மலைகள் கேள்வி கேட்பதில்லை
மலைகள் கேள்வி கேட்பதில்லை


மலைகளுக்குத் தனி சுகந்தமுண்டு. அதை நுகர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் அது ஒரு போதையென்று. அந்த ஆறடி மனிதன் அதைப்பற்றியெல்லாம் நினைத்துக்கொள்ளவில்லை. அவன் வேறு எதைப்பற்றியும் நினைத்துக்கொள்ளவில்லை. ஏதோ தானும் இந்த உலகத்தில் ஒரு ஜீவராசி என்ற அடிப்படை சிந்தனையுடன் அந்த ஹைக்கீன்ங் பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தின் பெரும்பான்மையை அவனது கண்ணாடி ஆக்கிரமித்திருந்தது. அதைச் சரிகட்டுவதுபோல், அவனது நெத்தியை விசாலமாகக் காட்டிக்கொடுத்தது அவன் தலையின் பின்பாகத்தில் மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்த கருப்புச்சாயம் பூசிய தலைமுடி. நாற்பத்தி ஐந்து வயது அவன் தொப்பையில் பெருமைபேசிக்கொண்டு அமர்ந்திருந்தது. அவன் வழக்கமாக உட்காரும் அந்த வழவழப் பாறையில் வந்து அமர்ந்துகொண்டான்.
ஆளேயில்லா அந்த மலைப்பாதையும், அந்த வழவழப் பாறையும் அவன் ராஜ்யத்திற்கு உட்பட்டது போல கம்பீரமாய் உட்கார்ந்து கொண்டு ஏதோ பாடல் ஒன்றை முனுமுனுத்துக்கொண்டிருந்தான். திடீரென ஒரு சப்தம். காய்ந்த சருகுகள் மிதிபடும் சப்தம். அவன் மனம் படபடத்தது. அவன் ராஜாங்கம் பறிபோய்விட்டதோ என்ற படபடப்பு. அவன் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே அங்கிருந்த மரத்தைத் தாண்டி நடந்துபோனான். அவள் அவனைப் பார்த்து ஆள்சுட்டி விரலைத் தன் குவிந்த உதட்டில் வைத்துக்கொண்டு, கண் விழிகளையும், புருவங்களையும், அங்கிருந்த மலைகளுக்குப் போட்டியாக உயர்த்திக்கொண்டு, அமைதியாய் இரு என்பதை அபினயத்துக்காட்டினாள். எரிச்சலையும் தாண்டி அவள் முகம் அவனை ஈர்த்தது. அவள் தன் கையில் டேப் ரெக்கார்டர் போல எதையோ வைத்துக்கொண்டு ஒரு பறவையின் சப்தத்தைப் பதிவு செய்துகொண்டிருந்தாள். சற்று நேரத்திற்குப் பின் அதை நிறுத்திவிட்டு அவனிடத்தில் வந்து, ஹலோ ஐயம் அனுராக்திகா, என்று கைக்கொடுத்தாள். அவன், மனோஜ் என்று அவள் கரத்தைப் பற்றினான். இருவரும் அந்த வழவழப்பாறையில் வந்து அமர்ந்தனர்.
அவள், தான் அகௌஸ்டிக்ஸ் ஆன்ட் மியூசிக் டெக்னாலஜியில் ஆராய்ச்சி செய்வதாகக் கூறினாள். அந்த மலையில் ஒலிக்கும் எல்லாவிதமான ஒலிகளையும் ஆராய்ச்சி செய்யப்போவதாகவும், அதனை சார்ந்து ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிடப்போவதாகவும் கூறினாள். அவனுக்கு அவள் பேசிய எதுவும் விளங்கவில்லை. ஆனால் அவள் கண்களின் அபிநயமும், அவள் பேசும் தோரணையும் அவனை அவளுக்குத் தலையசைக்க வைத்தது. அவள் தன் குடும்பத்தைப் பற்றி கூட சில விஷயங்களைப் பரிமாறிக்கொண்டாள். அங்கிருந்த மலையருவி அவளிடம் தான் கொட்டக் கற்றுக்கொண்டதோ என்று நினைக்கும் அளவிற்கு அவள் பேச்சு இருந்தது. ஆனால் அவன் அப்படியெல்லாம் சிந்திக்கவில்லை. அவள் பேசியதிலிருந்து அவன் புத்திக்குப் புலப்பட்டது, அவளுக்கு இருபத்தைந்து வயது இருக்கும் என்பது மட்டும்தான்.சிறிது நேரம் கழித்து அவள் தன் பேச்சை நிறுத்திவிட்டு, ஸாரி நானே பேசிட்டு இருக்கேன், நீங்க சொல்லுங்க உங்க குடும்பத்தைப் பத்தி என்றாள். அவன் தன்னைத் திருமணமானவன் என்று சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பதற்குள், அவள் உங்க மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஹைக்கிங்கில் இன்ட்ரஸ்ட் இல்லையோ என்று புருவத்தை உயர்த்தினாள். அவன் வாழ்க்கையில் முதன்முதலாக அன்று தான் தன் தொப்பையின் கனத்தை உணர்ந்தான்.
அவர்கள் இருவரும் சில மணி நேரங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அவள் சப்தங்களைப் பற்றியும் அதை எவ்வாறு இசையில் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் அவனுக்கு மிக எளிமையாக விளக்கினாள். அது மட்டுமல்லாமல் உலக அரசியல் பற்றிய தன் கருத்தையும் கூறினாள். அவனுக்கு எதைப் பற்றியும் பெரிதாக சுய கருத்து இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது. அவன், அவள் கூறிய விஷயங்கள் சிலவற்றை கிரஹித்துக் கொண்டான். அவனுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, அவள் தான் கிளம்பப்போவதாகச் சொன்னாள். அவன், தான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் அங்கு வருவேன் என்று கூறினான். தன்னுடன் பேச அவனுக்கு ஆர்வம் இருப்பதை அவளால் உணர முடிந்தது. தானும் இன்னும் இரண்டு மாதத்திற்கு அங்கு அடிக்கடி வரவேண்டியிருக்கும் என்றாளவள். ஓகே மீண்டும் சந்திக்கலாம் என்று கூறி அவள் விடைபெற்றுக்கொண்டாள். அவள் போனதும், அவன் தான் அங்கு வந்ததற்கான காரணத்தை நினைவுபடுத்திக்கொண்டான். சுற்றிலும் நின்று மேகங்களை புகைத்துக்கொண்டிருந்த அம்மலைத்தொடரைப் பார்த்து கத்தத் துவங்கினான். அவன் ஒரு வார அலுவலக அனுபவங்களை உறக்கப் பேசினான். அவன் குரலை அந்த மலைகள் கம்பீரமாய் எதிரெலித்துக் கொண்டிருந்தன. அவன் சிரித்துக் கொண்டான். மனம் மகிழ்ந்து கொண்டான். மலைகளுக்குத் தெரியவில்லை அவன் அவைகளிடம் பேசுகிறானென்று, சிரிக்கிறானென்று. அவைகள் அவைகளாகவே இருந்தன. அவன் கொஞ்ச நேரம் கழித்து கிளம்பிவிட்டான்.
அவன் வீட்டிற்குள் நுழையும்போது, அவன் மனைவியும் மகனும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அவனைப் பார்த்ததும் அவள் ஹௌ டிட் யூ லைக் யுவர் ஹைக்கீன்ங்? என்று கேட்டுக்கொண்டே செக்மேட் என்று தன் மகனுக்கு செய்கை காட்டி தன் வெள்ளை நிற குவின் காயை நகர்த்திவைத்தாள். அவன் இட் வாஸ் குட் என்று சொல்லி விட்டு அவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தான். அந்த மலையில் முண்டிக்கிடந்த அவன் கம்பீரம் அந்த வீட்டில் காணாமல் போனது. அந்த அறையின் சுவற்றில், வண்ணப்புதரில் மூழ்கிக்கொண்டிருந்த முகமில்லா முகங்கள் தொங்கிக்கொண்டிருந்தன மாடர்ன் ஆர்ட்ஸ் என்ற முகத்துடன். ஆங்காங்கே நின்றுகொண்டிருந்தன முகம் சிதைந்த சிலைகள், அவன் விசாலமாக நடக்க வேண்டிய இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு, அவனைப் பார்த்து, சொத்தைப் பல்லைக்காட்டிச் சிரிக்கும் பியானோ என அவனுக்கு விளங்காத அனைத்தும் அந்த அறையில் குடிகொண்டு அவனைக் கூனிக் குறுகச் செய்தன. அந்த வீட்டில் இருந்த எல்லாமே அவனுக்குக் கேள்விக்குறியாய்த் தோன்றியது. டின்னர்க்கு புல்கா பண்ணட்டுமா இல்ல ரோட்டியா என்று அடுத்த கேள்விக்குறி உள்ளே நுழைந்தது. அவனுக்கு அது இரண்டிற்குமான வித்தியாசம் பதினைந்து ஆண்டுகள் விளக்கியும் ஞாபகத்தில் தங்கவில்லை. எதுனாலும் சரி என்றான்.அவன் டின்னர் சாப்பிடுவதற்காக வந்து அமர்ந்தான். அவனுடைய மனைவியும் மகனும் ஏதோ பிளாக் ஹோலிலிருந்துலிருந்து எனர்ஜி ஹார்வெஸ்ட் செய்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கோ அந்த புல்கா மீது இருந்த சூடுபட்ட கருவளையங்களை தவிர்த்து வேறு எந்த ப்ளாக் வளையமும் தெரிந்திருக்கவில்லை. அவன் எப்போதும் போல் அமைதியாய் இருந்தான். அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். அவன் சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கை அறைக்கு கிளம்பிவிட்டான். தன் மனைவிக்கும் மகனுக்கும் இந்த உலகத்தில் தெரியாத விஷயங்கள் எதுவுமே இருக்காதா என்று அவன் மனதில் நினைத்துக்கொண்டான். ஆனால் அந்த நினைப்பு அவன் மூளையை தொடுவதற்குள் அவன் உறக்கத்தை தழுவிக்கொண்டான்.
ஒரு வாரம் கழிந்தது அவன் தானுண்டு தன் அலுவலக வேலையுண்டு என வாழ்ந்து கொண்டிருந்தான். வீட்டில் எப்போதும் போல் மௌனம் பேசிக்கொண்டான். அன்று சனிக்கிழமை. அவனுக்கு தான் அடுத்த நாள் போகவிருக்கும் ஹைக்கீன்ங் ஞாபகத்திற்கு வந்தது கூடவே அனுராக்திகாவும் நியாபகத்திற்கு வந்தாள். எப்போதும் போல் அல்லாமல் அவன் ஹைக்கீன்ங் செல்வதற்கு முன் தன் ஆடையை பற்றியும் தன் உடல் அமைப்பைப் பற்றியும் அதிகமாக அக்கறை காட்டிக் கொண்டான். ஏதோ ஒரு சிறிய சந்தோஷம் அவன் மனதில் பரவியது. சில மணி நேரங்களில் அவன் மலையை வந்தடைந்திருந்தான். அவள் அங்கிருந்த மலை அருவியின் சத்தத்தை பதிவு செய்து கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அங்கிருந்து வந்து ஹாய் மனோஜ், ஹவ் ஆர் யு? என்றாள். அவன் ஒரு வாரம் கஷ்டப்பட்டு மனதில் யோசித்து வைத்திருந்த அந்த கேள்வியைக் கேட்டான். அனுராக்திகா என்றால் என்ன அர்த்தம்? அனுராக்தி என்றால் சமஸ்கிருதத்தில் பேஷனேய்ட் அல்லது லவ் என்று அர்த்தம் என்று கண்ணைச் சிமிட்டினாள் அவள். அவனுக்கு ஏதோ சாதித்துவிட்டதாக ஒரு சந்தோஷம். அவர்கள் இருவரும் மீண்டும் பேசத் தொடங்கினார்கள். அவன் எப்பொழுதும் போல் தலையாட்டிக்கொண்டே இருந்தான். திடீரென, இந்த மலைக்கும், மலையருவிக்கும், இசைக்கும் என்ன சம்மந்தம் என்று மற்றுமொரு, தான் தயார் செய்து வைக்காத கேள்வியைக் கேட்டான். ஓ நிறைய இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பியானோவால் போர்டே(forte) மற்றும் பியனிசிம்மோ(pianisimmo) போன்ற ஒலிகளை உருவாக்க முடியும். அவை டைனாமிக் சேன்ஞ்சால் சாத்தியப்படுகிறது. அதை அளப்பதற்கு வாட்டர்பால் ஸ்பெக்டிரம் என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள்.அது பார்ப்பதற்கு இந்த மலையருவி போலவே இருக்கும் என்றாள். இசைபற்றிய தன் அத்தனை கேள்விகளுக்குமான பதில் அந்த மலையில் முண்டிக்கிடக்கிறது என்றாள். அவன் ஆராய்ச்சி கூண்டில் சிக்கிய எலி போல் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் செல்போன் நம்பரை பரிமாறிக் கொண்டனர். அவள் கிளம்பிவிட்டாள். அவன் எப்போதும்போல மலையிடம் கத்திவிட்டு வீடு திரும்பினான் .
அவன் வீட்டுக்கு வந்ததும் எப்போதும் போல் பல கேள்விக் குறிகள் உலாவிக் கொண்டிருந்தன. அவனோ கேள்விக்குறியின் கீழே இருக்கும் சிறிய முற்றுப்புள்ளி போல் குறுகிக் கிடந்தான். இவ்வாறாக இரண்டு வாரங்கள் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள் போனில் மெசேஜ் அனுப்பி கொண்டார்கள். அந்த சனிக்கிழமை இரவு அவன் வீட்டிற்குள் நுழைந்த பொழுது அவன் மனைவி பியானோ வாசித்துக் கொண்டிருந்தாள். முதன்முதலாக அந்த சொத்தைப்பல் காரனின் சிரிப்பு சத்தத்தை அவனால் கேட்க முடிந்தது. "பியூட்டிஃபுல்" என்று அவளிடம் கூறினான். அவள் அவனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு மீண்டும் இசைக்கத் தொடங்கினாள். அடுத்த நாள் காலை வழக்கம் போல் ஹைக்கீன்ங் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் மனைவி, இன்று நாம் மூன்று பேரும் சினிமா போகலாமா என்று கேட்டாள்.அவன், இல்லை நான் ஒரு பிரண்டை பார்க்க வேண்டும் என்றான். உங்கள் பிரண்டையும் சினிமாவிற்கு வரச் சொல்லுங்களேன் என்றாள் அவள். அவன் அவளை ஆச்சரியத்துடன் பார்த்து இல்லை நீங்க போய்ட்டு வாங்க என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அவன் மகன் அம்மா ஆர் யூ டவுட்டிங் டாடி? என்று கேட்டான். ஏனென்றாள்? இல்லை அப்பாவிடம் சில நாட்களாக ஏதோ மாற்றம் தெரிகிறது என்றான் அவன். ஐ கேன் நெவர் டவுட் ஹிம். ஹி ஸ் டூ குட் அ பேர்சன் என்றாள். அப்பாவிற்கு ஏன் எதிலேயும் ஆர்வம் இல்லை. ஐ பீல் ஹி ஸ் வெரி இக்நோரன்ட். உனக்கு அவர் மேல் எரிச்சல் வரவில்லையா? எப்படி உன்னால் இவ்வளவு வருடங்கள் அவருடன் வாழ முடிந்தது என்று வரிசையாகக் கேட்டான் அவன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே அவள் கூறினாள், அறிவீனத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தன் அறிவீனம் பற்றிய சிந்தனை இல்லாமல் இருப்பது மற்றொன்று அது தெரிந்திருந்தும் அதை போக்கிக்கொள்ள ஆர்வமில்லாமல், தைரியம் இல்லாமல் இருப்பது. உன் அப்பா இரண்டாவது வகை என்று கூறிவிட்டு வேலையை பார்க்கத் துவங்கினாள்.
அவன் அந்த ராட்சச மலைகளின் நடுவே நின்று நின்றுகொண்டு எப்போதும் போல் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். அவன் குரலின் பிரதிபலிப்பில் தன் சுய ஈகோவை சுகமாக மசாஜ் செய்துகொண்டிருந்தான். அதை அனுராக்திகா பார்த்து திகைத்து நின்றாள். அவளைப் பார்த்ததும் அவன் ஸ்தம்பித்துப் போனான். அவள், அவனிடம் ஆச்சரியத்துடன் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டாள். அவனையும் அறியாமல் அவன் கண்களில் கண்ணீர் மல்கியது. அவன் முதன்முதலாய்த் தன் மனதைத் திறந்தான். வீட்டில் என் மனைவியும் மகனும் எப்பொழுதுமே அறிவியல் கலை அரசியல் என்று பெரிய பெரிய விஷயங்களை பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு அவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை. நான் ஒரு சராசரி மனிதன். அலுவலக வேலை, பசி, உறக்கம் என் பழைய கால நண்பர்களின் நினைவுகள் , இவைதான் என் வாழ்க்கை. எனக்கு வாழ்வில் பெரிதாக தேடுதல் ஒன்றும் கிடையாது. என்னால் அறிவியல் போன்ற விஷயங்களை உள்வாங்கிக் கொள்ள முடியாது. என் வீட்டில் இருக்கும் எல்லாவற்றிலும் அறிவின் தேடுதல் இருக்கும் ஏதோ ஒரு கேள்வி இருக்கும் எனக்கு அது பிடிப்பதில்லை. இந்த மலைகள் கேள்வி கேட்பதில்லை. நான் என்ன பேசுகிறேனோ அதையே இந்த மலைகளும் பேசுகின்றன எனக்கு அது பிடித்து இருக்கிறது என்று மூச்சுவிடாமல் பேசிவிட்டு சரிந்த ஆலமரமாய் தரையில் கிடந்தான். இதைப்பற்றி நீங்கள் உங்கள் மனைவியிடம் பேசி இருக்கிறீர்களா என்று கேட்டாள் அவள். இல்லை என்று கூறினான். ஆனால் இந்த இரண்டு வாரத்தில் நான் உங்களிடம் பரிமாறிக் கொண்ட விஷயங்கள் சிலவற்றை நீங்கள் கவனமாக கேட்டுக் கொண்டீர்கள். ஏன் அதுபோல் உங்கள் மனைவியிடம் பேசி சில விஷயங்களை தெரிந்து கொள்ளக் கூடாது என்று அவள் கேட்டாள். அவளிடம் பேச எனக்கு பயம் என்றான். அறிவில் இரண்டு வகை உண்டு ஒன்று அடுத்தவர்களை மிரளச் செய்வது மற்றொன்று அவர்களை அரவணைத்து தன் பாதையில் நடக்கச் செய்வது. நீ இரண்டாவது ரகம் என்று கூறிவிட்டு அதற்குமேல் அவள் கண்களைப் பார்த்துப் பேச முடியாதவனாய் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.
அவள் தன்னை அறிவுத் திமிர் பிடித்தவள் என்று கூறி பிரிந்து விட்டுச் சென்ற எக்ஸ் பாய்பிரெண்டை மனதில் நினைத்துக்கொண்டாள். அம்மலைகளைப் போலவே தானும் தானாகவே இருப்பதாகவும், தன்னை உள்வாங்கிக்கொள்பவர்களால்தான் தான் வேறுபடுவதாகவும் அவள் நினைத்துக்கொண்டிருக்கையில் அவளது செல்போன் சினுங்கியது. தான்ங்க் யூ பார் யுவர் ஹெல்ப் .மலைகள் கேள்வி கேட்கத் துவங்கிவிட்டது என நினைக்கிறேன். ஐ கேன் பீல் த சேன்ஞ்சஸ் இன் ஹிம் என்று எதிர்முனையில் அந்த பெண்குரல் ஒலித்து அடங்கியது. தான் செய்வது உதவியா, நம்பிக்கை துரோகமா என்று மனோஜிடம் ஈர்க்கப்பட்ட அவள் மனம் கேள்விக்கணைத் தொடுத்தது. மனோஜ்ஜின் மனைவி அவள் மகனிடம், "மலைகள் எப்பொழுதும் அவைகளாகவே இருப்பதில்லை. தன்னிடம் வருபவர்கள் விட்டுச் செல்லும் சுவடுகளுக்கேற்றாற் போல் தன்னை மாற்றிக்கொள்ளும், அதை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு மட்டுமே அது தெரியும். மனிதர்களும் அதற்கு விலக்கல்ல" என்று கூறி சிரித்துக்கொண்டாள். அவன் எதுவும் புரியாமல் அவன் அம்மாவைப் பார்த்தான். அந்த வீட்டில் கேள்விகளுக்கா பஞ்சம்?