Deepa Sridharan

Abstract

4.9  

Deepa Sridharan

Abstract

தலைகறி

தலைகறி

7 mins
406


தேநீர் கோப்பையிலிருந்து வரும் மிதமான நீராவியின் ஸ்பரிசத்தில் கரைவதற்குள் "உத்ரா" என்று கூப்பிட்டுக்கொண்டே அம்மா என் அறைக்குள் நுழைந்தாள்.


"என்னடா இன்னும் ஆபீசுக்கு கெளம்பலயா?"


"என்னம்மா காலங்காத்தாலயே பட்டுப்பொடவையில கலக்குற?" என்று அம்மாவின் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினேன்.


"நம்ம க்ரித்தி குட்டி ஏஜ் அட்டென்ட் பண்ணிட்டாளான்டா. அவ அம்மா காலைலதான் வந்து சொன்னா. கொழந்தைக்கு பால் பழம் குடுத்துட்டு வரனும்."


"இந்த காலத்திலயும் இதல்லாம் வந்து சொல்றாங்களாம்மா?" என்று எரிச்சலுடன் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.


"உனக்கு சிஸ்டர்ஸ்லாம் இல்லாததுனால இதல்லாம் தெரியலடா. ஆனா ஒன்னு, இப்பல்லாம் எங்க காலம் மாதிரி பெரிய விஷேஷம்லாம் பண்ணி கொழந்தேள எம்பேரஸ் பண்றதில்ல. ஆனாலும் ரொம்ப குலோஸ் சர்க்கில்ல ஷேர் பண்ணிக்கறா" என்று சொல்லிக்கொண்டே அம்மா தன் புடவை பிளீட்சை சரிசெய்து கொண்டாள்.


"திஸ் இஸ் சோ ரிடிகுலஸ்" என்று நான் பேச ஆரம்பித்த போது "எனக்கு டைம் ஆச்சுடா, எல்லாரும் வந்துருப்பா ஈவினின்ங் வந்து நம்ம டிஸ்கஸ் பண்லாம்" என்று கூறிக்கொண்டே அம்மா என் அறையைவிட்டு வெளியேறினாள்.


அப்பாவின் ஆணாதிக்கத்திற்கு உடன்பட்டு வாழ விருப்பமில்லாமல், டைவர்ஸ செய்துகொண்ட நீயும் கூட இந்த  'ப்ளூரலிஸ்டிக் இக்னோரன்ஸ்க்கு' விதிவிலக்கில்லயாம்மா என்று மனதில் நினைத்துக்கொள்ளும்போது வெண்ணிலா அக்கா நியாபகத்திற்கு வந்தாள்.


"ஏலே புஸ்பராசு அந்த மைக் செட்ட ஓட்டிவிடுலே" என்ற குரல் பன்னிரண்டு வருடம் தாண்டி மீண்டும் என் காதில் இன்று பிரதிபலித்தது. 'பொத்திவெச்ச மல்லிக மொட்டு, பூத்திருச்சு வெக்கத்த விட்டு' என்ற பாட்டைக் கேட்டுக்கொண்டே அந்த ரயில்வே காலனியில் அரை டிராயருடன் நான் பவனி வந்துகொண்டிருந்தேன்.


செம்மண் கலந்த மண் ரோடு. ரோட்டின் ஒருபுறம் ரயில் தண்டவாளங்கள், மற்றொருபுறம், நீண்ட உயரமான மதிர்சுவர். இரண்டுக்கும் நடுவில் ஆங்கிலேயர் விட்டுச்சென்ற ஏகாதிபத்திய சூழ்ச்சிமுறைகளின் சுவடுகளில் ஒன்றான ஓட்டுவீடுகள், அந்த ரயில்வே குவார்டஸின் இருபுறங்களிலும் வரிசையாக நின்று கொண்டு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தன.  யோசித்துப் பார்த்தால் எல்லா  காலகட்டங்களிலும் மனிதயினம் தன்னை ஏதோ ஒரு அடக்குமுறைக்குள்  உட்படுத்திக்கொண்டுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறது.


அந்தத் தெரு முழுவதையும் சூரியனுக்குக் காட்டாமல் பந்தலிட்டு பொத்திவைத்திருந்தனர் அன்று. முல்லையும் சாமந்தியும் கலந்த வாசம் அந்த பந்தலுக்குள் அடைபட்டு திணறிக்கொண்டிருந்தது. பால்பாண்டி மாமா வீட்டு வாசலில் பிளாஸ்டிக் சேர்கள் ஜிம்னாஸ்டிக் செய்வது போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததன.


மதனி வந்துட்டாவுளா? என்று கேட்டுக்கொண்டே வெண்ணிலா அக்காவின் அம்மா அவசர அவசரமாக வாசலுக்கு வந்தாள்.


"அத்த வெண்ணிலா அக்கா என்ன பண்றா?" என்று கேட்டுக்கொண்டே அவங்க வீட்டுக்குள் நுழையப் போனேன்.

"ஏலே உத்ரா இன்னும் பத்து நாளைக்கு அவ கூட பேச முடியாதுலே. மாமி சொல்லலியா உன்ங்கிட்ட?" என்று ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டாள் வெண்ணிலாக்காவின் அம்மா.


நான் அந்த வீட்டு வாசலையே குட்டி போட்ட பூனை போல சுற்றிக்கொண்டிருந்தேன். கொளத்தூரன், பாபு, கனகராசு, நோபல் நாலு பேரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த ரயில்வே காலனியின் வாலிப பட்டாளம் அவர்கள். வெண்ணிலா அக்காவின் கிளாஸ் மேட்சும் கூட.


"ஏலே உத்ரா என்ன செல்றாவே வோன் அக்கா, அவ ரெட் இன்க் பாட்டில் ஒடன்ஞ்சுருச்சுன்னாளா? என்று ஏளனமாகச் சிரித்துக்கொண்டே கேட்டான் கொளத்தூரன்.


"மக்கா இன்னிக்கி பிரியாணி சாப்பாடுலே, டியூசனுக்கு டிமிக்கி குடுத்துரலாம்லே" என்று கூறிக்கொண்டே அவர்கள் என்னைக் கடந்து செல்வதற்குள் மேளச் சத்தமும் நாதஸ்வர ஓசையும் கேட்டது. வெண்ணிலா அக்காவின் மாமாவும் அவர் குடும்பமும் அணி திரண்டு வந்துகொண்டிருந்தனர்.


அவர்கள் தட்டு தட்டாய் பூ, பழம், துணிமணிகள், திண்பண்டங்கள், முட்டைகள் என ஒரு சூப்பர் மார்க்கெட்டயே அள்ளிக்கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எடுத்து வந்திருந்த கருவாட்டின் வாசமும், கருப்பட்டி பணியாரத்தின் வாசமும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு அந்தந் தூத்துக்குடி உப்புக் காற்றின் கரிப்பையும் தாண்டி என் மூக்கில் நுழைந்து கொண்டிருந்தது.


"அண்ணே மாப்ளைக்கு ஆட்டுகால் சூப்ப போட்டு ஒடம்ம தேத்திவுடுண்ணே, அடுத்தால கல்யாணந்தே" என்று கூறிக்கொண்டே வெண்ணிலா அக்காவின் அம்மா அவர்களை வரவேற்றாள்.


"ஏன் மருமவ எங்கலே" என்று தன் கிடாரி மீசையைத் திருவிக்கொண்டே வீடுடினுள் நுழைந்தார் வெண்ணிலா அக்காவின் மாமா.


அந்த மேளச்சத்தம் அடங்குவதற்குள் அடுத்த படை அணிவகுத்து வந்தது. வெண்ணிலா அக்காவின் அத்தை குடும்பம். அவர்கள் மெகா மார்க்கெட்டையே அள்ளிக்கொண்டு வந்திருந்தார்கள். இம்முறை பனங்கிழங்கு வாசம் பந்தலை நிறப்பியது. பால்பாண்டி மாமா தன் தங்கையின் கையிலிருந்த சீரைப் பார்த்துப் பூரித்துப்போனார். இருக்காதா பின்ன, பன்னிரண்டு வடம் சங்கிலியாச்சே.


"கருக்காலதாண்ணே மருமவள பத்திப் பேசிட்டுருந்தேன்" என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் அந்த அத்தை."


"எங்கிட்டு போனாம்லே அவேன்" என்று அந்த கூட்டத்தில் தன் மகனைத் தேடிக்கொண்டிருந்தார் மருதுபாண்டியின் அப்பா. மருதுபாண்டி வெண்ணிலா அக்காவின் அத்தை பையன். அவள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் என்னைத் தலையில் தட்டிக்கொண்டே இருப்பான். எனக்கு அவனைப்பார்த்தாலே பயம். நான் நைசாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றேன்.


அருணாச்சல மாமாவும் பரதன் மாமாவும் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

"டாக்டரம்மா நம்ம வெண்ணிலா சமஞ்சுருச்சு, உச்சிக்கு விருந்துக்கு வந்துருங்க" என்றார் அருணாச்சல மாமா. வேகமாகத் திரும்பிப் பார்த்தேன். தனலட்சுமி டாக்டர். காலனியிலுள்ள ரயில்வே ஹாஸ்பிடலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னால் புதிதாக வந்திருந்த டாக்டர்.வெள்ளை ஷிஃபான் புடவையில் சிவப்பு ரோஜாப்பூக்களின் எம்பராய்டரி பார்டர், வெள்ளை ஸ்லீவ்லெஸ் பிளவுஸ், சிவப்பு ஹேன்ட்பேக் , ஹீல்ஸ் செருப்புடன் தனலட்சுமி டாக்டர் வந்துகொண்டிருந்தாள். சுருட்டை முடியில் குட்டைப் பின்னல், வட்ட முகம், கண்ணாடிக்குள் நீச்சலடிக்கும் மையிட்ட கண்கள், 5.8அடி உயரம், அறிவும் தைரியமும் கலந்த தோற்றம். 


"இந்த மாதிரி அறிவுகெட்ட சம்பிரதாயத்தலாம் எப்பதான் தூக்கியெறியப்போறிங்களோ? நான் இதுக்கெல்லாம் வரமாட்டேன். அடுத்த வாரம் அவளுக்கு அறையாண்டு தேர்வு இருக்கு. இதெல்லாம் நிறுத்திட்டு அவள ஸ்கூலுக்குப் போக சொல்லுங்க" என்று சற்றே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு நடந்தாள் தனலட்சுமி டாக்டர்.


"பேச்ச பாருமவள்ளே அவளுக்கு, படிச்ச சவடால காட்ராலே" என்றார் அருணாச்சல மாமா."


"படிச்ச சவடாலா இல்ல சீப் டாக்டரய்யாவ வெச்சுருக்கற சவடாலா" என்று நக்கலாக சிரித்தார் பரதன் மாமா."


"இந்த சவடாலுக்குத்தேன் இவ குடும்பமே இவள ஒதுக்கி வெச்சிருக்கு" என்றார் அருணாச்சல மாமா.


அந்த பேச்சுகளெல்லாம் எனக்கு அப்பொழுது ஏதோ அரைகுறையாகப் புரிந்தது. ஒரு பெண்ணிண் வெற்றியை அவளின் பாலியல் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தாமல் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் சமுதாயத்திற்கு இன்னமும் கூட வந்துவிட்டதா என்று தெரியவில்லை.


தனலட்சுமி டாக்டரைப் பற்றி அந்த காலனியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அபிப்ராயம். மொத்ததில் யாருக்கும் நல்ல அபிப்ராயம் இருந்ததாக நினைவு இல்லை. ஆனால் வெண்ணிலா அக்காவுக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். சனி ஞாயிறு வந்துவிட்டால் அறிவியல் பாடபுத்தகத்துடன் அவங்க வீட்டுக்கு போய்டுவா. நான் தான் அக்காக்கு பாடி கார்ட்.


தனலட்சுமி டாக்டர் நல்ல ஆசிரியரும் கூட. அவங்க வெண்ணிலா அக்காவுக்கு படம் வரஞ்சு சொல்லிக்குடுத்த 'கார்டியாக் பிசியாலஜி' இன்னுமும் கூட என் நினைவில் இருக்கு. அவுங்க சைன்ஸ மட்டுமில்ல, பெண்ணியம், முதலாளித்தத்துவம், நாத்திகம் என்று பல அறிவை வெண்ணிலா அக்காவுக்குள் விதைத்ததை நான் பார்த்திருக்கிறேன்.என்னை அறியாமலேயே நானும் அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டிருந்துருக்கிறேன் என்பதை பல ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வந்தவுடன்  அடிக்கடி உணர்ந்திருக்கிறேன். 

சற்று நேரத்தில் அந்த காலனியே அங்கு திரண்டிருந்தது. என் அம்மாவும் தட்டில் பூ, பழத்தோடு அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்தாள். அம்மாவைப் பார்த்த உற்சாகத்தில் அவளிடம் ஓடிப்போனேன்.


"அம்மா ஏன் நான் வெண்ணிலாக்காவ பாக்க முடியாது? சமஞ்சுடுச்சுன்னா என்ன?" என்று கத்தி கத்தி கேட்டேன், மைக் செட்டிலிருந்து வரும் சத்தத்தில் என் குரல் மங்கிவிடக்கூடாதென்று. அங்கிருந்த பெண்களெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.


"அப்றம் சொல்றேன்டா. நீ வீட்டுக்குப் போ". என்று அம்மா என்னைத் துரத்தியடித்தாள்."


அங்கிருந்து மறைந்து வேறொரு கூட்டத்திற்குள் நுழைந்தேன்.


"ஏக்கீ வெண்ணிலாவ பொறத்தால கூட்டிட்டு வா" என்ற குரலைக் கேட்டதும் நான் சுதாரித்துக்கொண்டேன். அந்த நெரிசலில் வளைந்து நெளிந்து முன்னால் போய் நின்றேன். வெண்ணிலா அக்காவை அவள் தோழிகள் கை பிடித்து வாசலுக்கு அழைத்து வந்தார்கள். அக்காவின் முத்திலிருந்த கோவம் எனக்கு இன்னுமும் நினைவிலிருக்கிறது."


"பால்பாண்டி தங்கச்சி இன்னிக்கே பரிசம் போட்ருவாப்போல!. மருதுபாண்டி திமுறிக்கிட்டு நிக்கிறாமுல்ல. வெண்ணிலாவுக்கேத்த சோடிதேன்" என்று ஒரு பெண்மணி சொல்ல, "கேக்கறவ கேனையன்னா கேப்பைல நெய் வடியுதும்பாளா" என்று ஒரு பாம்படம் போட்ட பாட்டி வெற்றிலையை மென்றுகொண்டே பாம்படத்தை ஆட்டியாட்டி பதிலுக்குக் கூறினாள். எனக்கு மருதபாண்டியுடன் வெண்ணிலாக்காவை இணைத்துப்பார்கவே ஏனோ அறுவறுப்பாக இருந்தது.


வெண்ணிலா அக்கா பச்சை தாவணி மயில் கழுத்து கலர் பட்டுப்பாவாடையில் தேவதை போல இருந்தாள். அவளுக்கு எதுக்கு அத்தனை நகைகளை மாட்டிவிட்டிருக்கிறார்கள். அவைகள் இல்லாமலே அக்கா அழகுதானே என்று தோன்றியது எனக்கு. அவளை வீட்டு வாசலின் நடுவில் நிற்கச் சொல்லி அவள் கழுத்தில் சாக்லேட் மாலை ஒன்றையும், பிஸ்கெட் மாலை ஒன்றையும் போட்டுவிட்டாள் வெண்ணிலாக்காவின் அம்மா. அதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.


"மாமம்பய அத்த பயனுவல்லாம் வாங்கடா இங்கிட்டு" என்று ஒரு கிடாரி மீச மாமா கத்தினார்.

வெண்ணிலாக்காவைச் சுற்றி பத்துப் பன்னிரண்டு பசங்க. என்னைப்போலவே அரை டிராயர் அணிந்த பொடியனிலிருந்து வேஷ்டி அணிந்த பெரிய அண்ணன் வரை இருந்தார்கள். அவர்களை வெண்ணிலாக்காவை சுற்றி நிற்கச் சொன்னார்கள்.


"வெண்ணிலாக்கு வெக்கத்தப் பாருக்கீ" என்று அவளின் கிளாஸமேட் ஒருத்திக் கூறினாள்.

அக்காவின் முகத்தில் எண்ணெயும் கடுகும் அல்லவா வெடித்துக் கொண்டிருடிருக்கிறது. இதில் இவளுக்கு எங்கிருந்து வெட்கம் தெரிகிறது என்று நினைத்துக்கொண்டேன். 

ஏலே ரெடியா? சாக்கலேட்டையும் பிஸ்கெட்டையும் ஒவ்வொருத்தரா மெதுவா பிச்சு எடுங்கலே என்றார் மருதுபாண்டியின் அப்பா."


"மக்கா மருதுபாண்டிக்கு வாழ்வுதேன். அவன் சாக்லேட்டயா புடிப்பான்? என்று கொளத்தூரன் நோபல் காதில் கிசுகிசுத்தது என் காதில் கேட்டது."


அவர்கள் ஒவ்வொருவராக மாலையிலிருந்து சாக்லேட்டே பிக்கும்போது வெண்ணிலா அக்காவின் கண்களில் தீப்பொறி பறந்தது. ஆனால் பாவம் அது அங்கிருந்தவர்களை எரித்து சாம்பலாக்க உயிர் பெற்றுருக்கவில்லை. பெரும்பான்மையான தருணங்களில் மனிதன்  பல உணர்வுகளைக் கருவிலேயே கலைத்து விடுகிறான். அச்சத்தின் ஆதிக்கம், ஒரு உணர்வு தன்னுடன் கருத்தரித்த மற்றொரு உணர்வை உயிர்ப்பித்துக்கொள்ள விடாமல் செய்யும் சர்வாதிகாரத்திற்குள் மனிதன் உட்பட்டுக்கிடக்கிறான். அடக்குமுறை என்பது தனிமனிதனுக்கு வெளியே இயங்கும் நிகழ்வு மட்டுமல்ல, அது ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் இயங்குகிறது. 


அந்த அசிங்கமான சம்பிரதாயத்திற்கு பிறகு, சடங்கு சுத்தனும்னு சொல்லி வெண்ணிலா அக்காவை ஒரு சேரில் உட்காரவைத்தார்கள். அங்கிருந்த எல்லா பெரியவர்களும் சென்று அக்கா முகத்தில் சந்தனம் அப்பி குங்குமம் வைத்து ஆசீர்வதித்தார்கள். வெண்ணிலாக்காவை ஏதோ சித்திரவதை செய்வது போல தோன்றியது எனக்கு. அவளை அங்கிருந்து கூட்டிக்கொண்டு போய் நாங்கள் எப்பொழும் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கும் ஆளில்லா தண்டவாளத்திற்குச் செல்ல வேண்டும் போல இருந்தது எனக்கு. அந்த நீண்ட தண்டவாளத்தில் நடக்கும்போது எத்தனைக் கதைகளை வெண்ணிலாக்கா சொல்லியிருக்கிறாள்.


எல்லா கூத்தும் முடிந்து அவளை வீட்டிற்குள் அழைத்துச் செல்லும் போது, அவள் என்னைப் பார்த்து விட்டாள். எனக்குள் தான் எத்தனை மகிழ்ச்சி அக்கனம். அவள் சைகையில் என்னை உள்ளே வரச்சொன்னதை நான் புரிந்து கொண்டு விட்டேன். 

"ஏலே பந்தி போட்டாச்சு, அம்புட்டு பயலுகளும் சாப்டவாங்கலே" என்று பால்பாண்டி மாமா கூவிக்கொண்டிருந்தார். எல்லாரும் சாப்பிடவும், பரிமாரவும் தயாரான சைக்கிள் கேப்பில் பின்புறமாக நான் அவங்க வீட்டிற்குள் நுழைந்தேன்.


வெண்ணிலாக்கா அவள் அறையில் தனியாக இருந்தாள். என்னைப் பார்த்ததும் "உத்ரா" என்று ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அங்கு நடக்கும் அந்த கூத்து எதற்காக என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லையென்றாலும், அது வெண்ணிலா அக்காவை கஷ்டப்படுத்துகிறது என்பதை மட்டும் நான் உணர்ந்து கொண்டேன்.


"அக்கா சமஞ்சுட்டன்னா என்ன?" என்றேன்.

"ச்சீ கருமம். அதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லலே. மனுசன் பொறக்கும்போதே அவனோட எல்லா உறுப்புகளும் முழுசா வளந்து அதுஅது வேலைய செஞ்சுறதில்ல. சில உறுப்புங்க கொஞ்ச வருசம் கழிச்சு தான் முழுசா அது வேலைய செய்யும். என்னோட 'ரீப்ரொடக்டிவ் ஆர்கன்' இப்பதான் முழுசாயிருக்கு" என்று அழகாக விளக்கினாள் வெண்ணிலாக்கா.


"அப்போ ஒவ்வொரு ஆர்கன்ஸூம் முழுசா வளரும்போதும் இந்த மாதிரி கூத்தடிப்பாங்களாக்கா?" என்றேன்.


"அத யோசிக்ற அளவுக்கு இங்க யாருக்கும் இன்னும் மூளை முழுசா வளறலலே உத்ரா" என்றாள் எரிச்சலுடன் வெண்ணிலா அக்கா."


காது ஜவ்வு கிழியும்படி யாரோ கத்தினார்கள். நானும் வெண்ணிலா அக்காவும் ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தோம்.


"என் மவன் எலயில ஒரு தல துண்ட காணும், அந்தத் தீவட்டித் தடியனுக்கு எல முழுக்க தலகறியாலே? என்ன கூட்டி வச்சு அவமானப்படுத்துறீயாலே? எவன் திம்பா இந்த சோத்தயும் மர கறியயும்? உங்கண்ணே நம்பள அசிங்கப்படுத்துறான், நீ பாத்துகிட்டு செவடால நிக்கிறவ? என்று மருதுபாண்டியின் அப்பா அவர் இலையை தூக்கியெறிந்து கத்திக்கொண்டிருந்தார்.


பதிலுக்கு வெண்ணிலா அக்காவின் மாமா, "ஏலே யார பாத்துலே தீவட்டித் தடியன்னு சொல்லுத? நாக்க இழுத்து வெச்சி அறுத்துருவேன்ல. ஓன் மவன் பன்னன்டாப்பு கூட பாஸ் பண்ண முடியாத சொங்கிப்பய.  பன்னண்டு பவுன் சங்கிலிய காணிச்சு ஏ தங்கச்சி மவள வளச்சு போடப்பாக்குறயாலே?. ஒன் நாதாரி பொழப்பு ஊருக்கே தெரிஞ்ச கத, ஒனக்கு தலகறி கேக்குதாலே" என்று பாய்ந்தார்.


ஒருவருக்கொருவர் கத்தி சண்டை முற்றியது. வெண்ணிலா அக்காவின் மாமா தன் மஞ்சள் சட்டைக்குள்ளிருந்த அரிவாளை உருவி, பந்திக்குப் போட்டிருந்த பென்ஜ்சைத் தாண்டி குதித்து, "யாரப்பாத்துலே கை நீட்டி பேசுற?" என்று கத்திக்கொண்டே மருதுபாண்டியின் மீது பாய்ந்து, அவன் கையைத் துண்டாக வெட்டினார். இலையில் பரிமாயிருந்தருந்த சாம்பார் சாதமெல்லாம் , ரத்த சாதமாய் மாறியது. சாப்பாட்டு பந்தி போர்க்களமாய் மாறியது,. மருதபாண்டி, கை துண்டிக்கப் பட்டு வலியில் கதறிக்கொண்டிருந்தான்.


அப்பொழுது வெண்ணிலாக்கா மனதிற்குள் சிரித்துக்கொண்டதை என்னால் உணர முடிந்தது.

"வேணும்லே உனக்கு, அந்தக் கையாலத் தான என்ன தடவிப் பாத்த" என்று தன்னையறியாமல் வாய்விட்டுக் கூறினாள் வெண்ணிலாக்கா.


 அங்கிருந்தவர்கள் இரண்டு கூட்டமாய்ப் பிரிந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருந்தனர். நான் பயத்தில் செய்வதறியாமல் வெண்ணிலா அக்காவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.


"எனக்கு இப்ப இங்க இருக்கற அத்தன வக்கிரபுத்தி பயலுவ  தலையையும் வெட்டி தலகறி சாப்டனும்போல இருக்குலே உத்ரா" என்று ஆக்ரோஷமாகக்  கத்திக்கொண்டே வெண்ணிலாக்காவும் என்னோடு அந்த சாப்பாட்டுப் பந்தியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்."


என் மொபைல் போன் ரின்ங்டோனில் சடக்கென்று நிகழ்காலத்திற்குள் ஐக்கியமானேன். என் பாஸிடமிருந்து கால் வந்துகொண்டிருந்தது. கார்ப்பரேட் ஏகாதிபத்திய சூழ்ச்சிமுறைகளில் ஒன்றான மொபைல் போன், ஒன்றுக்கு நாலாக என் வீட்டில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. என் பாஸ் மாறி மாறி அனைத்து மொபைலிலும் என்னை துரத்திக்கொண்டிருந்தார். நான் எதையோ நினைத்துக்கொண்டு கிடுகிடுவென கீர்த்தி குட்டி வீட்டிற்கு விரைந்தேன். அங்கு என் அம்மா உட்பட பல பெண்களும் கீர்த்தனா அறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தார்கள்.


"நான் வெளிய வரமாட்டேன், இந்த அறிவுகெட்ட சம்பிரதாயத்த நடக்க விடமாட்டேன். பிளீஸ் எல்லாரும் போய்டுங்க" என்று கீர்த்தி குட்டி உள்ளேயிருந்து கத்திக்கொண்டிருந்தாள்."


நான் என் அம்மா கையைப் பிடித்து தரதரன்னு அங்கிருந்து இழுத்துக்கொண்டு நடந்தேன்.

எத்தனை அடக்குமுறைகள் மனிதயினத்தைத் தலை தூக்கி ஆதிக்கம் செலுத்தினாலும், அவற்றிற்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல், அவற்றை வெட்டித் தலைகறி போட்டுவிட்டு,சில தைரியக்குரல்களும், உணர்வுகளும் எல்லா கால கட்டத்திலேயும் ஒலித்துக்கொண்டும், உயிர்ப்பித்துக்கொண்டுமே தான் இருக்கின்றன!


Rate this content
Log in

Similar tamil story from Abstract