான் விக்டர்.

கொண்டய அள்ளி சொரிகிகிட்டு செவுத்துல சாஞ்சிகெடந்த தொடப்பத்த எடுத்து விக்டர் முதுகுல வெளுறு வெளுறுன்னு வெளுறுனா கெழவி.


"நீ யாருலே அவள அடிக்க அனாதப்பயலே"ன்னு அடிச்சுட்டு அப்டியே மூச்சுவாங்கி நின்னா.

விக்டர் கெழவி கைய புடிச்சு ஒக்கார வெச்சு அது மூஞ்சியவே பாத்தான்.

"ஒரு நா ராவுல ரத்தஞ்சொட்ட சொட்ட ஒன்னய தூக்கிகிட்டு இந்த சேரிக்கு ஓடியாந்துச்சு தவமணி. அத்த அப்பந்தான் நான் மொதா தடவயா பாத்தேன்.


ஒன்னய தூக்கிகிட்டு ரெண்டு பேரும் சுத்திமுத்தியிருக்குற ஆஸ்பத்திரிக்கெல்லாம் போனோம். அனாத புள்ள, ஆக்சிடன்டு கேசுன்னு யாரும் ஒன்னய சேத்துக்கல. தவமணி ஒன்னய அத்தோட புள்ளன்னு சொல்லி ஒனக்கு வைத்தியம் பாக்க வெச்சுது. அப்றம் அதுக்கு போக எங்கயும் எடம் இல்லன்னு சொல்லி எங்க கூடயே இந்த சேரில தங்கிருச்சு. எல்லார் கிட்டயும் ஒன்ன அத்தோட புள்ளன்னு சொல்லிருச்சு.


பாண்டிச்சேரிக்குப் போயி வேல பாத்துட்டு வரும். அது வரவரைக்கும் நான்ந்தேன் ஒன்னய பாத்துக்குவே"ன்னு கண்ண தொடச்சுகிட்டே சொல்லி முடிக்கறதுக்குள்ள விக்டர் விருட்டுன்னு வெளிய கெளம்பி போய்ட்டான்.

கொட்டற மழையில சைக்கிள அமுத்தி வேகமா போயி வூட்டு முன்னாலா போட்டுட்டு உள்ளாற போனான்.

"ஒங்கம்மாவ கூட்டிட்டு வரலயாடா"ன்னு கேட்டுக்கிட்டே வசந்தா அவேன் மொகத்த பாத்தா.


அவ தோள புடிச்சு இழுத்து பல்ல கரகரன்னு கடிச்சுக்கிட்டே "நான் அனாதன்னு ஏன் சித்தி சொல்லல"ன்னா விக்டர்.

வசந்தா, அவ மொகத்துல வழிஞ்ச வேர்வய தொடச்சுகிட்டே அவேன் கைப்பிடிலருந்து வெலகுனா.

"இன்னடா சொல்லுற? நீ அத்தோட மவேன் இல்லியா?"ன்னு கண்ண ஆந்த மாதிரி அகல விரிச்சா.

"ஒனக்கு தெரியாதாக்கு"ன்னு ஒக்காந்து மீசய ஒதட்டுக்குள்ள வுட்டு பரக்கு பரக்கன்னு இழுத்தான் விக்டர்.


"இனக்கின்னா தெரியும். என்னய இந்த சேரிக்கு இழுத்துகின்னு வந்தப்போ ஒன்னய அது புள்ளன்னுதேன் சொல்லிச்சு. அப்போ நம்ம யாரும் ஒறவில்லயா?" ன்னு கன்னத்துல கைய வெச்சுக்கிட்டு விக்டர் பக்கத்துல ஒக்காந்தா வசந்தா.

"அப்போ நீ ஏன் அம்மா............... ச்சீ அத்தோட தங்கச்சி இல்லயான்னு சொல்லிட்டு அவள பாத்தான் விக்டர்.


"பாண்டிச்சேரில எம்புருசன் என்னய போட்டு நடுரோட்டுல அடிச்சிட்டு கெடந்தான். அவன மரிச்சு கைய ஒங்கிச்சு அது. நீ யாருடீ இவளுக்கு வக்காளத்துன்னு எம்புருசன் கேக்க என்னய அது தங்கச்சின்னு சொல்லி இங்க கூட்டியாந்துருச்சு" ன்னா வசந்தா.

விக்டர் தொப்பலா பென்ஞ்சு மேல ஒக்காந்துருந்தான். அவேன் புது லுங்கிலருந்து மஞ்ச கலரு சாயம் ஒழுகிட்டுருந்துச்சு.

"வாட் டிட் ஹீ ஆஸ்க்ட் யூ?" ன்னு கேட்டுகிட்டே பொட்டிய பேக் பண்ணிட்டுருந்தான் கிலியன்.

"வாட் இஸ் மை ரிலேன்சன்சிப் டூ யூ?"ன்னு கேட்டான்னு புள்ளைக்கு பால குடுத்துகிட்டே சொன்னா தவமணி.

"வாட் டிட் யூ சே?"ன்னா கிலியன்.


"நத்தின்ங்"குன்னு அவன பாத்தா தவமணி.

"யூ ஷுட் ஹவ் டோல்ட் ஐ யம் யுஆர் ஃப்ரென்ட்"டுன்னா கிலியன்.

"ஐ யம் யுவர் ப்ரென்ட்?ன்னு புருவத்த ஒசத்தி அவன பாத்து சிரிச்சா தவமணி.


ரெண்டு ஒதட்டயும் அமுக்கி படிஞ்சிருந்த அவேன் கன்னத்த உப்பிகிட்டு தலய ஆட்டுனான் கிலியன்.

"வீ ஆர் நாட், பட் யூ ஷுட் ஹவ் டோல்ட் சம்தின்ங்"னு தல முடிய ரெண்டு பக்கமும் கோதி விட்டுகிட்டான் கிலியன்.

தவமணி அவேன் பெட்டிய மூடி வாசக்கதவு பக்கத்துல வெச்சா.

"ஐ அம் கோயின்ங் டூ பன்ங்லாதேஷ் டுமாரோ ஃபார் ஏ ப்ராஜெக்ட். கேன் யூ டேக் கேர் ஆஃப் த பேபின்னு?" கிலியன் அவள பாத்து தோள தூக்கி கண்ண ஒசத்துனான்.


தவமணி அடுப்படிக்குள்ள போயி படபடன்னு எதையோ மொபைல்ல டைப் பண்ணா. வாயுக்குள்ள எதையோ மொனகிக்கிட்டே புள்ளய தூக்கி இடுப்புல வெச்சுக்கிட்டா. சோல்னா பைய தோள்ள மாட்டிக்கிட்டு வெளிய வந்து "வொய் டூ பீப்புல் சுட் ஹாவ் சம் ரிலேசன்சிப் டூ கனக்ட்?" ன்னு எந்த ஒரு உணர்ச்சியும் மூஞ்சில காமிக்காம அவன பாத்தா.

கிலியன் அவள தோளோட அணச்சு, "யூ ஆர் ப்ரில்லியன்ட்"டுன்னான்."யூ தாட் மீ" ன்னா தவமணி

"கால் மீ எனி டைம் ஃபார் எனி ஹெல்ப்"புன்னு அவ கையில கத்தயா ரூபா நோட்ட திணிச்சாங் கிலியன்.

தவமணி சிரிச்சுகிட்டே "சீ யூ சூன் கிலியன்"னு, புள்ளயோட மாடிப்படில எறங்குனா. ஆனந்து படியில தேச்சுவெச்சுருந்த பீய மிதிக்காம தாண்டி நடந்தா தவமணி.


அந்த குறுக்குத்தெருவுல மழ பெஞ்சு ஓஞ்சிருந்துச்சு. அங்கங்க தண்ணி. அதுசேரி, மழத்தண்ணிக்கு இன்னா ஒட்டா ஒறவா? எங்கல்லாம் பள்ளம் இருந்துச்சோ அங்கல்லாம் மழத்தண்ணி தேங்கிகெடந்துச்சு. எந்த வூட்டு சன்னல்லருந்தோ ஏதோ ஒன்னு தொப்புன்னு ஒரு பள்ளத்துல விழுந்து தவமணி மேல சகதி தெறிச்சுச்சு. அத்த தொடச்சிக்கிட்டே தவமணி வானத்த அன்னாந்து பாத்தா , அந்த குறுக்குத் தெருவுக்குள்ளாருந்து பாத்தா வானங்கூட குறுகலாதான் தெரிஞ்சுச்சு. வேகமா நடந்து அந்த தெருவோட மொனைக்கு வந்தா. கொஞ்சம் தயங்கி அந்த பக்கமும் இந்த பக்கமும் நடந்தா. எங்குட்டு திரும்புனாலும் அங்க ரோடு குறுகலாத்தான் இருந்துச்சு.


"இன்னா தவமணி இருட்டுக்குள்ள வூட்டு தெச மறந்து போச்சா? நாளைக்கு எங்கூட ஆஸ்பத்திரி வரீல்ல?"ன்னு பொன்னுசாமி கொரல் கேட்டுச்சு. திரும்பி பாக்காம வேகமா நடந்தா தவமணி. வூட்டுக்குள்ள போயி "கொஞ்சம் புள்ளய பாத்துக்கோடா விக்டரு, குளிச்சிட்டு வரே"ன்னு கையில இருந்த புள்ளய விக்டர் மடியில ஒக்காரவெச்சா தவமணி.


புள்ளய கைல வாங்கிட்டு அவ மூஞ்சிய பாக்காமலே "சாரிம்மா" ன்னா விக்டர்.

எதுக்குடா சாரி? என்னய அறஞ்சதுக்கா இல்ல ஒரு வாரமா ட்ரம்ஸ் கிளாஸ்க்கு டிமிக்கி குடுத்துங்கின்னு இருக்கியே அதுக்கா?ன்னு கேட்டுகிட்டே உள்ள போனா தவமணி. 

விக்டரும் வசந்தாவும் ஒருத்தரவொருத்தர் பாத்துகிட்டாங்க. புள்ள அவங்கள பாத்து மெல்லிசா சிரிச்சுச்சு.


Rate this content
Log in

Similar tamil story from Drama