ஓர் அதிர்ஷ்டம் அன்பளிப்பாகிறது!
ஓர் அதிர்ஷ்டம் அன்பளிப்பாகிறது!
2 of 52
எதிர்பாராத அதிர்ஷ்டம் வரும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை
ஓர் அதிர்ஷ்டம் அன்பளிப்பாகிறது!
(கோவை என். தீனதயாளன்)
செல்வியால் நம்பவே முடியவில்லை. அவளுக்கு லாட்டரிச் சீட்டில் பத்துலட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதாக கடைக்காரர் சொன்ன போது மகிழ்ச்சியை விட ஆச்சரியமே மேலோங்கி நின்றது. 'கடவுளே நன்றி' என்று மனதாறச் சொல்லிக் கொண்டாள்.
ஆனால், அதைத் தொடர்ந்து, அவளிடம் அந்தப் பணம் வந்து சேர்ந்ததும், அவள் அதை என்ன செய்தாள் என்பதும், ஏன் அப்படி செய்தாள் என்பதும் உலகப் பெரும் புதிராக இருந்தது.
செல்விக்கு அப்பா இல்லை. அம்மா ஊமை. தன் தாயோடு, ஒரு கேரள கிராமத்தில் வாழ்கிறாள். அம்மா பத்துப் பாத்திரம் தேய்த்து வாழ்க்கையை ஓட்ட முயன்று கொண்டிருந்தாள். செல்வி எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டே அம்மாவின் வேலைகளுக்கு உதவி செய்வாள். நல்ல துணி மணி கிடையாது. நல்ல உணவு இல்லை. நல்ல தங்குமிடம் இல்லை. என்றாலும் படிப்பின் மீது உயிராய் இருப்பவள். எத்தனை கஷ்டம் இருந்தாலும் தவறாமல் ஒழுங்காக பள்ளிக்குப் போய் விடுவாள்.
'இந்த அநியாயம் எங்காவது நடக்குமா? நம்ம செல்வி லாட்டரியில் விழுந்த பத்து லட்சரூபாயை வாங்கி அப்படியே ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு குடுத்துட்டாளாமே' அங்கலாய்ப்பாய்ப் பதறினாள் அடுத்த வீட்டு ஓமனா.
'ஏண்டி? உனக்கென்ன பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிருச்சா? வந்த பணத்த பெரிய்ய இவ மாதிரி அப்பிடியே தானம் பண்ணீட்டு மறுபடியும் சோத்துக்கும் துணிமணிக்கும் லாட்டரி அடிக்கிறியே.. லூசாடி நீ..' – பக்கத்து குடிசை சிவம்மா உரிமையுடன் திட்டினாள்.
சிறியதொரு புன்னைகையை உதிர்த்து விட்டு அமைதியானாள் செல்வி.
'ஆமா.. பெரிய்ய 'கர்ணவள்ளல் பரம்பரை'னு நெனப்பு.. 'உங்கதுங்க' ஒரு மண்ணும் கெடையாது.. கிழிசல் இல்லாம போட ஒரு துணி கெடையாது.. காலுலே போட்டுக்க ஒரு ரப்பர் செருப்பு கூட கெடையாது.. தானம் பண்றாளாமா தானம்..? இது தான் 'வறுமையில் செம்மை'ங்கறது..' என்ற கோமளா பாட்டிக்கும் எந்த பதிலும் சொல்லாமல் நகர்ந்து விட்டாள் செல்வி.
சோற்றுக்கே திண்டாடும் – தகப்பனற்ற - ஒரு ஏழைப் பெண், இப்படி ஒரு முட்டாள் தனமான காரியத்தை செய்வாளா? ஏதோ ஒரு பத்து சதவிகிதம் பணத்தை இப்படி தானதருமம் செய்திருந்தால் அவளைப் பாராட்டி வாழ்த்துவதோடு நிறுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படியா முழுவதையும் வாரிக் கொடுப்பாள் ஒரு பெண்!
எல்லோரும் ஆத்திரத்துடனும் கோபத்துடனும் செல்வியின் செயலை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
'அட' என்ற ஒற்றைச் சொல்லில் ஆரம்பித்து, 'என்ன!!' என்று வியக்க வைத்து, 'ஆச்சரியமான செயல்' என்று சொல்ல வைத்து, 'நம்ப முடியாத செயல்' என்று பரவி கடைசியில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிருபரும் வீடியோகிராபரும் செல்வியைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
'யார் நீங்க?, உங்க பூர்வீகம் என்ன? ஏன் இப்படி செஞ்சீங்க?' என்று 'பிலு பிலு' வென செல்வியைத் துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்
டார்கள்.
ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் போன செல்வி, கடைசியில் 'சரி.. ஏன் இப்படி செஞ்சேன்னு சொல்றேன்.. ஆனா நீங்க இதை இத்தோட விட்டுடணும்' என்கிற நிபந்தனையோடு பேசத் தொடங்கினாள்.
அதற்கு முன், தன் ஊமை அம்மாவையும், எந்தக் குடும்பத்துக்கு அந்த பணத்தைக் கொடுத்தாளோ அந்த குடும்பத்தையும், வரவழைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டாள். வீடியோ கேமரா, 'மைக்' சகிதம் தனியார் தொலைக் காட்சி முழு மூச்சில் இயங்க, செல்வி சொல்ல ஆரம்பித்தாள்:
'இதோ இந்த அம்மா இருக்கறாங்களே இவங்க யார் தெரியுமா…?' தன் அருகில் இருந்த பெண்ணைக் காட்டி சற்றே நிறுத்தினாள் செல்வி.
'இவங்கதான் எங்க அப்பாவோட இரண்டாவது மனைவி!'
'என்ன?!!' எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்.
'அருகில் உள்ள ஒரு கிராமத்துலே வசிக்கிறாங்க. இதோ இவங்க பக்கத்துலே உட்கார்ந்துகிட்டு பேந்த பேந்த முழிச்சிகிட்டிருக்கிறது யார் தெரியுமா? என் அப்பாவோட குழந்தைதான். ஆனால் பிறக்கும் போதே மன வளர்ச்சிக் குறையோட பிறந்திருச்சி.'
எல்லோரும் அந்தக் குழந்தையையும் அந்தப் பெண்ணையும் உற்றுப் பார்த்தார்கள்.
செல்வி தொடர்ந்தாள்: 'எங்க அப்பா, நானும் எங்கம்மாவும் இருக்கிறதை முழுசா மறைச்சு, இந்தப் பெண்ணை ஏமாத்தி, ரெண்டாவதா கல்யாணம் பண்ணியிருக்காரு. இப்பிடி ஒரு ரெண்டாவது வாழ்க்கை அவருக்கு இருக்கறது, அவுரு உயிரோட இருந்த வரைக்கும் எங்களுக்கும் தெரியாது. ஆனால் அப்புறம் இரண்டு மூனு வருஷங்கள்லே அவரும் பரலோகம் போய்ச் சேர்ந்துட்டாரு. அப்பா இறந்த விஷயத்தை எப்படியோ கேள்விப்பட்டு இந்த அம்மா எங்களப் பார்க்க வந்தாங்க. அப்போதான் எங்களுக்கும் அவங்களுக்கும் எல்லா விஷயங்களும் தெரிய வந்துச்சி. குழந்தையை தனியா விட்டுட்டு ஒரு வீட்டு வேலைக்குக் கூட போக முடியாம பெரும்பாலும் பசி பட்டினிலே வாழும் இந்த அம்மாவைப் பாக்க எனக்கும் எங்க அம்மாவுக்கும் ரொம்ப மனக் கஷ்டம் ஆயிருச்சி.
அந்த நேரத்தில்தான் எனக்கு லாட்டரி சீட்டில் பரிசு விழுந்தது. என் கை கால்களும் எங்க அம்மாவின் கை கால்களும் நல்லா இருக்கு. எப்பிடியும் நாங்க பிழைச்சுக்குவோம். அதனாலே, எங்களை விட, இவங்களுக்கே இந்தப் பணம் அவசியம்னு தோணுச்சி. அந்தப் பணத்தை கொழந்தை பேருலே வைப்புத் தொகையாக வெச்சு, அவங்கம்மாவை 'கார்டியனா' போட்டு மாதாமாதம் அவங்களுக்கு ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும் படி செய்து விட்டேன்' என்று முடித்தாள் செல்வி.
அதன் பிறகு, செல்வியைத் திட்டினவங்களெல்லாம் அவளைப் பாராட்டித் தீர்த்தாங்க. செல்வியின் தியாகச் செயல், சமூக ஊடகங்களிலும் வலைதளங்களிலும் பரவி, ஒரு பிரபலமான தர்ம ஸ்தாபனம், செல்வியை கல்லூரி வரை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஒரு சமூக ஊடகம் மூலம், மக்கள் சிறுகச்சிறுக அனுப்பிய சுமார் இருபத்தேழு லட்சம் ரூபாய், செல்வியின் பெயரில் வந்து சேர்ந்தது.
முதலில் வந்தது அதிர்ஷ்டமாக இருக்கலாம். ஆனால், நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்ட ஒரு செயலுக்காக இரண்டாவது வந்தது ஒரு பரிசு என்றே சொல்ல வேண்டும்.
கோவை என். தீனதயாளன்