ஒரு சாமான்யனின் இலக்குகள்!
ஒரு சாமான்யனின் இலக்குகள்!


“அஷோக்.. இந்த நாள்.. உன்னோட காலண்டருலெ குறிச்சி வெச்சிக்கோ…. உன் குடும்பத்தெ நடுத் தெருவுக்கு கொண்டு வரலே… எம் பேரு அண்ணாமல இல்லடா..” அப்பிடின்னு ரஜினி மாதிரி தொடை தட்டியோ
அல்லது
“தில்லானா வாசிச்சு உன் முட்டிய நான் உடைக்கலே,,என் பேர மாத்திக்கிறேன்..” அப்பிடீன்னு சிவாஜி மாதிரி சொடுக்குப் போட்டோ நான் எந்த சபதமும் எடுத்ததில்லை!
மகாபாரதத்தில் பஞ்சாலியின் சபதம் நிறைவேற பஞ்சபாண்டவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அந்த வகை சபதங்கள் ஒரு நீதியை நோக்கி நகர்வதால் அதை சாமான்ய மனிதனோடு பொருத்திப் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.
ஆனால் இயல்பு வாழ்க்கையில் நம்முடைய ஒவ்வொரு இலக்கும் நாம் எடுக்கும் ஒரு சபதம்தான்.
இன்னது படிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உழைப்பதும், வியாபாரங்களில் விற்பனை இலக்கு நிர்ணயித்து உழைப்பதும் – தொழில்களில் உற்பத்தி இலக்கு நிர்ணயித்து உழைப்பதும் ஒரு சபதம் என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவை எல்லாம் நமக்கு நாமே நம் உழைப்பை மட்டுமே நம்பி எடுத்துக் கொள்ளும் சபதங்கள்.
‘அவன் மட்டும் என்ன ஏமாத்திட்டு போனான்.. அவனை அப்பாகிட்டே மாட்டி உடாம இருக்க மாட்டேன்’ என்பது போன்ற சபதங்கள் அடுத்தவர்களை உட்படுத்தி எடுக்கப்படும் சபதங்கள்!
மற்றபடி நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், சொந்தமாக ஒரு ஸ்கூட்டர், ஒரு சொந்த வீடு, என இவை எல்லாமே என் வாழ்வில் சாத்தியமாகி இருக்கிறது. இவைகள் என் இலக்குகளாக இருந்தன. மனதின் பின் புலத்தில் ஓடிக் கொண்டேதான் இருந்தன. அதற்கான ஞாயமான உழைப்பையும் சேமிப்பையும் போட்டுக் கொண்டேதான் இருந்தேன். ஒவ்வொரு இலக்கும் ஒரு சபதம் போலதான் என்கிற வகையில் இவைகள் எல்லாம் நான் எடுத்து முடித்த சபதங்களே!
இளங்கலை பட்ட வகுப்பு பயின்ற போது ‘அரியர்ஸ்’ இல்லாமல் ஒழுங்காக தேர்ச்சி பெற்று பட்டம் பெற வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டேன். பாடங்களை அவ்வப்போது முறையாக படித்து, அந்த சபதத்தை வெற்றிகரமாக முடித்தேன்.
இதை எழுதிக் கொண்டிருந்த போது என் மனைவியிடம் “நம் வாழ்வில் நாம் எடுத்து முடித்த சபதம் ஏதாவது நினைவிலிருந்தால் சொல்” என்றேன். “அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று சபதம் எடுத்தேன். அது நிறைவேறியது” என்று எழுதுங்கள் - என்று ஒரு ‘பிட்’டைத்தூக்கிப் போட்டார். “மன்னிக்கவும்! நான் ‘உண்மையைத் தான் எழுத வேண்டும்’ என்று சபதம் எடுத்திருக்கிறேன்” என்று நானும் பதிலுக்கு ஒரு ‘பிட்’டைத்தூக்கிப் போட்டேன். கோபத்துடன் மனைவி முறைத்தார்!
“கோபித்துக் கொள்ளாதே. அழகான மனைவி என்பது பொய் அல்ல! ஆனால் ‘“அழகான பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் சபதம் எடுத்தேன்” என்பதுதான் பொய்! அதனால் தான் எழுத முடியாது என்றேன். மகிழ்ச்சியுடன் நகர்ந்தார்..
மனைவி எப்போது எப்படி பந்து போட்டாலும் அதை லாகவமாக தடுத்து மடக்கி அடித்து ‘சிக்சர்’க்கு அனுப்பி விடுவது என்கிற என் சபதத்தில், நான் அவ்வப்போது இப்படி சில வெற்றிகளை அடைவதுண்டு!