balaji venkat

Drama

5  

balaji venkat

Drama

பீஷ்ம பிதாமகர்

பீஷ்ம பிதாமகர்

6 mins
503


பீஷ்ம பிதாமகர்

டண்டக்கு…டண்டக்கு..டண்டக்குடும் டும்.. என்று சீலத்திற்கு பெயர் போன அந்த அக்ரஹாரத்தில் பறைச்சத்தம் என்றுமில்லாமல் அன்று இடியைப்போல மேளம் முழங்கியது.


அங்கு சூழுந்திருந்த பிராமணர்களும் அதை எதிர்க்கவில்லை. சேரியாட்கள் பதினைந்து இருபது பேர் பூமி அதிர அதிர நெஞ்சுக்கூடு இற்று விழுந்துவிடுவது போல பறையை அடித்தார்கள்.

ஒரு இனம் காண முடியாத சந்தோஷப் பிரவாகம் போல் முழங்கியது ஒவ்வொரு அடியும். 


சில பிராமணர்கள் இதை பெருமையாகவே நினைத்தார்கள்..அதற்க்கு காரணம் வி.எஸ்.மாமா என்ற விஸ்வநாதன். அவருக்காக தான் அந்த பறை முழுங்கியது..டண்டக்கு…டண்டக்கு..டண்டக்கு.. டும் டும்..

வி. எஸ். மாமா மின்சாரவாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது. வேலை நேரம் போக, மீதி நேரத்தை வீணாக கழிக்காமல் பெரியகோவில் கைங்கர்யமும் செய்து வந்தார்.


ஸ்ரீரங்கத்தில் பெரிய தலைக்கட்டு அவர்தான். வயதாலும் அனுபவ முதிர்ச்சியாலும் எட்டு வீதிகளிலும் அவருக்கு தனிமரியாதை இருந்தது..

யார் வீட்டில் இறந்தாலும் இவருக்குத்தான் முதல் செய்தி. உடல் எரிந்து பஸ்பமாகும் வரை தானே அங்கிருந்து அத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டு பார்ப்பார்.


வி. எஸ் மாமாவின் பள்ளிக்கால தோஸ்த்தும், உயிருக்குயிராய் இருந்த ஆப்த நண்பருமான ராமன் இறந்த போது மாமா கண்களில் நீர் வழிய வழிய எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.


டேய் கால நன்னா அழுத்தி பிடிடா.. ம்ம் கைய சரியாவை.. வாய் மூடமாட்டேன்றது பார்.. அழுத்தி பிடி என்று பெரிதாய் மீசை முளைக்காத இளவட்டங்களிடம் கட்டளை பிறப்பித்துக்கொண்டே வேலை செய்தார்


அவர் இருக்கும் இடத்தில் அவர் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பார்கள்…தன் நண்பனை தோலில் சுமந்துகொண்டு இடுக்காட்டிற்கு நடந்தார். இடுகாட்டில் உடலை வைத்து அவரது உறவினர்கள் ஒவ்வொருவராக வாய்க்கரிசி போட்டார்கள். 


வி. எஸ் மாமா வாய்க்கரிசி போட சென்றபோது ராமன் உறவினர்கள் மாமா எங்க வழக்கத்துல நாங்க மட்டும் தான் வாய்க்கரிசி போடணும். மத்தவா யாரும்...என்று இழுத்ததை நிமிஷத்தில் உள் வாங்கிக் கொண்டு…

அப்படியா? சரி.. சரி…ஆகட்டும்.. ஆகட்டும்.. என்று அதை பெரிதுபடுத்தாமல் அரிசியை ஓரமாக வைத்து விட்டு.. வாத்தியாரே அடுத்து என்ன…டேய் வறட்டி எங்கடா என்று கம்பீரமான குரலில் கேட்டு கொண்டே நகர்ந்தார்.


ராமன் மகன் கொள்ளி வைக்க உடல் ஏரிய துவங்கியது. உறவினர்கள் முகம்பொத்தி அழுதுகொண்டு வெளியேறினார்கள். வி. எஸ் மாமா தன் நண்பனை சில நிமிடம் பார்த்துவிட்டு காவேரியில் மூன்று முறை முங்கி குளித்தார்.


சாமி.. சாமி.. என்று வயது முதிர்ந்த அனுபவம் பழுத்த வெட்டியான்கள் பதற்றதோடு வி.எஸ் மாமா வீட்டு கதவை நள்ளிரவில் தட்டினார்கள்.. 

என்னப்பா..இந்த நேரத்துல.. வெளியில் வந்து நின்று கொட்டாவியை புறங்கையால் மறைத்து கொண்டு கேட்டார் 


பொணம் எரியமாட்டேந்து சாமி.. என்ன என்னவோ பண்ணி பாத்துட்டோம் ஒரு போட்டு ஏரியல நாலு மணி நேரமா. எங்களுக்கு பயமா இருக்கு.. நீங்க கொஞ்சம் வாங்களேன் என்று ஒரு வயதான வெட்டியான் பதற்றதோடு சொன்னான்.


பிணத்தை ஒருவன் காவல்காத்து கொண்டு இருக்க. நாய்கள் ஊளையிட்டு கொண்டு சுற்றி வந்தது. வி. எஸ் மாமா வேட்டியை மடித்து கட்டி கொண்டு ராமன் உடலை பார்த்தார்.சிறிது கூட எரியாமல் இருந்தது.


என்னடா ராமா.. ஏன் இப்படி பண்ற.. என்று முணு முணுத்துக்கொண்டே சுற்றி வந்தார் 

டேய் கற்பூரம் இருக்கா?.. இருக்கு சாமி என்று அவர் கையில் ஒருவன் கொடுத்தான். கற்பூரத்தை உடலின் மேல் வைத்துவிட்டு. ஓரத்தில் இருந்த அரிசியை எடுத்து பிணத்தின் வாயில் போட்டார்.


கற்பூரத்தை ஏறினார் அடுத்த நொடி ஒவ்வொரு கட்டையாக பற்றி தக தகவென்று எரிய ஆரம்பித்தது.

மறுநாள் ராமன் வீட்டு ஆட்கள் இதை கேட்டு மனம் வருந்தி மன்னிச்சுக்கோங்க மாமா என்றான் ராமன் மகன்.. டேய் அசடு என்ன இதல்லாம் ஒன்னும் இல்ல. நீ மத்த காரியத்த பாரு.. என்று அவனை தேற்றி அனுப்பினார்.


பறை ஓசை கேட்டு சில வீதிகளில் இருந்து மக்கள் வந்து பார்த்து கொண்டு இருந்தனர்.சிறுவர்கள் தன்னை மறந்து ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

நம்ம அக்ரஹாரத்திலா வாசிக்குறாங்க? இதுவரைக்கும் இப்படி நடந்தது இல்லையே மாமி. வரேல நம்மலும் ஒரு எட்டு வி. எஸ் மாமாவ பாத்துட்டு வந்துடுவோம் ரொம்ப நல்ல மனுஷன் என்றாள் சுமதி மாமி.


வி. எஸ் மாமாவை வீட்டின் மத்தியில் கிடத்தி இருந்தார்கள். அவரது மகன் சங்கரன் காரியங்கள் செய்து கொண்டு இருந்தார் . கோவில் மாலைகள் கோவில் வாத்தியத்துடன் வந்து கொண்டு இருந்தது 

வி. எஸ் மாமாவிற்கு கோவிலில் தெரியாத வேலையே இல்லை.. எல்லா வேலையும் செய்வார்.. கூட்டத்தை சரி செய்வது, பெருமாளுக்கு தீர்த்தம் கொண்டு வருவது, பெருமாள் வீதி புறப்பட்டால் வி. எஸ் தான் அரங்கனுக்கு தளபதி.


தேருக்கு சன்னக்கட்டை போடுவதில் இவரை மிஞ்ச அகிலத்தில் ஒருவரும் இல்லை.. இவர் இல்லாமல் தேர் நகராது..ஒரு பங்குனி உற்சவம் தேர் வடக்கு வீதி வளைவில் சுமார் ஒன்றரை மணி நேரம் தேர் திரும்பாமல் நின்றது.

ம்ம்ம் டேய் கட்டைய கொண்டு வா… அந்த பிளேட்(இரும்பு பட்டயம் )கொண்டு வாங்கடா.. எண்ணெய் எடுத்துட்டு வந்தானா? இல்லையா …அந்த இடமே வி. எஸ் மாமா குரலுக்கு ஓடிக்கொண்டு இருந்தது..இல்லை பறந்து கொண்டு இருந்தது..


கிரீஸ் விடுடா கண்ணா.. மேளம் அடிடா… செவுடனுக்கு கேட்டு அவன் வந்து தேர் இழுக்கனும்.அடி அடி.. ஏராளமான பக்தர்கள் மேள சத்தம் கேட்டு தேரை இழுத்தார்கள்.. தேர் நகரவில்லை..

இப்படி கொடு.. என்று கட்டையை வாங்கி தேர் சக்கரத்தின் நுனியில் வைத்து.. ஹ்ம்ம் அடி அடி.. டேய் கட்டை மேல ஏறுங்கடா.. டேய் ஒல்லிபிச்சான் நீ இறங்கு…டேய் பால்பாண்டி நீ ஏறு.. அந்த பக்கம் சரியா இருக்கா..ம்ம் இன்னும் ரெண்டு பேர் ஏறுங்கடா..


ஹ்ம்ம் அடி அடி என்று தேர் சக்கரத்தின் அடியில் கூரிய கட்டையை மாற்றி மாற்றி வைத்து தேர் திரும்பும் படி செய்தார். தேர் சற்று ஆடி நகர்ந்தது. மாமா பின்னிடேள்… என்று ஒரு கும்பல் ஒஒஒஒஒ வென்று கத்தியது..


கொஞ்சம் கொஞ்சமாக அந்த கூட்டத்தை உற்சாக படுத்தி… தண்ணீர் கொடுத்து, அவர்களுடன் ரகளை செய்து..சோர்ந்து இருந்தவர்களை நக்கல் அடித்து, விசிறி விட்டு பம்பரமாய் சுழன்றார்… அவரது ஐம்பது வயதிலும்.


டேய்..அம்பிகளா இன்னும் ஒரு அடி தான் அப்புறம் தேர் குதிரை மாறி ஓடும்.. வா வா… உக்காராத… என்று சொல்லி கொண்டே தேரின் பின் பக்கம் 

இருக்கும் மேளம் அருகில் சென்றார்… டேய் அத கொடு என்று மேள குச்சியை வாங்கினார்..


டேய் ஸ்ரீராமா தகட்டுல கொஞ்சம் எண்ணெய் ஊத்து.. டேய் சின்ன பசங்கள எல்லாம் மாமா பின்னாடி நிக்கணும் அங்க சக்கரம் பக்கம் போக கூடாது.. இளைஞர் பட்டாளம் வி. எஸ் மாமா மேளம் அடிப்பதை பார்க்க சுற்றி கொண்டு உற்சாகமாக கத்தினர்கள்…


மாமா அடி அடி… கும்தாலக்கடி கும்மாவா… வி. எஸ். மாமானா சும்மாவா.. போடு போடு..LIC ஹாயிட்டு.. வி. எஸ் மாமா வெயிட்டு..என்று கோஷம் வானை பிளந்தது.


டம்...டம்… டாம...டாம... டாக...டாக…என்று வி. எஸ். மாமா மேளம் அடிக்க ஆரம்பித்தார். ஒரே மூச்சில் தனது வயதான காலத்திலும் கை வேகம் குறையாமல்.. நெருப்பாக அடித்தார்.. மேளத்தில் அடிக்கும் குச்சி…எந்த கை குச்சி என்று யாராலும் கணிக்க முடியவில்லை..


பெருமாளும் மேள சத்ததை கேட்டு ஆடி ஆடி நகர்ந்தார்.. தேர் திரும்பியது..

வி. எஸ் சொன்னது போல தேர் குதிரை வேகத்தில் சென்றது..


கோவில் மாலையை வி. எஸ் மாமா உடலுக்கு வாசுபட்டர் அணிவித்தார்.. நமஸ்காரம் செய்து விட்டு நாற்காலியில் அமர்ந்தார்..அவர் அருகில் இருந்த கேசவபட்டர் அவரது கை மேல் கை வைத்து ஆறுதல் கூறினார்..


வி. எஸ் மட்டும் இல்லனா இன்னிக்கி திருமங்கை படித்துறை (பிராமணர் இடுகாடு) இல்லாமா கொள்ளிடத்தோட பாழபோயிருக்கும் வாசு கண்ணீர் மல்க கூறினார்.. அத சீர்பண்ணலைனா பல உடல தகனம் பண்ணமுடியாம போயிருக்கும்..என்று அங்குள்ள அனைவர்க்கும் தோன்றியது..


திருமங்கை இடுகாடு பல உடலை தன்னுள் புதைத்து கொண்டு இருந்தது.அநாதி கால கர்மங்கள் அங்கு நடதெரியதால் என்னவோ அது இத்து போய் ஊசல் ஆடி கொண்டு இருந்தது.. அக்னியின் கோபமும், பூமியின் ஆட்டத்தால் சிதிலமடைந்து போனது.


எழவு விழும் போது மட்டும் அதை சரி செய்ய நெருப்பாய் பேச்சு கொழுந்து விட்டு எரியும்…ஓரிரு நாட்களில் கானல்நீர் போல காணாமல் போய்விடும் 

வி. எஸ் மாமா பல ஆச்சாரியர்கள், பிடாதிபதிகளை பார்த்து பலநாள் முயற்சி செய்து அந்த பிராமண இடுகாட்டை புன்னராமைப்பு செய்தார். இமக்கிரி செய்ய பணம் இல்லாத பலருக்கு அவர் உதவி செய்தார்.. நா இருக்கேன் டா அப்படிலாம் விட்ருவேனா… என்று பல பேரிடம் சொல்லி அவர்களை சமாதானபடுத்தினர்..

குணசீலன் இடுகாட்டில் தகனத்திருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தான். அவனுடைய மகனுக்கு வி. எஸ் மாமா பெயரை வைத்திருந்தான.அவர் மேல் அவ்வளவு மரியாதை.


மாமா அம்மா பரமபதிச்சுட்டா? என்றான் குணசீலன் கண்ணீர் மல்க 

ஒன்னும் கவலைப்படாத நா இருக்கேன் பாத்துக்குறேன் என்று அவன் தோளை தடவி கொண்டே கூறினார்.

அம்மா உடம்ப எடுக்க யாருமே வரல மாமா.. உடம்பெல்லம் புழு வச்சுருக்கு.. முனிசிபால்டி ஆள் கூட வரல…எப்படி அம்மாவ காட்டுக்கு கொண்டு போக போறேன்னு தெரில என்று உடல் குலுங்க அழுதான்..


எவன் வாரன் வரல… நா இருக்கேன்.. என்று கம்பீரமான குரலில் கூறிவிட்டு குணசீலன் வீட்டிற்குள் நுழைந்தார்..

மங்களம் பாட்டி புற்றுநோயால் அவதிபட்டு இறந்து போனாள்.. உடம்பு முழுக்க புழு நெளிந்து கொண்டு இருந்தது. கொஞ்சம் கூட அருவெறுப்பு இல்லாமல் அவளை தூக்கி கொண்டு பாத்ரூம் அருகே சென்றார்.. 


அவளது உறவினர்கள் முகம் சுழுத்தி கொண்டு வெளியேறினர்கள்.சில புழுக்கள் தரையில் விழுந்து உடலை சுருக்கிகொண்டது.

டேய் பாலு…அங்க இருக்க மஞ்சள் குங்குமம், எண்ணெய் எடுத்துட்டு வா என்று அவருடன் வந்தவனை ஏவினார்.. அவன் தயங்கி தயங்கி எடுத்துகொண்டு வந்தான்..


என்ன அருவெறுப்பா இருக்கா? நமக்கும் இந்த கதி வரும் அப்போ இப்படி யோசிச்சுட்டு உன் குடும்பம் நின்னா நாறி போய்டும்..நாறி..

இங்க இருக்கவனுக்குலாம் இந்த மாறி ஆகாதுன்னு நெனப்பு..யார் கண்டது? என்று சுவரில் மாட்டியிருந்த ரெங்கநாதர் படத்தை பார்த்துவிட்டு சுற்றி இருந்தவரை பார்த்தார்.


நூறு அஸ்வமேத யாகத்துக்கு சமம் இந்தமாறி உடம்ப தொட்டு காரியம் பண்ணா என்றார் ஆவேசம் போங்க..பாலு மறு நிமிடம் சுதரித்து கொண்டு அவளது காலை பிடித்து கொண்டான்.

உடம்பிலிருக்க புழுக்களை வி. எஸ் கையால் எடுத்து எறிந்தார்.. அவளை குளிப்பாட்டி..புடவை கட்டி, மஞ்சள் பூசி அவளுக்கு நெத்திக்கயிட்டு மேஜையில் படுக்க வைத்தார்.


அவள் அருகில் இப்போதும் அவளது குடும்பத்தார்கள் வர கூச்சபட்டனர். 

வி. எஸ் அவர்களை ஒரு பார்வை பார்த்தார்…புழுவை போல சுருங்கி போனார்கள்.


டேய் பாலு ஆத்துக்கு போய் சங்கரன கூட்டிட்டு வா.. 

எதுக்கு மாமா? அவன் சின்ன பையன்? 

தூக்க ஆள் இல்ல டா அம்பி..என்றார் குரல் தழு தழுக்க..

பாலு மறுவார்த்தை பேசாமல் நடந்தான் 


பாடையின் முன்புறம் பாலுவும், சங்கரனும் தூக்கினார்கள், வி. எஸ் மாமா ஒரு தோளில் கட்டையும், ஒரு கையால் மறு கட்டையும் பிடித்து கொண்டு மூவருமாக இடுக்காட்டுக்கு சென்றார்கள். 

குணசீலன் கண்ணீர் மல்க கொள்ளி வைத்து விட்டு வி எஸ் மாமாவை கட்டிப்பிடித்து கொண்டு அழுதான். அங்கு இருந்த சிலர் கண்ணில் அப்பொழுதான் கண்ணீர் தென்பட்டது..


பறைசத்தம் உக்கிற தோணிக்கி சென்றது.. வஜ்ராயுத்தத்தால் அடிப்பது போல் சத்தம் வானுக்கும் பூமிக்கும் பரவியது. வி. எஸ் மாமாவை தூக்கி கொண்டு வந்து பாடையில் வைத்தார்கள். எங்கும் அழுகுரலே வியாபித்திருந்தது.


அன்று கார்த்திகை தினம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விளக்கு ஏற்றபட்டு கொண்டு இருந்தது.. நா, நீ என்று வி. எஸ் மாமாவை சுமக்க சிறு சண்டை மூண்டது..

தீப ஒளி சுடர்விட்டு எரிந்துகொண்டு இருக்க…வி எஸ் மாமாவை சுமந்து கொண்டு வீதியில் நடந்தார்கள். முன்னே பறையின் தோல் கிழியும் அளவிற்கு அடித்தார்கள்..ரட்டக்கு..டும்..டும்.. ரட்டாக்கு.. டும்.. டும்..


பல பேர் மனதில் தன் அப்பாவை, தன் தாத்தாவை, தன் நண்பனை இழந்த சோகத்தில் மூச்சற்று நடந்தார்கள்..சிலர் குடித்து விட்டு தன் வீட்டு சோகம் என்று அழுது கொண்டே ஆடினார்கள்.


வி. எஸ் மாமாக்கு பின்னே ஒரு படையே நடந்து வந்து கொண்டு இருந்தது.. அவரது உறவினர்கள், அவருக்கு தெரிந்தவன், அவரை பற்றி கேள்விபட்டவன்,ஆண்கள் பெண்கள்,இளைஞர்கள் என்று புழுதி பறக்க அந்த பீஷ்ம பிதாமகர் இடுக்காட்டுக்கு சென்றார். நீல வானம் கறுத்து போனது….எங்கும் இருள் பரவியது….சூரியன் அஸ்தமிதான்.


-பாலாஜி வெங்கடேசன் 



Rate this content
Log in

Similar tamil story from Drama