DEENADAYALAN N

Children Stories Comedy Children

5  

DEENADAYALAN N

Children Stories Comedy Children

ஓர் ஊரில் ஒரு புலவரும் ஓர் அரசரும்!

ஓர் ஊரில் ஒரு புலவரும் ஓர் அரசரும்!

7 mins
989


 Comedy

ஓர் ஊரில் ஒரு புலவரும் ஓர் அரசரும்!

(கோவை என். தீனதயாளன்)

(நகைச்சுவைக்காக)


ஔவையாரும் அதியமானும் வாழ்ந்த காலம் அது. அதியமான் தனக்குக் கிடைத்த - நீண்ட நாள் வாழும் நெல்லிக் கனியை – ஔயாருக்குக் கொடுத்து புசிக்கச் செய்து மகிழ்ந்தார். அப்போது வாழ்ந்து வந்த அரசர்களும் புலவர்களும் இதை அறிந்து மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.


அதே கால கட்டத்தில் வாழ்ந்தவர்தான் புலவர் புன்னாகவராளி. புலவரின் தந்தை இசையில் ஈடுபாடு கொண்டவராகையால், புலவருக்கு ‘புன்னாகவராளி’ என்னும் ராகத்தின் பெயரை வைத்து விட்டதாக பேசிக்கொண்டார்கள். கவிதைகளை இயற்றி, அவற்றை ராகத்தோடு பாட முயற்சிப்பது அவரது பாணி. அவர் முயற்சித்தாலும், ராகமும் தாளமும் அவரோடு வாழ முடியாமல் எப்போதோ தனிக் குடித்தனம் போய் விட்டன. இருந்தாலும் வெவ்வேறு ராஜ்ஜியங்களுக்கும் சென்று மன்னர்களைப் பாடி பரிசில் பெற்று காலட்சேபம் செய்து வந்தார். ஔவையாருக்கு அதியமான் போலவே, தனக்கும் ஒரு மன்னர் அமைய மாட்டாரா என ஏங்கித் தவித்தார்.

.


அச்சமயம் புலவருக்கு ‘நீளாயுள் முத்து வேந்தர்’ என்னும் மன்னர் பற்றிய விவரங்கள் தெரிய வந்தன. அவர் புகழ்ச்சியை விரும்புபவர். எந்தப் புலவர் எங்கிருந்து வந்து எப்படி பாடினாலும், தன்னைப் புகழ்ந்து பாடினால் ஏதாவது பொருள் கொடுக்காமல் திருப்பி அனுப்பியதாக சரித்தரமே இல்லை. எப்போதும் புலவர்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.


அந்த மன்னரிடம் வந்து இணைந்தார் புலவர் புன்னாகவராளி. சிலர், ‘நீளாயுள் முத்து’ என்று மன்னரை அழைக்க காரணம் நீண்ட ஆயுளை வழங்கக்கூடிய முத்துகளை அவர் வைத்து இருப்பதாகவும் அதை அவர் – ஔவையாருக்கு அதியமான் தந்தது போலவே - ஒரு புலவருக்குதான் கொடுப்பார் என்றும் நாட்டில் ஒரு பேச்சு நிலவி வந்தது. அந்த முத்தை அடைந்து ஔவையார் போல தானும் புகழ் பெற்று சரித்திரத்தில் பதிந்து விட வேண்டும் என்கிற நோக்கத்திலேயே புலவர் புன்னாகவராளி இந்த மன்னரிடம் வந்து சேர்ந்தார்.


ஒரு முறை மன்னர் வேட்டைக்கு கிளம்பினார். புலவரும் அவரோடு இணைந்து கொண்டார். ஆனால், எவ்வளவு முயற்சித்தும், அந்த வேட்டையில் மன்னருக்கு எந்த வேட்டைப் பொருளும் கிடைக்கவில்லை. அது அவருக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அப்போது உடனிருந்த புலவர் புன்னாகவராளி

 

புலி ஒன்று வேட்டையாட

கானகம் வந்ததாலே - பயத்தால்

கானகம் காலியானதே

எம் மன்னர் நீள்ஆயுள் முத்து

அவைகளுக்கு நீண்ட ஆயுள்

வரமளித்து வாழ்வித்தாரே!


என்று கவி பாடினார். என்றாலும் “ ‘ச்சீ.. ச்சீ’ இந்தப் பழம் புளிக்கும்” என்கிற அர்த்தத்தை கொடுக்கும் கவிதை இது என்பது மன்னருக்கு புரியாமல் இல்லை. என்றாலும் மன்னர் சிறிது ஆறுதல் அடைந்து புலவருக்கு ஒரு பவள மாலை பரிசளித்தார்.



மற்றொரு முறை ஊரில் உள்ள பெரிய மனிதரெல்லாம் அரசரைப் பார்க்க வந்திருந்தனர். அப்போது நாட்டில் வரிகள் அதிகமாக இருப்பதாகவும், அவற்றைக் குறைத்து மக்களைக் காக்க வேண்டும் என்று வேண்டினர். மன்னரும் ஆவன செய்வதாக கூறி அனுப்பினார். அப்போது உடனிருந்த புலவர் புன்னாகவராளி,


பேயாகி இடைத்தரகர்

பெரும் பதுக்கல் செய்தபோது – மக்கள்

நோயாகிப் போகாதிருக்க

பெரும் வரியை ‘குரைத்து’

தாயாகிப் போனார் நீள்ஆயுள்வேந்தர்!


என்று மன்னர் முன் ‘சொற்பிழை’யுடன் பாடி விட்டார். ‘குறைத்து’ என்பதற்கு பதிலாக ‘குரைத்து’ என்று நாயின் கத்தலைக் குறிக்கும் வார்த்தையைப் போட்ட அவரை மன்னர் தம் சுடு சொற்களால் ‘குதறி’ எடுத்து விட்டார். தவறை உணர்ந்த புலவர் புன்னாகவராளி, மிகுந்த பதட்டத்துடன் மன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


புலவர் அத்தோடு சும்மா இருந்திருக்கலாம். ஆனால் அவரின் கெட்ட நேரம் தொடர்ந்தது. அதே பதட்டத்துடன், ‘தவறை சரி செய்து மன்னரிடம் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்கிற நோக்கத்தோடு அதே கவிதையை பின் வருமாறு சற்று மாற்றி அமைத்துப் பாடினார்.


பேயாகி இடைத்தரகர்

பெரும் பதுக்கல் செய்தபோது – மக்கள்

நோயாகிப் போகாதிருக்க

பெரும் வரியை குறைத்து

‘நாயாகிப்’ போனார் நீள்ஆயுள்வேந்தர்!


‘குரைத்து’ என்பதை ‘குறைத்து’ என்று மாற்றிய புலவர், பதட்டத்தில் ‘தாயாகி’ என்பதை ‘நாயாகி’ என்றும் மாற்றி விட்டார். அது மன்னரின் கடுங்கோபத்தை மேலும் அதிகமாக்கி விட்டது. அன்று மன்னரிடம் அவர் வாங்கிக் கொண்ட வசையின் அளவும் அசிங்கமும் அவரை அடுத்த பத்து நாட்களுக்கு அரசரை நெருங்க விடவில்லை.



இன்னொரு சமயம், பக்கத்து நாட்டு மன்னன் திடீரென நீள்ஆயுள் முத்து வேந்தரின் நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தான். ஆனால் அந்த நேரத்தில் முத்து வேந்தர் போருக்கு தயாராக இல்லாததால், புலவர் புன்னாகவராளியை அழைத்து, ‘புலவரே நீர் சென்று அந்த மன்னன் மீது ஒரு நல்ல கவிதையைப் பாடி சமாதானம் செய்து, போரைத் தவிர்த்து வாரும்.’ எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 


புலவர் ஒருவர் தூதுவராக வந்ததை அறிந்து அவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தான் அயல் நாட்டு மன்னன். உடனே தான் நினைத்து வைத்திருந்த கவிதையை அயல் மன்னனிடம் பாட்டாய்ப் பாடினார் புலவர்.


மன்னனே.. தூதாக வந்த என்னை

தோதாக ஏற்றுக் கொண்டாய்

நீளாயுள் வேந்தர் நிந்தன்

சமாதானம் வேண்டியுள்ளார்

ஏற்றிடுவாய்! அவர்

உம்மைப் போற்றிடுவார்!


இத்தோடு நிறுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு,


‘உம் பகைவர்கள் அனைவரையும்

‘த்வம்சம்’ ஆக்கிடுவார்!


என கடைசி இரண்டு வரிகளைப கூடுதலாகப் போட்டு விட்டார்.


இந்த கூடுதல் வரிகளை, தம் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட ரோஷமுடைய இரண்டு வேற்று நாட்டு மன்னர்கள், ‘நாங்கள் அந்த மன்னரின் பகைவர்கள்தான். முடிந்தால் உம் மன்னனை எங்களை ‘த்வம்சம்’ ஆக்கச் சொல்’ என்று சூளுரைத்து, நீள் ஆயுள் முத்து வேந்தர் மன்னருக்கு எதிராக படைகளை திரட்ட ஆரம்பித்து விட்டனர்.


விஷயம் கேள்விப்பட்ட முத்து வேந்தர், பதறி அடித்து நேரில் வந்து அந்த இரு மன்னர்களிடமும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சமாதானம் செய்தார்.


அதன் பிறகு புலவர் புன்னாகவராளி, பல நாட்கள் மன்னரின் மாளிகைப் பக்கமே திரும்பவில்லை.



இந்நிலையில், நீள் ஆயுள் முத்து வேந்தருக்கு சற்று உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. எனவே தம் அடுத்த வாரிசுக்கான ஆயத்தங்களை செய்ய முடிவு செய்தார் மன்னர். எனவே கீழ்க்கண்ட அறிவிப்பை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வெளியிடச் செய்தார்.


‘இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், வருகிற பௌர்ணமி அன்று இரவு சித்திரக்கூடத்தில் கவி சம்மேளனம் நடைபெறும். இதில் ஆன்றோர்களும், சான்றோர்களும், மேதாவிகளும், மேலும் கவி பாடும் திறன் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். அங்கு கொடுக்கப்படும் உள்ளீடை வைத்து ‘ஆசுகவி’ பாட வேண்டும். (ஒரு பொருள் அல்லது சொல் அல்லது சொற்றொடர் கொடுத்ததும், உடனடியாக,, அந்த பொருள்/ சொல்/ சொற்றொடரை வைத்து கவி பாடுதல்). அவ்வாறு பாடும்போது அதில் மன்னர் நீள் ஆயுள் முத்து வேந்தர் பற்றி புகழ்ச்சியும் இருக்க வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு அரசர் தன் மகளை மணமுடித்து வைத்து, தன் ராஜ்ஜியம் ஆளும் உரிமையையும் அளிப்பதோடு, தான் நெடு நாள் வைத்திருக்கும் ‘நீள் ஆயுள் முத்தை’யும் பரிசளிப்பார்’ என அறிவிப்பு செய்யப்பட்டது. அக்கம்பக்கம் இருந்த பல ராஜ்ஜியங்களிலிருந்தும், உள் நாட்டிலிருந்தும் புலவர்களும் அறிஞர்களும் மேதைகளும் அலைகடலென திரண்டனர்.


அதில் நம் புலவர் புன்னாகவராளியும் இருந்தார் என்பதை சொல்லவும் வேண்டுமோ!


போட்டியை வடிவமைத்து சிறப்புற நடத்திகொடுக்க, ஒரு அதி மேதாவியின் கீழ் ஒரு குழு அமைக்க மன்னர் விரும்பினார். உடனே அப்பொறுப்பை தம் உளவுத்துறையிடம் ஒப்படைத்தார். அவர்களும் காற்றினும் கடுகிப் பறந்து திரிந்து, வெள்ளிப்புத்தூர் ராஜ்ஜியத்தில், அரசரின் சிறப்பு வழி காட்டியாக விளங்கிய ‘விடைகளின் விற்பன்னன்’ என்று பட்டம் பெற்ற விகடகவி வித்யாபதி என்னும் ஒரு மாமேதையை கண்டு பிடித்து, நீள் ஆயுள் முத்து வேந்தர் முன் கொணர்ந்து நிறுத்தினர். வித்யாபதியைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த மன்னர், அவரை வரவேற்று முழு நோக்கங்களையும் விவரித்து அவரைப் பொறுப்பில் அமர்த்தினார். வித்யாபதியும் மனமகிழ்ச்சியுடன் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செவ்வனே திட்டமிட்டு நிகழ்ச்சிகளை திறமையாக நடத்திக் கொடுக்க இசைந்தார்.



குறித்த நாளன்று போட்டி ஆரம்பமாயிற்று. சுமார் ஐநூறு பேர் திரண்டிருந்தனர். அவர்கள் பத்து பத்து பேராக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு பத்து பேரிடமும் ஒரு அறிவுசார் கேள்வி பொதுவாக வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கு மிகச் சிறந்த விடையை சொன்ன ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். மற்ற ஒன்பது பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப் பட்டனர். அவ்வாறு, ஐநூறு பேரில் ஐம்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த ஐம்பது பேரையும் அதே முறையில் கேள்வி கேட்டு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அந்த ஐந்து பேர்களுக்கும் நேரடி இறுதிப் போட்டி காத்திருந்தது. அவர்களுள் முதலாவதாக வருபவரே வெற்றி பெற்றவராவார். இந்த முறையில், அதிர்ஷ்டவசமாக புலவர் புன்னாகவராளியும், கடைசி ஐந்து பேரில் ஒருவராக தேர்வானார். அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அப்போதே தான் வெற்றி பெற்று விட்டதைப்போல் கொண்டாடி மகிழ்ந்தார்.


ஐந்து பேருக்கான போட்டி ஆரம்பமாயிற்று. அனைவருக்கும் பொதுவாக நான்கு சொற்றொடர்கள் கொடுக்கப்பட்டன. அவை தனித்தனியான ஓலைச் சுவயடிகளில் கொடுக்கப்பட்டன. அந்த சொற்றொடர்கள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு (ஆசு) கவி எழுத வேண்டும். அந்த கவிதையில், மன்னர் நீள் ஆயுள் முத்து வேந்தரையும் புகழ்ந்து இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி ஒப்படைத்து விட வேண்டும். அந்தக் கவிதைகளை, விகடகவி வித்யாபதியும், வெளி நாட்டு தமிழ் இலக்கிய விற்பன்னர்கள் நால்வரும் ஆராய்ந்து, அந்த ஐந்து பேரில் சிறந்த ஒருவரை தேர்வு செய்து மன்னரிடம் ஒப்படைத்து விடுவர்.


கொடுக்கப் பட்ட சொற்றொடர்கள்:


மூடர் நம் முத்து வேந்தர்!


தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவரும் மடையர்கள்


அரசரின் சதியால் நாடு மேலும் சுபீட்சம் அடையும்.


முத்து வேந்தர், கருணையை காற்றில் பறக்க விட்டு விடுவார்.


வாக்கியங்களைப் படித்த தேர்வாளர்கள் ஐவரும் அதிர்ச்சி அடைந்தனர். என்றாலும், குறித்த நேரத்தில் எழுதி முடிக்க வேண்டுமே என எழுத முற்பட்டனர்.


ஆனால் நம் புலவர் புன்னாகவராளி மட்டும் பேந்தப் பேந்த ‘முழித்து’க் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் தம் ஓலையில் இருந்த சொற்றொடர்களைப் படித்துப் பார்த்தார். என்ன சொற்றொடர்கள் இது? எந்த தைரியத்தில் இத்தகைய சொற்றடர்களை அமைத்தனர்?, மன்னரை அவமானப் படுத்தியது மட்டுமல்லாமல், நம்மையும் அவற்றை அடிப்படையாக வைத்து எழுதச் சொல்லி தவறிழைக்க வைக்கப் பார்க்கிறார்களே, இந்த வித்யாபதி தேர்வுக் குழுவினர்.


புலவர் புன்னாகவராளி மனதளவில் புலம்பிக் கொண்டிருந்தபோது, தேர்வெழுத குறித்திருந்த நேரம் முடிவுற்றது. தேர்வாளர்கள் ஐவருள் நால்வர், தாம் எழுதிய தத்தம் ஓலைச்சுவடிகளை கொடுக்க, புன்னாகவராளி மட்டும் ஏதும் எழுதாத வெற்று ஓலையைக் கொடுத்தார்.



அரசவையில் அனைவரும் கூடினர். அரசர் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார். ஒரு மேடையில் விகடகவி வித்யாபதியும் தேர்வுக் குழுவினரும் ஓலைகளை ஆய்ந்து கொண்டிருந்தனர். விற்பன்னர் மண்டபத்திலும், மக்கள் மண்டபத்திலும், அரசூழியர் மண்டபத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.


தேர்வெழுதிய ஐந்து பேரும் ஒரு மேடையில் ஐந்து நாற்காலிகள் இடப்பட்டு, அமர்ந்திருந்தனர். புலவர் புன்னாகவராளியும் மிகுந்த பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்.


‘புலவர் புன்னாகவராளி அவர்களே… தாங்கள் ஒன்றுமே எழுதாமல் வெற்று ஓலையைச் சுவடியை கொடுத்திருக்கிறார்களே? காரணம் என்னவோ??’ என்று விதயாபதி வினவினார்.


சிங்கமென சீறி எழுந்து புலியெனப் பாய்ந்த புலவர் புன்னாகவராளி ‘படபட’வென பேச ஆரம்பித்தார்:


அரசர் பெருமானே.. ஆன்றோர் பெருமக்களே.. அன்பான குடிமக்களே..


தேர்வு நடந்து முடிந்தவுடன். தேர்வுக் குழுவினர் பகிரங்கமாக வெளியிட்ட, கேள்வி ஓலையை இந்நேரம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். படித்து என்னைப் போலவே நீங்களும் ரத்தம் கொதித்துப் போயிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


என்ன ஒரு அநியாயம்??? என்ன தைரியமிருந்தால், இந்த தேர்வுக்குழு, “முத்து வேந்தர் ஒரு முட்டாள்’ என அரசரைப் பற்றி இப்படி ஒரு கடுங்கூற்றை சொல்லியிருக்கின்றனர்?


அது மட்டுமா!!! தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவரும் மடையர்களாமே. இந்த வித்யாபதிக் குழு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது. ஐநூறு பேரைப் போட்டியில் வென்று வெற்றி வாகை சூடிய எங்கள் ஐந்து பேரை எப்படி இப்படிப்பட்ட கீழ்த்தரமான வார்த்தைகளால் வசை பாடலாம்? இங்கிதம் என்பதே கிஞ்சிற்றேனும் இல்லாத இந்த ‘அதிமேதாவிகளை’ப் பற்றி நன்கு அறிந்கு கொள்ளாமல், இவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து, மன்னரும் தவறு புரிந்தது போலல்லவா ஆகி விட்டது!!!


சரி அதை விட்டுத் தொலைப்போம். ‘அரசரின் சதியால் நாடு மேலும் சுபீட்சம் அடையுமாமே’! அற்ப அறிவுகூட இல்லாத தேர்வுக் குழுவே.. என்ன தைரியம் இருந்தால் ‘அரசர் சதி செய்தார்’ என்று இப்படி பொய்யாக பிரகடனம் செய்திருப்பீர்கள். இதோ! உங்களுக்கெல்லாம் ‘உருண்டைக் களி) பாக்கியம் (சிறை’ தயாராகப் போகிறது.


அதை விட, அடுத்த கொடுமை என்னவென்றால், மன்னர் கருணையற்றவராமே? ம்.. அது என்ன.. ஆங்… கருணையைக் காற்றில் பறக்க விட்டவராமே? பாழாய்ப் போக கங்கணம் கட்டிக் கொண்டு வந்து விட்டீர்கள் போலும்..! நீங்களும்.. உங்கள் தேர்வுக்குழுவும்.. உங்கள் தேர்வுகளும்.. உங்கள் சொற்றொடர்களும்.. !


மன்னரின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் நீங்கள், வாழப் போகும் உங்கள் மணித்துளிகளை எண்ணத் துவங்குங்கள்..எப்படியோ மன்னரின் மானத்தை நார் நாராய்க் கிழித்து விட்டிர்கள். அதற்கான பலனை அனுபவிக்க தயாராகிக் கொள்ளுங்கள்..


என்று மூச்சிரைக்க சூளுரைத்து வேர்த்து விறுவிறுக்க நின்றார் புலவர் புன்னாகவராளி. 



வித்யாபதி எழுந்தார். பேசத்தொடங்கினார்:


‘அரசர் உள்ளிட்ட ஆன்றோரும் சான்றோரும் நிரம்பி வழியும் இந்த சபைக்கு என் பொன்னான வணக்கம். புலவர் புன்னாகவராளி கடுமையான சொற்களைப் பிரையோகித்திருக்கிறார். கொடுக்கப் பட்டிருக்கும் சொற்றொடர்களை சரியாக புரிந்து கொள்ளாத அவரைப் பார்த்து பரிதாப்படுகிறேன். முதலில் சொற்றொடர்களையும், அவற்றில் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களையும் மன்னரின் அனுமதியோடு அனைவரின் முன்னாலும் சமர்ப்பிக்கிறேன். அப்போதாவது புலவர் புன்னாகவராளி உண்மையை உணர்ந்து கொள்வார் என்று நம்புகிறேன்.


முதல் சொற்றொடர்: மூடர் நம் முத்து வேந்தர்!


இதற்கான கவிதை :

இடர் தருவர் அயலவர் இளிச்சவாய மன்னனெனின்

சுடர் அறுப்பர் சுபீட்சமாய் வாழும் ஓர் அரசனெனின்

வேடர் என வலைவீசும் வேந்தர் தம்மை விடவா

மூடர், நம் முத்து வேந்தர்!



இரண்டாம் சொற்றொடர்: தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவரும் மடையர்கள்


ஏரி மற்றும் குளங்களிலிருந்து நீரின் போக்கை திசை மாற்ற நீருக்குள் அமைக்கப்படும் ஒரு வடிவமே ‘மடை’யாகும். அந்த மடையை திசை மாற்றுவோர் ‘மடையர்’ ஆவர். வெள்ள காலங்களில் மடை மாற்றுதல் என்பது உயிரைப் பயணம் வைத்து நீருக்குள் மூழ்கி செய்யும் சாகசப்பணியாகும். எனவே ஐவரும் மடையர்கள் என்று குறிப்பிட்து, ஐவருக்கும் பெருமை சேர்ப்பதே ஆகும்.




அடுத்த சொற்றொடர்: அரசரின் சதியால் நாடு மேலும் சுபீட்சம் அடையும்

.

தம்பதியரை ‘சதி-பதி’ என்றும் கூறுவர். சதி – மனைவி, பதி – கணவர். அரசரின் ‘சதி’ என்பது அரசரின் மனைவி ‘அரசி’யைக் குறிக்கும். அனைவரையும் காத்து ரட்சிக்கும் அரசருக்கு உடல், உள்ளம், சொல், செயல் என அனைத்து வகையிலும் உதவி புரிந்து வாழும் அரசரின் மனைவியான அரசியின் செயல்களால் நாடு மேலும் சுபீட்சம் அடையும் என்பதே இதன் பொருளாகும்.


அடுத்த சொற்றொடர்: முத்து வேந்தர், கருணையை காற்றில்

           பறக்க விட்டு விடுவார்.


அரசர் முத்து வேந்தர், தன் நாட்டிற்கும் தன் நாட்டின் ப்ரஜைகளுக்கும் அன்பையும் கருணையையும் கலந்து வழங்கி அமைதியாக ஆட்சி புரிகிறார். ஆனால் அவரே, போர்க்களத்தில் நிற்கும் போது எதிரிகள் மேல் எள்ளளவும் கருணை காட்டாமல் – கருணையைக் காற்றில் பறக்கவிட்டு, வீர தீரத்துடன், கருமமே கண்ணாக, போர் புரிவார். அத்தகைய வீராதி வீரரே நம் மன்னர் என்பதே இதன் பொருளாகும்.


வித்யாபதியின் விளக்கங்களைக் கேட்ட மக்களும் சான்றோரும் ஆன்றோரும் – அனைவருக்கும் மேலாக மன்னரும் ‘ஆஹா.. ஓஹோ..’ என்று பாராட்டி மகிழ்ந்தனர்.


புலவர் புன்னாகவராளியும் தம் அவசர புத்தியை நொந்து கொண்டு தாம் பேசிய பேச்சுகளுக்கு மன்னரிடமும் மற்றவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


மற்ற நான்கு தேர்வாளர்களும் எழுதியிருந்த ஆசு கவிகள், அவ்வளவாக மன நிறைவைத் தரவில்லை.


எனவே வித்யாபதியின் ஆலோசனையை ஏற்று, இத்தகைய குறுக்கு வழிகளில், வாரிசு மன்னரை தாம் இனி தேடுதல் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார் மன்னர் நீள் ஆயுள் முத்து வேந்தர்!


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in