Deepa Sridharan

Abstract Drama

4.8  

Deepa Sridharan

Abstract Drama

பசியும் கிறுக்கர்களும்

பசியும் கிறுக்கர்களும்

8 mins
222


சின்னஞ்சிறு வயதொன்றில்

குறுக்குத்தெரு தன்னில்

திசையறியா தொலைந்து நின்றேன்

பசியறியா அழுது நின்றேன்


சட்டைக் கிழிந்த கிழவனவன்

குப்பைத் தொட்டி உள்ளிருந்தான்

குப்பையெல்லாம் புறத்திலென்றான்

பசிமட்டும் அகத்திலென்றான்


குதறிக்கிடந்த உணவுதனை

பாதி தின்று மீதி தந்தான்

அவதிகொள்ளா தின்றுவிழுங்கி

புன்னகையில் நாங்கள் மாய்ந்தோம்!


தேடியலைந்து வீடுவந்தேன்

நடந்த கதை அதைச் சொன்னேன்

யாரந்தக் கிழவனென்றேன்

கிறுக்கனென்று தாய் சொன்னாள்


தட்டு நிறைய சோறு தந்தாள்

வாய் நிறைய புன்னகைத்தேன்

என்னவென்று தாய் கேட்டாள்

கிறுக்கியென்று அவளைச் சொன்னேன்


பசியென்றால் என்னவென்று

அறியும்முன்னே அவள் போனாள்

அன்று முதல் பசியறிந்தேன்

கிறுக்கர்களைத் தேடியலைந்தேன்


உள்ளிழுத்த வயிறு, சுருங்கிய தேகம், பஞ்சடைந்த கண்கள், காடாய் வளர்ந்த ரோமம், எலும்பு போத்திய தோல், கசங்கிய சட்டை, தேய்ந்த செருப்பு என்று எவ்வளவு முயற்சி செய்தாலும், என் கதாநாயகனின் வறுமையையும் பசியையும் தீட்ட முடியாமல் தோற்றுப்போய் மை வடிக்கிறது எனது எழுதுகோல். எனவே எனது கதாநாயகனை இருபத்தைந்து வயது இளைஞன் என்று மட்டும் அறிமுகப்படுத்துகிறேன். இளமையைவிட பசியை வேறு எந்த சொல்லால் முழுமையாக உருவகப்படுத்த முடியும்?

ருத்ரன், கம்ப்யூட்டர் என்ஜினியரின்ங் முடித்துவிட்டு, பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற கனவோடு மல்லுகட்டிக்கொண்டிருக்கும் இளைஞன். தன் பன்னிரண்டு வயதில் தாயை இழந்துவிட்டு, அனாதை ஆசிரமத்தில் சேர்ந்து, தமிழால் ஈர்க்கப்பட்டு, கவிதைகளைப் படித்து, குடித்து, தின்று, வளர்ந்து, அதையே வடிக்கும் கள்ளிச் செடியவன். ஆம் வரட்சியான வறுமையால் முட்களை வளர்த்துக்கொண்ட கள்ளிச் செடியவன். படித்த படிப்பிற்கான வேலைகள் கிடைத்தும், பாடலாசிரியர் ஆக வேண்டும் என்ற பசி. வயிற்றுப்பசியை மிஞ்சி நிற்கும் கனவுப் பசி. இளமை விதண்டாவாதத்தின் பிறப்பிடம், பிடிவாதத்தின் உறைவிடம், கொள்கைபிடிப்பின் தொழிற்சாலை. அந்த இளமைக்குள் தத்தளித்துக்கொண்டிருக்கும் புதுமைக் கவிஞன் ருத்ரன்.

பால்கார சிறுவனின் சைக்கிள் பெல் சத்தத்தில் தூக்கம் கலைந்து, மொட்டைமாடி சன்னலுக்குள் கண் சிமிட்டி ருத்ரனை கண் திறக்கவிடாமல் கூசியது காலைக் கதிரவன். கண் விழிக்கும் முன்னமே வயிற்றில் வெற்றுப்பானை உருளும் சத்தம். ருத்ரன், தான் சிறுவயதில் சந்தித்த அந்த கிறுக்கனை நினைத்துக் கொண்டான். பல் தேய்க்க வேண்டும் என்று நினைக்கும் போதே, பசியின் ஏளனச்சிரிப்பு அவனை அச்சுறுத்தியது. படுக்கையிலிருந்து கீழே கால் வைத்தால் அவன் ரூம் முடிந்துவிட்டிருந்தது. மொட்டைமாடியில் நின்று கொண்டு அந்த மாநகரத்தை ரசித்துக்கொண்டிருந்தான் அவன். அது மட்டுமே பல வருடங்களாய் அவனுக்காக கிடைத்த விருந்துப் படையல். அந்தப் படையலில் பசியாறிய தருணங்களெல்லாம் அவன் படைப்புகள் புன்னகை பூத்தன. அவற்றைக் "கிறுக்கல்கள்"  என்ற தலைப்பில் தன் பாட்டு நோட்டில் வடித்துவைத்திருந்தான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட்டுகள் அரங்கிற்காக கிறுக்காய்க் காத்துக்கொண்டிருந்தன அவன் நோட்டில்.

அன்று, தான் சந்திக்கப்போகும் இசையமைப்பாளரின் பாடல்களை கேட்கத் துவங்கினான் ருத்ரன். அவருக்கான ஸ்டைல் என்னவென்பதை ஓரளவு தீர்மானித்துக்கொண்டு, அதற்கேற்றவாறு தான் எழுதிய சில பாடல்களைத் தேர்வு செய்துகொண்டான். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கி, அந்த காம்பவுன்ட் வீடுகளுக்கான பொது குளியலறை/ கழிப்பிடத்திற்காக வரிசையில் நின்று காத்துக்கொண்டிருக்கையில், கையில் காப்பி கோப்பையுடன், அந்த வீட்டின் ஓனர் வந்தார். 

"ருத்ரா 3 மாச வாடகைய எப்போ தரதா உத்தேசம்?" என்று கேட்டுக்கொண்டே அந்த காப்பியை உறிஞ்சினார். ருத்ரனோ அந்த காப்பியின் மணத்தை உறிஞ்சினான். வாசனையில் பசியடங்கிக் கொள்ளும் வித்தையை அவனது மூளை கற்றுவைத்திருந்தது.

"இன்னிக்கு ஒரு மியூசிக் டைரக்டரை பாக்கபோறேன் சார், கண்டிப்பா சான்ஸ் குடுக்கறேன்னு சொல்லிருக்காரு. அட்வான்ஸ் கிடச்சதும் வாடகைய குடுத்துடறேன் சார்" என்று கூறினான் ருத்ரன். 

"இதத்தான் நீயும் மூனு வருஷமா சொல்ற. உருப்படியா ஏதாவது வேல தேடுப்பா" என்று கூறிக்கொண்டே அவர் வீட்டினுள் நுழைந்தார் ஓனர்.

குளித்து முடித்து, தன் தலகாணிக்குக் கீழே வைத்திருந்த சட்டையையும் பேண்டயும் எடுத்து அணிந்து கொண்டான் ருத்ரன். கசங்கியும் கசங்காமலும் இஸ்திரி செய்யப்பட்ட அவன் சட்டையைப் போலவே, அவன் வயிறும் ஒட்டிக்கிடந்தது. மடக் மடக்கென்று ரெண்டு டம்ப்ளர் தண்ணியை குடித்துவிட்டுத் தன் கிறுக்கல்கள் நோட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான் ருத்ரன்.

மியூசிக் டைரக்டர் அஷ்வின், தன் வீட்டின் மாடியிலேயே ரிக்காடிங் அறையையும் அமைத்திருந்தார். ருத்ரன் வந்தவுடன் அவனை மேலே அழைத்துச் சென்றார். அந்த ரிக்காடிங் அறைக்குள் கால் வைத்த கணமே கனவுக்குள் தொலைந்து போனான் ருத்ரன்.

"டைரக்டர் வினய்", "ஹீ இஸ் ருத்ரன்" என்று இருவரையும் அறிமுகப்படுத்தினார் அஷ்வின்.

 "நம்ப ஹீரோயின் பாரம்பரிய முறையில் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளை நடத்திவைக்கிற ஈவன்ட் மேனஜர். அவுங்க அரேன்ஜ் பண்ற ரிசப்ஷன் மியூசிக்கல் நைட்ல ஹீரோவ முதன்முதலா பாக்கறாங்க.நம்ம கதை ஹீரோ ஒரு பாப்புலர் flutist. அவர் புல்லாங்குழல் இசையில மெய் மறந்த ஹீரோயின் அவர பாக்கும்போது, அவர் கண்கள சிமிட்டாம ஹீரோயினயே பாக்கராரு. Love at first sight. அது ஒரு அவுட்டோர் ஈவன்ட். சில்லுன்னு மழைக்காத்து வீசுது. இதான் பாட்டுக்கான சீக்வென்ஸ்" என்று வினய் கதையை விளக்கினார்.

அவர் கூறி முடிப்பதற்குள், அமிர்தவர்ஷிணியில் பல்லவியையும் அணுபல்லவியையும் போட்டுக் காட்டினார் அஷ்வின். அந்த மெட்டுக்காகவே காத்திருந்த வரிகள் போல ருத்ரனின்பாடல் வரிகள் மழையாய்ப் பொழிந்தது.


"குழலின் துளை

உன் இதழின் துணை

விரலோ பகை

பூங்காற்றின் சிறை

ஸ்வரங்கள் கசிந்ததும்

என் புருவம் வளைந்தது பிறை

உன் விழிகள் துளைத்ததில்

பிறை நிலவில் படர்ந்தது கறை"


அவன் சொல்லி முடிப்பதற்குள், "சாரி" என்று உள்ளே நுழைந்தாள் அஷ்வினின் மனைவி ப்ரியா.

"இன்னிக்கி கார் டிரைவர் வரல. ப்ரியதர்ஷன் ஸ்விம்மிங் கிளாசுல ட்ராப் பண்ணணும்" என்று கூறினாள். 

"ருத்ரன் உனக்கு பிரச்சனை இல்லன்னா என்னோட பையன கொஞ்சம் ட்ராப் பண்ணிட்டு வர முடியுமா?" என்று கேட்டார் அஷ்வின்.

ருத்ரன் கண்களில் அந்த ரிக்கார்டின்ங் ரூம் கரையான் புற்றாய் உருமாறியது.  சுரண்டிப் பிழைப்பதில் கரையானையும் மிஞ்சியவர்கள் சில மனிதர்கள் என்று நினைத்துக்கொண்டான். அவன் கழுத்து நரம்பு புடைத்தது. அவன் பதில் சொல்வதற்குள் கார் சாவியை அவன் கையில் கொடுத்தது அந்த புற்றின் ராணிக் கரையான்.

இருவரும் கீழே இறங்கினர்.

"சாப்டீங்களா?" என்று ப்ரியா ருத்ரனிடம் கேட்டாள்.

"இன்னும் இல்ல மேடம். லிரிக்ஸ் finalise பண்ணிட்டு சாப்டனும்" என்றான் ருத்ரன்.

 " இவன ட்ராப் பண்ணிட்டு வாங்க breakfast ரெடியாருக்கு, எல்லாரும் சேந்து சாப்டலாம் என்றாள்" ப்ரியா.

ப்ரியதர்ஷனை விட்டுவிட்டு, ருத்ரன், அஷ்வின் வீட்டிற்கு வேகமாய் வந்து மாடிப்படியில் ஏறும்போது,

 "தம்பி எல்லாரும் அவசரமா ஏதோ புரொடியூசர் வீட்டுக்குப் போயிருக்காங்க" என்று அஷ்வின் வீட்டு சமையல்காரத் தாத்தா ருத்ரனிடம் கூறினார்.

"வேற ஏதாவது சொல்ல சொன்னாரா அஷ்வின் சார்" என்று கேட்டான் ருத்ரன்.

"வேற ஒன்னும் சொல்லலியே தம்பி" என்றார் தாத்தா.

எச்சிலை விழுங்கிக்கொண்டே மேலே சென்று, அணுபல்லவியுடன் காத்துக்கொண்டிருந்த அந்த காகித்தில் சரணத்தைச் சேர்த்து வைத்துவிட்டு, அவன் கையெழுத்தையும் பதித்துவிட்டு அந்த ரிக்கார்டின்ங் ரூமில் கண்களை மூடி மூச்சை ஒருமுறை வேகமாக இழுத்து விட்டான் ருத்ரன். அவன் கனவுப் பசிக்கான உந்துதல் அது.

தன் நோட்டு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவன் வெளியே போகும் போது,

"இருங்க தம்பி, நீங்க மேடமோட பேசுனப்போ, அவங்க உங்கள சாப்டு போகச் சொன்னத கேட்டேன், இந்தாங்க" என்று பொக்கைவாய் சிரிப்புடன் தோசைத் தட்டை நீட்டினார் அந்தத் தாத்தா.

அந்த தோசையை சில வினாடிகள் வெறித்துப் பார்த்தான் ருத்ரன். தாத்தாவின் கையிலிருந்து மொறு மொறுவென்று விரைத்த அந்த தோசையும், அதன் அருகே குமுறிக்கொண்டிருக்கும் அந்தக் காரச்சட்டினியும் ருத்ரனின் விரைப்பிற்கும் கோவத்திற்கும் ஈடுகொடுக்க முடியாமல் நடுக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தது.

"வேணா தாத்தா, நான் கிளம்பறேன்" என்று கூறிவிட்டு சட்டென்று திரும்பி நடந்தான் ருத்ரன்.

பின்பு ஏதோ நினைத்துக்கொண்டு திரும்பி "உங்க பேரு என்ன தாத்தா"" என்று கேட்டான். 

"கிறுக்குச்சாமி, தம்பி" என்று பொக்கைவாய் தெரிய சிரித்தார் அந்த தாத்தா.


கிறுக்கர்களைத் தேடிதேடி

சோர்ந்து கண் மூடியது

கனவெல்லாம் சோறொன்று

பல்காட்டிச் சிரிக்குது


வயிற்றுக்கும் லட்சியத்துக்கும்

போர் நித்தம் நடக்குது

வயிர் சிந்தும் ரத்தமோ

தமிழாகக் கசியுது.


தமிழுக்குள் கனவொன்று

பசியாக உறையுது

பசியிறைத்த கவிதையெல்லாம்

சோறாகத் தவிக்குது


சோறு பொங்கும் ஆசாமி

அவசர உலையில் கொதிக்குது

தாயனுப்பிய கிறுக்குச்சாமி

சோற்றோடு சிரிக்குது.


மணி பதினொன்று ஆகியிருந்தது. பசி வயிற்றைப் பிசைந்தது. சட்டை பாக்கெட்டைத் துழாவினான் ருத்ரன். ஒரே ஒரு டீ குடிப்தற்கான காசு இருந்தது. சந்தியாவை நினைத்துக் கொண்டான். அவளுக்கு இன்று பிறந்த நாள். அவளுடன் மத்தியம் லன்ச். அவளைப்பார்க்க செல்லவிருக்கும் பஸ் டிக்கெட்டுக்கான சில்லறை காசு அது. நடந்து செல்ல மனதைத் தயார் படுத்திக்கொண்டு ஒரு டீயை வாங்கிக் குடித்தான். அதை "டீ" என்று அவன் புலன்கள் உணர்வதற்குள், அது காலியாகிவிட்டது. டைரக்டர் விக்னேஷ் வீட்டிற்கு நடையைக் கட்டினான் ருத்ரன்.

அவனுக்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல அந்த வாட்ச்மேன்,

"டைரக்டர் சார் வீட்ல இல்லப்பா நாளைக்கு வா" என்றார்.

"சார் தான் இன்னிக்கு வந்து பாக்க சொன்னாருங்க" என்றான் ருத்ரன்.

"தெரியும்பா, ஆனா அவர் அவசரமா கொஞ்ச நேரம் முன்னாடி தான் வெளியில போனாரு. போகும்போது இன்னிக்கு நோ அப்பாயின்ட்மெண்ட்டுனு சொல்லிட்டாருப்பா" என்றார் அந்த வாட்ச்மேன்.

"அவசரவேலை" என்ற வார்த்தையை அகாராதியிலிருந்து நீக்க வேண்டும் என்று ருத்ரன் நினைத்துக்கொண்டான். கழிப்பதற்குக் கூட தனக்கு அவசரமாய் வருவதில்லையே! போதிய அளவு உண்டால் தானே செரித்து வெளியே வரும் என்று தன் நிதானமான வாழ்வை நினைத்து ஒரு கணம் பெருமூச்சு விட்டான் ருத்ரன்.

மே மாதம், அக்னி நட்சத்திர உச்சி வெயில் அவனை பதம்பார்த்துக் கொண்டிருந்தது. நாவரண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தெருமுனையிலிருந்த பூவரச மரத்தின் கீழே தண்ணீர் பானை ஒன்று தென்பட்டது. இரண்டு டம்பளர் தண்ணி குடித்துவிட்டு அந்த பூவரச நிழலில் தலை சாய்த்தான். தூக்கம் அவனை பசியில்லா உலகத்திற்கு அழைத்துச்சென்றது.

சில நிமிடங்களில் "கா கா கா கா" என்ற கூச்சல் அவன் காதுக்குள் பூதாகாரமாய் ஒலித்தது. யாரோ ஒரு கிழவி பக்கத்து வீட்டிலிருந்து சாதத்தைக் கையில் வைத்துக் கொண்டு காக்காயை அழைத்துக்கொண்டிருந்தாள். பசியின் உலகத்திற்கு மீண்டும் வந்துவிட்டதை அவன் உணர்ந்தான். மணி ஒன்று. இப்பொழுது நடக்க ஆரம்பித்தால்தான் 2 மணிக்காவது சந்தியாவைப் பார்க்க முடியும். அந்த உச்சி வெயிலில் வேகமாய் நடந்தான் ருத்ரன்.

சந்தியா, ருத்ரனோடு இன்ஜினியரின்ங் காலேஜில் ஒன்றாய்ப் படித்தவள். அவன் கவிதைகளைப் படித்து, அவனைப் பிடித்து, அவன் கனவுகளை மதித்து, அவன் வறுமையை அணைத்து அவனுடனே ஒட்டிக்கொண்ட பசி அவள். சில நேரங்களில் அவனுக்கான ருசியும் அவள். சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் அனிமேஷன் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளும் கூட அனிமேஷன் செய்த பொம்மை போலவே இருந்தாள்.

ஆனால் அவள் கண்கள், நேர்மையின் பிரதிபலிப்பு. அதில் மின்னிடும் அந்த நேர்மை, அதனால்தான் என்னவோ அவள் ருத்ரனின் பசியானாள். பசியைவிட நேர்மையான ஒன்றை இந்த உலகத்தில் பார்க்க முடியுமா? வெட்கம், ஆர்ப்பாட்டம், தன்மானம், அகங்காரம் என்று எந்த சிறைக்குள்ளும் சிக்காதது பசி. பசியால் பொய்க்க முடியாது. தின்ற உணவுக்கு வேலை செய்யவில்லை என்றால் அதனால் செரிக்க முடியாது. பசி மட்டுமே இந்த உலகில் நிதர்சனமான உண்மை. ருத்ரனின் வாழ்வில் சந்தியாவும் கூட அப்பிடித்தான்.

அன்று அவள் அந்த சிவப்பு நிற காட்டன் சுடிதாரில் எப்பொழுதையும் விட கூடுதல் அழகாகத் தெரிந்தாள். அவள் மை தீட்டிய கண்கள் ருத்ரனின் வருகைக்காக தவித்துக்கொண்டிருந்தது.

"மேடம் ஆடர் குடுக்கறீங்களா" என்று அவள் தவத்தைக் கலைத்தது அந்த வெயிட்டரின் குரல். "பேபி கார்ன் 65 , இரண்டு கார்லிக் நாண், பன்னீர் பட்டர் மசாலா, மத்தது அப்றமா சொல்றேன்" என்றாள்.

சிறிது நேரத்தில் அவள் ஆடர் செய்த அனைத்தும் டேபிளை ஆக்கிரமித்தது. ருத்ரன் இன்னும் வரவில்லை. மணி 2.30 ஆகிற்று. சந்தியாவிற்கு பசித்தது. அதற்கும் மேல் ஒவ்வொரு வருடமும் ருத்ரன் அவளுக்காக எழுதி வாசிக்கும் பிறந்த நாள் கவிதையும் அவனின் முத்தமும் அவள் தவிப்பை அதிகரித்தது.

ருத்ரன் வியர்க்க விருவிருக்க உள்ளே வந்தான். மயங்கி விழும் நிலையில் இருந்தான். அவனின் பசி அவளுக்குப் புரிந்தது. தட்டில் உணவைப் பரிமாறினாள். அவன் விரல்களும் வாயும் அனிச்சையாய் செயல்பட்டது. அவள் மேலும் பல உணவுகளை ஆடர் செய்தாள். இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. சிறிது உண்டபின் ருத்ரன் தன்னிலைக்கு வந்தான். அவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டனர், நான்கு விழிகளும் ஒட்டுமொத்தமாய் கலங்கியிருந்தன. வெயிட்டர் மீதி ஆடர்களை கொண்டு வந்து வைத்தான். கலங்கிய கண்களிலிருந்து சில துளிகள் அந்த வெஜிடேபில் பிரியாணியில் விழுந்தது. அதுவரை ருசித்து மட்டுமே கிடந்த அந்த பிரியாணியின் காய்கள் உயிர்த்துக் கொண்டு அவர்கள் உயிர் தீண்டியது. அன்பின் வெளிப்பாட்டில் ஜனிக்காமல் போவதேது?

அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள், அவனது அலைபேசி அவதி கொண்டது.

 "ஹலோ" என்றான்.

"ருத்ரன் தம்பியாப்பா?" என்று மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல்.

"ஆமாம் மேடம்" என்று கூறிக்கொண்டே சந்தியாவின் சிவந்த அதரங்களைப் பார்த்தான் ருத்ரன். அதைக் குவித்துக்கொண்டு அவள் புன்னகைத்தாள். இப்படியும் முத்தத்தைப் பரிமாரிக்கொள்ள முடியும் என்று அவர்களுக்கு அன்று தான் தெரிந்தது.

"பாட்டு ஒன்னு அர்ஜென்டா எழுதனும் தம்பி" என்றாள் அந்தப் பெண்மணி

"பாட்டு தான மேடம் உடனே எழுதிக்குடுத்துடுவேன்" என்றான் ருத்ரன்.

"இன்னும் அரை மணி நேரத்துல இங்க வரணும். 4 மணி நேரத்துல ரெக்கார்டின்ங் முடிக்கனும். உங்களால வர முடியுமா?" என்று கேட்டாள் அந்தப் பெண்மணி.

"அட்ரெஸ் சொல்லுங்க மேடம் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்" என்றான் ருத்ரன்.

இம்முறை சந்தியா வலுகட்டாயமாக புன்னகையை வரவழைத்துக் கொண்டு இதழ் விரிப்பதை அவனால் உணர முடிந்தது.

அந்தப் பெண்மணி அட்ரெஸ் சொன்னாள்.

"ஓ "ஈ சி ஆர் ரோடா?"", என்று அவன் கேட்பதற்குள் அந்தப் பெண்மணி , "Thanks தம்பி" என்று கூறி அலைபேசியைத் துண்டித்தாள். 

ருத்ரன் அவசரமாக எழுந்தான். சந்தியா தன் பர்ஸிலிருந்து 500 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்தாள். "டேக்சி புடிச்சு போயிடு" என்றாள்.

அவனுக்குக் கூடவே தன் உயிரும்  போய்விட்டால் நன்றாக இருக்கும் என்று  தோன்றியது.

அதை வாங்கிக் கொண்டு "Thanks" என்று சொல்லிவிட்டு எழுந்தான் ருத்ரன்.

அவளைப் பார்த்து "உனக்கு என் மேல கோவமே வராதா?" என்றான் ருத்ரன்.

அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

"ஏன்" என்றான் அவன்

அவன் கண்களுக்குள் ஊடுருவினாள் அவள்.

"லூசு" என்று கூறி நகர்ந்தான் ருத்ரன்.

"யெஸ் நான் உன் காதல் கிறுக்கி" என்று புன்னகைத்தாள் சந்தியா.

அவன் சட்டென்று திரும்பி அவளைப் பசியாறப் பார்த்து "ஆமா நீ கிறுக்கிதான்" என்று கூறிக்கொண்டே விரைந்தான்.

"அவசரவேலை" என்ற வார்த்தையை அகாராதியிலிருந்து நீக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் சந்தியா.

டேக்சியின் உள்ளே ஊடுறுவிய சூரியக் கதிர்களைக் கண் கூசாமல் பார்த்தான் ருத்ரன். அவன் விழிகளில் சந்தியாவின் துடித்த இதழ்கள் ஒட்டிக்கொண்டிருந்தது.


வயிற்றில் தீக்குண்டம்

ஏந்தி இளமை எரியுதடி

உணர்வை விடவும்

கொடும் உயிர் வலியதடி


உணர்வு கொன்றுயிந்த

உயிர்ப் பிண்டம் சுத்துதடி

அந்தப் பிண்டம்

மீது உனக்கென்ன பித்தமடி


பசித்தவன் நான்

என்னுள் காதல் ருசியேதடி

உன் பசியே

நான் தான் என்றாயடி


தீராத பசிகொண்டு

உன் இதழ் சுவைத்தேனடி

கூரை நெய்யாதொரு

வெட்ட வெளியிலன்று கிடந்தேனடி


என் மேனியெங்கும்

உன் வாசம் நிறைத்தாயடி

இப்பிரபஞ்சம் விட்டு

என்னைக் கடத்திச் சென்றாயடி


அங்கு பசியில்லை

காதல் ருசி உணர்ந்தேனடி

என் வறுமையின்றி

உனக்கென்ன நான் கொடுப்பேனடி


முத்தம் போதுமென்

பித்தம் தீரும் என்றாயடி

இன்றுன் பிறந்தநாள்

அம்முத்தம் கூட மறந்தேனடி


முத்தந்தின்னா அவ்விதழ்

விரித்து பசி தீர்த்தாயடி

என் மொத்தமும் கூனுது

நீ காதல் கிறுக்கியடி!


அடுத்த அரை மணி நேரத்தில் அவன் அந்தப் பெண்மணி கூறிய அட்ரெசிற்கு வந்து சேர்ந்தான். உள்ளே நுழைந்ததும் எல்லோரும் சுறுசுறப்பாக மியூசிக் போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான் ருத்ரன்.

"வாங்க தம்பி, உங்களுக்காக தான் வெயிட்டின்ங். ஒரு பக்தி பாடல், ஏசுநாதரைப் பத்தி" என்றாள் அந்தப் பெண்மணி.

ருத்ரன் ஏமாற்றத்தில் திகைத்தான்.

"சாரி மேடம் எனக்கு மத நம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ கிடையாது. நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை என்னால எழுத முடியாது" என்றான்.

"உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா பரவாயில்ல தம்பி, பாட்டு தான சும்மா எழுதுங்க" என்றாள் அந்தப் பெண்மணி.

"இல்ல மேடம் என்னால முடியாது" என்று எழுந்தான் ருத்ரன்.

"10,000 ரூபாய் தம்பி, அது மட்டுமில்ல இந்த மியூசிக் டைரக்டர் சினிமா துறையிலயும் இப்போ நல்லா வளந்து வந்துட்டு இருக்காரு. இத எழுதிக் குடுத்தீங்கன்னா வேற நிறைய பாட்டுக்கு சான்ஸ் கிடைக்கும்" என்றாள் அந்தப் பெண்மணி.

"நீங்க சொல்ல வரது புரியுது. உங்க அன்புக்கு நன்றி. ஆனா என்னால மதம் சார்ந்த பாட்டை எழுத முடியாது மேடம்" என்று சொல்லிவிட்டு நகர்கையில் அவன் அலைபேசி சிணுங்கியது, வீட்டு ஒனர்…

'ஹலோ' என்றான்.

"ருத்ரா ஒரு பையன் மாடி ரூம் வாடகைக்கு கேட்டு வந்துருக்கான்பா. உன்னால வாடகைய குடுக்கமுடியலேன்னா இப்பவே சொல்லிடு இந்த பையனுக்காவது வாடகைக்கு விட்டுடறேன். கையில அட்வான்சோட நிக்கறான்" என்றார் ஓனர்.

"இன்னிக்கி கண்டிப்பா குடுத்துடுவேன் சார். இப்போ ரிக்கார்டின்ங் ரூம்ல தான் இருக்கேன். ப்ளீஸ் அந்த மாதிரியெல்லாம் எந்த முடிவும் எடுத்துடாதிங்க" என்றான் ருத்ரன்.

"ஓகே ஓகே" என்று கூறி அலைபேசியைத் துண்டித்தார் ஓனர்.

அந்தப் பெண்மணி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எழுதறேன் மேடம்" என்று கூறி ருத்ரன் பேனாவையும், நோட்டையும் எடுத்தான்.

மியூசிக் டைரக்டர் வந்தார். ருத்ரனுக்கு அவருடைய முகம் மிகவும் பரிட்சயமாகியிருந்தது. அவருடைய சமீப கால பாடல்களை ருத்ரன் நிறைய கேட்டிருக்கிறான். அவர்கள் புன்னகையைப் பரிமாறிக்கொண்டனர். அவர் மெட்டு போட்டத் துவங்கினார். கடைசியாக ஒரு மணி நேரத்தில் மெட்டைப் போட்டுக் காண்பித்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாட்டை எழுதிக் கொடுத்தான் ருத்ரன். பாட்டு ரிக்கார்டின்ங் முடிந்தது. அந்த மியூசிக் டைரக்டர் அவனிடம் எதுவும் பேசவில்லை. கிளம்பி போய்விட்டார்.

அந்தப் பெண்மணி 10,000 ரூபாயை நீட்டினாள். அதை வாங்கிக் கொண்டான் ருத்ரன். அந்த ரூபாய் நோட்டிலிருந்த காந்தி தாத்தா அவனை அசிங்கமாய்ப்  பார்ப்பது போல் தோன்றியது அவனுக்கு. இயலாமையின் அருவருப்பு அவன் இளமையைக் காரி உமிழ்ந்தது. அவனுக்கு அவன் மீதே அப்படி ஒரு ஆக்ரோஷம் வந்தது. கோவத்துடன் வெளியே வந்தான் ருத்ரன். மணி 7 ஆகியிருந்தது . உக்கிர வானத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கருமேகம் விழுங்கிக் கொண்டிருந்தது. அவனுக்கோ பசி லேசாகத் தலையைக் காட்டத் துவங்கியது.

அருகிலிருந்த அந்த ரோட்டுக் கடையில் 4 புரோட்டாவையும் சால்னாவையும் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்தான் ருத்ரன். சாக்கடை நாற்றம் வீசும் குறுக்குச் சந்து ஒன்றில் நுழைந்தான். ஏனோ அந்த புரோட்டாவை அந்த சாக்கடையில் போட்டுவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு. யாரோ விசும்பும் சத்தம் கேட்டு சுற்றி முற்றிப் பார்த்தான் ருத்ரன். தெரு விளக்கின் கீழே நின்று கொண்டு இரண்டு சிறுவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்.

அவர்களிடம் சென்று "என்னாச்சுடா" என்று கேட்டான் ருத்ரன்.

அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தேம்பி தேம்பி அழுதார்கள். தன்னிடமிருந்த அந்த புரோட்டா பொட்டலத்தை அவர்களிடம் பிரித்துக் கொடுத்தான் ருத்ரன். இரண்டு சிறுவர்களும் அவசர அவசரமாய் அதைத் தின்று தீர்த்தார்கள். ருத்ரனைப் பார்த்து இருவரும் சிரித்தார்கள். ஒருவன் தன் கிழிந்து போன டிராயர் பாக்கெட்டிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து ருத்ரனிடம் நீட்டி,

"இதுல என்ன மாமா எழுதியிருக்கு" என்று கேட்டான்.

ருத்ரன் அதை வாங்கி வாசித்தான்.


"குழைந்திடும் இரவிலே

குழல் நாத சுனையிலே

நனைந்திடும் என் மனதில்

ஆசை விதை

உன் விரலதன் ஸ்வரிசத்தில்

கசிந்திடும் மூங்கில்கள்

இசைதரும் மயக்கத்தில்

வளைந்த இடை

காதல் காதல்

உன் பார்வைக் கூதல்

மோதல் மோதல்

நம் விழியின் சாரல்"


அவன் காலையில் மியூசிக் டைரக்டர் அஷ்வின் வீட்டில் எழுதி வைத்துவிட்டு வந்த சரணம். அவன் பாடல் அவ்வளவு சீக்கிரம் ஜனரஞ்சகமாகிவிடும் என்று ருத்ரன் எதிர்பார்க்கவில்லை.

"என்னது மாமா அது?" என்று கேட்டான் அந்த சிறுவன்.

"ஹா ஹா ஹா ஹா" என்று வாய் கொள்ளாமல் சிரித்தான் ருத்ரன்.

"டேய் கிறுக்கு மாமாடா, கிறுக்கு மாமாடா" என்று கை தட்டிக்கொண்டே ஓடி இருட்டில் மறைந்தார்கள் அந்தச் சிறுவர்கள்.


நா தின்று

இரைப்பை தின்று

மூளை தின்று

தன்மானம் தின்று

காதல் தின்று

கண்ணீர் தின்று

காதலி ஆசையும் தின்று

போதாதென்று என்

கொள்கை தின்று

ஊன் வளர்க்கும்

அகோரப் பசியே!

கிறுக்கர்கள் இல்லையென்றால்

என் செய்வாய்?

கிறுக்காகிச் சிரிப்பாயோ

கொடும் பசியே!



Rate this content
Log in

Similar tamil story from Abstract