Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

nazeer ahamed

Inspirational

5.0  

nazeer ahamed

Inspirational

அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட

அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட

4 mins
88


அப்பா . . . . உங்கள் திசையில் காத்திருக்கிறோம்.

மிஸ்டர் வேம்பு. எழுபது வயது தாத்தா. பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம். மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம். இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் வேம்பு. வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது. அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை. அந்த சமயத்தில் ஒருவர் வேம்புவின் பக்கத்தில் அமர்கிறார். 


‘மிஸ்டர் வேம்பு! நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன்', என்றார் கடவுள். 

ஆச்சர்யப்பட்டார் வேம்பு. யோசித்தார். பிறகு பேசினார்.

‘கடவுளே! என் அப்பாவை பார்க்க வேண்டும். அவரை என் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?' என்று கேட்டார் வேம்பு.


‘மிஸ்டர் வேம்பு! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.

‘கடவுளே! ஆம். அவருக்கு நிகர் யாருமில்லை', என்றார் வேம்பு.

‘அப்படியா!' என்றார் கடவுள்.

‘அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்', என்றார் வேம்பு.


‘அதெல்லாம் சரி! உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?' என்று கேட்டார் கடவுள்.

‘அப்பா! அம்மா! இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்', என்றார் வேம்பு.


‘சரி! உன் அப்பா என்னைவிட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்

‘என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும். அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார். நான் என் மகனை நல்ல தகப்பனாக உருவாக்குவேன். ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே!' என்று கேட்டார் வேம்பு.  


அமைதியாக கேட்டார் கடவுள். மீண்டும் வேம்பு பேசினார்.

‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரைவிட்டார் தசரதன், இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன், பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர். இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'. ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் வேம்பு.


ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள். ‘ம்ம்ம் மேலே சொல்', என்றார் கடவுள்.

‘ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது. அவரின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன்.


 வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது. அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள். அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். 


எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ‘நாளைக்கு மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு', என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார். வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் வேம்பு.

கடவுள் பேசினார்.


‘அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா', என்று கேட்டார் கடவுள்.

சிரித்தார் வேம்பு.

‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள். அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை. அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.  எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் வேம்பு.

கடவுள் சிரித்தார். 


‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் வேம்பு.

‘அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.

‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமா லவ் பண்ணினேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது வேம்புவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது. 


‘மிஸ்டர் வேம்பு! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார். இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.


வேம்பு ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.

‘தம்பி! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா. 

மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் வேம்பு. அப்பா பேசினார்.


‘ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா? அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான். அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.


‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் வேம்பு.

‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.   வேம்பு அழத்தொடங்கினார்.

‘என்ன மிஸ்டர் வேம்பு! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.


‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா. நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை. அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டேயிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு. அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.  நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார் என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி நியாபகம்'. 

வேம்பு மீண்டும் பேசினார்.


‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் வேம்பு.  மிஸ்டர் வேம்புவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் அப்பா என்ற மனச்சுமையை நீக்கும் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம். 



Rate this content
Log in

More tamil story from nazeer ahamed

Similar tamil story from Inspirational