STORYMIRROR

DEENADAYALAN N

Abstract

5.0  

DEENADAYALAN N

Abstract

ஞாயம்தானா? - நான்கு

ஞாயம்தானா? - நான்கு

2 mins
35.4K



அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சென்ற ‘ஞாயம்தானா?’ பதிவுகளில் உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். இந்தப் பதிவிலும் ‘இது ஞாயம்தானா?’ என்று உங்களிடம் கேட்கும் படியான ஒரு அபூர்வமான சம்பவம்தான் இது.


படித்து விட்டு சொல்லுங்கள்.


‘அவர்கள் பதினைந்து பவுன் போடுவதாக சொல்கிறார்கள். அம்மா இருபதிலேயே அடமாக நிற்கிறாள்.’


இதுதான் இந்த சம்பவ நாயகனின் பிரச்சினை.


இனி அந்த அந்த நாயகனின் வார்த்தைகளை நேரடியாக அவன் வாய் மூலமாகவே கேளுங்கள்:


‘எனக்கு பெண் வீட்டார் நிலைமையை பார்க்க பாவமாக இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல. மொத்தம் மூன்று பெண்கள் அந்த வீட்டில் இருந்தார்கள்! அனைவரையும் கரையேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? அதற்கு அந்த பெற்றோர் படாத பாடு பட வேண்டும்.


ஆனால் என் அம்மாவோ இருபது பவுன் போட்டே ஆக வேண்டும் என்று அடமாக இருக்கிறாள்.


 யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.’


அலுவலகம் வந்தவுடன் நேற்று நான் பார்த்து விட்டு வந்த மணப் பெண்ணிற்கு போன் செய்தேன்.


போனை எடுத்தவள் தயங்கித் தயங்கித்தான் பேசினாள். என்றாலும் நான் விஷயத்தைப் போட்டுடைத்தேன்.


‘இதோ பாருங்கள்.. ஐந்து பவுன் நகையை நான் வாங்கி உங்களிடம் தந்து விடுகிறேன். உங்கள் வீட்டாரிடம் - நீங்களே ஏதோ லோன் போட்டு நகைக்கு ஏற்பாடு செய்ததாக சொல்லி – நகையைக் கொடுத்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்த விஷயம் இறுதிக் காலம் வரை நமக்குள்ளேயே இருக்கட்டும். இதனால் நம் கல்யாணமும் நடந்த மாதிரி இருக்கும். உங்கள் வீட்டாருக்கு நகையும் மிச்சமாகும். அந்த நகைகள் உங்களின் மற்ற தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் சமயங்களில் உதவியாக இருக்கும்.’ என்றேன்.


‘ஆஹா நீங்கள் தெய்வம்.. உங்களுக்குக் கோயில் கட்டிக் கும்பிட வேண்டும்.. மகாத்மா காந்திக்கு அடுத்த படியாக நீங்கள்தான்…’ என்றெல்லாம் ஏதாவது சொல்லி பாராட்டுவாள் என்று எத

ிர்பார்த்த எனக்கு பெருத்த ஏமாற்றம்.


‘ஏங்க.. உங்களுக்கு என்ன லூஸா பிடித்திருக்கிறது. எனக்கு என் விட்டிலிருந்து வர வேண்டிய நகைகளை நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? எப்பாடு பட்டாவது எங்களுக்கு செய்ய வேண்டியது, எங்கள் பெற்றோர் கடமை. நீங்கள் கொஞ்சம் பொறுங்கள். எப்படியும் எங்கள் பெற்றோர் இறங்கி வருவார்கள். அப்போது சம்மதம் சொல்லி வீட்டாரின் மூலமாகவே திருமணம் செய்து கொள்வோம்.’ என்றாள் உறுதியாக.


அதிர்ச்சியுடன் யோசித்தேன். என்ன அநியாயம்? தன் சகோதரிகளுக்கே விட்டுக் கொடுக்காத இந்தப் பெண் எனக்கு மனைவியாக வந்தால் - மூன்று சகோதர சகோதரிகளுடன் வசிக்கும் என் வீட்டாரோடு ஒத்துப் போவாளா..! என்று தோன்றியது.


‘அம்மா. இந்தப் பெண் வேண்டாம் என்று கூறி விடு. வேறு பெண்ணைப் பார்க்கலாம்.’ என்றேன்.


அம்மா ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள்!


‘அவர்கள் இருபது பவுன் போடுவதற்கு ஒத்துக் கொண்டாலும் வேண்டாமா..!’ – அம்மா சந்தேகத்துடன் கேட்டாள்.


‘ஆம்.. அவர்கள் இருபது பவுன் போடுவதற்கு ஒத்துக் கொண்டாலும் வேண்டாம்..’


இப்படி முடிக்கிறார் இந்த சம்பவத்தின் நாயகன்!


இவ்வளவு புத்திசாலித்தனமாக நகைகளுடன் வர விருந்த ஒரு பெண்ணை இந்த சம்பவத்தின் நாயகன் ஒதுக்கி விட்டாரே.. இது ஞாயம்தானா?


உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்


அடுத்த பதிவு ஓரிரு நாளில்!






















Rate this content
Log in

Similar tamil story from Abstract