குரங்கு பெடல்
குரங்கு பெடல்


வாசற்கதவைத் திறந்தாள் புவனா. துருபிடித்த ஹெர்குலீஸ் ஒன்று அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது. அவளை விட உயரமாக இருந்த அதன் பின் இருக்கையில் பிளாஸ்டிக் கேனொன்றை வைத்துப் பொருத்தினாள். ஹேன்ட்பாரை பிடித்துக் கொண்டு தன் இடது காலை பின்னால் மடித்து ஸ்டான்டை தளர்த்தி விட்டாள். அவள் பக்கமாய் சரிந்த சைக்கிளைத் தட்டுத்தடுமாறி நேராகப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தாள். “சீக்கிரம் போய்ட்டு வாடி, ஸ்கூலுக்கு நேரமாச்சு” என்றலரினாள்.
புவனாவின் அம்மா. “ம்ம்ம்” என்று சலித்துக்கொண்டே தன் இடது காலை ஒரு பக்க பெடலில் வைத்து வலது காலால் உந்தி உந்தி நகர்ந்தாள். பின் இருக்கைக்கும் ஹேன்ட்பாருக்கும் இடையேயிருக்கும் மூன்று இரும்பு கம்பி இடைவெளிக்குள் தன் வலது காலை நுழைத்து மறுபக்கம் இருந்த பெடலில் வைத்து மிதிக்க ஆரம்பித்தாள். இனி அந்த முக்கோண ஓட்டைக்குள் அவளின் ஆத்திரமெல்லாம்
பலமாகப்போகிறது. எதிர்க்காற்றைக் கிழித்துக்கொண்டு, சுடும் தார் சாலையில் கால் வைக்காமல் இலக்கையடைந்து கேனில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு வருமந்த சவால் நிமிடங்கள்.
அவளுக்குள் நுழைந்து சுற்றிக் கொண்டேயிருக்கும் அந்த கிழட்டுப் பெடல்களை முழங்கால் வலிக்க, நிறுத்தாமல் மிதித்துத் தள்ளும் நிமிடங்கள். தன்னைப் பார்த்து இளித்துக்கொண்டு ஓட்டுமந்த முறுக்குமீசை டிரைவரின் பேரூந்தை முந்திச் செல்ல அவள் அந்த கிழட்டுப் பெடல்களை இன்னும் வேகமாக மிதித்தாள். லலிதா மாமி வீட்டிற்குள் நுழைந்து கேனில் குடிநீரை நிரப்பிக்கொள்ளும்போது, மீசை மழித்த மாமா கன்னத்தைக் கிள்ளினார். புவனா வேகமாக வெளியே வந்து மீண்டும் அந்த கிழட்டுப் பெடல்களை மிதித்தாள். பள்ளிக்குப் போய் அந்த மீசை நரைத்த கிழட்டு ஆசிரியரைபை் பார்க்காமல் குரங்கு பெடல் போட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் போல இருந்தது புவனாவிற்கு.