கண்ணுக்குள் மின்னும் நூறு நிலவுகள்
கண்ணுக்குள் மின்னும் நூறு நிலவுகள்
கோவை காந்திபுரம் புதிய மேம்பாலம் திறந்து விடப்பட்ட நேரம். நானும் மனைவியும் இரு சக்கர வாகனத்தில் மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். போகப் போக அது மிக நெடிய பாலம் என்பது உணர்ந்து, சரி திரும்பி விடலாம் என்று நினைத்த போது எதிரில் வந்த மற்றொரு சிறிய வாகனம் சற்றே எங்கள் வாகனத்தைத் தொட்டது. கீழே விழுந்து மனைவியின் குதிங்கால் கொஞ்சமாய்ப் பிளந்து ரத்தம் கொட்டுகிறது. நான் சிறிய காயங்களுடன் தப்புகிறேன்.
மருத்துவமனை! என் மனைவிக்கு உதவியாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கினேன்.
எனக்குப் பெரிதாக வேலை ஒன்றும் இருக்கவில்லை. எனவே, ஸ்டோரி மிரருக்கு கதை, கவிதைகளை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். இப்படியே ஒரு வாரம் சென்றது.
திடீரென்று ஸ்டோரி மிரர் சி இ ஓ ‘பிபு தத்தா ரௌட்’ சார் அழைத்தார். எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். ஏனெனில் ஏதாவது முக்கியமாக இருந்தால் விஜயராகவன் சார் தான் அழைத்துப் பேசுவார். இன்று தத்தா சாரே அழைக்கிறாரே!
‘சொல்லுங்க சார்..’ என்றேன் ஆவலாக
‘ஒரு குட் ந்யூஸ்’ என்றார் எளிய ஆங்கிலத்தில்.
அவர் சொன்ன சேதி கேட்டு என் மனமெங்கும் பரவச அலை பரவியது!
‘ரியலி சார்..’
‘ஆமா..’
‘பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் சாரே பேசுனாரா சார்..!!’
‘ஆமா.. உங்களோட ‘யுனிவர்சல் ரேம்பேஜ்’ ங்கிற இங்கிலிஷ் நாவலை நம்ம ‘ஸ்டோரிமிரர்’லே படிச்சாராம். ‘ஸ்பேஸ் அட்வன்சரில்’ இந்தக் கதைய எடுத்தா ரொம்ப் புதுமையா இருக்குமாம்.. இன்னைக்கு மூனு மணிக்கு உங்ககிட்டே பேசுவாரு. தயாரா இருங்க.. உங்க ‘ஸ்க்ரிப்ட்’டை பக்கத்துலேயே தயாரா வெச்சிக்கோங்க. அதுலே அவுரு ஏதாவது விபரங்களை கேட்கலாம்’
சரியாக மூன்று மணிக்கு போன் வந்தது. சங்கர் சார்தான். என்னையே என்னால் நம்ப முடியவில்லை. கதையை மிகவும் பாராட்டிப் பேசினார். பல விவரங்களைக் கேட்டார். பல நுணுக்கமான இடங்களை விவரிக்க சொன்னார். இடை இடையே ‘சூப்பர்.. சூப்பர்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
‘ஒவ்வொரு கதா பாத்திரங்களுக்கும் நீங்கள் வைத்த பெயர்கள் மிகவும் பொருத்தமாக இருந்தது. உண்மையில் ‘பெயர்களில்’ இருந்தே அவர்களின் ‘கேரக்டர்’ புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது.’
‘ரொம்ப நன்றி சார்.. சார் ஒரு சின்ன யோசனை..’
‘சொல்லுங்க தீன் ‘ என்று நெருக்கமாக பேசினார்.
‘சார்.. அந்த சிறிய பையன் வேடத்தில் ஒரு நல்ல குழந்தை நட்சத்திரமா போடணும்..’
‘நீங்க கவலையே படாதீங்க.. நானும் நீங்களும் சேர்ந்த ஒரு குழு, அடுத்த மார்ச்லே ஒரு ஐந்தாறு நாடுகளுக்குப் போகிறோம். இதுவரை காட்டாத பிரம்மாண்ட லொகேஷன்ஸ் கண்டு பிடிக்கிறோம். அப்பிடியே அந்த பையன் கேரக்டருக்கும் ஒரு ஆளை பிடிக்கிறோம்.
‘ஓகே சார்.. சார் அப்புறம்.. அந்த வேற வேற கிரகங்களுக்குப் போயி ‘அட்வென்ச்சரஸ் செயல்களில் ஈடு படுற பாத்திரத்துலே நம்ம சிவாவைப் போட்டா ‘யூத் ஃபுல்’லா இருக்கும் சார்..’ என்று தயங்கித் தயங்கி கூறினேன்.
‘யாரு.. நம்ம சிவகார்த்திகேயன் தானே.. தீன்.. முதல்லே நானும் அதைத்தான் நினைச்சேன்.. அவரு ரொம்ப ‘ஏப்ட்’டா இருப்பாரு. ஆனால் அதுலே ஒரு சின்ன ‘ட்விஸ்ட்’! உங்களுக்கு நம்ம ‘அர்ஜித்’ தெரியுமில்லே..’
‘என்ன சார் இப்பிடி கேட்டுட்டிங்க.. உங்க மக
ன் அர்ஜித் தானே.. அவுரு கூட சீக்கிரம் நடிக்க வர்றதாக…’
‘கரெக்ட்.. அவருக்கு ஒரு நல்ல ஓபெனிங்கா இந்த கதை இருக்கும்னு நான் நம்பறேன். இன்ஃபாக்ட்.. அவருக்காகத்தான் இந்த ப்ராஜக்ட்டையே செய்யணுமின்னு எனக்கு தோணுச்சு.’
‘சூப்பர் சார்…வொண்டர்ஃபுல்’
‘சரி தீன்.. ’ஸ்டோரிமிரர்’லே சில சூப்பர் ஆங்கிலப் புத்தகங்கள் இருக்கு. அதையெல்லாம் ஆர்டர் பண்ணி நாளை மறுநாள் உங்களுக்கு அனுப்ப தத்தா சார்கிட்டே பேசி ஏற்பாடு பண்ணிட்டேன். அந்த புத்தகங்களில் ‘how to write screen play for space adventure movies’, ‘character creation for adventurous movies’ – இந்த மாதிரி நம்ம ப்ராஜக்ட்டுக்கு களப் பணி செய்யறதுக்கு நெறைய கைட்லைன்ஸ் இருக்கு. ஒரு பத்து நாள் படிங்க. அப்புறம் ஒரு ‘ஒன் லைன்’ செஞ்சி எடுத்துகிட்டு நம்ம ஆபீசுக்கு மார்ச் ஒன்னாம் தேதி வந்துருங்க. அன்றைக்கு நம்ம ஜெயமோகன் சார், வரலொட்டி சார், பட்டுக்கோட்டை சார், இந்திரா சௌந்தர்ராஜன் சார், ஹாலிவுட்லே இருந்து ‘க்ரிகரி’ ‘ஓமர்’ அப்பிடினு ரெண்டு அட்வஞ்சர் ஃபிலிம் ஜாம்பவான்கள், இன்னும் சில இந்திய ஜாம்பவான்கள்.. அதோட ‘பாகுபலி’ படத்துலே ‘கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்’’ லே புகுந்து விளையாடின சாஃப்ட்வேர் ஸ்பெசலிஸ்ட்ஸ்’ அப்பிடீன்னு நிறைய பேர் சந்திக்கிறோம். ‘ஓகே’ வா?’
‘ஓகே சார்..’
‘ஆல் தி பெஸ்ட் தீன்’ என்று சொல்லி சங்கர் சார் கைப்பேசியிலிருந்து வெளியேறினார்.
என்னால் நம்பவே முடியவில்லை. தத்தா சாரை அழைத்து ‘ரொம்ப நன்றி.. சார்.. நம்பவே முடியலே சார்..’ என்றேன்.
‘இதுக்கே இப்பிடி சொல்றீங்களே.. உங்களோட ‘பாதாளாத்தின் எல்லை’ கதையை படிச்சிட்டு நம்ம பாகுபலி ‘ராஜமௌலி’ சார். உங்களோட் நம்பரை வாங்கி இருக்கிறார். உங்களோட ‘அம்மாவின் காதல்’ கதைப் படிச்சிட்டு சத்யஜித்ரே சாரோட வேலை பார்த்து, இப்பொ பிரபலமா இருக்கிற ஒரு பெங்காலி டைரக்டர் உங்களோட மத்த ‘செண்டிமென்ட்’ கதைகளையெல்லாம் அனுப்ப சொல்லியிருக்கிறார். உங்களோட ‘புறக்கணிப்பு என்பது கடவுளின் கருணை’, ‘நேர்மையும் ஒழுக்கமும்’ அப்பிடீங்கிற கதைகளையும், ‘மோனோலிசா அவனைப் போல்…’, ‘மரணம் வந்தென்னைத் தழுவிடாதோ..’ அப்பிடீங்கிற கவிதைகளையும் படிச்சிட்டு அப்பிடியே ஆடி போயிட்டாராம். ‘
‘அப்படியா சார்!’
‘அதோட உங்களோட ‘பக்கம் ஒன்று – கதைகள் 108’ அப்பிடிங்கிற உங்க 108 கதைகளையும் ‘ஃப்ரீ’யா ஒரு புத்தகமா வெளியிட ‘ஸ்டோரிமிரர்’ல யோசனை செஞ்சிகிட்டிருக்கோம்’
‘சார்.. என்னாலே நம்பவே முடியலே சார்.. நிஜமா இது நெனவா கனவா..ஓ.. மை காட்.. இது கனவுதான்.. இது கனவுதான்..’
‘ஆமா.. கனவுதான்.. சும்மா சங்கர் சார், தத்தா சார், ராஜமௌலி சார், ஸ்டிவன் ஸ்பீல் பெர்க், சத்யஜித் ரே சார், ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் அப்பிடீன்னு கத்தி கத்தி என் தூக்கத்தை தான் கெடுத்துகிட்டு இருந்தீங்க.. இன்னைக்கு ‘டிஸ்சார்ஜ்’! ஆஸ்பத்திரி ‘பில்’லுக்கு பணத்தைக் கட்டிட்டு கெளம்புங்க’ என்று என் மனைவி என்னை உலுக்கினாள்.
என்றாலும் ‘கனவு காண்.. ஆனால் அது உன்னை உறங்கவிடாமல் செய்யட்டும்..' என்கிற அப்துல்கலாம் சாரின் அறிவுரை என்னை மேலும் உற்சாகப் படுத்தியது.
நான் சங்கர் சாரின் தொலைப் பேசி எண்ணைக் கண்டு பிடித்து அவருக்கு போன் செய்தேன்.
‘ஹலோ.. சங்கர் ஹியர்’ என்று எதிர் முனையிலிருந்து குரல் வந்தது!