Tamizh muhil Prakasam

Inspirational

5  

Tamizh muhil Prakasam

Inspirational

மழை நீர் உயிர் நீர்

மழை நீர் உயிர் நீர்

1 min
35.4K


மழை சற்றே பெரிதாக பெய்து கொண்டிருந்தது. ஓட்டின் வழியாக வழிந்தோடி வந்த மழை நீர், சொட்டு சொட்டாக வந்து, அங்கே தேங்கி நின்றிருந்த மழை நீரில் "சட்! சட்! " என்றே, சீரான இடைவெளியில் விழுந்து, ஒரு இனிமையான இசையை எழுப்பிக் கொண்டிருந்தது.


தேங்கிய மழை நீரில், விழுந்த மழைத்துளிகள், வட்டவட்டமாக, சிற்றலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. மழை உருவாக்கிய ஒலி-ஒளி காட்சியில் இலயித்துப் போன விக்ரம், அதை இரசித்தபடியே நின்றிருக்க, உள்ளிருந்து அவன் தாயாரோ,


" விக்ரம் ! அந்த மழைத் தண்ணி விழுகுற எடத்துல, இந்த சின்ன அண்டாவை தூக்கி வை " என்றார்.


அண்டாவை, சரியாக, மழை நீர் விழும் இடத்தில் வைத்துவிட்டு, மழை நீர் காலி அண்டாவில் விழுகையில் ஏற்படுத்தும் சப்தமும், அது பட்டுத் தெறிக்கையில், கைகளில் ஏந்தி, அது தரும் சில்லிப்பு உணர்வில் மகிழ்வாக விளையாடிக் கொண்டிருந்தான்.


" அட என்னப்பா! சின்ன பிள்ளையாட்டம் தண்ணீல விளையாடிட்டு இருக்க? மழைத் தண்ணிய பிடிச்சு வச்சா, சமைக்க பயன்படுத்தலாம்னு ஒரு புஸ்தகத்துல பார்த்தேன். மழைத் தண்ணிய பிடிச்சு வச்சா, ஒரு ரெண்டு நாள் சமையலுக்கு உதவுமேன்னு நான் பாக்கறேன். நீ என்னன்னா...." என இழுத்த அம்மாவிடம்,


" ஆமாம் மா. நான் கூட கேள்விப்பட்டு இருக்கேன். நாம முயற்சி பண்ணி பாப்போம்" என்றான் விக்ரம்.


அடுத்த நாள், கொஞ்சம் நிலக்கரி வாங்கிக்கொண்டு, கூழாங்கற்களும் தேடிப் பிடித்து எடுத்து வந்தான்.


வீட்டிலிருந்த சிமண்ட் தண்ணீர் தொட்டியை கழுவி சுத்தம் செய்து, நிலக்கரி துண்டுகளை நிரப்பினான். பின்னர் அதன் மேல், கூழாங்கற்களையும் போட்டு வைத்தான். இப்போது, முந்தைய நாள் பிடித்த மழைத் தண்ணீரை, தொட்டியில் நிரப்பினான்.


தூசி, அழுக்கு இவற்றை எல்லாம் நிலக்கரி பரப்பில் தங்கி விட, கூழாங்கற்களுக்கு மேல், நல்ல தெளிவான தண்ணீர் சேர்ந்திருந்தது.


இதைக் கண்ட அம்மா, ஆச்சர்யத்துடன், "நான் ஒரு சின்ன யோசனை தான் சொன்னேன், நான் கூட இதற்கு முன்ன எல்லாம் மழைத் தண்ணீர் சேமித்தது கிடையாது. நீ அதை இவ்வளவு அருமையா செயல்படுத்தி, வெற்றியும் கண்டுட்ட." என பாராட்ட, பூரித்துப் போனான் விக்ரம்.


Rate this content
Log in