இணை முறிந்தால் உள்ளம் உருகும்!
இணை முறிந்தால் உள்ளம் உருகும்!


துவங்கும் முன் நான் படித்த ஒரு காதல் கவிதை
நீ பாதி நான் பாதி!
ஆயிரம்…
காதலர் தின
வாழ்த்து அட்டைகள்
அவள் கையில்
அவன் திணித்தான்.!
அவ்வளவு காதலா என்மேல்!
ஆசையாய்க் கேட்டாள் அவள்
‘இல்லை இல்லை இல்லை
அனைத்தையும் விற்போம்.
லாபத்தில் ஆளுக்குப் பாதி!
வந்தது கோபம்
கொடுத்தனள் சாபம்!
இது நகைச்சுவைதான். ஆனால் இது கூட சில நேரங்களில் காதல் முறிவுக்கு களம் அமைத்து விடக்கூடும்.
அணை உடைந்தால் வெள்ளம் பெருகும்
இணை உடைந்தால் உள்ளம் உருகும்!
காதலர் இணைந்தால் கல்யாணம் நடக்கும்
காதல் முறிந்தால் காவியம் கிடைக்கும்!
இப்படி காதல் முறிவு பற்றி நகைச்சுவையாகவும், கவித்துவமாகவும் ஏராளமான நெஞ்சைத் தொடும் கவிதைகளும் சொற்றொடர்களும் உண்டு.
அதில், நான் சொல்லும் இந்தக் கதையில், சுந்தர்-சுதா ஆகியோரின் காதல் பிளவுக்கான ஒரு வித்தியாசமான காரணத்தைப் பார்க்கலாம்.
சுந்தர்-சுதாவின் காதல் சாதாரணமானது அல்ல. அதற்கு சான்றாக, இதோ, அவர்களின் ‘வாட்ஸப்’ உரையாடல்.
அவன்:
சூரியனாய் நீ இருந்தால்
பகலாக நான் இருப்பேன்
அவள்:
சந்திரனாய் நீ இருந்தால்
இரவாக நான் இருப்பேன்
அவன்:
மேகமாய் நீ இருந்தால்
மழையாக நான் இருப்பேன்
அவள்:
கடலாய் நீ இருந்தால
அலையாக நான் இருப்பேன்
அவன்:
படகாய் நீ இருந்தால்
துடுப்பாக நான் இருப்பேன்
அவள்:
ஊர்தியாக நீ இருந்தால்
உந்துநீராய் நான் இருப்பேன்
அவன்:
பறவையாக நீ இருந்தால்
வானமாக நான் இருப்பேன்
அவள்:
மீனாக நீ இருந்தால்
நீராக நான் இருப்பேன்
அவன்:
மானாக நீ இருந்தால்
கானகமாய் நான் இருப்பேன்
அவள்:
மனிதனாக நீ இருந்தால்
பண்பாக நான் இருப்பேன்
அவன்:
இலக்கியமாய் நீ இருந்தால்
இலக்கணமாய் நான் இருப்பேன்
… …
இப்படி இரவு முழுவதும் கண் விழித்து இலக்கியம் படைத்தவர்கள் ஏன் பிரிந்தார்கள்?
ஒரு நாள் சுதா அதை கவனித்தாள். இருவரும் ப்ரூக் ஃபீல்ட் பேரங்காடி உணவகத்தில் உணவருந்தி விட்டு வெளியே வரும் சமயத்தில், சுந்தர், ஒரு சிறிய ‘’ஸ்பூன்’ மீது கைவைத்து மூடி, அதை தன் கால்சட்டைப் பையில் நுழைத்துக் கொண்டான்.
சுதாவுக்கு அதிர்ச்சி. இவன் ஏன் இப்படி செய்கிறான்? இவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த திருட்டு புத்தி? ஆனால் அவனிடம் எதுவும் கேட்காமல் அன்று குழப்பத்துடன் வீடு திரும்பி விட்டாள்.
அதன் பிறகு உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
ஒரு புத்தகக் கடையில் புத்தகம் வாங்கிய சமயத்தில், கைக்கு அடக்கமான ஒரு புத்தகத்தை தன் ‘பாக்கெட்’டில் போட்டுக் கொண்டான். பில் போடும் சமயம் ‘பில்லிங்’ எந்திரம் காட்டிக் கொடுத்து விட்டது.
‘சாரி.. தவறுதலாக..’ என்று கடைக்காரரிடம் இவன் பணிவாய் சொல்ல, ஒரு பெண்ணுடன் இருந்ததாலோ, என்னவோ, இளைஞனாய் இருந்த பில் போடுபவர், அதை பெரிது படுத்தாமல் ல் விட்டு விட்டார்.
அதன் பிறகுதான் சுதா சுந்தரிடம் கோபமாய்க் கேட்டாள்: ‘ஏன் அப்படிச் செய்தாய்?’
‘ஒன்றுமில்லை,, அது.. தவறுதலாய்..’ என சுந்தர் சமாளித்தான்.
சுதா மனம் தளர ஆரம்பித்தாள். ‘ஒரு திருடனா தன் காதலன்?’ என நொந்து போனாள்.
அதன் பிறகும், ஆங்காங்கே சுந்தரின் இந்த செயல் தொடர, சுதா அவனை பலமாக கண்டிக்க ஆரம்பித்தாள்.
‘இல்லை சுதா.. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.. ‘ என்று ஏதேதோ சமாதானம் சொன்னான். அவனால் விளக்க முடியவில்லை.
சுதாவின் பிறந்த நாள் அன்று அவளுக்கு ஒரு பரிசு வாங்கித் தர அவளை ஒரு கடைக்கு அழைத்துப் போனான் சுந்தர். அது ஒரு ‘கூலிங் க்ளாஸ்’ கடை! சுதாவை வற்புறுத்தி, ‘ப்ராண்டட் கூலிங் க்ளாஸ்’ ஒன்றை வாங்கி அங்கேயே மாட்டி விட்டான். பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்தார்கள்.
பத்தடி நடக்கும் முன், கடைக்காரர் பின்னால் ஓடி வந்து, சுந்தரின் சட்டைக் காலரைப் பிடித்து ‘டேய்.. பாக்கெட்டில் திருட்டுத் தனமாய் வைத்ததை வெளியே எடு..’ என்று சுந்தரின் கால் சட்டைப் பையில் கை விட்டார். அங்கே ‘கூலிங்க்ளாஸை’ சுத்தம் செய்யும் ஒரு ‘ஜெல்’ பாட்டில் இருந்தது. மிகுந்த கூட்டம் கூடியது. நல்ல வேளை. சுதா கடைக்காரிடம் மன்னிப்பு கேட்டு அவனை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறினாள்.
அதன் பின் சுதா கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரை விட்டு விலகினாள். ஆழ்ந்த மனப் போராட்டத்துக்குப் பிறகு ‘சுந்தரைப் போன்ற பழக்கமுள்ள ஒரு ஆளுடன் வாழ்நாள் முழுவதும் வாழ்வது சாத்தியமில்லாத ஒன்று என்பதை உணர்ந்தாள். எனவே ஒரு முடிவு செய்தாள்.
சுந்தரால் எவ்வளவு முயன்றும் சுதாவை அதன் பிறகு சந்திக்க இயலவில்லை. அவள் பணி புரியும் இடத்தில் அவள் ‘ராஜினமா’ செய்து விட்டாள் என்று கூறினார்கள். அவள் தங்கி இருந்த விடுதியில், ‘காலி செய்து கொண்டு அவள் வெளியேறி விட்டாள்’ என்று கூறினார்கள். அவளுடைய தோழிகள் என்று இவனால் கருதப் பட்டவர்களாலும், ஏதும் பயனுள்ள தகவலை இவனுக்கு கொடுக்க இயலவில்லை.
நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடமாகவும் மாறிவிட்டது. எந்த தகவலும் இல்லை. சுந்தரால் தன் சோகத்தை மாற்ற முடியவில்லை. சுதா பணி நிமித்தம் அமெரிக்கா சென்று விட்டதாக சிலர் சொன்னார்கள். அவளுக்கு மணமாகி விட்டது என்றும் சிலர் சொல்லக் கேள்வி.
சுதாவுக்கும் தனக்கும் இடையே காதல் முறிந்ததற்கு தன் நடவடிக்கைகள்தான் காரணம் என்பது சுந்தருக்கு அப்பட்டமாக தெரிந்தது.
சோகமயமாக இருந்தவனை நண்பர்கள் நெருக்கமாக அணுகி விபரம் கேட்க சுந்தர் அனைத்தையும் கொட்டித் தீர்த்தான்.
ஏதேச்சையாக சுந்தரின் நெருங்கிய நண்பன், தன் மருத்துவ நண்பர் ஒருவரிடம் சுந்தரின் சோக் கதையைக் கூற நேர்ந்த போது, ஒரு பொறி தட்டினாற்போல் சில விபரங்கள் தெரிய வந்தது.
சுந்தருக்கு இருந்தது திருட்டுப் பழக்கமல்ல. அது, எளிதில் கட்டுப்படுத்த முடியாத, மனம் சம்மந்தப்பட்ட, ஒரு வித கோளாறாம். ‘க்ளெப்டோமேனியா’ என்று சொல்வார்களாம். சில பயிற்சிகள் மூலம் குணப்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளதுதானாம்.
ஆனால் இதைத் தெரியப்படுத்த சுதா இல்லை. அப்படியே தெரியப்படுத்தினாலும் முறிந்த காதலை ஏற்றுக் கொள்வாளா என்பதும் தெரியாது!