திரையரங்கு
திரையரங்கு
மாநகரில் பரபரப்பான இடத்தில் அமைந்துள்ள திரையரங்கில் படம் ஒட்டும் வேலையை வாசு செய்து வந்தான்.எந்நேரமும் கூட்டமாக அரங்கு நிறைந்த காட்சிகளக ஓடிக்கொண்டு இருக்கும் தியேட்டர் என்பதால் காலை 10 மணிக்கு போனான் என்றால் இரவு 2 மணிக்கு தான் வீடு திரும்புவான்.
வீட்டில் மனைவி அருணா, 6 வயது மகன் நிதிஸ், 3 வயது மகள் யாழினி, தாய் மீனா, தந்தை கதிரேசன் என அழகிய குடும்பம். திருமணம் ஆகி 7 வருடம் ஓடி விட்டது. திருமண ஆன புதியதில் அருணாவுக்கு அவன் செய்யும் வேலை மிகவும் பிடித்தது.
டாப் ஹீரோக்களின் படம் அங்குதான் ரீலீஸ் ஆகும் என்பதால் முதல் காட்சிக்கு அழைத்து போவான். நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு இது அலுத்து போனது. தீபாவளி பொங்கல் என்றால் 2 நாள் முன்பு இருந்தே வீட்டுக்கு வருவதில்லை, எல்லாம் முடிந்தபின் ஐந்து நாட்களுக்கு பின் வருவான்.ஆரம்பத்தில் சின்ன பிரச்சினையாக நாளடைவில் பெரிதானது குழந்தைகள் பிறந்து பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன் பிள்ளைகளும் நேராகக் கேட்க ஆரம்பித்தார்கள். வாசுவுக்கு தனது தவறுகள் புரிய ஆரம்பித்து விட்டது.
வாசுவுக்கு உதவிக்கு ஆட்கள் இருந்தாலும் முழுவதுமாக விட்டு செல்ல முடியாது. மற்ற தியேட்டர் ஆபரேட்டர்களை விட வாசுக்கு அதிகமான சம்பளம் வாசுவின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து மளிகை அரிசி எல்லாம் முதலாளியின் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் இருந்து ஒன்றாம் தேதி வீட்டுக்கு போய் விடும். வாசு விலக நினைத்தாலும் சரியான ஆள் கிடைக்க வேண்டும், அதன் பின் தான் விலக முடியும்.
முதலாளி ரஹ்மானிடம் தான் இந்த வேலையை விட்டு போவதாக சொன்னதும் அவர் வாசு உன்னை நான் எனது குடும்பத்தில் ஒருவனாக நினைத்து உள்ளேன். நீ பிரிந்து போவது சரியாக வராது உன் குடும்பத்தினரிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார். மறுநாள் ரஹ்மான் வாசு வீட்டுக்கு நேரே சென்றார். எல்லாரையும் நலம் விசாரித்தார் குழந்தைகளுக்கு கொண்டு சென்ற இனிப்புகளை வழங்கியவர், காபி கொண்டு வந்த அருணா விடம் நிறைய பேசினார். பெரியவரை எதிர்த்து பேச முடியாத அருணா எல்லாவற்றையும் கேட்டு அமைதியாய் இருந்தாள்.
இரவு வந்த வாசுவிடம் இதை கேட்டு வெடித்தால், வரும் வெள்ளிக்கிழமை நிதிஷின் பிறந்த நாள் அன்று மாலை கேக் வெட்ட நேரத்தில் அப்பா இருக்க வேண்டும் என நிதிஷ் விரும்புவதாகவும் அன்று வீட்டுக்கு வரவில்லை என்றால் தான் இனிமேல் இங்கு இருப்பதில் பலன் இல்லை, தாய் வீட்டுக்கு போய் விடுகிறேன் என்று முடிவாக சொல்லி விட்டாள். வெள்ளியன்று உதவியாளர்களிடம் சொல்லிவிட்டு ஒரு மணி நேரம் வீட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என முடிவு செய்து செய்துவிட்டான்.
வெள்ளியன்று உச்ச நட்சத்திரத்தின் பிறந்தநாள் என்பதால் அன்று அவருடைய படம் ரிலீசானது, முந்தைய இரவில் இருந்து ரசிகர் காட்சிகள் ஓட்டியவன் மறுநாள் மாலை காட்சியில் படத்தை ஆரம்பித்து விட்டு கிடைத்த கேப்பில் அசந்து தூங்கிவிட்டான். வீட்டில் வாசு வுக்காக காத்திருந்த அனைவரும் இரண்டு மணி நேரம் தாமதமாக கேக் வெட்டி கொண்டாடினர். நித்திஷ் அப்பா ஏன்மா எப்பவும் வீட்டுக்கே வர மாட்டேங்கறார் என கேட்டான்.
அருணாவின் பெற்றோர் இரவு உணவு முடிந்து கிளம்பும்போது அருணாவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டாள், இருவரது பெற்றோர்களும் அறிவுரை கூறியும் அவள் கேட்காமல் அவர்களுடன் சென்றுவிட்டாள். மீனா அவர்கள் பின்னே போய் மருமகளை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்து விட்டாள்.
கதிரேசன் வாசுவுக்கு கால் செய்து நீ செய்வது ஒன்றும் சரியில்லை ஒரு மணி நேரம் வந்து போய் இருந்தால் என்ன என்று வேகமாக பேசிவிட்டார்.
இரவு இரண்டு மணிக்கு காட்சிகள் முடிந்ததும் வீட்டிற்கு சொல்லவேண்டிய வாசு தியேட்டர் முன் இருக்கும் படிக்கட்டில் அமர்ந்து தந்தையைப் போல காத்து வரும் முதலாளியை விட்டு போவதா இல்லை தனது பாசத்திற்காக தவிக்கும் குடும்பத்தை அனைத்து செல்வதா என விடை தெரியாத கேள்வியுடன் மண்டை குழம்பியபடி நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.
பிரச்சனையிலிருந்து வெளியே வர ஒரு முடிவை தேர்ந்தெடுத்து விட்டான். அது ஆபத்தாக தெரிந்தாலும் அதைத் தவிர வேறு வழி அவளுக்கு தெரியவில்லை.காலை விடிந்து மக்கள் நடமாட்டமும் பால்வண்டிகளின் சத்தமும் கேட்டவுடன் தான் அவனுக்கு உணர்வு வந்தது.
வாசு தான் முடிவு செய்தது செயல்படுத்த நேரம் வந்து விட்டது என தனது இரு சக்கர வாகனத்தை ஹெல்மெட் அணிந்து கொண்டு எடுத்தான், மாநகர தலைமை மருத்துவமனைக்கு நேரே வந்தவன் வேகமாக வண்டி போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு பிரேக்களையும் ஒரே சமயத்தில் அழுத்திப்பிடித்தாள். வண்டி சறுக்கி கீழே விழுந்தான். கால் மூட்டில் தொடையில் சரியான அடி, உடனே அங்கே இருந்தவர்கள் ஓடிவந்து ஒரு ஆட்டோவை அழைத்து மருத்துவமனைக்குள் கொண்டு சென்றனர்.
வாசுவின் தொடை எலும்பு முறிந்து இருந்ததால் மாவுக்கட்டு போட்டவர்கள் மூன்று மாதம் நடக்க முடியாது ஓய்வில் இருக்கவேண்டும் என கூறிவிட்டார் கள். சில மணி நேரங்களில் அனைத்து இடங்களுக்கும் தகவல் தெரிவித்தவுடன் வீட்டினர் பரபரப்புடன் ஓடிவந்தனர். முதலாளி ரஹ்மானுக்கும் செய்தி அனுப்பி விட்டான்.
மறுநாள் மாலையில் மருத்துவமனைக்கு காண வந்த முதலாளி ரஹ்மான் உயிர் துறக்கும் அளவு ரிஸ்க் எடுத்து அந்த வேலையை விடும்படி உன்னை செய்துவிட்டேன் தன்னை மன்னித்து விடும்படி கூறினர்.
இல்லை முதலாளி இது விபத்து என்றான். உன்னை சிறுவயதிலிருந்து நான் பார்க்கிறேன், எனக்கு தெரியும் என்றவர். நீ உன்னை உன் உடம்பை பார்த்துக்கொள் என்றவர் இனி அவனை டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இன் சூப்பர்வைசர் ஆக உயர்த்தி இருப்பதாகவும் கால் சரியானதும் வந்து வேலையில் சேரச் சொன்னார்.
கால் சரியாகும் வரை அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டுப் போனார்.
ரகுமான் முதலாளி பேசிவிட்டு போகும்வரை அங்கு கேட்டுக்கொண்டிருந்த அருணா அவர் போனவுடன் வாசுவிடம் தன்னை மன்னித்து விடும்படி யாகவும் முதலாளி புரிந்து வைத்திருக்கும் அளவு கூட தன்னால் புரிந்துகொள்ள முடியாதது நினைத்து வெட்க ப்படுவதாகவும் இனி தன்னால் எந்த பிரச்சனையும் நேராது என்று சொன்னவளை கையை பிடித்து அவளிடமும் இது விபத்துதான் என்று சொன்னான்.
வாசு வை கட்டி அணைத்த வண்ணம் அவன் சொன்னதை கேட்டு சிரித்தாள். இரண்டு வாரங்களுக்கு பிறகு காலை ஒன்பது மணிக்கு வாசுவும் அருணாவும் தியேட்டர் முன் காரில் போய் இறங்கினார்கள். சக்கர நாற்காலியில் வாசுவை அமர வைத்து உள்ளே அழைத்து போனாள். வாசு வருவதாக சொன்னதும் ரஹ்மான் வெளியே வந்தார்.
அருணா அவரிடம் அப்பா என்னை மன்னித்து விடுங்கள், இனி என்னால் உங்கள் இருவர் இடையே எந்த தொல்லையும் நேராது, அவரால் இனி சக்கர நாற்காலியில் அமர்ந்து வேலை செய்ய முடியும் , என்னை விட நீங்கள் பார்த்து கொள்வீர்கள் என்று தெரியும் என்று சொன்னவள், வாசுவிக்கு தேவையான பொருட்களை கொடுத்து விட்டு காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டாள்.
முற்றும்.
