Read a tale of endurance, will & a daring fight against Covid. Click here for "The Stalwarts" by Soni Shalini.
Read a tale of endurance, will & a daring fight against Covid. Click here for "The Stalwarts" by Soni Shalini.

DEENADAYALAN N

Children Stories Comedy Inspirational

4  

DEENADAYALAN N

Children Stories Comedy Inspirational

மீண்டும் தங்கவெள்ளிப்புத்தூர்

மீண்டும் தங்கவெள்ளிப்புத்தூர்

6 mins
379


A Serious Comedy


தங்கவெள்ளிப்புத்தூர் ராஜ்ஜியம் ஒரு காலத்தில், பெயருக்கு ஏற்றவாறு, உருவிலும் சுத்தத்திலும் மினுமினுத்துக் கொண்டுதான் இருந்ததுவாம். குயில்களும் மயில்களும் கூட உலா வரும் வகையில் ஊர்த்தெருக்களின் இருமருங்கும் சோலைகளைப் போல் மரங்களும், செடி கொடிகளும், மலர்களும் நிறைந்து காணப்பெற்றனவாம். அங்கிங்கெனாதபடி எங்கெங்கோயிருந்து திரண்டு வரும் வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாத்ரீகர்களுக்கும், தேசாந்திரிகளுக்கும், புலவர் பெருமக்களுக்கும், அறிஞர் பெருந்தகைகளுக்கும், ஆன்மீகப் பெரியோர்களுக்கும், அரசரால் அமைக்கப் பெற்றிருந்த இலவச உணவகங்கள், நட்ட நடுத் தெருவிலேயே இலை விரித்து உணவே படைக்கலாம் என்கிற அளவிற்கு தெருக்கள் அவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்குமாம்.


அப்பேர்ப்பட்ட அந்த தங்கவெள்ளிப்புத்தூரின் சுத்தமும் சுகாதாரமும், நம் கதையின் காலத்தில், தங்கவெள்ளிப்புத்தூரின் அரசர் அருஞ்சேரலருக்கு பெருஞ்சவாலாய் அமைந்து விட்டது. ஊரின் சுத்தம் படு பாதாளத்திற்கு போய் விட்டது. ஊர் மக்கள் தெருவெங்கும் துப்பி வைப்பதும், தெருவோரங்களில் சிறுநீர் கழிப்பதும், கண்ட கண்ட குப்பைக் கழிவுகளை வகை தொகை தெரியாமல், கண்ட கண்ட இடங்களில் கொட்டிவிட்டுப் போவதும், தெரு நாய்களின் உபரிக் கழிவுகளும், வீட்டு நாய்களை வெளியில் அழைத்து வரும் போது அவற்றின் வெளியேற்றங்களுக்கான ஏற்பாடுகளை கண்ட கண்ட இடங்களில் செய்து விட்டு, நாய் பிடித்து வருவோர் அதைப் பற்றி கவலையே படாமல் போய் விடுவதும், ‘குடி’மக்கள் எனப்படுவோர் குடித்து கும்மாளமிட்டு விட்டு ‘கள் சட்டிகளை’ கண்ட கண்ட இடங்களில் உடைத்துப் போட்டு விட்டு, கண்டும் காணாமலும் மயங்கிக் கிடப்பதும் என சர்வ சாதாரணமாய் ஊரின் சுத்தமும் சுகாதாரமும் கொள்ளைப் போய்க் கொண்டிருந்தன.


இதனால், தொற்று நோய்களும், தோல் நோய்களும், சிறுநீரக நோய்களும், கணையம், கல்லீரல், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களும் தலை தூக்கத் தயாராக இருப்பதாக மருத்துவர்களும், மாமேதைகளும், சகல ரோக நிவாரணர்களும் இறுதிகட்ட எச்சரிக்கை கொடுத்து விட்டனர். போதாக்குறைக்கு அரசரின் நான்கு அதிகார பூர்வ மனைவிமார்களில் இருவர் என்னவென்றே தெரியாத நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்தனர்.


சூழலின் தீவிரத்தை உணர்ந்த மன்னர், நாட்டின் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் நிலை நிறுத்தி பேணிக் காக்க உறுதி கொண்டார். உடனே மருத்துவர்கள், மாமேதைகள், பாட்டி வைத்திய நிபுணர்கள், கை வைத்திய கலைஞர்கள், பொது மக்கள் பிரதிநிதிகள் என – ஒரு பெரிய குழுவை அமைத்து கடுமையான சட்ட திட்டங்களை உருவாக்கச் சொல்லி உத்தரவிட்டார்.


பத்தே நாட்களில் கருத்தறிதல் (கருத்து அறிதல்!), ஆய்வு செய்தல், சட்டம் இயற்றல், என சகல நடைமுறகளும் கடைப் பிடிக்கப்பட்டு சட்டத்தை நடைமுறைப் படுத்துதல் என்னும் நிலையும் தொடங்கப் பட்டது.


ஆனால், எந்த ஒரு சட்டத்தையும் நடைமுறைப் படுத்தும் பொழுது ஏற்படும் சிக்கல்களும், எதிர்ப்புகளும், சுவாரஸ்யங்களும், நகைச்சுவைகளும் தங்கவெள்ளிப்புத்தூர் ராஜ்ஜியத்திலும் நடந்தேறத்தான் செய்தன. அது பற்றிய புகார்கள் புற்றீசல்கள் போல் வந்த வண்ணம் இருக்க – அது மன்னரின் காதுகளிலும் நுழைந்து குடைந்தன. இந்த சமயத்தில், அரசரால் கவுரவிக்கப்பட்டு ‘விடைகளின் விற்பன்னன்’ என்று பட்டமும் வழங்கப்பட்ட விகடகவி வித்யாபதி அரசரின் நினைவுக்கு வந்தார். விகடகவி வித்யாபதியை பயன்படுத்திக் கொள்ள இதைக் காட்டிலும் இன்னொரு தவிர்க்க முடியாத தருணம் வாய்க்கவா போகிறது என்ற எண்ணம் அவருக்குள் உதயமானது. உடனே, இந்த ‘சட்ட நிறைவேற்றம்’ சம்மந்தப்பட்ட சகலத்தையும் வழி நடத்திச் செல்லும் சர்வ அதிகாரங்களையும் வித்யாபதிக்கு வழங்கி, வழி நடத்துனனாக நியமித்து விட்டு, தன்னை ‘ஒதுங்கி நின்று கவனிப்பாளனாக’ மாற்றிக் கொண்டார் மன்னர்.மன்னரின் ஆணையை சிரமேற்கொண்டு, விடைகளின் விற்பன்னன் விகடகவி வித்யாபதி’ உடனடியாக தன் பணிகளை துவக்கினார். நிறைவேற்றப் பட்டுக் கொண்டிருக்கும் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்த போது, அவருக்கு தெரிய வந்த விபரங்களை தொகுத்துப் பார்த்தார். அவையாவன:


சட்டம் - 1 : தெருவில் துப்பினால் பத்து வராகன்கள் அபராதம்


சட்டம் – 2 : தெருவோரங்களில் சிறுநீர் கழித்தால் இருபது வராகன்கள்

      அபராதம் 


சட்டம் – 3 : வீட்டு வாசலில் குப்பை கொட்டினால் முப்பது வராகன்கள்

      அபராதம்


சட்டம் – 4 : தெருவில் குப்பை கொட்டினால் நாற்பது வராகன்கள் அபராதம்.


சட்டம் – 5 : குப்பைகளின் வகை தொகை (தரம்) பிரிக்காமல் குப்பை

      கொட்டினால் ஐம்பது வராகன்கள் அபராதம்


சட்டம் – 6 : கழிவுகளை குப்பைத் தொட்டியில்தான் கொட்ட வேண்டும்.

      தவறினால் அபராதம் ஐம்பது வராகன்கள்.


சட்ட – 7 : நாய்களை வலம் அழைத்து வருவோர் அவற்றின் கழிவுகளை

     அவர்களே ஒரு பையில் அள்ளிக் கொண்டு போய் வீட்டுக்

     கழிவறையில் அவற்றை சேர்க்க வேண்டும். தவறினால் அபராதம்

     நூறு வராகன்கள்.

. . . . . 

. . . . .இப்படி சுமார் ஐம்பது சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைக்கு விடப்பட்டிருந்தன.


விற்பன்னன் வித்யாபதி ‘சட்ட நிறைவேற்ற பொறுப்பு அதிகாரி’களை’ வரவழைத்து உரையாடினார். அவர்கள், ‘ஐயா.. பல் வேறு விதமான மக்கள் பல் வேறு விதமான குறுக்குக் கேள்விகளைக் கேட்டு எங்களை பணி செய்ய விடாமல் செய்கின்றனர். சிலர் ஏமாற்றி எங்கள் கண்களில் மண் தூவி சென்று விடுகின்றனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு ஏதேனும் ஒரு உபாயம் கையாள வேண்டும்’ என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டனர். 


நன்கு ஆலோசித்த வித்யாபதி, அவர்களிடம், ‘இனிமேல் இந்த சட்ட நிறைவேற்றலில், உங்களுக்கு வரும் பிரச்சினைகளையும், பிரச்சினையோடு சம்மந்தப்பட்டவர்களையும் ‘வருகையாளர் மண்டப சபை’க்கு அனுப்பி வையுங்கள். நான் கவனித்துக் கொள்கிறேன். இது சம்மந்தமாக உங்களுக்கு ஏற்படும் கூடுதல் வேலை பளுவை சமாளிக்க, உங்களுக்கு உதவியாக, விவரம் தெரிந்த இருபது பேரை நியமிக்க உடனடியாக உத்தரவிடுகிறேன். நீங்கள், அவர்கள் மூலம் பிரச்சினைகளை என்னிடம் அனுப்பி வைத்து விட்டு உங்கள் வேலைகளைத் தொடரலாம்’ என்ற அறிவிப்பை அரசரின் ஒப்புதலுடன், ஒரு அரசாணையாக வெளியிட்டார் வித்யாபதி.


 

முதல் நாளே வருகையாளர் மண்டபம், கூட்ட நெரிசலால் அல்லோல கல்லோலப் பட்டது. என்றாலும் வித்யாபதி ஒவ்வொருவராக சந்தித்துக் கொண்டிருந்தார்.


முதலாமவன் - குடிமகன்-1 - வந்தார், ‘ஐயா.. நான் சொல்வதைக் கேட்டு தாங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது..’ என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.


‘அப்படியா.. என்ன விஷயம்? சொல்..!’


‘ஐயா.. நான் இது வரை நாற்பது வராகன்களுக்கு அரசை ஏமாற்றி விட்டேன்..’


‘அப்படியா.. எப்படி?’


‘இது வரை நாலு முறை துப்பி விட்டேன்.. ஆனால் நான் துப்புவதை யாரும் பார்க்கவில்லை. யாரும் பார்த்திருந்தால் நான் நாற்பது வராகன்கள் அபராதம் கட்டியிருந்திருக்க வேண்டும் அல்லவா’ என்றார் முதலாமவர்.


‘உண்மைதான்.. நீ அப்படி உட்கார். இதற்கொரு வழி செய்கிறேன். என்று அமர வைத்தார் வித்யாபதி.அடுத்து குடிமகன்-2 வந்தார். அவனை அழைத்து வந்த உதவியாளன், அழாத குறையாக, ‘ஐயா இந்த ஆள் மிகவும் குதர்க்க வாதியாக இருக்கிறார் ஐயா’ என்று சோகமாக சொன்னான்.


‘என்ன சொல்கிறார்?’ வித்யாபதி கேட்டார்.


வந்தவர், ‘ஐயா.. ஒவ்வொரு முறையும் வராகன்களை சில்லைரையாக வைத்துக் கொள்ள கடினமாக இருக்கிறது. எனவே “நான் முன்கூட்டி ஆயிரம் வராகன்கள் அரசு கஜானாவில் செலுத்தி விடுகிறேன். என் பெயர், அடையாளம் பதிவு செய்த ஒரு முன்-செலுத்து-ஓலையை எனக்கு கொடுத்து விடுங்கள். நான் அவ்வப்போது அதில் பற்று வைத்து குறைத்துக் கொள்கிறேன்” என்றேன். அதற்கு இந்த அதிகாரி மிகவும் கோப்படுகிறார் ஐயா..’ என்றார்.


‘அப்படியானால், உமது குற்றத்தைக் குறைத்துக் கொள்ள வழி தேட மாட்டீர்? அதற்கு பதில் எவ்வளவு அபராதம் வேண்டுமானாலும் கட்டுவீரோ?’ என்று வித்யாபதி கேட்டார்.


‘அப்படி இல்லை ஐயா.. சில்லரைப் பிரச்சினையும் இருப்பதனால்..’ என்று குடிமகன்2 இழுத்தார்.


‘சரி சரி. அப்படி உட்காரும்.. உமக்கு ஒரு வழி செய்கிறேன்’ என்று கூறி அடுத்த ஆளை அழைத்து வரச்சொன்னார் வித்யாபதி.அடுத்து குடிமகன்-3 வந்தார். ‘ஐயா, இவர் சிறுநீர் கழிப்பதற்காக அருகிலிருந்த ஒரு குட்டிச்சுவரின் பக்கம் ஒதுங்கினார். ‘வரு முன் காப்போம்’ என்னும் நமது அரசின் கொள்கையின் படி இவரைத் தடுத்து நிறுத்தி அபராதம் கட்ட சொன்னோம். ஆனால் இவர் கட்ட மறுக்கிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம் நம்பும்படி இல்லாத்தால் தங்களிடம் அழைத்து வந்தோம்’ என்று உதவியாளர் விளக்கமாக கூறிக் கொண்டிருக்கும் போதே, குடிமகன்-3 பாய்ந்து இடைமறித்தார்.


‘ஐயா.. இவர் சொல்வது தவறு.. சத்தியமாக நான் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிச்சுவர் பக்கம் ஒதுங்கவில்லை ஐயா. அந்த நேரத்தில் நம் இளவரசின் தேர் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. அது சற்று குறுகலான பாட்டையாக இருந்ததால், தற்காப்புக்காக குட்டிச்சுவரின் பக்கம் ஒதுங்கினேன். உடனே ‘சிறுநீர் கழிக்கத்தான் ஒதுங்கினாய்’ என்று தவறாக என் மேல் குற்றம் சுமத்தி அபராதம் போட்டு விட்டார்கள்’ என்று அழாத குறையாக புலம்பினார்.


‘சரி.. இவரை அனுப்பி விடுங்கள்’ என்று குடிமகன்-3ஐ விடுவித்தார்.அடுத்து வந்த குடிமகன் தமாஷ் பேர் வழியாக இருந்தான். உதவியாளர், ‘ஐயா, நகைச்சுவை என்ற பெயரில், ஏதாவது உளறிக் கொட்டி மொக்கை போடுவதே இவன் வேலை. ‘டேய் தெரியுமில்லே.. இனிமேல் தெருவோரங்களில் சிறு நீர் கழிச்சா சிப்பாய்கள் புடிச்சிட்டு போயிருவாங்க’ன்னு ஒரு நண்பன் சொல்லி இருக்கான். இவன் உடனே, ‘புடிச்சிட்டு போகட்டுமே.. சும்மா போறதை யாரோ புடிச்சிகிட்டுப் போனா எனக்கென்ன’ என்று வாய்க் கொழுப்புடன் பேசுகிறான் ஐயா.


‘இந்த மொக்கை நகைச்சுவையை சுமார் மூவாயிரம் வருஷமா சொல்லிகிட்டு வருகிறாங்க. இந்த மொக்கை நகைச்சுவையை சொன்னதனாலேயே உனக்கு ஆயிரம் வராகன் அபராதம்!’ என்று வித்யாபதி சொல்ல, அவன் பதரி, கெஞ்சிக் கூத்தாடி, ‘இனிமேல் நகைச்சுவை என்று வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று உறுதிமொழி அளித்து, மன்னிப்பு பெற்றுக் கொண்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டான்.அடுத்து வந்த குடிமகனைக் காட்டி, ‘ஐயா.. இந்த ஆள் இருபது வராகனை எங்கள் கையில் அவசரமா திணிச்சிட்டு குட்டிச்சுவர் பக்கம் ஒதுங்கிட்டாரய்யா..’ என்று உதவியாளர்கள் சொல்ல,


‘எதுக்காக அவங்க கையிலே இருபது வராகனை திணிச்சிட்டு அவசர அவசரமா குட்டிச்சுவர் பக்கம் ஒதுங்கினே நீ?’ என்று வித்யாபதி கேட்டார்.


அதற்கு குடிமகன், ‘ ஐயா.. எனக்கு அவசரமா சிறு நீர் வந்திருச்சி.. சிறுநீர் கழிச்சிகிட்டு இருக்கும்போது, இடையிலே வந்து தொந்தரவு பண்ணாமெ இருக்க முன்பணமா அபராதத்தைக் கட்டிட்டேன்யா..’


வித்யாபதிக்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை.


‘சரி நீ அப்படி உட்கார்’ என்று சொல்லி விட்டு அடுத்த ஆளை வரச் சொன்னார்.அடுத்து வந்தது ஒரு பெண். ‘நீ என்னம்மா செய்தாய்..’ என்று வித்யாபதி கேட்க,


‘ஐயா.. வீட்டு வாசல்லே குப்பையக் கொட்டுனா அபராதம்னு தானேய்யா சட்டம் போட்டிருக்கீங்க’


‘ஆமா..’


‘நான் குப்பையை வீட்டு வாசல்ல கொட்ட வில்லை ஐயா.. எதிர்லே இருந்த கடை வாசல்லதான்யா கொட்டுனேன்.. அதுக்கு எனக்கு அபராதம் போடுறாங்கய்யா..’


வித்யாபதி கோபமாக, ‘இந்த அம்மாவுக்கு இரண்டு மடங்கு அபராதம் போடுங்கய்யா..’ என்று சொல்லி அனுப்பி வைத்தார்.


இது போன்று வந்த பிரச்சினைகளையெல்லாம் ஒன்று திரட்டி, பிரச்சினைகள் தீரும் வண்ணம், வித்யாபதி பல தீர்வுகளை அரசரின் ஒப்புதலோடு நிறைவேற்றினார். அவற்றுள் சில:


அவசரத்திற்கு இயற்கை உபாதையை கழிப்பதற்கு என்று தெருவிற்கு ஒரு பொதுக் கழிவறையை அமைத்து அதை இரவும் பகலும் தண்ணீர் வசதியுடன் பராமரிக்கச் செய்தார்.


சட்டத்தை மீறுபவர்களை தீவீரமாக கண்காணிக்க என்று மேலும் நூறு ஊழியர்களை தற்காலிமாக - ஆறு மாதங்களுக்கு - பணியில் அமர்த்தினார்.


சில்லரை வராகன்களும், சல்லிக் காசுகளும் எளிதாக கிடைக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்தார்.


குறுகிய தெருக்களில் தேரில், குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் வருவோர், மிகக் குறைந்த வேகத்தில் வருவதை உறுதி செய்தார்.


இது போல உபாயங்களைக் கையாண்டு முப்பது விதமான தீர்வுகளை அறிவித்து நிறைவேற்றினார்.இதன் பிறகு, உண்மையிலேயே நட்ட நடுத் தெருவில் இலை விரித்து உணவே படைக்கலாம் என்கிற அளவிற்கு தெருக்கள் அவ்வளவு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மாறியது. பொதுமக்களின் தவறுகள் பெரும்பாலும் குறைந்து - நின்று போய் தெருவை வீடாய் நினைக்கும் அளவிற்கு மனமாற்றம் அடைந்தனர். துப்புதல், சுவர் ஒதுங்குதல், கண்ட இடக் கழிவுகள் போன்றவை நின்று போய் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கும், பொறுப்பும், நேர்மையும், அக்கறையும் மக்களிடையே தெளிவாகத் தெரிந்தது. முறையான நாய் பராமரிப்பும் காணப்பட்டது. ஊரின் சுத்தமும் சுகாதாரமும் பெருகி மக்கள் ஆரோக்கியம் மேம்பட்டு, சுகமாய் வாழ ஆரம்பித்தனர். தொற்று நோய்களும், தோல் நோய்களும், சிறுநீரக நோய்களும், தொற்று பரப்பும் நோய்க்கிருமிகளும் பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிந்து காணாமல் போயின.


இதனால் தங்கவெள்ளிப்புத்தூர் ராஜ்ஜியம் மீண்டும் பெயருக்கு ஏற்றவாறு, உருவிலும் சுத்தத்திலும் மினுமினுத்து ஜ்வலிக்க ஆரம்பித்தது!
கோவை என். தீனதயாளன்


தொற்று நோய்களும், தோல் நோய்களும், சிறுநீரக நோய்களும், கணையம், கல்லீரல், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்களும் தலை தூக்கத் தயாராக இருப்பதாக மருத்துவர்களும், மாமேதைகளும், சகல ரோக நிவாரணர்களும் இறுதிகட்ட எச்சரிக்கை கொடுத்து விட்டனர். போதாக்குறைக்கு அரசரின் நான்கு அதிகார பூர்வ மனைவி மார்களில் இருவர் என்னவென்றே தெரியாத நோயால் பீடிக்கப்பட்டு அவதியுற்று வந்தனர்.

Rate this content
Log in