Tamizh muhil Prakasam

Drama Inspirational

3.7  

Tamizh muhil Prakasam

Drama Inspirational

அன்னை ஏற்றிய அறிவொளி

அன்னை ஏற்றிய அறிவொளி

2 mins
1.1K


பெண் கல்வி - அது சமுதாயத்தில் ஏற்றப்படும் அறிவொளி.


தனது கிராமத்தில் திரையிடப்பட இருக்கும் பெண் கல்வி குறித்த ஆவணப் படம் பற்றிய துண்டுப் பிரசுரம், ராசாத்தியின் கையில் படபடத்தது. அதைப் பார்த்த மாத்திரத்தில், கண்களில் மின்னல் ஒளிர, சட்டென மழையென, கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. நினைவுகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தன.


அந்த தீப்பெட்டி அலுவலகத்தில், அம்மாவுடன் அன்று ஒட்டிய பெட்டிகளை கொடுக்க வந்தபோது, முதலாளி, " என்ன சொர்ணம், இன்னைக்கு, சீக்கிரமே வந்துட்ட மாதிரி இருக்கு. அது யாரு உம் மவளா? என்ன பண்ணுது பாப்பா?"


" புள்ள இங்க பக்கத்துல இருக்க, கார்ப்பரேசன் ஸ்கூல்ல அஞ்சு படிக்கிறாங்கய்யா. இப்போ அரைப் பரீட்சை லீவு. அதான், என் கூட தீப்பெட்டி ஒட்டறேன்னு சொன்னா. அவளுக்கும் கொஞ்சம் தாள்கட்டு வாங்கிட்டு போலாம்னு கூட்டியாந்தேன்" என்றார் சொர்ணம்.


அடுத்த நாள் மாலை, வழக்கம் போல அன்று ஒட்டிய பெட்டிகளை கொடுக்க வந்தார் சொர்ணம். கூடவே,ராசாத்தியும். பெட்டிகளை அளவைக்கு கொட்டிய போது, " அட, பாப்பா நல்லா நேர்த்தியா ஒட்டியிருக்கே. தினமும் ஒட்டுனா, உனக்கும் மாசம் முழுக்க அத்தியாவசிய செலவுக்கு பத்தாக்கொறை இருக்காது. மாசக் கடைசியில கையை பிசையவும் வேண்டி இருக்காது. ஒன்னோட வீட்டுக்காரருக்கு, இப்போல்லாம், கூலி வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு போலயே" என்றார் முதலாளி.


"இந்த மாசம் முழுசும் ஒட்டட்டும்ங்க. அப்புறம் லீவு முடிஞ்சிரும்" என்ற சொர்ணத்திடம், "உனக்கு இருக்குற கஷ்டத்துக்கு, புள்ளையவும் பெட்டி ஒட்ட போட்டீன்னா, உனக்கும் கொஞ்சம் சிரமம் குறையும்னு சொன்னா, நீ என்னான்னா, பள்ளிக்கூடம் அது இதுன்னு பேசுற. இந்த புள்ள படிச்சு என்ன பண்ண போகுது ? எப்படியும் நாளைக்கு இன்னொரு வீட்டுக்கு போகப் போகுது. எதுக்கு சிரமப்பட்டு படிக்க வைக்குற? இது என்ன படிச்சிட்டு நாளைக்கு சம்பாதிக்கவா போகுது? உனக்கு ஏன் வீண் செலவுன்னு சொன்னேன்"


"இல்லைங்க ஐயா.என்னோட கஷ்டம் என்னோட போகட்டும்.என்னால தான் படிக்கிற காலத்துல படிக்க வசதி இல்லாம, பெட்டி ஒட்ட ஆரம்பிச்சேன். இதோ, இப்ப வரைக்கும் ஒட்டிட்டு தான் இருக்கேன். எம்மவளாவதும் படிக்கட்டுமே"


" ஊர்ல எல்லா பிள்ளைகளும், பெத்தவங்களுக்கு ஒதவியா, பெட்டி ஒட்டிட்டு, வீட்டு வேலையிலயும் தொணையா இருக்குதுகளேன்னு சொன்னேன். அப்புறம் உன் இஷ்டம்"


எவருடைய வார்த்தையும் சொர்ணத்தின் உறுதியை கலைக்கவில்லை. மகளைப் படிக்க வைத்துவிட வேண்டுமென உறுதியோடு இருந்தார். அந்த உறுதியும் வைராக்கியமும், சொர்ணத்தை ஓட வைத்தது. அயராது உழைத்தார். பற்றாக்குறை ஏற்படுகையில், வங்கியை நோக்கி ஓட, கல்விக் கடன் கைகொடுத்தது. இன்று ராசாத்தி பட்டதாரியாக அரசுப் பணியில் அமர்ந்தும் விட்டாள். சொர்ணத்தின் முயற்சியினைக் கண்ட இன்னும் சில தாய்மார்களும், தங்களது பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் துவங்கினர்.


அறிவொளி இயக்கத்தின் மீது ஆர்வங்கொண்டு, தன்னார்வலராக, வாரக் கடைசிகளில், சுற்றூவட்டார கிராமங்களுக்கு பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, நாடகங்கள், வில்லுப்பாட்டு, குழுப்பாட்டு என்று தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாள் ராசாத்தி.


இக்கட்டான சூழ்நிலையிலும், உறுதியுடன் தனக்கு அறிவொளி கொடுத்த தாய்க்கு செய்யும் பிரதிபலனாகவே இதைக் கருதினாள் ராசாத்தி. வீட்டு வாசலில், இயக்கப் பணிகளை முடித்து வரும் மகளுக்காக காத்திருந்தார், அந்த நெஞ்சுரம் கொண்ட தாய்.


Rate this content
Log in

Similar tamil story from Drama