Pandian Ramaiah

Comedy Romance

4.9  

Pandian Ramaiah

Comedy Romance

புடவியின் சதி | தோமிச்சன் மதேய்கல்

புடவியின் சதி | தோமிச்சன் மதேய்கல்

5 mins
533


குரியன் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடுமுறையில் கனடாவில் இருந்து திரும்பியிருப்பதை அக்கம்பக்கத்தினரிடம் கேள்விப்பட்டு, நான் குரியனின் வீட்டிற்கு ஓடாமல் இருந்தால்தான் வியப்புக்குரியது. தொந்தி சற்றே ஊதியிருந்ததைத் தவிர அவனிடம் கிஞ்சித்தும் எந்த மாறுதலும் இல்லாததால் அவனை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டேன். அவன் என்னைப் பார்த்தவுடன் என்னிடம் பாய்ந்து வந்து கரடியைப் போலக் கட்டிக் கொண்டான்.

“பார்த்து டா…” என்று சொல்லி “நாம் இப்போது வேறு இந்தியாவில் இருக்கிறோம். தார்மீக போலீஸ் உட்பட எல்லா வகையான உளவாளியும் எல்லா இடத்துலயும் இருக்காங்க” என்றவாறே அந்த அணைப்பிலிருந்து நெளிந்து மீண்டேன்.

எப்போதும் போல அவன் சிரித்தான். வாழ்க்கை அவனுக்கு ஒரு தீவிரமான விவகாரமாக இருந்ததில்லை. நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் – அந்த கிராமத்தின் பாரிஷ் சர்ச் நடத்தும் அரசு உதவி பெறும் மலையாள பள்ளியில் – படித்தோம். வீட்டிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக, நான் என்னால் முடிந்ததைச் செய்து, தேர்வில் ஓரளவு நன்றாக தேர்ச்சி பெற்றேன். அதே நேரத்தில் குரியன் சிரமப்பட்டு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையே பெற்றான். குரியனின் விடைத்தாள்களுடன் வந்த ஆசிரியர்கள் அவனுடைய விடைகளைக் கேலி செய்தபோது, அவனும் சேர்ந்து சிரித்தான். அந்த பகடி தம்மீது இருந்ததை அவர் உணர்ந்தானா என்று சில நேரங்களில் யோசிப்பேன். நிச்சயமாக, அவன் மடையன் இல்லை. வகுப்பில் பல நகைச்சுவைகள் தன்னைச் சுற்றி சுழல்வதும் அவனுக்கும் தெரியும். ஆனால் அதற்கெல்லாம் அவன் வருந்தவில்லை. அவனுடைய சமூக அறிவியலைப் பொறுத்தவரை முகமது-பின்-துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து பாரிஸுக்கு மாற்றினார். வடிவியலில் புதிய தேற்றங்களையும், அறிவியலில் புதிய சமன்பாடுகளையும் கண்டுபிடித்தார். வகுப்பினர் அதைக் கேட்டுச் சிரித்தபோது அவர்களுடன் இணைந்து குரியனும் சிரித்தான்.

“நான் ஒரு கனேடியன். தார்மீகமோ அல்லது அதார்மீகமோ இந்திய போலீஸ் என்னை ஒன்னும் செய்ய முடியாது” நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து நான் அவனிடம் கூறியபோது அவன் பதிலளித்தான்.

குரியன் பள்ளிப் படிப்பை முடிக்கவிருந்தபோது, வெளிநாட்டிற்குச் சென்று அங்கு வசிக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது கனவு. “சொர்க்கம் அங்கே இருக்கிறது, நண்பா” என்று அவன் சொன்னான். “இந்தக் கடல் எல்லாம் தாண்டி.”

கேரளாவில் ஒரு தொலைதூர கிராமத்தில் வாழ்ந்து, தேர்வில் தேர்ச்சி பெற முடியாத, மலையாள மீடியம் பள்ளியில் படித்த குரியன், வெளிநாட்டில் தனது இடத்தை எவ்வாறு கண்டுபிடிப்பான்? என்னிடம் பதில் இல்லை.

ஆனால் குரியனுக்கு பதில் இருந்தது. “சிம்பிள் நண்பா. அங்கே செட்டில் ஆன ஒரு மலையாளி நர்ஸை கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்”

பள்ளி முடிந்ததும், குரியன் நகரத்தில் உள்ள ஐடிசியில் சேர்ந்து, பிளம்பிங் மற்றும் வயரிங் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தான். “இந்த எஞ்சினியரு இல்லன்னா அது மாதிரி வேற ஏதும் என்னால ஆக முடியாது,” என்று அவன் கூறினான். வெளிநாட்டில் பணிபுரியும் எந்த தாதி ஒரு பிளம்பரை, எலக்ட்ரீஷியனை திருமணம் செய்வாள்?

நீங்கள் எதையாவது விரும்பினால், அதை அடைய உங்களுக்கு உதவுவதில் புடவி அனைத்து சதிகளையும் செய்கிறது. அந்தக் கொள்கையை குரியன் கண்டுபிடித்து நீண்ட காலத்திற்குப் பிறகுதான் பவுலோ கோய்லோ-வே கண்டுபிடித்தார். ஆனால் குரியன், ஒரு பிளம்பர் மற்றும் எலக்ட்ரீஷியனாக இருந்து விட்டதால், அதை அவனுக்கு அவ்வளவு நேர்த்தியாக சொல்லத் தெரியவில்லை. அவன் சொன்னான், “வாழ்க்கைக்கு என்று ஒரு வழி இருக்கிறது, நண்பா.”

ஒருவழியாக அவருக்கு வழி திறந்தது. குரியன் உலகின் சதிகளைப் பற்றி காத்திருந்து கனவு கண்டு கொண்டிருந்தான், வழி திறக்கும் வரை.

குரியனின் கதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல ஒழுக்கங்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கைக்கு என்று ஒரு வழி இருக்கிறது, நண்பா.

கத்ரீனா தான் அந்த வழி. குரியனை மணக்கத் தயாராக இருந்தாள். அவர் கனடாவில் வசித்து வந்த தாதி. அவளுக்கு அந்த நாட்டின் குடியுரிமையும் இருந்தது. குரியனை விட சில ஆண்டுகள் மூத்தவளான கத்ரீனா மூன்று வயது குழந்தைக்கு திருமணமாகாத தாய். கனடாவில் உள்ள சிரிய கத்தோலிக்கர்கள் மத்தியில் மிஷனரி பணி செய்து கொண்டிருந்த கேரளாவைச் சேர்ந்த பாதிரியார் ரெவரெண்ட் ஃபாதர் மத்தாய் சம்திங் அவருக்கு வழங்கிய கடைசி பரிசு அந்தக் குழந்தை.

கேரளாவின் சிரிய கத்தோலிக்கர்களுக்கு ஒரு தற்பெருமை உண்டு, கேரளாவின் நம்பூதிரி பிராமணர்களை மாற்றுவதற்கு இயேசுவால் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட இயேசுவின் சீடரான செயிண்ட் தாமஸ் வரை நீண்டு செல்லும் தங்கள் வரலாறு பற்றி. நம்பூதிரிகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கேரளாவுக்கு வந்தார்கள் என்பது வேறு கதை. ஆனால் நாம் மதத்தைப் பற்றி பேசுகிறோம், வரலாற்றை அல்ல. ஒரு கதையில் கேள்விகள் இல்லை என்ற மலையாள உத்தரவையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே, ரெவரெண்ட் ஃபாதர் மத்தாய்க்கு வருவோம். கனடாவில் உள்ள சிரிய கத்தோலிக்கர்கள் தங்களுடைய தனித்துவமான மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு விசுவாசமாக இருக்க உதவுவதே அவரது பணி. மிஷனரியின் தனிப்பட்ட கவனத்தை மற்ற சிரிய கத்தோலிக்கர்களை விட கத்ரீனா கொஞ்சம் அதிகமாக பெற்றார். அவ்வளவுதான். செயிண்ட் தாமஸ் சிரிய கத்தோலிக்கர்களிடம் எதிர்பார்த்ததற்கும் அப்பால் ரெவரெண்ட் ஃபாதர் மத்தாயின் மிஷனரி பணி சென்றுவிட்டதால், சீரோ-மலபார் சர்ச் அவரை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டது. கடவுளின் மனிதனுடன் தனது மகள் கொண்ட புனிதமற்ற தொடர்புகளைப் பற்றி அறிந்த கத்ரீனாவின் தாய் மாரடைப்பால் இறந்து போனாள். “அவர் கடவுளின் மனிதன் என்பதை அவள் எப்படி மறந்தாள்? எப்படி? என் மகள் எப்படி இப்படிச் செய்தாள்?” தன் மகள் பிசாசின் பெண் அவதாரம் என்றும், இனியும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் தன்னைத் தானே நம்பிக்கை இழந்தவளாய் தன் இதயத்தை வெடிக்க விட்டு விட்டாள்.

குருவிலாச்சன், கத்ரீனாவின் தந்தை, சற்று கராரானவர். உலகம் சதி செய்யும் சரியான நேரத்திற்காக அவர் காத்திருந்தார். ஒரு நல்ல நாள் காத்திருப்பு முடிவிற்கு வந்தது. அன்றுதான் அவர் குரியனைக் கண்டுபிடித்தார். குருவியின் (அந்த சிற்றூரில் அவரை அவ்வாறுதான் அழைத்தனர்) வீட்டுக் கழிப்பறை ஒன்றில் பழுதடைந்த வடிகால் குழாயை சரிசெய்ய அன்றைக்குச் சென்றிருந்தான் குரியன். மீதமுள்ளவை புடவியின் சதி.

கத்ரீனா யாரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆனாலும் அவளுடைய திருமணப் பேச்சை அவளது தந்தை, பிளம்பர் ஒருவரிடம், கழிப்பறை வடிகால் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். கூடவே, அந்த வீட்டில் இன்னொருவருக்கும் இதயம் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக குருவி தன் மகளையும் மிரட்டினார். “நீ அவனைத் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், நான் உன் அம்மா போன வழியிலேயே போயிடுவேன்,” என்று அவர் உறுமினார். “நாம அந்தக் கால ஆர்த்தொடக்ஸ் சிரிய கத்தோலிக்க குடும்பமாக்கும், நம்ம பாட்டன் பூட்டனுகளை செயிண்ட் தாமஸே நேரடியா நம்பூதிரி குடும்பத்தில இருந்து மதமாற்றம் செய்தாராம் தெரியுமில்லயா. கண்ட தே*டியா பயலையும் வீட்டுக்குள்ள வளர்த்துவிட முடியாது”.

மற்றொரு இதய வெடிப்பு நடக்கக்கூடும் என்கிற அச்சமா அல்லது புனித தாமஸ் பாரம்பரியத்தின் மீதான சிரிய கத்தோலிக்க விசுவாசமா – எது கத்ரீனாவை அந்த திருமணப் பேச்சிற்கு ஒப்புக் கொள்ளத் தூண்டியது என்பது எனக்குத் தெரியாது. அது ஒன்றும் முக்கியமில்லை. முடிவுகள் நன்றாக இருக்கும் வரை உலகம் சதி செய்து கொண்டே இருக்கட்டும்.

ஆண்டுகள் கடந்துவிட்டன, குரியனின் வாழ்க்கையில் புடவி மேற்கொண்டு சதி எதையும் செய்வதாகத் தெரியவில்லை. யாரும் பிளம்பிங் அல்லது மின்சார வேலைகளுக்காக அவனை யாரும் அழைக்காத போது, அவன் கனடாவில் உள்ள பல்பொருள் அங்காடிகள், கதைத்தொகுதிகள், பெட்ரோல் பம்புகள் மற்றும் உணவகங்களில் பணிபுரிந்தான். மேலும் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஆசிரியர்களும் சக மாணவர்களும் கேலி செய்த போது எப்படிச் சிரித்தானோ அப்படியே இப்பொழுதும் சிரித்தான். ஒருவேளை கத்ரீனாவும் கேலி செய்திருப்பாளோ? மற்றவர்களின் அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டும் என்ற அக்மார்க் மலையாளிகளின் தூண்டுதல் என்னிலும் மேலோங்கியிருந்தாலும் நான் கேட்கத் துணியவில்லை. எனக்கு தெரிந்ததெல்லாம் கத்ரீனாவுக்கு அதன் பிறகு வேறு குழந்தைகள் இல்லை. குரியன் மற்றும் கத்ரீனா இருவரும் ஒரே அறையில் தான் படுத்து உறங்கினார்காளா? என்ன கேவலமான கேள்வி இது! இந்தியர்களாகிய நாம் இப்படியெல்லாம் நினைக்கவே கூடாது.

குரியன் இப்போது ஒரு தாத்தாவாக இருக்க வேண்டும், அவருக்கு சொந்த குழந்தைகள் இல்லாவிடினும்.

***

“நிறுத்து, நிறுத்து.” குரியன் என்னிடம் கூறினான். நாங்கள் என் காரில் சென்றுகொண்டு இருந்தோம். வளர்ச்சி என்கிற பெயரில் பல மாற்றங்களைச் சந்தித்த எங்கள் பழைய சிற்றூரைப் பார்க்க வருமாறு அவனை அழைத்திருந்தேன். ஒரு மர நிழலில் காரை நிறுத்தினேன்.

“அந்தக் காலத்தில் இங்கே ஒரு கொன்னை மரம் இருந்தது, ஞாபகம் இருக்கா?” குரியன் என்னிடம் கேட்டான். கொன்றை என்பது ஒரு Indian laburnum ஆகும், இது மிகவும் காதல் ததும்ப golden shower tree என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது வசந்த காலத்தில் அதன் கிளைகள் முழுவதும் சரம் சரமாக செழுமையான மஞ்சள் மலர்களைப் பூக்கும். எப்போதோ சிற்றூரின் முன்னேற்றத்திற்காக சாலையை விரிவுபடுத்தியபோது அந்த மரம் போயேவிட்டது. வளர்ச்சி என்கிற கவர்ச்சியான யக்‌ஷினிக்கு முதல் பலி மரம் தானே.

“அவ வராண்டாவில வர்ற வரைக்கும் அந்தக் கொன்னையின் கீழ் தான் நான் காத்துட்டு இருந்திருக்கேன்,” குரியன் குரலில் ஏக்கம் இல்லாமல் இல்லை.

“கங்கா நாயர்?”

“ம்ம்.., நீயும் அவள மறக்கலையா?”

குரியன் அந்த நாயர் பெண்ணை கொஞ்சம் விலகி நின்று காதலித்தான். அந்தப் பெண்ணுக்கும் அது தெரியும். அவளும் அதை ஊக்குவிப்பதாகத்தான் தோன்றியது, ஏனென்றால் தன் வீட்டிற்கு வெளியே இருக்கும் கொன்றையின் கீழ் குரியன் தோன்றும் போதெல்லாம், கங்கா வராண்டாவில் ஏதாவது படிப்பது போலவும் வெளியில் காற்றை ரசிப்பது போலவும் அளவளாவுவாள்.

இருப்பினும், இந்த விஷயத்தில் புடவி சதி செய்யவில்லை. இந்த புடவியும் அதன் சொந்த சார்புகளைக் கொண்டுள்ளது போல. ஒரு சிரிய கத்தோலிக்க பையன் ஒரு நாயர் பெண்ணை திருமணம் செய்வது அந்த நாட்களில் புடவிக்குக் கூட ஒரு சதித்திட்டமாக இருந்திருக்கிறது.

“கங்காவை மிஸ் பண்றியா?” குரியனைக் கேட்டேன்.

“இல்லை,” அவரது பதில் மிகவும் உடனடியாக இருந்தது. “நான் கொன்னை மரத்தை மிஸ் பண்றேன்.”

(முற்றும்)

First appeared in English at https://matheikal.blogspot.com/2023/02/conspiracies-of-universe.html

ஆசிரியர்: தோமிச்சன் மதேய்கல்

சுமார் நான்கு தசாப்தங்களாக ஆங்கில மொழி மற்றும் இலக்கிய ஆசிரியராக உள்ளார். அவர் இந்திய வலைப்பதிவு உலகத்தில் நன்கு அறியப் பெற்ற பதிவரும் கூட. அரை டஜன் புத்தகங்களை எழுதியுள்ளார். தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். https://matheikal.blogspot.com/ என்கிற வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

மொழி மாற்றம்: பாண்டியன் இராமையா

https://kadaisibench.wordpress.com என்கிற பதிவில் தமிழிலும் https://dwaraka.wordpress.com/ என்கிற முகவரியில் ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy