ஹலோ.. யாரு.. நானா.. நான் இல்லைங்க
ஹலோ.. யாரு.. நானா.. நான் இல்லைங்க


கைபபேசி அழைத்தது!
ஒரு நிமிடம் கழித்து கைபேசியை எடுத்தேன்.
‘ஹலோ.. யார் பேசறது..? என்ன? சங்கரனா.. திருப்பூர்லே இருந்து பேசறீங்களா..? சாரி.. ‘ராங்’ நம்பர்!’ போனை வைத்து விட்டேன்.
மீண்டும் இரண்டு நிமிடம் கழித்து கைபேசி ஒலித்தது.
‘என்ன? யாரு வேணும்..? கிருஷ்ணனா.. புதூர் கிருஷ்ணன் வேணுமா.. மன்னிக்கனும் இது தவறான எண்!’ ‘டபக்’ என்று போனை வைத்து விட்டேன்.
‘ஏங்க.. நீங்கதானே புதூர் கிருஷ்ணன்.. ஏன் ‘ராங்’ நம்பர்னு போனை வெச்சிட்டீங்க?’ என் மனைவி கேட்கிறாள்.
‘எல்லாம் ஒரு காரணமாத்தான்..’
மீண்டும் ஐந்து நிமிடம் கழித்து கைபேசி அலறியது.
இம்முறை போனை கையில் எடுத்துக் கொண்டு, குரலை மாற்றிப் பேசினேன். 'ஆமா சார்.. போன் அவுருதுதான்.. ஆனா பேசறது அவுரு இல்லை.. இல்லே சார்.. போனை மறந்து வெச்சிட்டுப் போயிட்டாரு’ ‘டக்’கென்று போனை வைத்து விட்டேன்.
‘ஏங்க? போன்லே பேசுன ஆளு யாருங்க? உங்களை வெச்சிகிட்டே நீங்க இல்லைன்னு நீங்களே ஏன் சொல்றீங்க? ஏதாவது கடன்காரனா..?’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லே..’
‘பின்னே.. எதிர்லே பேசின ஆளு ஏதாவது கடன் கேட்டுடுவான்னு பயப்பட்டு அப்பிடி சொல்லிட்டீங்களா?’ மனைவி மறுபடியும் நோண்டினாள்.
‘நீ கொஞ்சம் சும்மா இருக்கியா..’
சிறிது நேரம் கழித்து மீண்டும் மணி ஒலித்தது! அவனேதான் கூப்பிடுறான்.
நான் எடுக்கலே!
‘ஏங்க.. என்னங்க நடக்குது இங்கே.. எவ்வளவு நேரம் போன் அடிக்குது.. அதை வெரிச்சு வெரிச்சு பார்த்துகிட்டே இருக்கறீங்களே.. ’ மனைவி கேட்டாள்.
‘எல்லாம் எனக்கு தெரியும்.. நீ கொஞ்சம் சும்மா இரு!’ அதட்டி விட்டு என் வேலையை தொடர்ந்தேன்.
சற்று நேரம் அடித்து போன் ஓய்ந்தது!
முன்பெல்லாம் யார் எவர் என்று பார்க்க மாட்டேன். அழைப்பு மணி வந்த உடன், கைப்பேசியை கையில் எடுத்து ‘ஹலோ.. கிருஷ்ணன் ஹியர்’னு சொல்லிட்டு எதிர் குரலுக்காக காத்திருப்பேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை.
ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் கைபேசி அலறியது.
‘என்னங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு..? மறுபடியும் போன் அடிக்குதே..’
‘தெரியும்மா.. திருப்பூர் சங்கரன் தான் பேசுறான்..’
‘ஏங்க.. உங்களோட நண்பராச்சே அவர்..! ஏன் எடுக்க மாட்டேங்கறீங்க?’
‘இத பாரு.. இரண்டு நாட்களுக்கு முன் திருப்பூர் சங்கரன் பேசுனான்.. அவனும் அவனோட மகளும் ஒரு வேலையா இங்க வர்றாங்களாம்.. ஓரிரு நாள் தங்கணுமாம்.. அவனுக்கு அறிவு வேண்டாம்.. இந்த கொரோனா காலத்துலே நண்பர் வீடு, உறவினர் வீடுன்னு போய் தங்க முடியுமா..? அவங்கவங்க ‘நோய்த் தொற்றி’லிருந்து தப்பிக்க ‘ப்ரம்மப் ப்ரயத்தனம்’ பண்ணிகிட்டிருக்காங்க.. ‘கரணம் தப்பினா மரணம்’னு பயந்து பயந்து காலத்தை ஓட்டிகிட்டிருக்கிறாங்க. வீட்டை விட்டு வெளியிலே போறதே ஒரு ‘சிம்ம சொப்பன’மா இருக்கு… எல்லா மனுஷங்களும் நல்லா இருக்கணும்ங்கற மனித நேயம் இருந்தா இந்த மாதிரி திடீர் கூடல்கள் எல்லாத்தையும் கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்கத்தான் வேணும்..’
‘என்னங்க.. நீங்க சொல்றது ஞாயமா இருக்கற மாதிரியும் இருக்கு.. அநியாயமா இருக்குற மாதிரியும் தோணுதுங்க.. நீங்க சொல்றதப் பார்த்தா ‘மனித நேயம்’ அப்பிடீங்கிறதை மறுவரையறை பண்ணனும் போல இருக்குங்க. கடவுளே.. 2021 முடிஞ்சி 2022ம் வந்துருச்சி.. இன்னும் நம்ம நடைமுறையிலும் பண்பாட்டிலையும் என்னென்னவெல்லாம் மறுவரையறை செய்யப்படுமோ தெரியலையே…!’
என் மனைவி புலம்பிக் கொண்டிருந்தாள்