ஆசான்கள்
ஆசான்கள்


#ThankyouTeacher
பத்தாம் வகுப்பு சி பிரிவில், தமிழ் ஆசிரியை வனஜா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பள்ளி அலுவலகத்தில் இருந்து பணியாளர் வந்து, ஆசிரியரிடம் ஏதோ சொல்ல, ஆசிரியை,
"சலீமா ! உன்னை ஆஃபீஸ் ல் கூப்பிடுறாங்க. போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடு" என்று சொல்லவும்,
காரணம் அறிந்தவளாய், மெல்ல தயங்கியபடி சென்றாள் சலீமா. ஆம்! சலீமா அந்த காலாண்டு பருவத்திற்கான கல்விக் கட்டணம் இன்னும் செலுத்தவில்லை.
அழுவலகத்தினுள் ஒருவித பயமும் தயக்கமும் கொண்டவளாய் நுழைந்தாள் சலீமா. கட்டணம் வசூலிப்பவர் ஏதோ முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தார்.
"சார்!" என்ற சலீமாவின் குரல் கேட்டு தலையை உயர்த்தியவர்,
"என்னம்மா வேணும்?" என்றதும்,
" இன்னும் பீஸ் கட்டலைங்க சார்" என்றாள் சலீமா.
"எந்த கிளாஸ்?"
"10 சி சார், பேரு சலீமா"
"கடைசி நாள் முடிஞ்சுதே மா, இன்னும் பீஸ் கட்டாம இருக்கீங்க"
"சார், அப்பாவுக்கு கொஞ்சம் கஷ்டம் சார். எப்படியாவது கட்டிடறேன் சார்
!" என்ற சலீமாவை
"சரி..க்ளாஸ்க்கு போம்மா" என்று அனுப்பி வைத்தார்.
சலீமாவின் தகப்பனார் பூ வியாபாரம் செய்து வந்தார். சில காரணங்களால், வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு விட, வருமானம் குறைந்து விட்டது. கிடைக்கும் சொற்ப வருமானம், உணவுக்கு சரியாகி விட, கட்டணம் செலுத்த இயலாமல் தவித்தார் அவர்.
அடுத்து வந்த நாட்களில், அலுவலகத்தில் இருந்து யாரும் பள்ளிக்கட்டணம் கேட்டு சலீமாவை தேடி வரவில்லை. காரணம் புரியவில்லை. அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டு, தன் தகப்பனார் இன்னும் ஒரு வாரத்தில் கட்டணம் செலுத்தி விடுவதாக சொல்லியிருப்பதாக சலீமா சொல்ல,
" உனக்கு பீஸ் கட்டியாச்சு மா." என்றதும், ஆச்சர்யம் பொங்க பார்த்த சலீமாவிடம்,
" ஆசிரியர்கள் கட்டீட்டாங்க மா!" என்றார்.
"யார் கட்டினாங்க சார்?" என்று கேட்க,
"எல்லாரும் தான் மா!" என்றதும்,
கண்களில் நீர் திரள, அலுவலகத்தை விட்டு வந்த சலீமாவின் கண்களுக்கு, காணும் ஆசிரியர்கள் எல்லோரும் கடவுள்களாக தென்பட்டனர்.