Deepa Sridharan

Abstract Drama

5  

Deepa Sridharan

Abstract Drama

குங்குமப்பூ தோட்டம்

குங்குமப்பூ தோட்டம்

4 mins
485



வெண்மேகங்கள் கலைந்து பின் கூடி வெவ்வேறு உருவெடுத்து மலை முகடுகளுடன் காதல் பரிமாறிக்கொண்டிருக்கும் காலைப்பொழுது. ஏதோ இனமறியா இளம் நறுமணத்தில் தடுமாறி அலைந்து கொண்டிருந்தது இளங்காற்று. ஜீலம் நதிக்கரையில் ஜீவனை விடத் தவிக்கும் ஊதாப் பூக்களை நிறப்பிக்கொண்டு, வாய் பேசமுடியாமல் ஊமையாய்ச் சிரித்துக்கொண்டிருந்தன காஷ்மீரின் பாம்பூர் பள்ளத்தாக்குகள். சூரிய ஒளி ஊடுருவுவதற்குள் தங்களைக் கொய்துவிடப் போவதைப் பாவம் அவ்வூதாப் பூக்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. மண்ணிலிருந்து எட்டிப்பார்த்து இதழ் விரித்துக் கிடந்தன அவைகள். அவ்விதழ்களுக்கிடையில் வளைந்து நெளிந்து துறுத்திக்கொண்டிருந்தன அதன் விலையறியாத குங்குமப்பூக்கள். இயற்கையில் பலவையும் அதனின் மதிப்பறியாமலேயே பரவிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்து நுகர்வதற்கே பரினாமம் உயிர்களை அழைத்துச்செல்கின்றதோ என்னவோ! அந்தப் பயணத்தில் ஜனனமும் மரணமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது. இதில் அழுவதற்கு என்னவென்றே அவ்வூதாப்பூக்கள் சிரிக்கின்றன போலும்!

கையில் கூடையுடன் பெண்களும் சிறார்களும் சாரைசாரயாய் வந்து கொண்டிருந்தனர். தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, பேச்சும் சிரிப்புமாய் அவர்கள் அந்த குங்குமப்பூ தோட்டத்திற்குள் நுழைந்தனர். வயிற்றைத் தள்ளிக்கொண்டு, ஒய்யாரமாக சிரித்துக் கொண்டு, அறைகுறை காஷ்மீரியில் ஏதோ பேசிக்கொண்டே வந்தாள் மங்கா. அங்கிருந்த மற்ற பெண்களைவிட சற்றே தனித்து தெரிந்தாள் மங்கா.  அகண்டு திரண்ட கருவிழிகள் அவள் கருந்தேகத்தையும் மிஞ்சி மிளிர்ந்து கொண்டிருந்தது. ஒடுங்கிய தேகம், ஒற்றைத் தெத்துப்பல், நீண்ட மூக்கு, சாந்தம் வடித்த முகம், சராசரி உயரம். 

மங்கா கீழே குனிந்து அந்த ஊதாப்பூக்களுக்கு வலிக்காமல் அவற்றை ஒவ்வொன்றாய்க் கொய்துகொண்டிருந்தாள். அவள் தன் கூடையிலிருந்து துறுத்திக்கொண்டிருந்த குங்குமப்பூக்களைப் பார்த்தாள், சிரித்துக்கொண்டே தன் வயிற்றைத் தடவிக்கொண்டாள். அவள் வயிறு மீன்குட்டி போல துள்ளி அடங்கியது. அவளுக்கும் அவளுக்குள்ளிருக்கும் ஜீவனிக்குமான உரையாடலைப் புரிந்து கொண்டது போல அந்த ஊதாப்பூக்கள் காற்றில் தலையசைத்தன. 

“மங்கா மங்கா, 'கோயி தமில் நாட் சே ஆயா ஹேய், பாண்டு பாயி ஆப்கி தலாஷ் மெய் ஹேய்” என்று கத்திக்கொண்டே ஒரு இளம்பெண் ஓடிவந்தாள். 

மங்கா தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு எழுந்து, கண்களைச் சுருக்கி முகத்தை பின்னிழுத்துக்கொண்டு அவளைப் பார்த்தாள். 

மூச்சுவாங்கிக்கொண்டே வந்த அந்த இளம்பெண் அவளிடம் காஷ்மீரி பாஷையில் ஏதோ படபடவென பேசிமுடித்தாள். மங்கா சட்டென அவள் பூக்கூடையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போனாள். அங்கே தேங்கியிருந்த குட்டையொன்றில் கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். அந்த சலசலத்த குட்டையைப் பார்த்துக்கொண்டே வேகமாக சென்றாள் மங்கா. அவள் அங்கிருந்த சிறிய ஓட்டு வீடு ஒன்றிற்குள் நுழைந்தாள். 

பேப்பர் கட்டுகளுக்கும் ஃபைல்களுக்கும் நடுவே, பாண்டு சிவப்புக் கரை படிந்த தன் பற்களைக் காட்டி சத்தமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். அவன் எதிரே, சுருட்டைத் தலைமுடியுடன் கண்ணாடி அணிந்த கூர்மையான பார்வையுடன் ஒரு நடுத்தர வயது பெண்மணியும், சிரிக்கும் கண்கள், கூர்மையான மூக்கு தூக்கிக் கட்டிய குடுமியுடன் இளம் வாலிபன் ஒருவனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். 

“வா மங்கா, உன்னோட பேச ஆள் வந்துருக்குது” என்று கனமாகச் சிரித்தான் பாண்டு.

கூடையை இடுப்பில் வைத்து ஒரு கையிடுக்கில் தாங்கி பிடித்துக்கொண்டு, ஒருபக்கமாய் சாய்ந்துகொண்டே மங்கா கைகளைக் கூப்பி வணக்கம் சொன்னாள். அவர்கள் இருவரும் மங்காவைப் பார்த்து புன்னகையுடன் கை கொடுத்தார்கள். மங்கா தன் கைகளைத் துடைத்துக்கொண்டு அவர்களுக்குக் கை கொடுத்தாள். 

“நம்பல் கெஸ்ட் ஹௌசில் தான் இவங்கோ தங்கப் போறாங்கோ. ஏதோ டாக்குமென்டரி எழுதப்போது. நீதான் இவங்கோ கூட இருக்கனும்” என்று பாண்டு கூறினான். 

மங்காவிற்கு லேசாகக் கண் கலங்கியது. தன் கூடையில் குவிந்திருந்த ஊதாப் பூக்களைப் பார்த்து பெரும்மூச்சு விட்டுக்கொண்டாள்.

அவர்கள் அங்கிருந்து கிளம்புவதற்குள், பாண்டு மங்காவை தனியே அழைத்துச் சென்றான். அவனின் தொப்பை மங்காவின் வயிற்றோடு போட்டி போட்டுக்கொண்டு நகர்ந்தது. அவன் முகத்தில் தற்காலிகமாய் குடியேறியிருந்த சிரிப்பை, சிடுசிடுப்பு விரட்டியடித்தது. 

 “அவுங்கல் நம்மில் கெஸ்ட் ஹவுஸில் தங்க போகுது. நீ சமைச்சு குடுத்துடு.  அவுங்கள் ஏதோ நம்ப தோட்டத்து பொம்ப்ளைங்க பத்தி டாக்குமெண்டரி எடுக்க போகுது. மேனேஜ்மென்ட் பத்தி கேட்டா ஒன்னும் சொல்ல கூடாது. பாத்து நடந்துக்கோ” என்று கூறிக்கொண்டே தன் வெள்ளை ஜிப்பாவிலிருந்து சாவிக்கொத்து ஒன்றை எடுத்து மங்கா கையில் கொடுத்தான் பாண்டு.

“சரி சார்” என்று தலையசைத்துவிட்டு கையிலிருந்த பூக்கூடையை அவனிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள் மங்கா.

அவள் அவர்களை கெஸ்ட் ஹௌசிற்கு அழைத்துச் சென்றாள். போகும் வழியில் அவர்கள் இருவரும் தங்கள் பெயர்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்தப் பெண்மணியின் பெயர் நிவேதிதா, அந்த இளைஞனின் பெயர் நரேன்.

நிவேதிதா கொஞ்சம் அளவாகத்தான் பேசினாள். அவளின் மேக்கப்பும், அவள் அணிந்திருந்த குர்த்தாவும், கழுத்திலும் காதிலும் தொங்கிக் கொண்டிருந்த முத்துமணி அணிகலன்களும் மங்காவின் கண்களை விரியச்செய்தது. நரேன் ஆறடி உயரத்தில் வாட்ட சாட்டமாய் இருந்தான். அவன் கழுத்தில் கேமரா ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அவன் வழிநெடுக பேசிக்கொண்டே வந்தான். அவன் உடற்பெயற்சி செய்த தேகமும், வாரியணைக்கும் சிரிப்பும் கள்ளிச்செடியில் தேன்வடிவது போல இருந்தது. எனினும் இரண்டும் வெவ்வேறு விதத்தில் வசீகரமாய் இருந்தது. மங்கா ஒவ்வொரு முறையும் அவனை அன்னாந்து பார்த்துதான் பேச வேண்டியிருந்தது.

அவர்கள் கெஸ்ட் ஹவுசிற்குப் போகும் வழி நெடுக அந்த குங்குமப்பூ தோட்டம் ஊதா நிற கம்பளம் விரித்திருந்தது. நரேன் அதை தன் கேமரா லென்சில் வாரிக்கொண்டான். நிவேதிதாவோ தன் விழி லென்சில் வாரிக்கொண்டாள். 

“பியூட்டிபுல்” என்றாள் நிவேதிதா. 

நரேன் மங்காவைப் பார்த்தான்.

மங்கா அந்த குங்குமப்பூக்களையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறாள். 

“என்ன மங்கா ஏதோ இன்னிக்கு தான் இந்த அழக மொத தடவையா பாக்கற மாதிரி பாக்கற” என்றாள் நிவேதிதா.

 “ஒவ்வொரு நாளும் புதுசுதானக்கா, நாம சுவாசிச்சு, நேசிச்சு சொகங்கண்டத மத்தவங்களும் அனுபவிக்கும் போது அதுல ஒரு அலாதி சந்தோசம்” என்று தெத்துப்பல் தெரிய சிரித்தாள் மங்கா.

 அந்த தோட்டத்தின் இடையிடையே நிழற்படம் தீட்டிவிட்டது போல இலைகளற்ற கிளைகளுடன் வால்நட் மரங்கள் நின்றுகொண்டிருந்தன. தோட்டத்தைச் சூழ்ந்த மலைத்தொடர்கள், அதன் முன் வரிசையாய் நின்று கொண்டு காவல் காக்கும் சைனார் மரங்கள் என இயற்கையின் மொத்த அழகும் அங்கு கொட்டிக் கிடக்கிறது. ஒருவழியாக இயற்கையின் பிடியிலிருந்து நரேனும் நிவேதிதாவும் வெளியே வந்தனர். கெஸ்ட் ஹவுசை திறந்து விட்டாள் மங்கா. மூவரும் உள்ளே நுழைந்து அமர்ந்தார்கள். 

மங்கா தன் தலையிலிருந்த முக்காட்டை கழட்டிக்கொண்டே, “எந்த ஊருலருந்து வாரீங்கக்கா?” என்று கேட்டாள். 

“சென்னை” என்று இருவரும் ஒரே சுருதியில் பதிலளித்தார்கள்.

“எங்க ஊரு கன்னியாக்குமரி பக்கத்தில தோவாளை. நீங்க கேட்ருப்பீங்களான்னு தெரில” என்றாள் மங்கா. 

இருவரும் தெரியாதென்று தலையசைத்தார்கள். 

“எங்க ஊருல பிச்சிப்பூ பேமஸ்க்கா. பூ கெட்டி கெட்டி எங்கெல்லாமோ அனுப்புவாங்கக்கா” என்று பெருமையாகக் கூறினாள் மங்கா. 

நரேனும் நிவேதிதாவும் மங்காவை வைத்த கண் வாங்காமல் பார்தார்கள். 

“உங்களுக்கு என்னய தெரியுமா?” என்று கேட்டாள் மங்கா. 

நரேனும் நிவேதிதாவும் ஒருவரையொருவர் பார்த்து தோள்களை உயர்த்தி உதட்டைப் பிதுக்கிக்கொண்டனர்.

 “இப்போதான் உன்ன தெரியும்” என்றாள் நிவேதிதா. 

மங்காவின் முகம் வாடிய பிச்சிப்பூ போல சுருங்கியது. 

“உனக்கு இது எத்தனாவது மாசம் மங்கா?” என்று கேட்டாள் நிவேதிதா. “இன்னும் ஒரு வாரத்துல பிள்ளை வந்துடும்னு சொல்லியிருக்காங்க” என்று புன்னகைத்தாள் மங்கா. 

“ஆனா இன்னும் நீ வேலை செய்றியா உனக்கு குனிஞ்சு நிமிந்து பூப்பறிக்க கஷ்டமா இல்லையா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“இதுல என்ன கஷ்டம் இருக்கு. ஆடு மாடெல்லாம் திரிஞ்சிக்கிட்டே இருக்கும் போதுதான பிள்ளை பெத்துக்குதுக” என்றாள் மங்கா. 

நரேன் சத்தமாக சிரித்தான். 

“என்ன சிரிக்கிறீங்க?” என்று நரேனைப் பார்த்துக் கேட்டாள் மங்கா. 

“ஆடு மாடு கஷ்டப்படலன்னு உன்கிட்ட யார் சொன்னது?” என்று கேட்டான் நரேன். 

“அதுங்க மூஞ்ச பாத்தா தெரிஞ்சு போகுது” என்றாள் மங்கா. 

“சரி உன்னோட கணவனும் இங்கதான் வேலை பாக்குறாரா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“மாமா செத்து போயி நாலு மாசம் ஆச்சுக்கா” என்று எச்சிலை முழுங்கினாள் மங்கா. 

“சாரி” என்று இருவரும் கூறினார்கள். 

“அக்கா ஒங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா? என்று கேட்டாள் மங்கா. 

“ஓ ஆயிடுச்சே” 

“பிள்ளைக இருக்காங்களா?” 

“எனக்குக் கொழந்த பெத்துக்க இஷ்டம் இல்ல மங்கா, எனக்கு என்னோட வேல, கனவு இதல்லாம் ரொம்ப முக்கியம், கொழந்த அதுக்கொல்லாம் இடஞ்சலாயிருக்கும்” என்றாள் நிவேதிதா. 

மங்கா தன் புருவங்களைக் குறுக்கி “ஓ அப்படியா! என்று தலையசைத்தாள். 

“நீங்க ரெண்டு பேரும் எதுக்கு வந்துருக்கீங்க?” என்று கேட்டாள் மங்கா. “நாங்க பெண்கள் உரிமை, பெண்ணியம் இதல்லாம் பத்தி ஒரு டாக்குமெண்டரி எடுக்க போறோம் மங்கா” என்றாள் நிவேதிதா. 

“பெண்ணியமா!!! அப்படின்னா என்னக்கா?” என்றாள் மங்கா. 

“அது பெரிய விஷயம். சொல்ல நிறைய இருக்கு. நான் உனக்கு பொறுமையா கொஞ்சம் கொஞ்சமா சொல்றேன்” என்று கூறினாள் நிவேதிதா. 

“சரி நீங்க ரெண்டு பேரும் உக்காந்துருங்க நான் உங்களுக்கு ஏதாவது சமைச்சு எடுத்துட்டு வாரேன்” என்று கூறிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள் மங்கா.

அவளின் நீண்ட கருங்கூந்தலைப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.

 “இன்னசென்ட் கேல்” என்றாள் நிவேதிதா.

 “ஓல்ட் சோல்” என்றான் நரேன். 

நிவேதிதா நரேனை பார்த்து தன் மூக்குக் கண்ணாடியைத் தூக்கிக்கொண்டு, உதடுகளைப் பிதுக்கி புன்னகைத்தாள். 

அவர்கள் இருவரும் தங்கள் டாக்குமென்டரி பற்றி பேச ஆரம்பித்தார்கள்.  

“ஐ திங்க் மங்கா வில் பி தி ரைட் உமன் டூ ஹைலைட் இன் அவர் டாக்குமென்டரி” என்றான் நரேன்.

 “ரைட்” என்றாள் நிவேதிதா. 

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். 

சற்று நேரத்தில் மங்கா கையில் தட்டுடன் வந்தாள். ரொட்டி, தால், சோறு கொஞ்சம் சாலட் பரிமாறிய அந்த தட்டை அவர்களிடம் கொடுத்தாள். 

“வா மங்கா, நீயும் சேர்ந்து சாப்பிடு எங்க கூட” என்றாள் நிவேதிதா. 

“நான் பொறவு சாப்புடுறங்க்கா” என்றாள் மங்கா. 

“நோ நோ நோ சேர்ந்து சாப்பிடலாம் வா” என்றாள் நிவேதிதா. 

மூவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள். 

“ரொம்ப நல்லா சமைச்சு இருக்கீங்க” என்றான் நரேன். 

அவனைப் பார்த்து தலையசைத்து புன்னகைத்தாள் மங்கா. 

“நீ எப்படி மங்கா இங்க வந்து சேந்த?” என்றாள் நிவேதிதா. 

“அது ஒரு பெரிய கதக்கா. என்னோட மாமா இங்கருந்து குங்குமப் பூ வாங்கி விக்கிற தமிழ்நாட்டு ஏஜென்ட்ல வேலை பாத்துச்சு. அப்போ அது இங்க நெறய தடவை வந்துருக்கு.  அப்போ இங்க வேல பாத்துட்டு இருந்த ஒரு புருஷன், பொண்டாட்டி ரொம்ப நாளா பிள்ளை பொறக்கலன்னு கஷ்டப்பட்டு இருந்துச்சா, அதனால என்னோட மாமா என்னய அவங்களுக்கு வித்துருச்சு. அப்போ  எனக்கு  எட்டு வயசு இருக்கும். எங்க அம்மா அப்பா எனக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே செத்து போய்ட்டாங்க. என்னோட மாமா தான் என்னை வளத்துச்சு. அப்புறம் என்ன இங்க வித்துடுச்சு.  இங்க இருந்த அம்மா அப்பா என்னய நல்ல வளத்தாங்க, ரொம்ப நல்லவங்க. எனக்கு 22 வயசு இருக்கும்போது அவங்களும் செத்துட்டாங்க. அப்புறம் ரெண்டு வருஷத்துல என்னோட இந்த அம்மாவோட தம்பி பையன் என்னய கல்யாணம் பண்ணிக்கிச்சு. நாலு மாசம் முன்னாடி அதுவும் ஆக்சிடன்டுல செத்து போயிடுச்சு” என்றாள் மங்கா. 

நரேன் மங்காவைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டான்.

“உன்னனோட அனுமதி இல்லாமலே ஒன்ன வித்துருக்கான் உன் மாமா. ரிடிகுலஸ்” என்றாள் நிவேதிதா. 

“இன்னிக்கும் என்ன அந்த ஊருலேருந்து யாராவது பாக்க வருவாக, என்னோட மாமா யார்டயாவது சொல்லியனுப்பும்னு நம்பிகிட்டு இருக்கேன். இப்பவர யாரும் வரல” என்று கூறிக்கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து வைத்துக் கிளம்பத் தயாரானாள் மங்கா. 

“நாங்களும் உன்னோட வரோம் மங்கா. இங்க வேலை செய்யற பெண்கள் கிட்ட பேட்டி எடுக்கனும்” என்றான் நரேன்.

அவர்கள் மூவருமாகக் கிளப்பி போனார்கள். சாயங்கால நேரத்துக் குளிர்காற்று அவர்கள் இமைகளை கூராக்கி விரைக்கவைத்தது. 

“குங்குமப்பூ தோட்டத்துக்கு அந்த பக்கந்தான் எங்க கிராமம். ஒரு இருபது நிமிசம் நடக்கனும். உங்களுக்கு முடியுமுல்ல?” என்று கேட்டாள் மங்கா.

 “முடியும் முடியும்” என்றான் நரேன். 

“அக்டோபர் -நவம்பர் இந்த ரெண்டு மாசதந்தான உங்களுக்கெல்லாம் இந்த வேல. மத்த மாசம்லாம் என்ன வேல பாப்பீங்க? காசுக்கு என்ன பண்ணுவிங்க?” என்று கேட்டாள் நிவேதிதா.

“கொஞ்சோ கஷ்டந்தாங்க்கா. அப்பப்ப பக்கத்து கிராமத்துல, கூட பின்ன ஆளெடுப்பாங்க, அங்க போய் கூலி வேல பாத்துட்டு வருவோம்” என்றாள் மங்கா

எத்தனை முறைப் பார்த்தாலும் அலுக்காத அந்த குங்குமப் பூக்கள், அவற்றின் மெல்லிய நறுமணம், அந்த இயற்கையின் அழகு ஆகியவற்றில் லயித்தாள் நிவேதிதா. 

“இந்த குங்குமப்பூ எப்படி இந்தியாவுக்கு வந்துது தெரியுமா?” என்றான் நரேன்.

“இன்ட்ரஸ்டின்ங் க்வொஸ்டின்!!! சொல்லு” என்றாள் நிவேதிதா.

மங்கா தன் விரல்களை அவள் தாடைக்கு முட்டுக்கொடுத்து நரேன் பேசுவதையே வாயைத் திறந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.

“குங்குமப்பூ, 500.B.Cல பெர்சியன் கின்ங்ஸ்சால இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டதா நம்பப்படுது. அவுங்க காஷ்மீரைக் கைப்பத்துனதுக்கு அப்றம் உள்ளூர் மண்ணில குங்குமப்பூ செடிகளை நட்டாங்கன்னு ஒரு கூட்டம் சொல்லுது. ஆனா உள்ளூர் நாட்டுப்புறக் கதைங்க வேற மாதிரி சொல்லுது. பாரம்பரிய காஷ்மீரி புனைவுகளின்படி, 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகள்ள இரண்டு சூஃபி சந்நியாசிகளால குங்குமப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதுன்னு சொல்றாங்க. கவ்ஜா மசூத் வாலி மற்றும் ஷேக் ஷெரீப்-உ-தின் வாலி ங்கிற சந்நியாசிகள் சிக்கா இருந்தப்போ, உள்ளூர் பழங்குடித் தலைவர்கிட்ட அவுங்க நோயைக் குணப்படுத்த சொல்லி கேட்டுருக்காங்க. அவர் குணப்படுத்துனதால, அந்த மக்களுக்கு பரிசளிக்க அவங்க ஒரு குங்குமப்பூ தண்டை கொடுத்ததா கதை இருக்கு. இந்த கதைய காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் மனசார ஏத்துக்கிட்டாங்க.

அந்தசந்நியாசிகளுக்கு உங்க பாம்பூர்ல ஒரு தங்க கோவில் இருக்கு. நீங்க பாத்ததில்லயா” என்று கேட்டான் நரேன். 

“ஓ அது தெரியுமே. இன்னும் ரெண்டு வாரத்துல அந்த கோவில்ல பூச இருக்கு. ஆனா மத்த கதையெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. குங்குமப்பூ போட்டு பால் குடிச்சா பிள்ள செவப்பா பொறக்கும். அதனால எப்டியாச்சும் காசு சேத்து கர்ப்பமா இருக்கும்போது குங்குமப்பூ வாங்கிடு, இல்லன்னா உன்னயமாதிரி உம்பிள்ளயும் கருப்பா பொறந்துடுன்னு எங்கம்மா நான் இங்க வந்ததுலருந்து சொல்லி வளத்துச்சு. அதனால கஷ்டபட்டு காசு சேத்து குங்குமப்பூ வாங்கி பால்ல கலந்து குடிக்கறேன். எங்க கிராமத்துலயே குங்குமப்பூ பால் குடிக்கிற முதல் பொம்பள நாந்தான்னு எல்லாரும் பேசிக்குறாங்க” என்று தெத்துப்பல் தெரிய சிரித்தாள் மங்கா. 

ஒவ்வொரு முறை அவள் சிரிக்கும் போதும், அந்த தெத்துப்பல்

இடுக்கில் ஒட்டிகொள்கிறான் நரேன்.

 “அதெல்லாம் பொய் மங்கா. குங்குமப்பூக்கும் கொழந்த கலருக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல. கொழந்த கருப்பா இருந்தா என்ன இப்போ, மனுசங்க நெறத்துல என்ன ஏற்றத்தாழ்வு இருக்கு. அதெல்லாம் போட்டு மனச கொழப்பிக்காத மங்கா” என்றாள் நிவேதிதா. 

அப்போ எம்புள்ள செவப்பா பொறக்காதா? என்று தலையசைத்துக் கொண்டே கேட்டாள் மங்கா.

நரேனும் நிவேதிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 

அவர்கள் மூவரும் ஏதோ பேசிக்கொண்டே நடந்தனர் சற்று நேரத்தில் அவர்கள் மங்காவின் கிராமத்திற்குள் நுழைந்தார்கள். அந்த அழகான சிறிய கிராமத்தில் நீண்ட தெருக்கள்.  மொத்தம் 90- 100 வீடுகள் இருக்கும். அந்த கிராமத்தில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி எல்லாம் இருந்தது. அங்கே ஒரு சிறிய பள்ளிக்கூடமும் நரேனின் கண்ணில் தென்பட்டது. 

அவர்கள் அங்கே நுழைந்ததும் “மங்கா ஆகயா ஹை! மங்கா ஆகயா ஹை! என்று கத்திக்கொண்டே சிறுமி ஒருத்தி ஒரு வீட்டிற்குள் ஓடினாள். அந்த வீட்டிலிருந்து ஒரு வயதான பாட்டி வெளியே வந்தாள்.

“கியா ஆப்னி கானா காயா? என்று மங்காவிடம் கேட்டாள். 

“ஜீ ஹா” என்றாள் மங்கா. 

அந்த பாட்டி அவள் வயிற்றை தடவி பார்த்து சிர்ஃப் தோ தீன்” என்றாள். 

அந்த பாட்டியின் மூக்கு வளையத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நரேன். அந்த மூக்கு வளையம் காது கம்மலுடன் ஒரு மெல்லிய சங்கிலியால் இணைக்கப்பட்டிருந்தது. அந்த பாட்டி பேசும்போது அந்த சங்கிலி மெதுவாக அசைந்தது. நரேன் அதை வீடியோ எடுக்க முயற்சி செய்தான். பாட்டி தலை முக்காடை இழுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

மங்கா சிரித்தாள். நரேன் அவளை ரசித்தான். நிவேதிதா அவள் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்களைச் சிமிட்டினாள். 

அங்கிருந்த சில வீட்டு வாசல்களில் பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நிவேதிதா சில பெண்களை அணுகி அவர்களிடம் பேசத் தொடங்கினாள். அவர்களுக்கு அங்கே நல்ல சம்பளம் கிடைக்கிறதா? அந்த வேலை அவர்கள் மேல் திணிக்கப்பட்டதா? வேலை செய்யும் இடத்தில் பாலியல் தொல்லை ஏதாவது இருக்கிறதா? வேறு ஏதாவது வகையில் அவர்களுக்கு துன்பம் இருக்கிறதா?  போன்ற பல கேள்விகளைக் கேட்டாள். 

அப்பெண்கள் தலை முக்காட்டை வைத்து தங்கள் முகத்தை மூக்குவரை மறைத்துக்கொண்டு தலையைக்குனிந்து சிரித்துக்கொள்கின்றனர்.

நிவேதிதா சரளமாக காஷ்மிரி பாஷையில் பேசினாள். மங்கா அவளை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். 

அங்கிருந்த பெண்கள் எல்லாருமே தாங்கள் சந்தோஷமாக இருப்பதாகவும், அவர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லை என்றும், இது அவர்களின் குடும்பத் தொழில் என்றும் ஒரே மாதிரியான பதிலளித்தார்கள். 

நிவேதிதா தன் கூரிய கண்களால் அவர்களைத் துளைத்துப் பார்த்தாள். அவர்கள் அவள் ஜீன்ஸ் பேண்டயும் குர்த்தாவையும் மேலும் கீழும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நிவேதிதா தன் தலையை ஆட்டி சலித்துக்கொண்டாள்.

நரேன் அங்கு நடந்ததையெல்லாம் தன் வீடியோ கேமராவில் பதிவு செய்தான். அவனைச் சுற்றி இருபது இருபத்தைந்து குழந்தைகள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஒரு சிறுவன் நரேனின் குடுமியை இழுத்துப்பார்த்து “ஹீஹீஹீ” என்று இளித்தது. மற்றொரு சிறுமி அவனின் காது வளையத்தை ஆட்டிப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு சிரிக்கிறது. இன்னும் சில பெரிய குழந்தைகள் அவனின் வீடியோ கேமராவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நரேன் அவர்கள் எல்லோரையும் படம் பிடித்துக்கொண்டான்.

அந்த கிராமத்திலிருந்த சிறிய குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் மங்காவிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் பேசுவதை நரேன் கவனித்தான். அந்த கிராமத்தில் இருந்த ஆண்கள் அனைவரும் மங்காவிடம் ஒரு மரியாதையுடன் பேசினார்கள். 

சில பெண்களிடம் பேசிவிட்டு நிவேதிதா தனது டைரியில் பல குறிப்புகளை எடுத்துக் கொண்டாள். பின்பு அவர்கள் மூவரும் மங்காவின் வீட்டிற்கு போனார்கள். மங்கா அவர்களை உள்ளே அழைத்து ஒரு பாயில் உட்கார வைத்தாள். அவர்கள் இருவரும் அவள் வீட்டை பார்த்தனர். மங்காவின் தெத்துப்பல் சிரிப்பையும், நீண்ட கூந்தலையும், எறி இறங்கும் அவளின் வயிற்றையும் தவிற அந்த வீட்டில் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்களோ, பொருட்களோ எதுவும் நரேனின் கண்ணிற்குத் தென்படவில்லை. மங்கா அவர்கள் குடிப்பதற்குச் சுடச்சுட தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அதைக் குடித்துக்கொண்டே, மங்கா தன் வீடு முழுவதும் அங்கங்கே வரைந்து ஒட்டி வைத்திருந்த குழந்தைகளின் உருவங்களைப் பார்த்தார்கள். 

“ரொம்ப அழகாவும், தத்ரூபமாவும் வரஞ்சுருக்கீங்க” என்றான் நரேன். 

மங்கா வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டாள்

“அந்த படத்துக்குப் பக்கத்துல நின்னுக்கோங்க மங்கா ஒரு போட்டோ எடுக்கறேன்” என்றான் நரேன் தன் கேமரா லென்ஸ் கவரை திறந்துகொண்டே.

மங்கா விடுக்கென்று கண்ணாடி முன் சென்று தன் தலைமுடியை சரிசெய்து கொண்டு, தன் முகத்தை இருபுறமும் திருப்பி ஒருமுறை பார்த்துக்கொண்டாள். பின் நரேன் காட்டிய, தான் வரைந்த ஒரு குழந்தை படத்தின் அருகில் சென்று நின்றாள். 

“ஸ்மைல்” என்றான் நரேன். 

தன் தெத்துப்பல் தெரிய மெலிதாக புன்னகைத்தாள் மங்கா. 

நரேன் கிளிக் கிளிக் என்று நான்கைந்து முறை மங்காவின் புன்னகையை தன் விழி லென்சில் வாரிக்கொண்டான்.

“இங்கே நீ தனியா தான் இருக்கியா மாங்கா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“ஆமாக்கா மாமா செத்து போனதுக்கு அப்புறம் தனியா தான் இங்க இருக்கேன், ஆனா நைட்டு யாராவது சின்ன பசங்க வந்து என் கூட படுத்துப்பாங்க” என்றாள்.  

“சரி நாங்க இருக்கிற வரைக்கும் நீ எங்க கூட கெஸ்ட் ஹவுஸில் தங்கிடு” என்று கூறினாள் நிவேதிதா. 

மங்கா சிறிது தயங்கினாள், பின்பு ‘சரிக்கா’ என்று தலையசைத்துவிட்டு தனக்குத் தேவையான துணி மணிகளையும் மற்ற பிற பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டாள். 

நரேன் முகம் மலர்ந்ததை தன் கண்ணாடியைத் தூக்கி விட்டுக்கொண்டே பார்த்தாள் நிவேதிதா.

 அவன் அவள் பொருட்களை தூக்குவதற்கு உடனே தயாரானான். மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

பாம்பூர் நகரத்தில் சாயங்காலம் 6 மணிக்கு மேல் யாரையும் வெளியே பார்க்க முடியவில்லை. கும்மிருட்டாக இருந்தது. குளிர் சற்றே அதிகமாகவே இருந்தது. பாண்டு அவர்களை ஜீப்பில் அழைத்துச் சென்றான். வழி நெடுக குங்குமப்பூவின் மணம் இழைந்த குளிர் காற்று. ஆழ்கடல் அமைதி. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு புன்னகைத்தனர். சில மணங்களும், வானிலைகளும் மனிதனின் ஆழ் மனதை துளைத்தெடுக்கும். என்னவென்று சரியாக விளக்கமுடியாத நினைவுகளை மௌனத்தில் வலை பின்னும். 

பாண்டு, ‘ரோஸ் ரோஸ் ஆன்கோ தலே ரோஸ் ரோஸ் ஆன்கோ தலே, ஏக்கு ஹி சப்புனா ஜலே, ராத் பரு காஜல் ஜலே’ என்ற ஒரு பழைய ஹிந்தி பாடலை முனுமுனுத்து அவர்களின் மௌனத்தைக் கலைத்தான். அந்த முழு நிலவின் வெளிச்சத்தில் மங்காவிடம் எப்பொழுதுமே ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பு கூடுதலாய் ஜொலித்தது. அவள் கண்களில் தான் எத்தனை கம்பீரம். ஒரு உயிரைச் சுமக்கையில், பெண்ணினம், அவ்வுயிர் இந்த பிரபஞ்சத்தில் தழைப்பதற்காக சேர்த்துவைத்த சக்தியையும் சேர்த்தே சுமக்கின்றது. இயற்கையின் இந்த ஆண் பெண் வெளிப்பாடு எத்தனை அறிவுப்பூர்வமானது. 

நரேன் மங்காவைப் பார்தான். மங்காவோ அந்த முழு நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று நிவேதிதா தன் கிராமத்துப் பெண்களிடம் கேட்ட கேள்வி, ‘உங்களுக்குப் பாலியல் தொல்லைகள் ஏதேனும் இருக்கிறதா?’ என்ற கேள்வி அவள் மனதில் ஏனோ ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஏதோ அரைகுறையாய் நியாபகத்திற்கு வந்து போகும் சில காட்சிகள். வரும் வழியில் அவள் தண்ணீர் ஊற்றியறியாத முட்செடி ஒன்று அந்த தோட்டத்தின் ஓரத்தில் படர்ந்து அவளை முருக்கிக்கொண்டு பார்த்தது. மங்கா அச்செடியிலிருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டு மீண்டும் நிலவைப் பார்த்தாள்.

“மங்கா என்ன சொல்லுது? ஊர் பத்தி கேக்குதா”? என்று சிரித்துக்கொண்டே கேட்டான் பாண்டு.

“அவுங்களுக்கு என்னோட ஊரு தெரியல” என்றாள் மங்கா. 

அவர்கள் கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தார்கள். பாண்டு அவர்களை இறக்கிவிட்டு கிளம்பினான்.

 மங்கா அவர்களுக்கு டின்னர் செய்ய ஆரம்பித்தாள்.

மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள். மங்காவின் சமயல் நிவேதித்தாவிற்கும் நரேனுக்கும் மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் சப்புகொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

திடீரென “உ ங்க முழுப்பெயர் என்ன மங்கா?” என்று கேட்டான் நரேன். 

மங்கா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள். அவளுக்கே மறந்து போன அவளின் பெயர். 

“மங்கயர்கரசி” என்றாள். 

அவளை அந்தப் பெயரிட்டு யாரும் சமீப காலத்தில் அழைத்ததில்லை. “இந்த ஊரு சனங்களுக்கு எம்பேரு வாயில வரல. அதனால எங்கம்மா மங்கான்னு எம்பேர மாத்தி வெச்சுட்டாங்க” என்றாள் மங்கா. 

“நைஸ் நேம்” என்றாள் நிவேதிதா. 

சாப்பிட்டுவிட்டு மூவரும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

“இங்க ஆண் தொழிலாளிகளுக்கும் பெண் தொழிலாளிகளுக்கும் ஒரே மாதிரி சம்பளம் குடுக்குறாங்களா மங்கா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“இல்லக்கா, இங்க தோட்டத்துல பொம்பளைங்கல்லாம் பூ பறிச்சு குடுப்போம். அதுல இருக்கற அந்தப் பூ களங்கத்த தனியா பிரிச்சு எடுக்கனும். அதுலயும் ரெண்டு மூனு விதமா பிரிப்பாங்க. நுனில இருக்கற செவப்பு கலர் பூ களங்கம் மொதல் கிரேடு, செவப்பும் கொஞ்சம் மஞ்ச கலர் அன்ந்தாஸ் (flower style) கலந்தா ரெண்டாவது கிரேடு, மொத்தமும் மஞ்ச கலர் அன்ந்தாஸ் மூனாவது கிரேடு. அந்த வேலய பொதுவா ஆம்பளைங்க பாப்பாங்க. அதுனால வேற வேற சம்பளம் தான் குடுப்பாங்க. எங்களுக்கு கொஞ்சம் கம்மியாத்தான் கெடைக்கும்” என்றாள் மங்கா. 

“ஜென்டர் இன்னீக்குவாலுட்டி” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள் நிவேதிதா. 

“அப்டீன்னா என்னக்கா?” என்றாள் மங்கா. 

“ஆண், பெண் சமத்துவமில்ல. அநியாயம். இதையெல்லாம் உன்ன மாதிரி பொண்ணுங்க தான் மங்கா தட்டி கேக்கனும்” என்றாள் நிவேதிதா. 

“சம்பளம் பத்தி நீங்க சொல்றது கரெக்ட், ஆனா ஆம்பள வேற பொம்பள வேற தானக்கா. நமக்கு சில விசயத்த செய்ய முடியுது, ஆம்பளைங்களுக்கு சில வேலய செய்ய முடியுது. இது இயற்கையான விசயம் தான” என்றாள் மங்கா. 

நரேன் அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டிருந்தான். “குட்ட குட்ட குனிஞ்சு தான் பெண்ணினம் இப்படி அடிமை பட்டு கிடக்கு புரிஞ்சுக்கோ மங்கா” என்றாள் நிவேதிதா.

மங்கா தலையை சொரிந்துகொண்டு அரைகுறையாக தலையை அசைத்தாள். 

“அக்கா நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும். இன்னைக்கு கிராமத்துல அந்த பொம்பளைங்ககிட்ட பாலியல் கொடுமை இருக்கான்னு கேட்டீங்களே ஏன் அப்படி கேட்டீங்க?” என்றாள் மங்கா. 

“பொதுவாவே பெண்களுக்கு வேலை செய்யற இடத்துல நிறைய பாலியல் தொல்லை இருக்கும், அதுவும் இந்த மாதிரி கூலித்தொழில் செய்யற இடத்துல அது ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குது. அந்த மாதிரி இங்கே ஏதாவது இருந்தா அதை தட்டிக் கேக்கலாம்னு தான் கேட்டேன்” என்றாள் நிவேதிதா. 

“உனக்கு அந்த மாதிரி ஏதாவது நடந்திருக்கா மங்கா?” என்று கேட்டு மங்காவின் கண்களை கூர்ந்து கவனித்தாள் நிவேதிதா. 

அந்த கேள்வியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவள் போல சட்டென்று பதில் கூறினாள் மங்கா. “இந்த ஊருக்கு கொண்டு விடுறதுக்கு முன்னாடி எங்க மாமா என்ன நாசம் பண்ணி தான் இங்கே கொண்டு விட்டுச்சு” என்று மங்காவின் குரல் சற்றே தழும்பியது. 

நரேன் மங்காவைக் கண் கலங்கப் பார்த்தான். 

“பாஸ்ட்டர்ட், இத பத்தி நீ யார்கிட்டயாவது சொல்லி இருக்கியா?  உன்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லி போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண சொல்லலையா? என்று பொங்கி எழுந்தாள் நிவேதிதா. 

“எனக்கு அப்ப விவரம் தெரியாத வயசு என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியலக்கா. இங்க வந்து பல வருசம் கழிச்சுதான் எனக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கே தெரிஞ்சுது” என்று நிதானமாக கூறினாள் மங்கா. 

“உன்னோட மாமா செஞ்சது தப்பு இல்லையா மங்கா? அந்த தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்கணும்னு நீ நினைக்கலயா? என்று கேட்டாள் நிவேதிதா. 

“நான் இங்க வந்தப்புறம் இந்தப் பாண்டு சார் கூட தான் என்கிட்ட ஒரு தடவை தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாரு. அப்ப எனக்கு விவரம் தெரிஞ்சுது. அதனால அவரைச் சும்மா விடலையே நான். ஊரைக்கூட்டி பஞ்சாயத்து கூட்டி நடுரோட்டில நிக்க வச்சு நல்லா கேள்வி கேட்டேன்ல. அவரும் எங்கிட்ட மன்னிப்பு கேட்டாரு. அன்னிலருந்து இன்னிவரைக்கும் எங்கிட்ட ஒரு எட்டு தள்ளி நின்னு தான் பேசுராரு. என்னோட மாமா செஞ்சது ரைட்டுன்னு சொல்ல மாட்டேன், ஆனா இந்த உலகத்துல எப்போதுமே எளியவங்கள ஏச்சுதான வலியவங்க வாழ்ந்துகிட்டு இருக்காங்க. மனுசங்க மட்டுமில்ல மத்த உசுருகளும் அப்படித்தான இருக்கு” என்று சர்வசாதாரணமாக கேட்டாள் மங்கா.

“அப்ப பொம்பளைங்கன்னா எளியவங்கன்னு சொல்லுறியா மங்கா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“நான் அப்படி சொல்லலியே. ஒன்னுக்கு கீழ ஒன்னு இருக்கறது ஒன்னும் புதுசில்லயே, தேனீக்கள்ள கூட ராசா, ராணி, பணியாள்னு இருக்கே.  இதுல ஆம்பள பொம்பளன்னு என்ன வித்தியாசம் இருக்கு?  என்னோட மாமா எங்கிட்ட அப்படி நடந்துகிச்சு, ஆனா அது வேல பாக்குற சூப்பர்வைசர் கிட்ட கைய கட்டி வாயப் பொத்தி தான் நிக்கும். அதுக்கு எத்தனை மாசம் சம்பளம் தராமல் எங்க ஊருக்கும் இந்த காஷ்மீருக்கும் அலயவுட்டுருக்காங்கன்னு எனக்கு தெரியும். இந்த பாண்டு சார் கூட தான் எங்களையெல்லாம் உருட்டி மிரட்டி வைப்பாரு. ஆனா குங்குமப்பூ வாங்க வர்ற வியாபாரிங்க அவரை எத்தனையோ தடவை ஏமாத்திட்டுப் போயிருக்காங்க. ஒரு விசயத்தை தட்டி கேக்க முடியாம, எதுத்து நிக்க முடியாம இருக்கிறது நம்மளோட இயலாம தான்! அதுவும் தப்பு தான்! ஆனா அந்த இயலாமையும், சாமர்த்தியதனமும் கலந்து இருக்கறதாலதான, இந்த சமுதாய கட்டமைப்பு கலையாம இருக்கு! என்றாள் மங்கா.

“சபாஷ்” என்று கை தட்டி நரேன் மங்காவை மெல்லிய புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளின் யதார்த்தமான கேள்விகள் அவனை அவளிடம் மேலும் ஈர்த்தது. 

“பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறது, இது நேதாஜியோட வரிகள் மங்கா. கேள்வி கேக்கனும்” என்றாள் நிவேதிதா.

புரட்சின்ங்கறது வாழ்ந்து காட்டறதா இல்ல வாழறத்துக்கான வழிய தேடிகிட்டே சாகறதா? என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் மங்கா. 

நிவேதிதா மங்காவை எரிச்சலுடன் பார்த்து “என்னால உன்னோட மனநிலையை ஒரு பொண்ணா புரிஞ்சுக்கவே முடியல மங்கா” என்றாள்.

“Now I understand why people say ignorance is bliss” என்று கூறிக்கொண்டே நரேனைப் பார்த்து தலையாட்டினாள் நிவேதிதா.

“காலைல பெண்ணியம்ன்னா என்னன்னு கேட்டல்ல மங்கா அது தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட. ஆணுக்குப் பொண்ணு எந்த விதத்துலயும் கொறஞ்சவங்க இல்லைன்னு ஆம்பளைங்களுக்குப் புரிய வைக்கணும். பொண்ணுங்கன்னா குழந்தை பெத்து போடுற மிஷின்னு நெனச்சுகிட்டு இருக்குற ஆம்பளைங்களுக்கு பொண்ணுங்களோட பவர் என்னன்னு காமிக்கணும். மத்த மனுசங்க போல பொம்பளைங்களும் சுயமா சிந்திக்கனும். அவங்களுக்கு கருத்து சுதந்திரம் வேணும். அவுங்க எப்படி வாழணும்னு நெனைக்கிறாங்களோ அப்படி வாழ்க்கையை அமச்சுக்க இந்த சமுதாயம் அவங்களுக்கு உரிமையை கொடுக்கணும். இதெல்லாம் பத்தி பேசுறதும் போராடுறதும் தான் பெண்ணியம்” என்று படபடவென மூச்சுவிடாமல் பேசி முடித்தாள் நிவேதிதா. 

“இந்த பூமில எந்த உசுரோட வாழ்க்கையையும் அந்த உசுரு தானே தீர்மானிக்குது. ஒரு விசயத்தை நான் பொறுத்துப் போணும்னு நினைச்சா பொறுத்து போவேன். இல்ல தட்டி கேக்கணும்னு நினைச்சா தட்டி கேப்பேன். இதுக்கு மத்தவங்க எனக்கு எந்த உரிமைய கொடுக்கணும்? எனக்கு தைரியம் இருந்துச்சுன்னா என் வாய் பேச போகுது, இதுக்கு எதுக்கு கொடி புடிச்சு போராடனும். இந்த மாதிரி விசயம்லாம் எங்களோட வாழ்க்கையில ஒன்னு மண்ணால கலந்துருக்கு. நான் கொழந்த பெத்துக்கப் போறதால என்னத்த எழக்கப் போறேன்? இல்ல நீங்க குழந்த பெத்துக்காம இருக்கறதால என்னத்த சாதிச்சிட்டீங்க? இந்த ஒலகத்துல இருக்கற எல்லாத்துக்கும் அது அதுக்குன்னு ஒரு தன்மை இருக்கு, அதுக்கேத்த சூழ்நிலையும் சந்தர்ப்பமும் வரும்போது அது தானாவே ஸ்ட்ரான்ங்கா வெளிப்படும். இந்த குங்குமப்பூவ எடுத்துக்கோங்க, அது தண்ணிலயோ மத்த எதுலயோ கரையாது. சூடான பால்ல போட்டாதான் கரஞ்சு அந்த கலர் குடுக்கும். பொம்பள பொம்பளயா இருந்துகிட்டு அவ சக்திய புரிஞ்சுக்கெறது தான அவசியம். அவ எதுக்கு ஆம்பிளைங்க செய்யறதெல்லாம் செய்யனும். அப்படின்னா எதுக்கு இயற்கையில ரெண்டு எனம் இருக்கு” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மங்கா.

நரேன் கைகளைக் கட்டிக் கொண்டு மங்காவையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். 

நிவேதிதா என்ன சொல்வதென்றே தெரியாமல் வாயடைத்து போனாள். “நீ நொல்றது முட்டாள்தனமா இருக்கு மங்கா, ஆனா எப்டி சொல்லி உனக்கு புரிய வெக்கறதுன்னு எனக்குத் தெரியல” என்று கூறி மங்காவைப் பார்த்தாள். 

“சரி எனக்கு தூக்கம் வருது நான் போயி தூங்கப் போறேன். காலைல சீக்கிரம் எந்திரிச்சு பூப்பரிக்க போணும்” என்றாள் மங்கா. 

“நீ போகும்போது எங்களையும் கூட்டிட்டுப் போ மங்கா. அங்க நாங்க இன்னும் நெறைய வீடியோ எடுக்கணும்” என்று கூறினாள் நிவேதிதா. 

மங்கா சமயலறைக்குச் சென்று ஒரு பெரிய டப்பாவைத் திறந்தாள். அதற்குள் இருந்த ஒரு குட்டி டப்பாவை எடுத்தாள். அதை கவனமாகத் திறந்து ஒரு சிட்டிகை குங்குமப்பூவை எடுத்து போட்டு பால் காய்ச்சிக் குடித்தாள். தன் உடலை தள்ளிக்கொண்டிருந்த வயிற்றை மெதுவாக தடவிப் பார்த்து சிரித்துக்கொண்டாள். குழந்தை அவளை உதைத்தது.

“மங்காவின் கருத்துக்கள் என்னோட பெண்ணிய சிந்தனையை கொஞ்சம் புரட்டிப் போடுது” என்றான் நரேன்

“ஸ்டுப்பிட்” என்று நக்கலாகச் சிரித்து எழுந்து போனாள் நிவேதிதா.

“ஃபெமினிசம் இஸ் அன் ஐடியலாஜக்கல் ஸ்பெக்ட்ரம்” என்றான் நரேன்.

நிவேதிதா திரும்பி அவனைப் பார்த்து முறைத்துவிட்டு அவள் அறைக்குள் நுழைந்தாள். 

மூவரும் இருட்டின் போர்வைக்குள் நுழைந்தார்கள்.  

மனதின் ஆழத்தையும் புத்தியின் தேடலையும் வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சக்தி இருட்டை விட வேறு ஒன்றுக்கு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. மனிதனின் வக்கிரமும், அவனின் இயலாமையும், தவறுகளும் கூட இருட்டில் அப்பட்டமாய் தெரிந்துவிடுகிறது. அன்றைய இருட்டு மூவருக்கும் பல கேள்விகளை தட்டி எழுப்பியது.

காலை ஐந்து மணி இருக்கும், சமயலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள் மங்கா. நரேன் எழுந்து நடுங்கிக் கொண்டு கைகளை உரசி கன்னத்தில் வைத்துக் கொண்டே சமயலறைக்குள் நுழைந்தான். 

“குட் மார்னின்ங் மங்கயர்கரசி” என்ற இதமான மெல்லிய குரல் மங்காவை சிலிர்க்கச் செய்தது. 

அவள் திரும்பி நரேனைப் பார்த்து சிரித்தாள். 

“இப்படி கூப்டாலும் எம்பேரு நல்லாத்தான் இருக்கு. நல்லா தூங்குனீங்களா? என்று தெத்துப்பல் தெரிய கேட்டாள் மங்கா. 

“ஓ சூப்பரா தூங்குனேன்” என்று சோம்பல் முறித்துக்கொண்டே கூறினான் நரேன். 

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க மங்கா” என்று கேட்டான் நரேன். “பன்னெண்டாவது கிளாஸ் வரைக்கும் படிச்சிருக்கேன்” என்று கூறிக்கொண்டே தன் அடர்த்தியான நீள கூந்தலை முடிந்து கொண்டை போட்டுக்கொண்டாள் மங்கா. அவள் கூந்தலை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் நரேன். 

“காலேஜ் போகலியா?” என்று கேட்டுக்கொண்டே சமயலறையின் மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டான் நரேன். 

“அதுக்கெல்லாம் எங்க அம்மா அப்பாகிட்ட காசு இல்லீங்க. குடும்ப தொழில் இருந்ததால அத செய்ய ஆரம்பிச்சுட்டேன்” என்றாள் மங்கா. அவள் குங்குமப்பூ மணக்க மணக்க எதோ டீப் பொடியை போட்டு கொதிக்க வைத்தாள். 

“இது என்ன மங்கயர்கரசி?” என்று கேட்டான் நரேன்.

“கேவா!! பாண்டு சார் உங்களுக்கு போட்டு தர சொல்லி குடுத்தாரு. குங்குமப்பூ, கிரீன் டீ, பட்டை, ஏலக்காய், காஷ்மீர் ரோசா இதழ் இதல்லாம் கலந்த டீ. எங்க ஊரு ஸ்பெஷல், ஆனா நாங்கல்லாம் குடிச்சதில்ல. ரொம்ப காஸ்ட்லி டீ” என்று கூறிக்கொண்டே நரேனுக்கு ஒரு கப்பில் ஊற்றிக் கொடுத்தாள் மங்கா. அந்த குளிருக்கு கேவா இதமாயிருந்தது. நரேன் அதன் சுவையில் கண்களை மூடிக்கொண்டான். 

“நீங்க குடிக்கலியா மங்கயர்கரசி?” என்றான். 

“இது உங்க ரெண்டு பேருக்கும் மட்டுந்தான். நான் குங்குமப்பூ வாங்கி வெச்சுருக்கேன் அதப்போட்டு பால் குடிப்பேன்” என்றாள் தெத்துப்பல் தெரிய மங்கா. 

“ஏன் மங்கயர்கரசி உங்க பாப்பா செவப்பாதான் பொறக்கணும்னு நெனைக்கிறீங்க?” என்றான் நரேன். 

ஒரு மெல்லிய புன்னகையை இதழோரம் இழைய விட்டு, “நான் இந்த கிராமத்துக்கு வந்தப்போ, என்னத்தவுற எல்லாரும் செவப்பா இருந்தாங்க. என்ன காலா ஜாமூன்னு தான் எல்லாரும் கொஞ்சுவாங்க. அதனாலயோ என்னமோ எம்புள்ள செவப்பா பொறக்கணும்னு ஆசை. அதுக்குன்னு கருப்பா பொறந்தா தூக்கியா போட்டுறப் போறேன்!!! ஒரு ஆச தான்” என்று கூறினாள் மங்கா. 

நரேன் அவள் பேசுவதை ரசித்துக்கொண்டே இருந்தான். 

“உங்களுக்கு மேல படிக்கணும்னு ஆசை இருக்கா? என்றான் நரேன்.

 ‘ம்ம்ம்’ என்று யோசித்துவிட்டு, “எனக்கு டீச்சர் ஆகணும்னு ரொம்ப ஆசை” என்றாள் மங்கா. 

நரேன் அவளிடம் அடுத்த கேள்வியை கேட்பதற்குள், “எப்படினாலும் இன்னும் கொஞ்ச நாள்ள எம்பிள்ளைக்கு பாடம் சொல்லித்தரனும்ல. அப்ப நான் டீச்சர் தான?” என்றாள் மங்கா மகிழ்ச்சியுடன். 

“உங்களுக்கு உங்க வாழ்க்கையில நடந்த, நடக்காம போன எதுக்குமே கவலையில்லயா?” என்று கேட்டான் நரேன். 

“எதுக்கு கவலப்படனும், நடந்தது, நடக்காதது எல்லாமே அனுபவந்தானே. எல்லாத்தயும் அழுதுகிட்டோ சிரிச்சுகிட்டோ அனுபவக்கறது தான வாழ்க்க. என்னோட வாழ்க்கையில எந்த சொந்த பந்தமும் ரொம்ப நாளைக்கு நெலைக்கல. எல்லாரும் வந்த வேகத்துல போயிட்டாங்க. ஆனா இப்போ எனக்கு புள்ள கெடைக்கப்போவுது, எங்கூடயே இருக்கப்போவுது.  ஒன்னு இல்லன்னா இன்னொன்னு, பிச்சிப்பூ இல்லன்னா குங்குமப்பூ. ரெண்டும் மணந்தான” என்று கூறிக்கொண்டே குங்குமப்பூ பாலைக் குடித்தாள் மங்கா. 

“உங்க மனசு எவ்வளவு தெளிஞ்ச நீரோடையா இருக்கு! நீங்க வாழப்பொறந்தவங்க மங்கயர்கரசி” என்றான் நரேன். 

“எல்லாருந்தான் வாழப்பொறந்தவங்க” என்று தெத்துப்பல்லைக் காட்டினாள் மங்கா.

மேடையிலிருந்து குதித்து மங்கா அருகில் வந்து “உங்களை ஹக் பண்ணிக்கனும் போல இருக்கு, ஒரு தடவ பண்ணிக்கட்டா?” என்றான் நரேன்.

மங்கா அவனை கொட்ட கொட்ட பார்த்து கைகளால் வாயை மூடிக்கொண்டு சிரித்தாள். 

நரேன் அவளை மெதுவாக அணைத்துக்கொண்டான். மங்காவின் வயிற்றுக்குள்ளிருந்து குழந்தை உதைத்தது. நரேன் சட்டென்று விலகிக்கொண்டு “ஐஐஐஐ பாப்பா ஒதைக்குது” என்று சத்தமாக சொல்லி சிரித்தான்.

மங்கா வயிற்றைத் தடவிக்கொண்டாள். நரேன் சமயலறையிலிருந்து வெளியே போனான்.

அவள் வயிற்றைப் பிடித்துக்கொண்டே சமயலறையிலிருந்து வெளியே வந்து தன் அறைக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டாள். “இன்னிக்கி புள்ள பொறந்துடுமோ?” என்றாள்.

நிவேதிதா மங்காவின் அறைக்குள் நுழைந்தாள். அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து “என்ன ஆச்சு மங்கா?” என்றாள்.

 “லைட்டா வயித்த வலிக்குதுக்கா” என்றாள் மங்கா. 

“ஹாஸ்பிடல் போலாமா?” என்றாள் நிவேதிதா. 

“அதெல்லாம் வேணாங்கா. பாத்துக்கலாம்” என்று கூறிக்கொண்டே சமயறைக்குள் சென்று நிவேதிதாவிற்கு போட்டு வைத்திருந்த கேவாவை எடுத்து வந்து குடுத்தாள் மங்கா.

“டெலிவரி எங்க பாப்ப மங்கா? என்று கேட்டாள் நிவேதிதா. 

“இங்க இருக்கிற எல்லாருக்கும் ஆசாமதி பாட்டிதான் டெலிவரி பாக்கும். ரொம்ப கைராசியான பாட்டி” என்றாள் மங்கா. 

“ஹாஸ்பிட்டலாம் போக மாட்டீங்களா?” என்று கேட்டாள் நிவேதிதா. “அதெல்லாம் இல்லக்கா வீட்லயே பாத்து விட்ரும் பாட்டி” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் மாங்கா. 

மூவரும் கெஸ்ட் ஹவுஸில் இருந்து கிளம்பி குங்குமப்பூ தோட்டத்திற்கு சென்றார்கள். மீண்டும் அதே சுகந்தம் அதே இளம் காற்று. எத்தனை முறை நுகர்ந்தாலும் அலுக்காத அந்த வாசம் நரேனையும், நிவேதிதாவையும் மெய்மறக்கச் செய்தது. தோட்டத்திற்கு சென்று மங்கா குங்குமப்பூவை பறிக்கத் தொடங்கினாள். 

அன்று தோட்டத்திற்கு மங்காவின் பக்கத்து கிராமத்திலிருந்துதான் நிறைய பெண்கள் வேலைக்கு வந்திருந்தார்கள். நரேனும் நிவேதிதாவும் அங்கு இருந்த பெண்களிடம் சில கேள்விகளைக் கேட்டு வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு பெண்களும் ஒவ்வொருவிதமான அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். 

“இந்த பெண்கள் யாருக்கும் பெரிசா கவலை ஒன்னும் இருக்றதா தெரியல. இவங்க இருக்கறத வெச்சுகிட்டு   சந்தோஷமாத்தான் இருக்காங்கன்னு நெனைக்கிறேன்” என்றான் நரேன்.  

“நாட் ரியலி! இந்த தொழில நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பம் இந்த ஊர்ல இருக்கு. ஆக்ச்சுவலி இங்க மேனேஜ்மெனெ்ட்டுக்கு கெடைக்கிற காசுல பத்து பேர்சண்ட் கூட இவங்களுக்கெல்லாம் கூலி கொடுக்றதில்ல. அதுலயும் பெண்களுக்கு இன்னுமே கம்மி கூலி. அது மட்டுமில்ல, இந்த சீசனுக்கு அப்றம் பாவம் இவுங்க பொழைக்கறதுக்கு வேற வேலை கெடைக்காம வறுமையில கஷ்டப்படறாங்க. இத சொல்றதுக்கு இவங்களுக்கெல்லாம் பயம். எல்லாரும் உண்மைய மறைக்கிறாங்க. நம்ம நாட்டுல வறுமையில வாழ்ந்து சாகறவங்கள விட பயத்துல வாழ்ந்து தான் சாகறவங்க அதிகம்” என்று கோவத்துடன் கூறினாள் நிவேதிதா. 

“எனக்கென்னவோ சிலசமயம் இயல்பான ஒரு வாழ்க்கை முறைய நம்மள மாதிரி ஆக்டிவிஸ்ட்லாந்தான் ஊதி பெருசாக்கறோமோன்னு தோனுது, இவங்க வாழ்க்கைல சீரியசா அட்ரஸ் பண்றதுக்கு வேற விஷயங்கள் இருக்கோன்னு நெனைக்கிறேன்” என்றான் நரேன்.

“ஒரு வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டும் இருப்பது போதாது, அரசியல் மற்றும் சமூக உரிமைகளின் நீதி, தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றிய ஆழமான மற்றும் முழுமையான நம்பிக்கை தேவைன்னு அம்பேத்கார் சொல்லியிருக்காரு” என்றாள் நிவேதிதா

 “Equality is an illusion; Equity is the solution!!!” என்றான் நரேன்.

பூ பறித்துக் கொண்டிருந்த மங்கா திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு கீழே உட்கார்ந்தாள். அங்கிருந்த இரண்டு மூன்று பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டு கிராமத்திற்கு விரைந்தார்கள். நரேனும் நிவேதிதாவும் பதட்டத்துடன் அந்த பெண்களின் பின்னால் வேகமாக நடந்து சென்றார்கள். 

அவர்கள் நடந்து போகும் வேளையில் திடீரென்று ஏதோ குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்கத் தொடங்கியது. 

அங்கிருந்த பெண்கள் “இசி தேஸ் கரோ” என்று கத்திக்கொண்டே மங்காவை அழைத்துக் கொண்டு வேகமாக கிராமத்திற்குள் நுழைந்தார்கள். 

அங்கே நான்கைந்து ஜீப்பில், முகமூடியணிந்த காஷ்மீர் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சுடு தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த பெண்கள் ஆசாமதி பாட்டி வீட்டிற்கு மங்காவை வேகமாக அழைத்துச் சென்றார்கள். நரேனும் நிவேதிதாவும் அங்கிருந்த ஒரு பள்ளியின் உள்ளே சென்று ஒளிந்து கொண்டு ஜன்னல் வழியாக மெதுவாக எட்டிப் பார்த்தார்கள்.  தாக்குதல் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. பல வீடுகள் வெடித்துச் சிதறிக்கிடந்தன. பல ஆண்களும் பெண்களும் ரத்தக்கறையுடன் தெறித்து விழுந்து கிடந்தனர். 

சற்று நேரத்தில் அந்த துப்பாக்கிச்சுடு சத்தத்தையும் மீறி குழந்தை வீச்சிடும் சத்தம் ஒன்று கேட்டது. 

தீவிரவாதிகள் கடுமையாக தாக்குதல்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். மங்கா அங்கிருந்த பெண்களிடம் “என் புள்ளைய காப்பாத்துங்க, கூட்டிட்டு போய்டுங்க எங்கயாவது கூட்டிட்டு போயிடுங்க” என்று காஷ்மீரி மொழியில் கத்தினாள். 

அவள் தன் குழந்தையின் முகத்தை கூட பார்க்க வில்லை. அங்கிருந்த ஒரு வயதான பாட்டியும் ஒரு பெண்மணியும் அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடினார்கள். அந்த வீட்டிற்குள் இரண்டு மூன்று ஆண்கள் வேகமாக ஓடி வந்தார்கள். அவர்கள் மங்காவை அழைத்துக்கொண்டு வேறு ஒரு கட்டிடத்தில் போய் ஒளிந்து கொண்டார்கள்.  கால் மணி நேரத்தில் அந்த கிராமமே ரணகளம் ஆகியது. கண் சிமிட்டும் நேரத்திற்குள் தீவிரவாதிகள் அங்கிருந்து மறைந்தார்கள். 

நரேனும் நிவேதிதாவும் நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அந்த பள்ளியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருக்குல்ல, ச்ச்ச்ச இந்த வாழ்க்கையின் நிலையாமை எத்தனை கொடியது” என்றான் நரேன். 

அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள் நிவேதிதா. நிவேதிதாவின் உடல் நடுங்கியது.

மழைக்குப் பின் நிரம்பும் அமைதி போல் அந்த கலவரத்திற்கு பின்பு அந்த கிராமமே அமைதியில் மூழ்கியது. அங்கே பல போலீஸ் கார்களும் ராணுவ வண்டிகளும் வந்து சேர்ந்தன. நரேனும் நிவேதிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வேகமாக அங்குமிங்கும் நடந்தார்கள். மற்றொரு கட்டிடத்திலிருந்து மங்கா வெளியே வந்து கொண்டிருந்தாள். நிவேதிதா வேகமாக சென்று மங்காவைக் கட்டித் தழுவிக்கொண்டாள். 

“நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருக்கீங்கல்லக்கா?” என்று கேட்டாள் மங்கா. 

“கொழந்த எங்க மங்கா?” என்று கேட்டாள் நிவேதிதா. 

“ஆசாமதி பாட்டியும் இன்னொரு அக்காவும் பிள்ளய பத்திரமாக கூட்டிட்டு போயிருக்காங்க” என்று கூறினாள் மங்கா. 

அவர்கள் மூவரும் குழந்தையைத் தேடிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். சற்று தொலைவில் இருந்து வேறு ஒரு பெண்மணி குருதி மூட்டை ஒன்றை கையில் தூக்கிக்கொண்டு கதறிக் கொண்டே வந்தாள். அதைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள் மங்கா. 

 “அப்னே பச்சேக்கோ தேக்கோ மங்கா” என்று அந்த பெண்மணி கதறிக் கொண்டே அக்குழந்தையை மங்காவிடம் கொடுத்தாள். 

அந்தக் குழந்தையை கையில் வாங்கினாள் மங்கா. குழந்தையின் முகம் கூட தெரியவில்லை. அந்த குழந்தையின் உடல் முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது. 

“ஐயோ எம்புள்ள செவப்பா பொறக்கணும்னு குங்குமப்பூ பால் குடிச்சேனே இப்போ என் புள்ளைய ரத்தச் சிவப்பாக கொண்டுவந்து கையில கொடுத்து இருக்காங்களே” என்று கதறினாள் மங்கா. 

மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு துடித்தாள் மங்கா. 

நரேனும் நிவேதிதாவும் அழ ஆரம்பித்தார்கள். 

அவர்களுக்கு ஒரு அரைமணி நேரமாகவே அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த குழந்தையை பார்த்ததும் நரேனின் உடல் நடுங்கியது. நிவேதிதா மங்காவை அணைத்துக்கொண்டாள். “அக்கா எம்பிள்ளைய பாத்தீங்களா?” என்று அழுதுகொண்டே கேட்டாள் மங்கா. 

நரேனும் நிவேதிதாவும் ஊமையயாய் நின்றார்கள். 

அந்த அழகான கிராமம் அலங்கோலமாய் கிடந்தது. நம்முள்ளே இருந்துகொண்டு நம்மை இயக்கும் உயிரின் மதிப்பு இது போன்ற தருணங்களில் தான் நமக்குப் புரிகிறது. நாம் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரை உயிரின் முக்கியத்துவமும், ஏன் அதனின் இருப்பு கூட நமக்கு பெரிய விஷயமாய் தோன்றுவதில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நமக்கு கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களையும் அனுபவங்களையும், உறவுகளையும் தருணங்களையும் மனதார உணர்ந்து வாழ்தல் எத்தனை முக்கியத்துவம் என்று இதுபோன்ற சம்பவங்கள் தான் நமக்கு உணர்த்துகின்றன. சந்தோஷங்கள் மட்டுமல்ல தோல்விகளும் இழப்புகளும் துக்கங்களும் அவமானங்களும் கூட உயிர் வாழ்தலின் அடையாளமே. இருக்கும் வரை உயிருக்கு மதிப்பு உள்ளதென்றால் இது போன்ற இழப்புகளும் துக்கங்களும் கூட வாழ்வில் மதிக்கத் தகுந்தவையே!

அந்த கிராமத்தில் ஆம்புலன்சுகள் வந்து குவிந்தன. பட்டாம்பூச்சியின் ரக்கை போல் துடித்துக் கொண்டிருக்கும் பல உயிர்கள் அந்த ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு கொண்டிருந்தன. சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த கிராமமே வெறிச்சோடிக் கிடந்தது. மங்கா தன் கையிலிருந்த குழந்தையை எடுத்துக்கொண்டு அந்த கிராமத்தின் தொலை தூரத்திலிருந்த ஒரு மைதானத்திற்குச் சென்றாள். நரேனும் நிவேதிதாவும் அவளைத் தொடர்ந்து நடந்து சென்றார்கள். ஒரு மரத்தடியில் வந்து நின்றாள். குழந்தையை கீழே வைத்துவிட்டு அங்கிருந்த ஒரு மண்வெட்டியால் ஒரு குழியைத் தோண்டினாள் மங்கா. அவள் கண்களிலிருந்து கொட்டிய நீர் அந்த மண்ணை நனைத்துக்கொண்டிருந்தது. அவளால் குழியை ஆழமாகத் தோண்டமுடியவில்லை, அவள் உடல் வெலவெலத்தது. அந்தக் குழியில் தன் குழந்தையை வைத்து மண்ணைப் போட்டு மூடினாள். பத்து நிமிடங்கள் அங்கேயே உட்கார்ந்து அந்த இடத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நரேனும், நிவேதிதாவும் அவளருகில் உட்கார்ந்து கொண்டனர். 

“இதுதான் மையான அமைதியா?” என்றான் நரேன்.

நிவேதிதா அவன் கரங்களை இருக்கிப் பிடித்துக்கொண்டாள்.

சற்று நேரம் கழித்து மூவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.

மங்காவின் உடல் மிகவும் பலவீனமாய் இருந்தது.  நிவேதிதா மங்காவை அழைத்துக்கொண்டு கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றாள். அவளைப் படுக்கையில் கிடத்தினாள். மங்கா அழுதுகொண்டே படுத்துக் கொண்டிருந்தாள். நிவேதிதா அவளுக்கு சமைத்து வந்து கொடுத்தாள். மங்கா அதை வாங்கி மறுக்காமல் சாப்பிட்டுக் கொண்டாள். மங்காவின் முகத்தை பார்க்க முடியாமல் நரேன் வெளியிலேயே உட்கார்ந்து கொண்டான். அன்று காலை மங்கா தன்னிடம் பேசிய வார்த்தைகள் நரேனின் மூளைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தன. நரேன் அந்த வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான். அன்று முழுவதும் மூவரும் எதுவுமே பேசிக் கொள்ளவில்லை. பாண்டு கெஸ்ட் ஹவுஸிற்கு வந்து மங்காவைப் பார்த்தான். 

“அந்த கடவுல் தான் உனக்கு சக்தி கொடுக்ணும்” என்று கூறிவிட்டு நரேனிடம் சென்று எதோ பேசிக்கொண்டு இருந்தான் பாண்டு. 

“இங்க இந்தமாதிரி தாக்குதல்கள் அடிக்கடி நடக்குமா?” என்று பாண்டுவிடம் கேட்டான் நரேன்.

“அஞ்சு வர்சம் முன்னாடி இதமாதிரி ஒன்னு ஆச்சு, என்னோட அப்பா அதுல செத்துபோச்சு” என்றான் பாண்டு, பீடாவை மென்றுகொண்டே.

“எப்படி எப்பவும் மரண பயத்தோட உங்களால இங்க நிம்மதியா வாழமுடியுது”என்று கேட்டுக்கொண்டே வந்தாள் நிவேதிதா?

“என்ன மேடம் டென்ஷனா இருக்கு?” என்றான் பாண்டு. 

“அவுங்க ரொம்ப பயந்துட்டாங்க” என்றான் நரேன். 

“அப்போ அடுத்த வாரம் ஏதோ ஷூட்டிங்குன்னு சொல்லிச்சு, எப்டி எடுக்கப்போது?” என்றான் பாண்டு. 

“சான்சே இல்ல என்னால இங்க ஒரு நாள் கூட இருக்க முடியாது” என்று கூறி நரேனின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் நிவேதிதா. அவள் உடலில் இன்னும் நடுக்கம் குறையவில்லை.

நரேனும் நிவேதிதாவும் தாங்கள் அடுத்த நாள் அங்கிருந்து கிளம்புவதாக கூறினார்கள். “சரி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பாண்டு. 

அன்று இரவு முழுவதும் மூவரும் தூங்கவும் இல்லை ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவும் இல்லை. நிவேதிதா அன்று நரேன் அறையிலேயே உட்கார்ந்து கொண்டாள். மழை பொய்த்து விட்ட மப்பும் மந்தாரமுமான தருணமாய் கழிந்தது அன்றைய நாள்.

 அடுத்த நாள் காலை நரேனும் நிவேதிதாவும் தங்கள் பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு கெஸ்ட் ஹவுஸிலிருந்து கிளம்புவதற்குத் தயாரானார்கள். அவர்கள் தங்கள் அறையிலிருந்து வெளியே வந்து பார்க்கும் பொழுது மங்கா அந்த வீட்டில் இல்லை. அவர்களிருவரும் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தார்கள். தலையில் முக்காடு கட்டிக்கொண்டு மங்கா தோட்டத்தை நோக்கி தொலைவில் நடந்து கொண்டிருந்தாள். நரேனும் நிவேதிதாவும் வேகமாக அவளை நோக்கி நடந்தார்கள். 

“எங்க போற” என்று கத்திக்கொண்டே நிவேதிதா மங்காவைப் பின் தொடர்ந்தாள். 

அவளின் சத்தத்தைக் கேட்டு திரும்பிப் பார்த்த மங்கா அங்கேயே நின்று கொண்டாள். இருவரும் அருகில் வந்தார்கள். மங்கா தன் கையில் பூப்பறிக்கும் கூடையுடன் நின்றுகொண்டிருந்தாள். 

“தோட்டத்துக்கு போறேங்கா” என்றாள் மங்கா. 

ஆனால் அவள் முகத்துடனே ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த இளஞ்சிரிப்பு அன்று இல்லை. 

நரேனும் நிவேதிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“நீ இன்னும் மூணு நாலு நாளாவது ரெஸ்ட் எடுக்கணும் மங்கா” என்று கூறினாள் நிவேதிதா. 

“பூ பறிச்சிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துக்கறேங்கா” என்றாள் மங்கா. 

நிவேதிதா மங்காவின் கையைப் பிடித்துக்கொண்டாள். 

“நாங்க கிளம்புறோம் மங்கா. உன்ன பார்த்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், ஆனா உன் வாழ்க்கைல இப்படி ஒரு துக்கம் நாங்க இருக்கும்போது நடந்தது பத்தி எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. உனக்கு சொல்லத் தேவயில்ல. நீ ரொம்ப ஸ்ட்ராங். எப்பவும் இத மாதிரியே இரு. உனக்கு ஏதாவது உதவி வேணும்னா எப்ப வேணா என்ங்கிட்ட கேக்கலாம்” என்று கூறினாள் நிவேதிதா. 

“சரிக்கா” என்றாள் மங்கா. 

எதிர் திசையில் பாண்டு வந்துகொண்டிருந்தான். நிவேதிதா அவனிடம் பேசுவதற்காக அவனை நோக்கிச் சென்றாள். நரேன் மங்காவின் முகத்தைப் பார்க்க முடியாமல் தவித்தான். தொண்டையை சரி செய்து கொண்டு அவளைப் பார்த்தான். 

“இந்த உலகத்தில உயிர் வாழற எல்லாரும் வாழப் பிறந்தவங்களான்னு எனக்குத் தெரியல. ஆனா மங்கையர்க்கரசி நீங்க வாழப் பிறந்தவங்க. உங்களப் பாத்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு எப்பயாவது யார் கிட்டயாவது ஏதாவது பேசணும்னு தோனிச்சுன்னா எனக்கு ஃபோன் பண்ணுங்க” என்று கூறி தன் ஃபோன் நம்பரை எழுதி அவளிடம் கொடுத்தான். மங்கா அதை வாங்கி பத்திரமாகத் தன் பைஜாமா பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டாள். 

“உங்க ரெண்டு பேரையும் பாத்ததுல எனக்கும் ரொம்ப சந்தோசங்க.  நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் பல வருசம் கழிச்சி நான் தமிழ்ல பேசுனேன். நீங்க மங்கையர்க்கரசின்னு என்ன கூப்ட்டப்பல்லாம் எனக்கு எங்க ஊரு மனுசங்க தான் ஞாபகத்துல வந்தாங்க” என்றாள்.

நரேன் மங்காவை அணைத்துக்கொள்ள அவள் அருகில் வந்து பின்பு விலகிக்கொண்டான். மங்கா அவனைப் பார்த்தாள். 

“ஒரு நிமிசம் இருங்க வாரேன்” என்று கூறிக்கொண்டே வேகமாக கெஸ்ட் ஹௌசிற்கு நடந்தாள் மங்கா. 

சற்று நேரத்தில் திரும்பி வந்து அவனிடம் ஒரு சிறிய டப்பாவைத் தந்தாள். 

“குங்குமப்பூ, உங்களுக்கு கல்யாணம் ஆகி புள்ள பொறக்கறப்போ உங்க பொண்டாட்டிக்கு குடுங்க” என்றாள்.

“இது உங்ககிட்டயே இருக்கட்டும் அடுத்த தடவ வறப்போ வாங்கிக்கறேன்” என்றான் நரேன்.

 அவனைப் பார்த்து தன் தெற்றுப்பல் தெரிய மெல்லியதாகச் சிரித்தாள் மங்கா. 

அந்த சிரிப்பை மட்டுமே அள்ளிக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்றான் நரேன். அங்கு நடந்து கொண்டிருக்கும் எந்த உணர்வுப் போராட்டங்களுக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் எப்போதும் போல் சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது அந்தக் குங்குமப்பூ தோட்டம்.

 

 


Rate this content
Log in

Similar tamil story from Abstract