DEENADAYALAN N

Inspirational

5.0  

DEENADAYALAN N

Inspirational

உள்ளுவதில் உயர்வுள்ளல்!

உள்ளுவதில் உயர்வுள்ளல்!

3 mins
348


கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – நான்கு

 

உள்ளுவதில் உயர்வுள்ளல்!

!

(கோவை என். தீனதயாளன்)


ஹை விவு, அவி, ரிஷி, மஹா, சபரி மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!





ஐந்தாம் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்புக்கு போனதுமே ரோஹனுக்கு சந்தோஷம் தாளவில்லை. தன் வீட்டின் அருகில் இருந்தவர்களுக்கும் தன் நண்பர்களுக்கும் சாக்லேட்டு வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தான். அந்த நேரம் பார்த்து ராமுவும் வந்து சேர்ந்தான். ‘இந்தாடா ராமு’ என்று அவனுக்கும் சாக்லேட் கொடுத்தான்.


ராமு சாக்லேட்டை வாங்கிக் கொண்டே ‘இல்லடா.. வந்து.. ‘ என்று சற்றே தயங்கினான்.


‘என்னடா..? என்றான் ரோஹன்.


‘ஒன்னுமில்லேடா.. வந்து.. ‘ என்று மீண்டும் இழுத்தான் ராமு.


‘என்னடா.. ஓ.. அதுவா.. சாய்ந்தரம் வீட்டுக்கு வாடா.. வந்து எங்க அம்மாகிட்டே நீயே கேட்டுக்க..’ என்று சொல்லி விட்டான் ரோஹன்.



அன்று மாலை ஆறு மணி சுமாருக்கு ராமு ரோஹனின் வீட்டிற்கு வந்தான். வாசலில் சிறிது தயங்கினான்.


‘வாடா ராமு.. என்ன விஷயம்..?’ என்று ரோஹனின் அம்மா கேட்டாள்.


‘ஒன்னுமில்லே ஆன்ட்டி.. வந்து…’


‘என்னடா.. சொல்லு..’


‘வந்து.. ஆன்ட்டி.. ரோஹன் அஞ்சிலிருந்து ஆறுக்குப் போயிட்டான். நான் நாலிலிருந்து ஐந்தாம் வகுப்பிற்கு வந்திருக்கேன்.’


‘ஓ.. வாழ்த்துக்கள்.. ‘ என்று வாழ்த்தினாள்.


‘இல்ல ஆன்ட்டி.. ரோஹனோட ஐந்தாம் வகுப்பு புத்தகங்களையெல்லாம் குடுத்தீஙன்னா அதை வெச்சி இந்த வருஷம் நான் படிச்சிக்குவேன்..’


ரோஹனின் அம்மா சிறிது நேரம் யோசித்தாள். அவளுடைய தயக்கம் ராமுவுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.


‘புத்தகமெல்லாம் ‘நைந்து’ போயிடுச்சிடா.. அங்கங்கே ரோஹன் கிறுக்கி வெச்சிருக்கான்.. ’ ரோஹனின் அம்மா இழுத்தாள்.


‘பரவாயில்லே ஆன்ட்டி.. நான் சமாளிச்சுக்குறேன்..’ - ராமு


‘கொஞ்சம் யோசிச்சு சொல்றேண்டா..’ என்று கூறி விட்டாள்.


ராமு ஏமாற்றத்துடன் திரும்பினான்.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹனுக்கு வருத்தமும் கோவமும் வந்தது.


‘ஏம்மா.. அவன் பழைய புத்தகத்தைதானேம்மா கேட்கிறான்.. குடுத்திடலாமில்லே..’ என்றான் ஆதங்கத்துடன்.


‘இல்லடா.. அப்பாகிட்டே கேட்டுட்டு..’


‘ஏம்மா.. இதை வேண்டாம்னு அப்பா சொல்லுவாரா.. ?’


ஆனால் அவளோ பதில் ஏதும் சொல்லாவில்லை.


அம்மா நடந்து கொள்வது ரோஹனுக்குப் பிடிக்கவில்லை. ராமு ரோஹனுக்கு நல்ல நண்பன். இருவரும் எப்போதும் இணக்கமாகவே போவார்கள், வருவார்கள், விளையாடுவார்கள். ராமு அவ்வப்போது கிழிந்த சட்டையைக் கூட தைத்து போட்டுக் கொண்டு வருவான். எல்லாமே அம்மாவுக்கு தெரியும். இருந்தும் பழைய புத்தகங்களை கொடுக்க அம்மா இப்படி கஞ்சத்தனம் காட்டுகிறாளே’ என ரோஹனுக்கு வருத்தமாக இருந்தது.


அதுவுமில்லாமே சித்தி பையன் கூட நாலிலிருந்து அஞ்சுக்குப் போயிருக்கான்.. ஒரு வேளை புத்தகங்களை அவனுக்கு குடுக்க அம்மா நினைக்கிறாளோ..!


வருத்தத்திலேயே ரோஹன் தூங்கிப் போனான்.


இரவில் அம்மா அப்பாவிடம் ஏதோ கேட்பதுவும், ‘வேண்டாம்.. வேண்டாம்.. பாத்துக்கலாம் விடு..’ என்று அப்பா ஏதோ சொல்வதும் அவனுக்கு கனவில் கேட்பது போல் இருந்தது.




சரி! ரோஹனின் அம்மா செய்தது ஞாயம்தானா.. இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?


‘நானு’ என்று கதைக் கேட்க வந்திருந்த குழந்தைகளுள் ஒருவளான மஹாலட்சுமி முன் வந்து சொல்ல ஆரம்பித்தாள்:


அடுத்த நாள் மாலை. ரோஹன் பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது அவன் அப்பா ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வெளியே போனார். தன்னை அழைக்காமல் அப்பா போனது ரோஹனுக்கு ஆச்சரியமாகவும் கோவமாகவும் இருந்தது. சிறிது நேரத்தில் திரும்பிய அப்பாவின் ஸ்கூட்டர் பின் சீட்டில் ராமு அமர்ந்திருந்தான்.


ரோஹனுக்கு மிகவும் சந்தோஷமாக ஆகி விட்டது. எப்படியோ தன் நண்பன் ராமுவுக்கே தன் புத்தகங்கள் போய்ச் சேருவது மகிழ்ச்சி அளித்தது. தன் பழைய புத்தகங்களையெல்லாம் ஒரு பையில் போட்டு தயாராக வைத்திருந்த ரோஹன் அந்தப் பையைக் கொண்டு வந்து தன் அப்பாவின் கைகளில் திணித்தான்.


ஆனால் அவன் அப்பா அந்தப் புத்தகப் பையை ஒரு ஓரமாக தள்ளி வைத்து விட்டு, பீரோவைத் திறந்து, ஒரு அழகிய பள்ளிப் பையை எடுத்தார். அதை திறந்து அதிலிருந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக் காட்டி ராமுவிடம் கொடுத்தார். அத்தனையுமே ஐந்தாம் வகுப்புக்கான புத்தகங்கள். அதுவும் புத்தம் புதிய புது மணம் மாறாத அச்சு மனம் கலையாத புத்தகங்கள். ராமுவின் முக மலர்ச்சிக்கு அளவே இல்லை.


‘தேங்க்யூ அன்கிள்’ என்று ஆனந்தம் அடைந்தான்.


அது மட்டுமல்ல. இரண்டு அழகான – புத்தம் புதிய - சரியாக ராமுவின் அளவிற்கு கச்சிதமாக பொருந்திய - பள்ளிச் சீருடைகள்!


இம்முறை ‘தேங்க்யூ அப்பா’ என்று ரோஹன் ஆனந்தம் அடைந்தான்.


தன் அம்மாவின் உயர்ந்த நோக்கத்தைத் தவறாக நினைத்த தன் தலையில் செல்லமாக பத்து முறை குட்டிக் கொண்ட ரோஹன், ‘தேங்க்யூ அம்மா’ என்று ஆனந்தமாய்க் கட்டிக் கொண்டான்.




‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று விவு கேட்க:

‘ஒருவரைத் தவறாக நினைக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். உயரிய நோக்கம் உடைய எந்த ஒருவரும் எப்போதும் தாழ்வான காரியங்களை செய்வதில்லை!’ என சபரி கூறி முடித்து வைத்தான்.



குட்டீஸ்! இந்தக் கதையை, ரோஹனின் அம்மாவின் செயல்களுக்கு வேறு விதமான காரணங்களை எடுத்துக் காட்டியும் முடிக்கலாம்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, முயன்று, வேறு முடிவுகளை எழுதி, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.


மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்



 

 

 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational