Aparajit Raghvan

Drama

4.7  

Aparajit Raghvan

Drama

தலைவலி

தலைவலி

5 mins
373


ஆபிஸில் லஞ்ச் சாப்பிடும்பொழுது பக்கத்து டேபிளில் யாரோ ஒருவர் தன் சித்தப்பா மகளின் ரிசெப்ஷன் பற்றி மொத்த கேன்டீனுக்கும் உரைத்துக்கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று ஞாபகம் வந்தது. இன்று இரவு திருச்சி போக ட்ரெயின் டிக்கெட் புக் செய்திருந்தேன். புக்கிங் செய்து மூன்று வாரங்கள் ஆயிற்று. ஆபீஸ் வேலைகளில் இதை மறந்தே போனேன்.


நாளை காலை பாலாமணி மாமாவின் சஷ்டியப்தபூர்த்தி. அவர் மகள் கல்யாணத்திற்க்கே போக முடியவில்லை. கோபித்துக்கொண்டு இரண்டு வருடம் என்னிடம் பேசாமல் இருந்தார். இப்பொழுது சஷ்டியப்தபூர்த்திக்கு நான் போகவில்லை என்றால் நேரில் வந்து என்னை உதைப்பார். அவ்வளவு பாசம் என் மேல்.


இப்பொழுது மணி இரண்டு. ட்ரெயின் இரவு 8 மணிக்குதான். ஆபீசில் இருந்து ஐந்து மணிக்கு புறப்பட்டால் சரியாக இருக்கும். வீட்டிற்கு போய் ஒரு வாய் காஃபி குடித்துவிட்டு கிளம்பலாம். ஜானகிக்கு போன் செய்தேன். வேஷ்டி, சட்டை, ஒரு நாளைக்கு தேவையான மற்ற இத்யாதிகளை எடுத்து வைக்க சொன்னேன்.


ஐந்து மணிக்கு கிளம்பும்பொழுது மேனேஜர் பூதத்திற்கு மூக்கு வியர்த்தது. "என்ன நடராஜன்... அதுக்குள்ள கிளம்பியாச்சா? இன்னைக்கு வேலை எதுவும் இல்லை போல?" என்று பாசமாய் வினவினார். "அது இல்ல சார்... நாளைக்கு கார்த்தால என் மாமாவுக்கு திருச்சில சஷ்டியப்தபூர்த்தி. இன்னைக்கு நைட்டுக்கு ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணியிருந்தேன். நம்ம ஆபீஸ் ஆன்னுவல் ஆடிட் வேலைகள்ல மறந்தே போய்ட்டேன்... அதான் கிளம்பலான்னு" என்று தன்னிலை விளக்கம் கூற முயன்றேன். கண்ணாடியை துடைத்துக்கொண்டே "ஆகட்டும், ஆகட்டும்" என்றார்.


அவருக்கு ஒரு "ஹி ஹி ஹி" யை அர்ப்பணித்துவிட்டு வெளியே ஸ்கூட்டர் எடுக்க பார்க்கிங் வந்தேன். செக்யூரிட்டி "என்ன சார்!" என்றான் ஆச்சரியத்தோடு. தன்னிலை விளக்கம் பார்ட் 2 ஆரம்பிக்க நேரமில்லை. "ஹி ஹி ஹி" பார்ட் 2 வை முடித்துக்கொண்டு கிளம்பினேன். லேசாக தலைவலிக்க ஆரம்பித்தது. வீட்டில் ஜானகியின் காஃபி வெயிட்டிங். சர்ரென்று கிளம்பினேன்.


இன்று என்னமோ டிராஃபிக் வழக்கத்திக்கு அதிகமாக இருந்தது. யாரோ ரிட்டையர் ஆன லோக்கல் ரவுடி மண்டையை போட்டுவிட்டானாம். 8 கிலோமீட்டர் தூரமுள்ள வீடு இன்று இவன் தயவால் 13 கிலோமீட்டர் தூரமானது. தலைவலி லேசாக சூடுபிடித்தது. சகித்துக்கொண்டு வண்டியை கூகிள் மேப்பிற்க்கு கூட தெரியாத சந்துகளில் ஓட்டிக்கொண்டு வீடு சேர்ந்தேன். மணி ஆறேகால்.


"ஜானும்மா... தலைய ரொம்ப வலிக்கறதுடீ. ஸ்டராங்கா ஒரு காஃபி தாயேன்" என்றபடியே வீட்டினுள் நுழைந்தேன். என் ஜானு, அலையஸ் ஜானகி, "அப்போவே கிளம்பினேளே? என்ன இவ்வளவு லேட்டு?" என்றபடியே காஃபியுடன் வந்தாள். ரிட்டையர் ஆன ரௌடியின் கண்ணீர் அஞ்சலியை ஜானகிக்கு காஃபிக்கு நடுநடுவே பாடி முடித்தேன். "சரி சரி... குளிச்சுட்டு கிளம்புங்கோ... லேட் ஆகப்போறது" என்றபடி தன் பெவிலியனுக்கு சென்றாள்.


வேகமாக குளித்து ரெடியாகி பையை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். ஜானு நான் சொன்னதைவிட பையில் ஒரு செட் துணிமணி அதிகமாகவே வைத்திருந்தாள். எல்லாவற்றிலும் அவளுக்கு ஒரு முன்ஜாக்கிரதை உண்டு. "ஜானு... போயிட்டு வரேன்டீ" என்றபொழுது, "ட்ரெயின் டிக்கெட் மெசேஜ் வெச்சிருக்கேளா இல்ல டிலீட் பண்ணிட்டேளா? எதுக்கும் எனக்கு ஃபார்வர்ட் பண்ணிடுங்கோ... டிக்கெட் புக் பண்ணின அன்னைக்கே கேட்டேனே" என்றாள். "ஸ்டேஷன் போனதும் முதல் வேலையா அனுப்பறேன். இப்போ லேட் ஆச்சுடீ" என்றேன். "சரி, அப்படியே மாமாவோட வாட்ஸாப் இன்விடேஷனையும் அனுப்புங்கோ. எந்த சத்திரம், எப்போ முஹூர்த்தம், ஒண்ணுமே சொல்லலை என்கிட்ட..." என்று லேசாக கோபித்துக்கொண்டாள். "சரிடீ... நானும் பிசியாவே இருக்கேனே... மறந்து போய்ட்டேன். அதையும் சேர்த்தே அனுப்பறேன். இப்போ லேட்டாச்சு" என்றபடியே வாசல் வந்து தெருமுனை ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி வேகமாய் நடந்தேன்.


மணி ஏழு. ஆட்டோவில் ஏறியவுடன் முதல் வேலையாக டிக்கெட் மெசஜையும் மாமாவின் வாட்சாப் பத்திரிக்கையையும் ஜானகிக்கு அனுப்பினேன். ஆட்டோ டிரைவர் தெரிந்தவன். வண்டி வேகத்தைவிட பேச்சு அதிகம். வேறு ஒரு நாளாக இருந்திருந்தால் சரிக்கு சமமாக அவனோடு பேசியபடி போயிருக்கலாம். இன்று முடியவில்லை. தலைவலி ஒரு பக்கம், ட்ரெயினுக்கு லேட்டாகும் டென்ஷன் இன்னொரு பக்கம். ஒன்றும் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டேன். என்னையறியாமல் அசதியில் கொஞ்ச நேரம் லேசாக தூங்கியும்விட்டேன்.


திடீரென்று பட்டாசு வெடிக்கும் சத்தம். அலறிக்கொண்டு கண்விழித்து பார்த்தேன். ஆட்டோ ஓடவில்லை. வெளியே டிரைவர் சோகமாய் முன் டயரை பார்த்துக்கொண்டே ""எத்தினி மணிக்கு சார் ட்ரெயின் உனக்கு?" என்று கேட்டான். "என்னப்பா... என்னாச்சு?" என்றேன் டென்ஷானாய். "டயர் பன்ச்சர் சார்... வேற வண்டி வேணா புடிக்கவா?" என்றான். 


ஸ்டேஷன் இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம்தான். வேகமாய் நடந்தால்கூட 10 நிமிடங்கள்தான் ஆகும். ஆனால் முன்னே ஒரு நோ என்ட்ரி இருப்பதால் ஆட்டோவில் சுற்றிக்கொண்டு போக எப்படியும் 20 நிமிடங்களாவது ஆகிவிடும்.


மணி ஏழரை. ட்ரெயின் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள்தான் பாக்கி. தலைவலி இப்பொழுது சூறாவளியாக மாறியிருந்தது. டிரைவரிடம் எதுவும் பேசாமல் பணத்தை கொடுத்துவிட்டு ஸ்டேஷன் பக்கமாக வேகநடை போட ஆரம்பித்தேன். வியர்த்து கொட்டியது. மூச்சு வாங்கியது. நெஞ்ஜில் கொஞ்சமாய் ஈட்டி பாய்வதுபோல் வலி. ஜானுவின் நித்யார்ச்சனை ஞாபகத்தில் வந்த போனது... "தினம் கார்த்தால ஒரு அரைமணி நேரம் வாக்கிங் போகக்கூடாதா..."


ஓட்டமும் நடையுமாய் ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வந்து சேர்ந்தேன். ஸ்டேஷன் கடிகாரத்தில் மணி 7.47. வேகம் குறைக்காமல் மூன்றாம் ப்ளாட்ஃபாரம் நோக்கி ஓடினேன். நல்லவேளை ப்ரிட்ஜ் எதுவும் ஏறி இறங்க வேண்டாம். மார்க்கெட்டில் பர்ஸ் அடித்துவிட்டு ஓடும் பிக்பாக்கெட் ஆசாமி போல ஓடினேன், வழியில் சரமாரியாக வசவுகள் வாங்கிக்கொண்டே.


கம்பார்ட்மெண்ட் எஸ்-3 என்று பார்த்தது போலே ஞாபகம். பேய் வேகத்தில் போய் எஸ்-3 கம்பார்ட்மெண்டில் ஏறிக்கொண்டேன். வாட்ச்சில் மணி 7.55. ஒரு இனம் புரியாத நிம்மதி... ஏதோ மாரத்தான் ஓடி முடித்த மாதிரி. கம்பார்ட்மெண்ட் கதவு பக்கத்தில் சாய்ந்து நின்று சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். 


பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து கம்பார்ட்மெண்ட் நம்பரையும் சீட் நம்பரை ஒருமுறை சரி பார்த்துக்கொண்டேன். எஸ்-3, சீட் 43. ஒவ்வொரு சீட்டாக பார்த்துக்கொண்டே 43-க்கு வந்து சேர்ந்தேன். அங்கே ஒரு வடநாட்டு குடும்பம் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். எனக்கும் லேசாக பசித்தது. அடுத்த ஸ்டேஷனில் ஏதாவது சாப்பிட வாங்க வேண்டும்.


"நமஸ்தே... மேரா சீட் நம்பர் 43. ஐ வில் வெயிட்... யூ ப்ளீஸ் டேக் யுவர் டைம்" என்றேன் பெருமிதத்துடன்.


அவர் என்னை பார்த்து "43-ஆ? இருக்காதே... உங்க சீட் நம்பரை இன்னொருவாட்டி செக் பண்ணுங்க சார்... 41 டூ 47 எங்க சீட் நம்பர்ஸ்..." என்றார் தமிழில். நான் "சார், என் டிக்கெட் மெஸேஜை இப்போதான் செக் பண்ணேன். உங்க டிக்கெட்டை காட்ட முடியுமா..." என்றேன் சற்று கடுப்பாக. அவர் பாக்கெட்டில் கையைவிட்டு டிக்கெட் பிரிண்ட்-அவுட்டை எடுத்து நீட்டினார். அவர் டிக்கெட்டிலும் எஸ்-3 கம்பார்ட்மெண்ட், சீட் 41 டூ 47 என்று இருந்தது...


அவர் என்னிடம் "சார்... ஏதோ புக்கிங் மிஸ்டேக் போல தெரியுது. நீங்க எதுக்கும் டிடிஈ கிட்ட போய் பேசிப்பாருங்க" என்றார். எனக்கு வந்த கோபத்தை வெளியே காட்டாமல் "சார்... உங்க டிக்கெட் தப்பா இருக்கக்கூட சான்ஸ் இருக்கு இல்லையா? வாங்க, ரெண்டு பேரும் போய் கேட்போம்" என்றேன். அவர் "இல்ல சார்... க்ரூப் புக்கிங்ல ஒரு டிக்கெட் மட்டும் தப்பா இஷ்யூ பண்ண சான்ஸ் இல்ல. நீங்க ஒருவாட்டி செக் பண்ணுங்க. நான் பின்னாலயே வரேன்" என்றார் விரலை நக்கிக்கொண்டே. என் தலைவலி தாண்டவமாடிக்கொண்டிருந்தது.


பாகுபலி கிலிகிலி பாஷை ஞாபகம் இருக்கிறதா? அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு நான் அவரைப்பார்த்து கத்தியது அப்படித்தான் கேட்டிருக்கும் எல்லோருக்கும். கம்பார்ட்மெண்ட்டே வேடிக்கை பார்த்தது. அந்த வடநாட்டவர் கூலாக சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டே என்னை பார்த்து "இப்போ என்ன பண்ணனுங்கறிங்க? சீட் உங்களுதுன்னு டீடீஈ சொல்லட்டும், நான் எந்திரிக்கறேன்" என்றார்.


மணி 8.08. நல்லவேளையாக ட்ரெயின் இன்னும் கிளம்பவில்லை. டீடீஈ தற்செயலாக எஸ்-3 கம்பார்ட்மெண்டுக்கே வந்தார். நான் வேகமாய் அவரிடம் சென்று விஷயத்தை சொன்னேன். டீடீஈ வடநாட்டவரிடம் "உங்க டிக்கெட் காமிங்க சார்" என்றார். இவ்வளவு தலைவலியிலும் எனக்கு ஒரு பெருமை. என்னிடம் டிக்கெட்டை கேட்காமல் வடநாட்டவரிடம் கேட்டாரே என்று.


என் போன் அடித்தது. ஜானு. நல்லபடியாக வந்து சேர்ந்தாச்சா என்று கேட்பதற்காக இருக்கும். போனை எடுத்து "ஜானு, இங்க டிக்கெட்ல ஒரு பிரச்சனை. டீடீஈ பேசிண்டு இருக்கார். நான் ஒரு பத்து நிமிஷத்துல பண்றேன்" என்று வைத்துவிட்டேன்.


டீடீஈ இப்பொழுது என்னிடம் "சார், உங்க டிக்கெட்டை கொஞ்சம் காட்டுங்க" என்றார். நான் போனில் மெசேஜை ஓப்பன் பண்ணும் நேரத்தில் மறுபடியும் ஜானுவின் போன் கால். எனக்கு லேசாக எரிச்சல். போனை கட் செய்து மெசேஜை ஓப்பன் பண்ண முயன்றேன். ஜானு மறுபடியும் கால் செய்தாள். டீடீஈ-யிடம் "ஒரு நிமிஷம் சார்" என்று கூறியபடியே போன் காலை அட்டெண்ட் செய்தேன்.


"ஜானு! நான்தான் கொஞ்ச நேரத்துல பண்றேன்னு சொன்னேனா இல்லையா... எதுக்கு இத்தனைதரம் கால் பண்ணிண்டே இருக்கே... அப்படி என்ன தலை போற காரியம்?" என்றேன் கோபத்துடன்.


"உங்களுக்கு கொஞ்சமாவது ஏதாவது இருக்கா... உங்க டிக்கெட்ட பாருங்கோ. சஷ்டியப்தபூர்த்தி முஹூர்த்தம் அடுத்த மாசம். ட்ரெயின் டிக்கெட்டும் அடுத்த மாசத்துக்குதான் எடுத்துருக்கேள். நான் இப்போதான் உங்க மெசஜை பார்த்தேன். இத கூடவா சரியா பாக்கமாட்டேள்? பேசாம கெளம்பி வாங்கோ... சுடச்சுட சப்பாத்தியும் சன்னாவும் பண்ணி வெக்கறேன்".


என் முதுகுக்கு பின்னால் டீடீஈ-யின் குரல்... "சார்... உங்க டிக்கெட்ட காட்டுங்க சார்... ஹல்லோ". அந்த வடநாட்டவர் என்னை பார்த்து கையை நீட்டி நீட்டி கிலிகிலி பாஷையில் என்னமோ சொல்லிக்கொண்டு இருந்தார். ஜானு பேசுவதை கேட்டுக்கொண்டே தன்னிச்சையாக நான் எஸ்-3 கம்பார்ட்மெண்ட்டை விட்டு மெதுவாக கீழே இறங்கினேன்.


தலைவலி இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லையாக தோன்றியது.


Rate this content
Log in

More tamil story from Aparajit Raghvan

Similar tamil story from Drama