சேமிப்பு
சேமிப்பு


"அப்பா ! அப்பா ! என்னோட பிக்கி பேங்க் (piggy bank) உண்டியல்ல சேர்த்து வைக்க காசு குடுங்க அப்பா" என்றபடியே ஓடி வந்தாள் ஆதி.
"ஆதி குட்டிக்கு எவ்வளவு வேணும்?"
"அதெல்லாம் தெரியலை, ஆனா, உண்டியல்ல காசு சேர்க்கலாம்னு எங்க மிஸ் சொல்லியிருக்காங்க"
"உண்டியல்ல காசு சேர்த்து வச்சு, ஆதி குட்டி உங்களுக்கு வேண்டிய பொருள் வாங்கிக்கலாம். இல்லைன்னா, யாராவது பண உதவி கேட்டா, நீங்க செய்யலாம். நாளைக்கு, அப்பாவுக்கு காசு வேணும்னா, உங்க கிட்ட தான் கேட்பேன், தருவீங்களா?" என்றதும்,
"தருவேனே" என்றபடி தலையாட்டியது குழந்தை.
" என் தங்கம்!" என்று உச்சிமுகர்ந்தார் தந்தை.
"உண்டியல் மட்டுமில்லாம, உங்கள் பள்ளிக்கூடத்துல, சஞ்சாயிகா அப்படின்னு, ஒரு சிறு சேமிப்பு திட்டம் கூட இருக்கு. அதுக்குன்னு தனி டீச்சர் கூட இருப்பாங்க. அவங்க, ஆதி குட்டி பேர்ல ஒரு கணக்கு ஆரம்பிச்சு, நீங்க குடுக்குற காசை, அந்த கணக்குல சேர்த்துட்டு வருவாங்க. நீங்கள் எவ்வளவு காசு சேர்த்து வைக்கறீங்க என்ற விபரத்தை, உங்களோட சஞ்சாயிகா அட்டையில உங்கள் ஆசிரியர் எழுதி தருவாங்க. உங்களுக்கு தேவை ஏற்படும் போது, வேண்டிய பணத்தை சஞ்சாயிகா கணக்குல இருந்து எடுத்துக்கலாம்" என்று விளக்கம் அளித்தார் தந்தை.
" சரிப்பா. நான் நாளைக்கே எங்கள் பள்ளிக்கூடத்துல புது சஞ்சாயிகா கணக்கு தொடங்கி, உண்டியல்ல அப்பப்போ சேர்க்கும் பணத்தை, சஞ்சாயிகாவில் கட்டுறேன்" என்ற மகளின் கையில், புதிய ஐநூறு ரூபாய் தாளினை கொடுத்தார் தந்தை.
"ஆதி குட்டியோட நல்ல பழக்கத்திற்கு, அப்பாவின் முதல் மூலதனம். இது அப்பாவின் பரிசும் கூட" என்ற அப்பா, மகளுக்கு நல்ல பழக்கத்தினை கற்றுக் கொடுத்ததை எண்ணி மனம் மகிழ்ந்தார்.