DEENADAYALAN N

Children Stories Comedy Drama

3.5  

DEENADAYALAN N

Children Stories Comedy Drama

பத்து விரல் மாமியார்!

பத்து விரல் மாமியார்!

4 mins
1.1K






ராத்திரி ஒன்பரை மணி. அவசர அவசரமா சாப்டுட்டு வந்து எங்க பாட்டியை சுத்தி உக்காந்தோம். அவங்க கதை சொல்ல ஆரம்பிச்சாங்க..


முன்னொரு காலத்துலே ஒரு அண்ணன் ஒரு தம்பி வாழ்ந்துகிட்டு இருந்தாங்க. அவங்களோட அவங்க அம்மாவும் வாழ்ந்து வந்தாங்க.


ஒரு நாள் அம்மா ரெண்டு பேரையும் கூப்பிட்டு “பசங்களா.. இவ்வளவு நாளும் உங்களுக்கு சமைச்சிப் போட்டு உங்களுக்கு என்ன வேணுமோ அத நான் கவனிச்சிகிட்டேன். ஆனா வர வர என் ஒடம்பு சொகமில்லாம போயிகிட்டிருக்கு. முன்னெ மாதிரி தெம்பா உங்களுக்கு உழைக்க முடியல. அதனாலெ இதப் பத்தி நாம கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கணும்” னு சொன்னா.


“நான் வேணுமின்னா சமையல் வேலையை பார்த்துக்குறேன். அண்ணன் மத்த வேலைகளைப் பார்த்துக்கட்டும்” அப்பிடீன்னு  இளையவன் முன்னே வந்தான்.


“அது சரிப்படாது எளையவனே.. எத்தனை நாளைக்கு இப்படி குடும்பத்தை நடத்திகிட்டு போக முடியும்? அதனாலே வேற ஏதாவது நல்ல யோசனையா இருந்தா சொல்லுங்க” ன்னா அம்மா.


‘அம்மா சொல்றது சரிதான். ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் நமக்குள்ள பிணக்கு வந்துரும். அதோட நம்ம கடைசி காலம் வரைக்கும் இப்படியே இருக்க முடியாது. அதனாலே நான் ஒரு யோசனை சொல்றேன். வீட்டு வேலைக்கு ஒரு ஆளெ வெச்சிக்கலாம். அவ எல்லாக் காரியங்களையும் கவனிச்சிக்கட்டும்.” ன்னான் மூத்தவன்.


“மூத்தவனே! வேலைக்குன்னு ஒரு மூனாவது மனுஷி நம்ம குடும்பத்துக்குள்ள வந்தா அதுலே பல பிரச்சினைகள் வரும். அவளும் நிரந்தரமா இருப்பான்னு சொல்ல முடியாது.” ன்னா அம்மா.


“அப்படின்னா வயசுலே மூத்தவளான நீயே ஒரு யோசனை சொல்லுமா” ன்னு மூத்தவன் தாயாரைப் பார்த்தான்.. இளையவனும் “ஆமா.. அதுதான் சரி. நீயே சொல்லுமா” ன்னு அவனும் அம்மாவெப் பார்த்தான்.


ரெண்டு பசங்களும் தன் மீது வெச்சிருந்த பாசத்தையும் நம்பிக்கையையும் பாத்து சந்தோஷமாயிட்டா அம்மா.


“சரி. ஒன்னு செய்வோம். மூத்தவனுக்கு ஒரு கலியாணத்தெ செஞ்சி வெச்சிருவோம். வீட்டுக்கு ஒரு பொம்பள வந்துட்டா எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும்” ன்னாள் அம்மா.


“இல்லம்மா... என் பொண்டாட்டி என்னெ மட்டுந்தான் கவனிச்சிக்குவேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டா பிரச்சினை இன்னும் ஜாஸ்திதான் ஆகும். நம்ம நிம்மதியும் போயிரும். இது சரிப்பட்டு வராது.’ அப்படீன்னான் மூத்தவன்.


“அண்ணன் சொல்றதும் சரிதான்.” அப்பிடீன்னான் இளையவன். இதுலே உண்மை இருக்குன்னு மூனு பேருக்குமே தோனுச்சி.


“அப்போ நான் ஒரு யோசனை சொல்றேன். பேசாமெ ரெண்டு பேருக்குமே கல்யாணம் செஞ்சி வெச்சிட்டா எந்த பிரச்சினையும் வராதல்லே.” ன்னு அம்மா சொன்னா.


அது ரொம்ப நல்ல யோசனையா மூனு பேருக்குமே பட்டுது. தடபுடான்னு அக்காவும் தங்கச்சியுமா ரெண்டு பொண்ணுகளெ பாத்தா அம்மா. அக்கா தங்கச்சி ரெண்டு பேரையும் அண்ணன் தம்பி ரெண்டு பேருக்கும் தடபுடலா ஒரே பந்தல்ல வெச்சி கல்யாணத்தையும் முடிச்சிட்டா.


பிரச்சினை வேண்டாமின்னு ரெண்டு ஜோடிக்குமே தனி ரூமு, தனி சமையலறைன்னு ஏற்பாடு பண்ணிட்டா அம்மாக்காரி.


சின்னவ எப்பவுமே மாமியார்காரிகிட்டெ கேட்டுதான் எதையுமே செய்வா. மாமியார் சொல்ற படிதான் சமைப்பா. மாமியார் சொல்றபடிதான் நடந்துக்குவா.


ஆனா பெரியவ அவ இஷ்டம் போலதான் நடந்துக்குவா. மாமியார் எதெ சொன்னாலும் கண்டுக்க மாட்டா.


ஒரு நாள் திடீர்னு மாமியார்காரி செத்துப் போயிட்டா! எல்லாக் காரியங்களும் முடிஞ்சி எல்லாரும் போயிட்டாங்க. சின்னவளுக்குதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. மாமியார் இல்லாமெ எதெ எப்பிடி செய்யிறதுன்னு தெரியாமெ திண்டாடிப் போயிட்டா.


அவ புருஷன்கிட்ட ‘ எனக்கு மாமியார் மாதிரியே ஒரு பொம்ம பண்ணி குடுங்க’ ன்னு அடம் புடிச்சா. அவனும் ஒரு பொம்மைய செஞ்சிட்டு வந்து குடுத்துட்டான். அந்த பொம்மைலே எப்பவும் பத்து வெரலை விரிச்சி காட்ற மாதிரி பொம்மக்காரன் செஞ்சிருந்தான். வீட்டுக்கு பின்னாடி திண்ணை மாதிரி இருந்த மேடைலே அந்த பொம்மைய ஒரு சாமி மாதிரி பிரதிஷ்டை பண்ணி வெச்சிட்டா, சின்ன மருமக.


சின்னவ எத செய்யறதுக்கும் முன்னாடி அந்த பொம்ம முன்னாடி போயி நின்னு மாமியார்கிட்ட மானசீகமா உத்தரவு வாங்கிட்டு வந்துதான் செய்வா. தினமும் சமைக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அந்த பொம்மகிட்டே போயி நின்னுகிட்டு ‘ அத்தே.. அத்தே.. எத்தன படி அரிசி போடறதுன்னு ‘ கேப்பா. பொம்ம பத்து வெரல காட்றதுனாலே பத்து படி அரிசி போட்டு சமைப்பா. சமைச்ச அத்தனையையும் அந்த பொம்மைகிட்டே வெச்சி படைப்பா. அதுலே அவ குடும்பத்துக்கு வேணுங்கிறத மட்டும் எடுத்துகிட்டு அப்பிடியே உட்டுட்டு போயிருவா.


இதப் பாத்த பெரிய மருமக அவ வீட்லே சமைக்கவே மாட்டா. சின்னவ வீட்டுக்குள்ளே போன உடனே அந்த பொம்மைகிட்டே வந்து படச்ச சாப்பாடு எல்லாத்தையும் வழிச்சு எடுத்துகிட்டுப் போயி அவ குடும்பத்துக்கு வெச்சிக்குவா. இது தெரியாத சின்னவ மாமியார் தான் எல்லாத்தையும் சாப்பிட்டுட்டாங்கன்னு சந்தோஷமா போயிருவா.


இப்படி தினமும் நடக்கறதுனாலே சின்னவ வீட்லே எல்லா சமையல் சாமானமும் சீக்கிரம் சீக்கிரமாவே தீந்துரும். உடனே புருஷன்கிட்டெ சொல்லி மேல மேல சமையல் பொருள்களை வாங்கிட்டு வரச்சொல்லுவா. ஓட்ட ஆண்டி ஆகிற கட்டத்துலே ஒரு நாள் புருஷனுக்கு சந்தேகம் வருது. என்ன நடக்குதுன்னு பாக்கறான். ஒரு பொம்மைய வெச்சிகிட்டு இவ தன்னை ஓட்ட ஆண்டி ஆக்கிட்டாளேன்னு கோவமான கோவம் அவனுக்கு. அவளை செமத்தியா அடிச்சி துவச்சி வீட்டை விட்டு வெளிலே துரத்தீர்றான். அந்த பொம்மையையும் விட்டெறிஞ்சர்றான்.


சின்னவ அழுதுகிட்டே சுக்கல் சுக்கலா போன அந்த பொம்மைய ஒரு துணிலே கட்டி எடுத்துகிட்டு அப்பிடியே நடந்து போறா. அப்போ ஒரு சுடுகாடு வருது. ராத்திரி ஆயிருச்சி. எங்க பார்த்தாலும் கும்மிருட்டு. சுத்து முத்தும் பாக்கறா. கொள்ளிவாய் பிசாசு மாதிரி அங்கங்கே எரிஞ்சிகிட்டிருக்கு. ஒரு மரத்து மேலே மெதுவா ஏறுறா. ஒரு நல்ல வாட்டமான கிளைலே உக்காந்து அப்பிடியே அழுதுகிட்டே தூங்கிடுறா!


ராத்திரி பன்னண்டு மணி இருக்கும். நாலு திருடனுக வந்து அந்த மரத்துக்கு கீழே உக்கார்றாங்க. அவனுக திருடீட்டு வந்த தங்கம் வைரம் வெள்ளி கோமேதகம் புஷ்பராகம்னு எல்லாத்தையும் அவங்களுக்குள்ளே பங்கு போட ஆரம்பிக்கிறாங்க.


அந்த நேரம் பாத்து, மரத்து மேலே தூங்கிகிட்டிருந்தவ, பொம்ம சுக்கல்கள சுத்தி வெச்சிருந்த அந்த துணிப் பையெ, அவ கைலே இருந்து நழுவ விட்டர்றா.. அது நேரா கீழே போயி விழுது. எங்கே? அந்த நாலு திருடனுகளுக்கும் நடுவுலே விழுகுது. திருடனுக தலைய மேலே தூக்கிப் பாக்குறானுக. அங்கே.. தலைய விரிச்சிப்போட்டுகிட்டு ரெண்டு கையையும் ரெண்டு பக்கமும் நீட்டிகிட்டு மரக்கிளை மேல…  “அடேய்.. மரத்து மேலே மோகினிப்பிசாசு உக்காந்திருக்குடா’ன்னு சொல்லி, அத்தனையையும் அப்பிடி அப்பிடியே போட்டுட்டு புடிச்சானுக பாரு ஒரு ஓட்டம்.. எவனும் திரும்பி கூட பாக்கலே..


அடுத்த நாள் காலைலே சின்னவ மரத்த விட்டு எறங்கி வந்து பார்த்தா.. அத்தைதான் சாமியா வந்து இதையெல்லாம் இங்கே போட்டுட்டு போயிருக்குன்னு சொல்லி, அத்தனை செல்வங்களையும் அந்த துணிலே போட்டு சுத்தி எடுத்துகிட்டா. வீட்லே வந்து புருஷன்கிட்டே ‘அத்தை குடுத்தாங்க’ன்னு காமிச்சா. புருஷனும் அவளே ஏத்துகிட்டு அத்தனை பொன் பொருளையும் வெச்சிகிட்டு பெரிய பணக்காரனா வாழ்ந்தான்.


விஷயத்தெ கேள்விப்பட்ட பெரியவளுக்கும் ஆசெ வந்திருச்சி. நேரா அவளோட புருஷன்கிட்டே போயி என்னையும் அப்பிடி அடிச்சி வெரட்டுங்க அப்பிடீன்னா. புருஷனும் அவளெ செமித்தியா நாலு வெளாசு வெளாசி அனுப்பி வெச்சான். அவளும் அதே மாதிரி ராத்திரிலே, அந்த சுடுகாட்டுக்கு வந்து, அதே மரத்துலே ஏறி உக்காந்துகிட்டா.


எப்படா திருடனுக வருவானுகன்னு முழிச்சிகிட்டே உக்காந்திருந்தா. அதே மாதிரி திருடங்களும் வந்தாங்க. அதே மாதிரி அந்த மரத்துக் கீழே உக்காந்து, அவங்க அன்னிக்கு திருடிட்டு வந்த செல்வங்களெ பங்கு போட ஆரம்பிச்சாங்க! இவ தன் கையிலே இருந்த மூட்டையெ ‘டப்’ புன்னு அவுங்களுக்கு நடுவுலே விழற மாதிரி கீழே போட்டா. திருடனுக இன்னைக்கி உஷாராயிட்டானுக. ‘டேய்.. இது பேயும் இல்லே பிசாசும் இல்லேடா.. யாரோ மனுஷங்க தான். அன்னக்கி வந்த அதே ஆள்தாண்டா இன்னைக்கும் எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போலாமின்னு வந்திருக்கா..’ அப்பிடீன்னு மரத்துலே இருந்து அவளெ இழுத்துப் போட்டு செமத்திய சாத்து சாத்துன்னு சாத்தி தொரத்தி உட்டுட்டானுக!


அவளும் அழுதுகிட்டே வெறுங்கையோட வீட்டுக்கு வந்து அவ புருஷன்கிட்டையும் நாலு மொத்து வாங்குனா!


பாத்தீங்களா… நல்லவளுக்கு நல்லது நடந்துச்சி.. கெட்டவளுக்கு கெட்டது நடந்துச்சி! சரி தூங்குங்க. நாளைக்கு வேறொரு கதை சொல்றேன்!


எல்லாரும் கதையெ அசை போட்டுகிட்டே அப்பிடியே தூங்கிப் போயிட்டோம்!





Rate this content
Log in