Deepa Sridharan

Abstract

5  

Deepa Sridharan

Abstract

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

6 mins
559


பூமியில் கால் பதிக்காமல், அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணின் சந்தோஷத் தருணங்களை டிஜிட்டல் மயமாக்கிக் கொண்டிருந்தது அந்த கேனான் கேமரா. அந்த பெண்ணைச் சுற்றி அவளின் நண்பர்கள் கூட்டம். அவளைப் போல் அவர்கள் அந்தரத்தில் பறக்கவில்லையென்றாலும், அவள் சந்தோஷத்தில் கலந்திருந்தார்கள்.


இது போன்ற போட்டோ ஷூட்டைப் பார்ப்பது அகல்யாவிற்கு புதிதல்ல. அந்த கல்வி நிறுவனத்தில் அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான் அது. ஆனால் அன்று ஏனோ அந்தப் பெண்ணின் கருப்பு தொப்பி அவளின் ஆழ்மனதை மறைக்க முடியாமல் கண்களில் துறுத்திக்கொண்டிருந்தது.


சிரிப்பு, அழுகை, கோவம், அரவணைப்பு, ஏமாற்றாம், பாராட்டு அவமானம், போராட்டம் என்ற பலவிதமானஅனுபவங்களைக் கடந்த அவளின் இருபது வருட ஆமை வேகப் பயணத்தை எந்தவித மெனக்கெடுதலும் இல்லாமல், நொடிப்பொழுதில் பின்நோக்கிக் கடந்து சென்றது அவளின் மனம். காலம் நிகழ்வுகளின் கரு முட்டை. உயிர் நிகழ்வுகளின் பொதி மூட்டை. வெடித்துச் சிதறியவையெல்லாம் விழித்துக்கொள்கின்றன நினைவுகளின் பிம்பங்களாய்.


அகல்யாவின் தூக்கத்தைக் கலைத்தது அந்த டெலிபோன் மணி.

“ஏய் அகல்யா எப்படி இருக்க? நேத்திக்கு வந்தியா?” என்றது அந்த இனிய குரல்.

“ஹேய் உமா, நான் நல்லாருக்கேன். நீ எப்படி இருக்க?” என்றாள் அகல்யா.


அவர்கள் இருவரும் அவர்களுக்கு மட்டுமே புரிந்த ஏதேதோ வினோத வார்த்தைகளையும், சம்பவங்களையும் பற்றி பேசி சிரித்துக்கொண்டனர். கல்லூரி மாணவர்களுக்கே உரித்தான பேச்சு நடையது போலும்.

“ஏப்ரல்ல கிராஜுவேஷன் இருக்கு. அதுவரைக்கும் இங்க இருப்பல்ல?” என்றாள் உமா.


“இருப்பேன். ஆனா அட்டென்ட் பண்ண முடியாது. ஏப்ரல் பர்ஸ்ட் வீக் டெலிவரிக்கு டியூ டேட் குடுத்துருக்காங்க” என்றாள் அகல்யா ஒருவித ஏமாற்றத்துடன். அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்கள்.


அகல்யாவின் கண்கள் கலங்கின. பள்ளிப் பருவத்திலிருந்தே பி.ஹெச்.டி படிப்பு மற்றும், பட்டமளிப்பு விழாவைப் பற்றிய கனவுகளைச் சுமந்தவள் அகல்யா. கருப்பு ஆடையும், கருப்புத் தொப்பியும், அதற்குள்ளிருந்து எட்டிக் குதிக்கும் வெண்பற்களும், தன் பெயர் அழைக்கப்படுவதும், மேடையேறி சான்றிதழ் வாங்கும் அந்த நொடிகளும், அதை ஆவலுடன் பார்த்து மகிழும் தன் பெற்றோர்களும், 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற தருணங்களும் அவள் மனதில் பதிந்த காட்சிப்படம்.


கல்வி கற்றவர்களெல்லாம் வாழ்க்கையில் கரை கண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கரையையும், அதனையடைய நீந்திச் செல்லும் கடலையும் பிரித்துக்காட்டும் பகுத்தறிவை கல்வி கட்டாயம் கொடுக்கும் என்றும், அந்தக் கல்வி உலகத்தில் தானும் ஒரு அங்கம் என்ற அங்கீகாரத்தை பட்டமளிப்பு விழா கொடுக்கிறது என்றும் அகல்யா நம்பினாள்.


பி.ஸ்.சி இரண்டாம் வருடம் முடித்தவுடன் அவளுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. அது எள்ளளவும் அவள் கனவுகளையோ, அவள் படிப்பின் மீது கொண்டிருந்த ஆர்வத்தையோ திசை திருப்பவில்லை. அவள் கணவன் அயல்நாட்டில் இருந்ததால், தன் பெற்றோர் வீட்டிலிருந்தே இறுதி ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்தாள், அகல்யா.


அவளைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அவளது திருமணம் ஆச்சரியமானதாகவே இருந்தது. ஆனால் அவள் அதைப் பற்றிப் பெரிதாக எதுவும் நினைத்துக்கொள்ளவில்லை. அவள் படிப்பையும், தன் திருமண வாழ்க்கையையும் குழப்பிக்கொள்ளவில்லை. அவள் படிப்பு முடிந்ததும் தன் கனவனுடன் சென்றாள். ஒன்பது மாதங்கள் கழித்துப் பிரசவத்திற்காகத் தன் பெற்றோர் வீட்டிற்கு மீண்டும் வந்திருந்தாள்.


அந்த ஒன்பது மாதங்களில் அவள் திருமண வாழ்க்கையில் பலவிதமான சவால்களை சந்தித்திருந்தாள். அவ்வாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்திருக்கவில்லை. அதற்காக அவள் தயங்கியிருக்கவுமில்லை. அவளால் முடிந்தவரை அந்த சவால்களைத் தனியாகவே எதிர்கொண்டாள். வலிகள் இருந்தன. ஆனால் அந்த வலிகளையும் தாண்டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வலி அன்று அதிகமாகத் தோன்றியது அகல்யாவிற்கு.


அந்தக் கருப்பு ஆடைக்குள்ளும், கருப்புத் தொப்பிக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாமல் போன தன் பெரிய வயிற்றை ஒருமுறை தடவிப்பார்த்துக்கொண்டாள் அகல்யா. பல நேரங்களில் நாம் தேர்ந்தெடுக்கும் முடிவுகள் அல்லது நம் மேல் திணிக்கப்படும் முடிவுகள் (திணி ககப்பட்டவைகளை ஏற்றுக்கொள்வதும் கூட நம் முடிவுதானோ!) நம் கனவுகளை அடைவதற்கு உகந்ததாக இருப்பதில்லை.


எனினும் அந்த முடிவுகளில் ஒரு கற்றல் அனுபவம் இருக்கும். அந்த கல்விக்குறிய அங்கீகாரத்தை, பட்டமளிப்பு விழாவை வாழ்க்கை நடத்தியேத் தீரும். அகல்யாவிற்கும், அவளின் திருமண வாழ்க்கையும், பிரசவக்காலமும் ஒரு கற்றல் அனுபவமாகவே இருந்தது. அது “அம்மா” என்ற அங்கீகாரத்தையும் அப்படிப்பட்ட ஒரு பட்டமளிப்பு விழாவையும் நடத்திக் கொடுத்தது.


மீண்டும் தன் கணவனுடன் அயல்நாட்டிற்குப் பயணித்தாள் அகல்யா, இம்முறை குழந்தையுடன். மீண்டும் சவால்கள், வலிகள், ஏமாற்றங்கள். வாழ்க்கையின் சுழற்சியில் சற்றே குழம்பிப் போனாள் அகல்யா. அகல்யாவிற்கும் அவள் கணவனுக்குமான உறவு மனதளவிலும் உடலளவிலும் முடிந்துவிட்டிருந்தது. எனினும் ஓர் கூரையின் கீழே அவர்கள் வாழ்ந்தார்கள் மூன்று உயிர்களாய். 


தன்னை வழி நடத்தவோ, ஆறுதலளிக்கவோ யாரையும் அகல்யாவால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தனக்குக் கிடைத்த அங்கீகாரத்திற்குத் தான் தகுதியானவளா என்ற கேள்வியை மட்டும் தனக்குள்ளே அடிக்கடி கேட்டுக்கொண்டாள் அகல்யா. அந்தக் கேள்வியும் , அவளுடன் இழைந்து கொண்ட அந்த சிறு உயிரும் அகல்யாவை நகர்த்திச் சென்றன. கேள்விகள் தானே மாற்றத்திற்கும் பரினாமத்திற்குமான விந்து.


ஆறு வருடங்கள் தனக்குக் கிடைத்த “அம்மா” என்ற பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடினாள். அந்த அங்கீகாரத்திற்குத் தகுதியானவளாகத் தன்னை உருமாற்றிக்கொண்டாள். பின் மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப் போல, ஏமாற்றங்களையும் வலிகளையும் தன் கல்விக் கனவைத் தொடர்வதற்கான தூண்டிலாய் மாற்ற நினைத்தாள் அகல்யா. 


மீண்டும் இந்தியா, மீண்டும் பெற்றோர் இல்லம், மீண்டும் கல்வி. இம்முறை மாணவியாகவும், தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும். எம்.ஸ்.சி, இரண்டு வருடக் கல்வி. கூடுதலான கல்வி வேட்கை, கூடுதலான பொறுப்புகள். இம்முறையும் அவள் தன் குடும்ப வாழ்க்கையையும், படிப்பையும் குழப்பிக்கொள்ளவில்லை.


அவளுக்கு அந்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது. கற்றலும், கற்பித்தலுமான அனுபவம். தன்னுடனே நடை பயிலும் மற்றுமொரு சிறு உயிரின் துணை அவளுக்கு ஆறுதலாய் இருந்தது. இரண்டு வருடங்கள் பல போராட்டங்களுடன் நகர்ந்தது. அகல்யா யுனிவர்சிட்டி ரேங்க்குடன் எம்.ஸ்.சி பட்டப் படிப்பை முடித்தாள். முடித்தவுடன் மூட்டையைக் கட்டிக் கொண்டு பயணித்தாள் தன் கணவனுடன் அயல் நாட்டிற்கு. இம்முறை குழந்தைக்காக. ஆனால் இந்த தடவை பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுடன் பயணித்தாள் அகல்யா.


மாதங்கள் கழிந்தன. “அம்மா” என்ற அங்கீகாரத்தைப் போல தானே “அப்பா” என்ற அங்கீகாரமும். ஏன் அதற்குத் தகுதியானவனாகத் தன்னை மாற்றிக் கொள்ளத் தன் கணவன் முயலவில்லை என்ற கேள்வி அகல்யாவைத் துளைத்தது. இது அவளை நகர்த்திச் சென்றதற்கான அடுத்த கேள்வி. பல மனப் போராட்டங்கள். கணவன் மனைவி என்ற முகமூடியுடன் ஒரே கூரையின் கீழ் இரு வேறு உயிர்களாக, எந்தவித பந்தமும் இல்லாமல் வாழ்வது அத்துணை சுலபமல்ல.


அதுவும் தங்கள் குழந்தையின் மனநிலை பாதிக்காமல் வாழ்வது என்பது சற்று கூடுதலான சவாலாகவே இருந்தது அகல்யாவிற்கு. எனினும் அதைத் தள்ளிவிட்டு, தன் மகளுக்குத் தரமான ஒரு வாழ்க்கையை அளிக்க வேண்டுமென்றால், தான் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்று உணர்ந்தாள் அகல்யா. அதற்கான முயற்சியில் இறங்கினாள். 


சில மாதங்களுக்குப் பிறகு அவள் துறை ஹெச்.ஓ.டியிடமிருந்து ஈமெயில் வந்திருந்தது பட்டமளிப்பு விழா தேதி பற்றி. அகல்யா ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த நாள். அவள் மனதில் பதிந்த அந்தக் காட்சிப் படம் மீண்டும் அவள் கண்முன்னே ஓடியது. அதைத் தன் மகளுடன் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தாள் அகல்யா. கூகுளில் பட்டமளிப்பு விழா பற்றிய புகைப்படங்களைக் காண்பித்து அதைப்பற்றி தன் மகளுக்கு விளக்கினாள்.

“அம்மா எனக்கும் மேட்சின்ங்கா இந்த மாதிரியே பிளாக் டிரஸ் வாங்கிக் குடுப்பியா?” என்று கேட்ட தன் மகளை வாரி அணைத்துக்கொண்டு “ஓகே” என்றாள் அகல்யா.


பட்டமளிப்பு விழாவிற்கு மூன்று மாதங்கள் இருந்தது. அதற்குள் அகல்யாவின் வாழ்வில் பல குழப்பங்கள். அவளால் ஜீரணத்துக் கொள்ள முடியாத பல துரோகங்கள், அந்தப் போராட்டத்தில், தன் மகளைப் பற்றிய கவலையில், பட்டமளிப்பு விழா என்ற ஒன்றைப் பற்றி மறந்தே போனாள் அகல்யா. யோசித்து சில முடிவுகளை எடுத்து மனம் தெளிந்த வேளையில் பட்டமளிப்பு விழா முடிந்து போயிருந்தது. மீண்டும் ஏமாற்றம். கண் கலங்கினாள் அகல்யா.


தன் நண்பர்கள் அனுப்பி வைத்த பட்டமளிப்பு விழா புகைப்படத்தைப் பார்த்தாள். இம்முறை அந்தக் கருப்பு ஆடைக்குள்ளும், கருப்புத் தொப்பிக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ள விடாமல் போகச் செய்தத் தன் பெரிய தவறை ஒருமுறை நினைத்துபார்த்துக்கொண்டாள் அகல்யா.


“கல்வி கற்றவர்களெல்லாம் வாழ்க்கையில் கறை கண்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கறையையும், அதனையடைய நீந்திச் செல்லும் கடலையும் பிரித்துக்காட்டும் பகுத்தறிவை கல்வி கட்டாயம் கொடுக்கும்” என்ற தன் நம்பிக்கையை மீண்டும் நினைவு கூர்ந்து பார்த்தாள் அகல்யா.


தன்னால் ஏன் கடலையும், கறையையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை என்று ஆராய்து பார்த்தாள். தான் இன்னும் சரியாகக் கற்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள்.அந்த அங்கீகாரத்திற்குத் தான் இன்னும் தயாராகவில்லை என்பதை உணர்ந்தாள் அகல்யா. அதனால்தான் என்னவோ அம்முறை பட்டமளிப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்துக்கொண்டாள், அகல்யா.


தெளிவான சிந்தனையும், பகுத்தறிவையும் கொடுக்காத கல்வி முழுமையானதாக இருக்க முடியாது. முழுமை பெறாத நிகழ்விற்கு அங்கீகாரம் கேட்பது நியாமல்ல என்ற முடிவிற்கு வந்துவிடுகிறாள், அகல்யா.

அதன் பின் அவள் வாழ்வில் பல மாற்றங்கள். அவள் தன் கணவனை விட்டு எல்லா வகையிலும் பிரிந்து விட்டாள். இந்தியாவிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தாள்.


தானும் தன் மகளுமான வாழ்க்கை. “அம்மா” என்ற அங்கீகாரம், தனக்குக் கிடைத்த அந்த முதல் பட்டம், அதன் முழுமையை அவளால் உணர முடிந்தது. அவளின் கல்வி வேட்கை இன்னும் அடங்கவில்லை. அவள் பி.ஹெச்.டிக்கு பதிவு செய்தாள். ஆனால் அவள் வாழ்க்கையில் சட்ட ரீதீயாக முற்று பெறாத அந்தக் கணவனின் தாக்கம் மீண்டும் ஒரு புதிய வடிவு எடுத்து வந்தது.


அவள் போராடியே சோர்ந்து போனாள். தன் படிப்பிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்கு வந்தாள். தன் மகளுக்குத் தான் மட்டும் போதும் என்று உணர்ந்து கொண்டாள். சட்ட ரீதியாகத் தன் திருமண வாழ்வை முடித்துக் கொண்டாள்.


காதுகிழிக்கும் கரகோஷம் ஒன்று அகல்யாவை நாடுகடத்தி, காலம் கடத்தி அந்த அழகிய கல்வி நிறுவனத்தில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்தியது. போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்த அந்த கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. கருப்பு ஆடை, கருப்பு தொப்பியணிந்த அந்த பெண் இன்னும் புன்னகையை கழட்டி வைக்கவில்லை. அவள் தன்னுடன் இருந்த அந்த ஆணை கட்டித் தழுவிக்கொண்டிருந்தாள். அகல்யா தான் இன்னுமும் அங்கேயே அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.


அகல்யா வேலை செய்த இடத்தில் பி.ஹெச்.டி செய்வதற்கான வாய்ப்பு பலமுறை அவளுக்குக் கிடைத்தது. ஆனால் அகல்யா அவற்றை ஏற்கவில்லை. தனக்கிருந்த பொறுப்புகளைக் காரணம் காட்டி ஒவ்வொரு முறையும் அதை அவள் மறுத்துக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு பி.ஹெச்.டி பற்றிய கனவுகள் மறைந்து போனது.


வாழ்க்கையில் அவள் கற்றுக்கொண்ட, கற்றுக்கொண்டிருக்கும், கற்றுக்கொள்ளப் போகும் பாடங்கள் பி.ஹெச்.டியை விட மிக சுவாரசியமாக இருப்பதை அவள் உணர்ந்தாள். மேலும் அவள் செய்யும் வேலை அவள் பி.ஹெச்.டி படிக்க நினைத்த துறையிலேயே கற்கும் வாய்ப்பை நித்தமும் அவளுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தது. கல்வியின் நோக்கத்தையும், முழுமையையும், பயன்பாட்டையும் உணர்ந்து, அனுபவித்து மகிழ்கையில் அங்கீகாரம் என்ற தேடல் காணாமல் போய்விடுகிறது என்று உணர்ந்தாள், அகல்யா.


அகல்யா இன்றும் கற்றுக்கொண்டே இருக்கிறாள். அதனால் அவள் பட்டமளிப்பு விழாவைப் பற்றிய ஏமாற்றங்களை சிந்தனைகளைத் தான் கடந்து விட்டதாகவே நினைத்துக்கொண்டாள் அந்த கணம் வரை.

சில நேரங்களில் சில உணர்வுகளின் தாக்கம் (தாக்கம் என்று சொல்வதா அழுத்தம் என்று சொல்வதா) நமக்கு விளங்குவதில்லை.


நம் தெரு முனையில் இருக்கும், நாம் பேசிப் பழகிய அரிசி மண்டி தாத்தாவுடனும், பழக்காரப் பாட்டியுடனும் நமக்கிருக்கும் உணர்வுப் பிணைப்பும், அதனை நம் மனம் உள்வாங்கிக்கொண்டதையும் நம் அன்றாட வாழ்வில் நாம் பெரிதாய் நினைத்துக்கொள்வதில்லை.


திடீரென தொடர்ந்து சில நாட்களாக பூட்டிக்கிடக்கும் அந்தக் கடைகள் நம் மனதில் ஏற்படுத்தும் அழுத்தமும் பதபதப்பும் அந்த உறவின் ஆழத்தின் தாக்கத்தை நமக்குக் காட்டிக்கொடுக்கும். அது போன்ற ஒரு \

உணர்வுத் தாக்கம் தான் அன்று அகல்யாவிற்கு நடந்தது.


வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் சில நேரங்களில் மனிதன் என்னதான் கொடூரமான கடினமான தோல்களைப் போர்த்திக் கொண்டாலும், இயற்கையில் மனித மனம் இளகியதாய் தாக்கங்களுக்குப் பலியாகும் வலுகுறைந்த நினைவுக்குவியலாய் தான் இருக்கிறதோ?


Rate this content
Log in

Similar tamil story from Abstract