Deepa Sridharan

Abstract

4.8  

Deepa Sridharan

Abstract

டின்டர் முத்தம்

டின்டர் முத்தம்

5 mins
808
“வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்” என்று அவள் அறையில் பரவிக்கொண்டிருந்த அந்தக் குரலில் கரைந்து கொண்டே, கிரேஸ்கேல் படமாக காட்சி தந்த அவள் விழிகளில் கண்மையை தீட்டிக்கொண்டாள். அவளுயரத்திற்கு இருந்த அந்த முகக்கண்ணாடியை அவள் மீண்டும் ஒருமுறை பார்த்தாள். அது, கால் முட்டி வரை அவளை இறுக்கமாக பற்றிக்கொண்டிருந்த அந்த பருத்தி ஆடையில் தன்னம்பிக்கையுடன் கூடிய அவள் மென்மையான புன்னகையை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.


வாழ்க்கையும் அப்படித்தானோ? நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ, அதையே அதுவும் பிரதிபலிக்கிறதோ என்று நினைத்துக் கொண்டாள். அன்று அவள் முன் பின் அறிமுகமில்லாத ஒருவனைப் பார்க்க கிளம்பிக்கொண்டிருந்தாள்.


டின்டரில் தன்னை பதிவுசெய்து கொண்ட முதல் நாளிலேயே அவளுக்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட சந்திப்பிற்கான அழைப்புகள் வந்தன. அவர்களுடன் அளவளாவிய சிறிது நேரத்திலேயே அவளுக்கு ஏற்பட்ட சலிப்பு, அவற்றை அவளை நிராகரிக்க வைத்தது. இரண்டாவது நாள் அவள் அந்த செயலிக்குள் உலா வந்து கொண்டிருந்தபோது, சட்டென்று ஒரு முகம் அவளை செயலிழக்கச் செய்தது.


அந்த முகத்திற்கான சுயவிவரத்தைப் படிக்க அவளின் கிரேஸ்கேல் லென்ஸ் மட்டும் அனிச்சையாகா செயல்படத் துவங்கியது. அதில் அவன் தன்னை ஒரு இசைக் கலைஞன் என பதிவு செய்திருந்தான். அவன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டிருந்த வேறு எந்த விவரமும் அவளின் மூளைக்கு செய்தியை அனுப்பவில்லை. அன்றிரவே அவர்கள் அந்த செயலியில் இணைக்கப்பட்டிருந்தனர்.


சைபர் உலகத்தில் இணைந்து கொள்வதற்கும், துண்டித்துக் கொள்வதற்கும் அதிகம் மெனக்கிடத் தேவையில்லை. மனப்போராட்டங்களும் தேவையில்லை. அவர்களிருவரும் ஏனோ அதிக நேரம் அளவளாவிக் கொள்ளவில்லை. தங்களைப்பற்றிய எந்தவொரு தகவலையும் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளவுமில்லை. அவன் அவளுக்கு அவன் பாடிய சில வவையொளி இணைப்புகளை அனுப்பி வைத்தான்.


அதில் ஒன்றுதான் அவள் அறையில் அன்று அவளின் செவிகளுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்கத்தான் அவள் கிளம்பிக்கொண்டிருந்தாள். அவள் மனிதில் எதிர்ப்பார்ப்பு, உற்சாகம்,படபடப்பு, ஆர்வம் போன்ற எந்த ஒரு உணர்வும் புதிதாய்ப் பூக்கவில்லை. ஆனாலும் அந்த சந்திப்பில் ஏனோ அவளுக்கு விருப்பம் இருந்தது. அவள் திறன்பேசியில் அவன் அழைப்பு வந்தது, அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் தன் காரின் அடையாளங்களைக் கூறினான்.


அவன் குரலில், தான் காந்தம் போல் ஒட்டிக்கொள்வதை உணர்ந்த கனத்தில் அவள் அவன் அருகாமை இருக்கையில் உட்கார்ந்திருந்தாள். இருவரும் தங்கள் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். பொதுவாகவே அவள் ஆண்களின் வெளிப்படை தோற்றத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. அன்றும் அவள் மூளை அவனின் உடையையோ, அவன் உடலின் கட்டமைப்பையோ கிரஹித்துக் கொள்ளவில்லை. அவர்களின் மிக இயல்பான உரையாடலுடன் அந்த கார் நகர ஆரம்பித்தது.


சூரியனுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டு, தன் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஜாலத்தை பெருமைபீத்திக்கொண்டிருந்தது அந்த பெரும்நகரத்தின் கண்ணைச் சிமிட்டும் வண்ணவிளக்குகளும் வானளாவிய கண்ணாடிக் கட்டிடங்களும். போக்குவரத்து நெருக்கடியில் கார் சற்று மெதுவாகவே நகர்ந்தது. அவர்களின் உரையாடலோ உறவுமுறைகளைப் பற்றி வேகமாக நகர ஆரம்பித்தது.


திருமணம், திருமணமின்றி இணைந்து வாழ்தல், ஒபன் ரிலேஷன்ஷிப் ,பிளேடானிக் ரிலேஷன்ஷிப் போன்ற இன்னும் பல மனித உறவு கட்டமைப்புகளைப் பற்றிய தங்கள் கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். பெரும்பான்மையான அவர்களின் கருத்துகள் ஒன்றுபட்டிருப்பதை அவள் உணர்ந்துகொண்டிருக்கையில், மனிதன் இயற்கையாகவே ஒரு பாலிகேமஸ் உயிரினம் என்று அவன் கூறினான்.


அவள் அதைப் பற்றி பலமுறை நினைத்ததுண்டு. ஆனால் அவனைப்போல் ஒரு தீர்க்கமான முடிவுக்கு அவள் இன்னும் வந்துவிடவில்லை. திருமணம் என்ற கட்டமைப்பில் அவளுக்குப் பெரிதாக ஈடுபாடு இல்லை என்றாலும், குடும்ப வாழ்க்கையை நினைக்கும் பொழுது, அதைவிட விவேகமுள்ள வேறு மாற்றுக்கட்டமைப்பை அவளால் யோசித்துப்பார்க்க முடியவில்லை.


அவனின் இரும்பல் அவர்களின் உரையாடலை சில நிமிடங்கள் நிறுத்தியது. அந்த மௌன இடைவெளியில் அவள் இதழ் மூடி, மூளை பேச ஆரம்பித்தது.அவன் குரல் போல அவன் பேச்சு அத்தனை மென்மையாக இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள். அவன் சற்று கர்வமுள்ளவன் என்று தோன்றியது அவளுக்கு.


பொதுவாக அவளுக்கு கர்வமுள்ளவர்களிடம் பேசப் பிடிப்பதில்லை. ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒரு வசீகரம் அவனிடத்தில் அவளை ஈர்த்துக்கொண்டிருந்தது. அவன் அவள் இதழ்களைத் திறக்க அடுத்த ஒரு வினாவைத் தொடுத்தான். நீ எப்படி உன் செக்க்ஷுஅல் தேவையைக் கையாளுகிறாய் என்று கேட்டான்.


அவள், அது எனக்குக் கடினமாகத்தான் இருக்கிறது என்றாள். என்னால் எந்த ஒரு உணர்ச்சிப் பிணைப்பும் இல்லாத ஒருவருடன் செக்ஸ் வைத்துக் கொள்வதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பிற்குள் நுழைவதற்கும் நான் இன்னும் தயாராகவில்லை என்றாள்.


ஆ!!அது மிகவும் கடினம் என்றான் அவன். எமோஷனல் பான்டிங் என்றால் எந்த அளவு எதிர்ப்பார்க்கிறாய் என்று அவன் கேட்டான். அவள், அப்படியொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுக்கொண்டதேயில்லை என்றாள். அவன், நீ கேட்டுக்கொள்ள வேண்டும் என்றான். உணர்ச்சிப் பிணைப்பிற்கு அளவுகோலா? என்று அவள் சிந்தனையில் மூழ்கிப்போன வேளையில் அவர்கள் இரவு உணவருந்த வந்த உணவகம் வந்துவிட்டது.


அவர்கள் காரிலிருந்து இறங்கி பேசிக்கொண்டே நடந்தனர். ஆனால் அவள் மனது அந்த கேள்வியிலேயே இன்னும் உட்காரந்து கொண்டிருந்தது. ஆணின் சிந்தனை இப்படித்தான் எப்பொழுதுமே எதார்த்தங்களை தழுவிக்கொண்டேயிருக்குமோ? என்று நினைத்தாள். அவளுக்கு எப்பொழுதுமே ஆணின் உலகத்திற்குள் நுழைந்து சிறிது காலம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அன் றோ அவளுக்கு அக்கனமே நுழைய வேண்டுமெனத் தோன்ற, அவர்கள், உணவகத்திற்குள் நுழைந்தார்கள்.


அவனைப் போலவே அந்த உணவகமும் கர்வமாகக் காட்சியளித்தாலும், வசீகரமாக இருந்தது. அவர்கள் பர்மீய நூடுல்ஸ் ஒன்றையும் பாரசீக உணவு சிலவற்றையும் ஆர்டர் செய்தனர். உணவு விருப்பத்தில் இருவரும் ஒத்திருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்களின் உரையாடல் அறிவியல் நோக்கிப் பயணித்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. சுவையான உணவும், சுவாரசியமான உரையாடல்களும் வயிற்றுப் பசியையும் அறிவுப் பசியையும் மாறி மாறி தீர்த்துக்கொண்டிருந்தது.


இடையிடையில், அவள் தன்னளவுக்குப் படித்திருக்கவில்லை என்பதை அவன் சற்று கடுமையாகவே சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தான். அந்த உண்மையை ஒத்துக்கொள்வதில் அவளுக்கு அவமானமோ, தாழ்வு மனப்பான்மையோ இல்லை. அதே நேரத்தில் அவன் இறுமாப்புடையவன் என்று நினைப்பதை அவளால் தவிர்க்கவும் முடியவில்லை. அறிவும் தன்னடக்கமும் சேர்ந்து பிரகாசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது என்பது , சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒளிரும் ஒருசில அதிகாலை/அந்திமாலை விண்ணைப் பார்ப்பது போல.


மிகவும் அரிதான, ஆனால் சுகமான அனுபவம் என்று அவளுக்குத் தெரியும். அவர்கள் உரையாடல் நீண்டு கொண்டிருந்தது, அந்த பர்மீய நூடுல்ஸ் போலவே. பின் ஏதோ ஒரு கட்டத்தில் அவன் குவாண்டம் இயற்பியல் மற்றும் குண்டலினி பற்றிப் பேசத் துவங்கினான். அதில் அவளுக்கு மிக மிக அடிப்படை புரிதலும், அறிவும் இருந்ததே தவிற அவன் அளவுக்கு அதை அவள் கரைத்துக் குடித்திருக்கவில்லை.


அவன் அவற்றைப்பற்றி தான் வாசித்த சில புத்தகங்களின் பெயரைச் சொன்னான். அவள் அவற்றை மனதில் குறிப்பெடுத்துக் கொண்டாள். இறுதியாக அவர்கள் கிரேக்க டேசர்ட் ஒன்றில் தங்கள் நாவினை பன்னீர் மற்றும் தேனால் குளிப்பாட்டிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள்.


அப்பொழுது சாலைகள் சற்றே நிர்வாணமாய் நிலவொளியில் குளித்துக்கொண்டிருந்தது. அவள் அவனைப் பாடச் சொன்னாள். அவன் பாடத்துவங்கியதும் அவனின் அகந்தை முகமும், ஆணவப் பேச்சும் புதைந்து போய், அவர்கள் கடைசியாக ருசித்த தேனை விடவும் இனிமையான குரல் ஒன்று அவளை நனைக்க ஆரம்பித்தது.


அவள் மீண்டும் அவன் கூறிய அளவுகோளை நினைத்துக் கொண்டாள். அவன் பாட்டை நிறுத்தாமல் அவளை நனைத்துக் கொண்டே இருந்தான். சட்டென்று கார் நின்றது. அவள் வீடு வந்துவிட்டதை உணர்ந்தாள். அவன் பாட்டை நிறுத்திவிட்டு அவளிடம் முத்தம் ஒன்று கேட்டான்.


அவளால் மறுக்க முடியவில்லை. அவள் மீண்டும் நனைந்தாள். அந்த முத்தத்தின் நீளம் சராசரி நேரத்தை விட சற்றே அதிகமாகவே இருந்தது. ஆனால் அது எவ்வளவு நேரம் என்று அவள் அளந்துவைக்கவில்லை. ஒருவேளை அவன் அளந்துவைத்திருப்பானோ என்று காரிலிருந்து இறங்கையில் அவள் நினைத்துக் கொண்டாள். அது சரி, சராசரி முத்தத்தின் நீளம் என்ன? அவள் கூகுல் வேட்டைக்குத் தயாராகி வீட்டினுள் நுழைந்தாள்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract