சுவாமி கங்காதரானந்தா
சுவாமி கங்காதரானந்தா
ஶ்ரீ மகா பத்திரகாளியின் ஆட்சியில், திருக்கோணேஸ்வரரின் ஆசியில், ஆன்றோறும் சான்றோறும் வாழ்ந்த எங்கள் திருகோணமலை நகரம் ஆன்மீகவாதிகளுக்கும் என்றும் குறைவைத்துவிடவில்லை.
அந்த ஆன்மீக வெளிச்சம் தந்த பெரும் ஞானப் பேரோளி எம் மண்ணில் வாழ்ந்த காலத்தில் இந்த சிவனடியானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதத்தோடு நான் “சுவாமி ஜீ”என அழைத்துப் பழகிய சுவாமி கங்காதரானந்தா பற்றிய என் அனுபவப் பதிவை தொடர்கின்றேன்.
“சுவாமி ஜீ “ யின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் அவருடனான அவரவர்களுக்கு இருந்த அனுபவங்கள் பற்றியும் எனது தந்தையார் மரியாதைக்குரிய சந்திரசேகரம் பிள்ளை ஜெயச்சந்திரன், மற்றும்
தாமோதரம் பிள்ளை சியாமளாதேவி, அவர்களோடு மேலும் பலர் பல நூல்கள் வெளியிட்டு இருந்தாலும் என் இந்தப்பதிவானது அன்றைய ஆன்மீக வாதிக்கும் இன்றைய ஆன்மீக வாதிக்கும் இடையிலான சந்திப்புக்களின் அனுபவங்களே ஆகும்.
சுவாமி ஜீ , என என் தாய் தந்தையரால் அழைக்கப்பட்ட சுவாமி கங்காதரானந்தா எனது தந்தையாருடன் அவரின் திருமணத்திற்கு முன்னரே நன்கு பழகிய ஒருவரானதால் நாலுவயதுக் குழந்தையாக என் குடும்பதவர்களுடன் சென்று நான் முதல் கண்ட சாமியாராவார்.
சுவாமி சச்சிதானந்தாவையும் கிட்டத்தட்ட இதே காலத்திலேயே இந்த சிவனடியான் தரிசித்து இருந்தாலும் சுவாமி கங்காதரனந்தாவுடனான எனது தொடர்பு இந்த சிவனடியான் பிரித்தானியா வரும் காலம்வரை தொடர்ந்தது.
சுவாமி ஜீயை சிறு குழந்தையாக இருக்கும் போது எனது தாய் தந்தை சகோதரர்களுடன் சென்று அடிக்கடி சந்தித்தாலும், அவரது சிவயோக சமாஜத்தில் மிருதங்கம் கற்கும் மாணவனாக எனது நண்பன் சித்திரவேலாயுதம் கோபிதரனுடன், மதிப்பிற்குரிய ஆனந்தபிராசாத் ஆசிரியரிடம் செல்வதால் அவ்வப்போது சுவாமி ஜீயை காணும் பாக்கியம் அடியேனுக்கும் அடிக்கடி கிட்டியது.
அத்தோடு இன்று எனது அந்த நண்பர் கோபி அவர்கள் ஒரு மாவீரராக மரணித்து விட்டாலும் அவருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் “சுவாமி ஜீ”மீது இருந்த மரியாதை என்னை மெய்சிலிர்க்க வைத்திருக்கின்றது .
இதனைப் போலவே அவர்களின் குடும்பம் மட்டுமல்லாது திருகோணமலை நகரில் இருந்த பல குடும்பங்களும், எனது தமையானார் உட்பட, எனது பல நெருங்கிய உறவினர்களும், சுவாமி ஜீ யை குருவாக மட்டும் அல்லாது இறையாகவே ஏற்றி போற்றி வணங்கி வழிபடுவது அந்த ஆன்மீகவாதியின் அளப்பரியா ஆற்றலை இந்த சிவனடியானுக்கு உணர்த்துகின்றது.
காலத்தின் ஓட்டத்தில், போர் கொண்ட தேசத்தில், உள் நாட்டு இடப்பெயர்வுகளும் போரட்ட சக்திகளுடனான தொடர்புகளும் எனது திருகோணமலை மண்ணைவிட்டு தள்ளி இருக்கும் நிலையைத் எனக்குத் தந்ததால், நானும் என் குடும்பத்தவரும் சுவாமி ஜீயை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை தவறவிட்டிருந்தாலும்,
இந்திய இராணுவத்தின் தேடுதலினால் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு மீண்டும் இடம்பெயர்ந்து வந்த பின் சுவாமியை நான் தினமும் மாலை நேரங்களில் சந்திப்பது வழக்கம்.
அப்படியான எம் சந்திப்புக்களில் “சுவாமி ஜீ “ என்னுடன், எனக்கு ஈடுபாடுள்ள அரசியலையும்,
தற்காற்ப்பு சண்டைக் கலைகளையும் பற்றி பேசுவதே அதிகம்.
இப்படியான சந்திப்புகளின் முடிவில் விடை பெறும் போது, என் சிறுவயதுப் பழக்கத்தால் சுவாமி ஜீ யின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி விடைபெறுவது என் வழக்கமானாலும், என்னுடன் வரும் என் நண்பர்கள் அவரை கைகூப்பி வணங்கி விடைபெறுவதும் பின்னர் வெளியில் வந்து என்னை கிண்டல் அடிப்பதும் சகஜமான ஒன்று.
இதனை விட சுவாமி கங்காதரனந்தாவின் ஆன்மீகம் தாண்டிய அரசியல் பக்கம் அவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றில் அதிகம் பேசப்படாவிட்டாலும், தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு போராடிய பல இயக்கங்களின் தலைவர்களுடன் தன் தொடர்பை பேணியே வந்துள்ளார்.
இதற்கு உதாரணமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியாவில் இருந்து வந்த தமிழீழ விடுதலை இயக்கத்தின் முதல் படையணி திருகோணமலையில் நிற்பதா இல்லை மட்டக்களப்பிற்கு செல்வதா என்ற முடிவை சுவாமி கங்காதரானந்தவிடம் கேட்டு எடுக்கும் படி அதன் தலைமை அவர்களின் பொறுப்பாளர்களுக்கு பணித்திருந்தது, என்பது சுவாமி ஜீ யை அந்த இயக்கம் எந்த நிலையில் வைத்திருந்தது என்பதற்கு உதாரணமாகின்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் மட்டுமல்லாது மாகாணசபையில் பங்காற்றிய ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்ணணி, ஈழதேசிய ஜனநாயக முன்ணணி போன்ற அமைப்புக்களும் திருகோணமலையில் இருந்த இந்திய அமைதிப்படையின் உயர் அதிகாரிகளும் பல அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிரான பல வன்முறைகளை சுவாமி ஜீ தனது செல்வாக்கை கொண்டு தடுத்து நிறுத்தினார் என்பதோடு அந்த விஷமிகளால் இந்த சிவனடியானுக்கு இருந்த ஆபத்துக்களை தவிர்த்து தடுத்தார் என்பதையும் என் இந்தப் பதிவில் கூறி, அவருக்கு இந்த இயக்கங்களோடு மட்டும் அல்லாது விடுதலைபுலிகளின் முக்கிய தளபதிகளோடும் தொடர்புகள் இருந்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
என்னுடன் என்றும் ஆன்மீகம் பேசாத ஆன்மீகவாதி, தற்காப்பு சண்டைக் கலைகளையும், அரசியலையும், அதிகம் பேசி, தன் அனுபவங்களை பகிர்ந்ததோடு, பல இக்கட்டான நேரங்களில் என்னை கொழும்பு செல்ல அன்புக்கட்டளை இடுவார்.
அப்படிப்போகும் நேரம் எல்லாம் எனக்கு ரூபா ஐநூறும், ஆயிரமும் அள்ளித்தரும், என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அந்த நண்பர், தற்போது சுவாமி சங்கரானந்தாவாக ஆகி இருக்கும் என்னை பார்க்க மண்ணில் இல்லை என்பது மட்டுமே எனக்கு வருத்தமான ஒன்றாகும்.
எனது தந்தையாரின் “ஆன்மீக ரதம்” என்ற புத்தகத்தில் எனது தந்தையார்
“இவருக்கு எம்மைப்போல் காவி உடை மட்டும் தான் இல்லை”
எனச் சுவாமி கங்காதரானந்தா, சின்ன சுவாமி ஜெகதீஸ்வரானந்தாவிடம் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.
அந்த மதிப்பிற்குரிய “சுவாமி ஜீ “ யின் எண்ணத்தில் தோன்றிய கருத்தை
மரியாதைக்குரிய சந்திரசேகரம் பிள்ளை ஜெயச்சந்திரன் அவரது மகன், இந்த சிவனடியான் சுவாமி சங்கரானந்தாவாக காவிகட்டி நிறைவேற்றி வைத்தேன், என்ற பெருமிதத்தோடு நான் என் வாழ்க்கையில் முதல் சந்தித்த ஆன்மீகவாதியான சுவாமி கங்காதரானந்தாவிற்கு என் இந்தப் பதிவை அர்ப்பணமாக்குகின்றேன்.
சுவாமி சங்கரானந்தா🙏