Deepa Sridharan

Abstract Drama Inspirational

5  

Deepa Sridharan

Abstract Drama Inspirational

நங்கூரம்

நங்கூரம்

6 mins
487



பனி படர்ந்த சன்னலை கிழித்துக்கொண்டு மிளிர்ந்தது அந்த அறையின் வெளிச்சம். அதிகாலை 4:30 மணி. ஸ்வெட்டரின் கதகதப்பில், உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டு, மூக்குக் கண்ணாடியை அணிந்து கொண்டு, முந்தைய நாள் செய்தித்தாளை வாசிக்க ஆரம்பித்தார், கோபாலு தாத்தா.


அதிகாலை முதுமையின் அடையாளம். ஏனோ வயது ஆக ஆக மனிதன் இயற்கையோடு அதிகம் ஒன்றிக்கொள்கிறான். விரைவில் இயற்கையோடு தன் உயிர் கலக்கப்போவதை அவன் உள்ளுணர்வு அறிந்துகொண்டு செயல்படத் துவங்கிவிடும் போல.


“இந்தாங்க மாமா டீ” என்று பத்மா டீ டம்ளரை அவர் டேபிள் மேல் வைத்தாள். “ஏம்மா இவ்வளவு சீக்ரமே எந்திரிச்சிட்ட?” என்று கேட்டுக்கொண்டே கோபாலு தாத்தா அந்த டீயில் குளிர்காய்ந்தார். “தூக்கம் வரல மாமா” என்று கூறிக்கொண்டே அவள் உள்ளே போனாள். தன் மருமகளின் தூக்கத்தையும் சந்தோஷத்தையும் தன்னுடனே எடுத்துக்கொண்டு போய், விபத்தில் இறந்துவிட்ட தன் மகனை நினைத்துக்கொண்டு கண் கலங்கினார் தாத்தா. அவர் பத்மா முகத்தில் புன்னகையைப் பார்த்து ஐந்தாண்டுகள் இருக்கும்.


பத்மா சமயலறைக்குள் சென்று தன் வேலைகளை நிதானமாகச் செய்யத் துவங்கினாள். ரகுவிற்கான மத்திய உணவை, சாப்பாட்டு டப்பாவில் எடுத்து வைத்துவிட்டு, தன் படுக்கை அறைக்குள் நுழைந்து, ரகுவை எழுப்பினாள். கண்களைத் திறந்த கணமே “பாலு தாத்தா வாக்கிங் போய்ட்டு வந்துட்டாறா அம்மா?” என்று கேட்டுக்கொண்டே, தாத்தாவின் அறைக்குள் நுழைந்தான். “தாத்தா எலிசபத் கப்பல் இப்போ துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துருக்கும்ல” என்று தன் இரு கண்களையும் உருட்டிக் கொண்டே கேட்டான் ரகு. தாத்தா அவனைப் பார்த்து சிரித்தார். “வந்துருக்கும்டா, நீ போய் மொதல்ல ஸ்கூலுக்கு கிளம்பு” என்றார் தாத்தா. ரகு வேகமாக ஓடிப்போய் பத்மாவிடம் அடுத்த கேள்வியைக் கேட்டான். “அம்மா சாயங்காலம் கப்பல பாக்க போறப்போ என்ன டிரஸ் போட்டுக்கனும்”. பத்மாவும் சிரித்தாள். ரகுவின் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டே அவனை ஸ்கூலுக்குக் கிளப்பினாள் பத்மா.


ரகு இரண்டாம் வகுப்பு படிக்கும் சுட்டிப் பையன். அவனுக்கு அந்தத் தெரு முழுவதும் அத்தனை நண்பர்கள். அவன் தாத்தாவோடு ஸ்கூலுக்குப் போகும்போது, அத்தனை சுட்டிகளும், “பாலு தாத்தா, பாலு தாத்தா” என்று அவர்களை சூழ்ந்து கொண்டனர். இரண்டு நாளாக, அந்தச் சுட்டிகளின் எண்ணங்கள் முழுவதும் ‘எலிசபத்’ கப்பலைப் பற்றியே இருந்தது. அந்த அளவிற்கு பாலு தாத்தா அந்தக் கப்பலின் ஆக்கக் கதையை அவர்களுக்குக் கூறி வைத்திருந்தார்.


குழந்தைப் பருவத்தில்தான் எத்தனை குதூகலம். அவர்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், அவர்களுக்குப் பிரம்மாண்டம், தேடலின் உந்துதல் என்று தாத்தா நினைத்துக்கொண்டார். “சாயங்காலம் கரெக்டா நாலு மணிக்கு எல்லாரும் வீட்டுக்கு வந்துருங்கடா” என்று கூறிக்கொண்டே தாத்தா ரகுவின் கையைப்பிடித்துக் கொண்டு விரைந்தார். அன்று பள்ளியில் பேச்சு முழுவதும் கப்பலைப் பற்றியே இருந்தது. ரகு கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கடைசி பெல் அடித்ததும் சிட்டாகப் பறந்தனர் சிறுவர்கள். ரகுவின் வீட்டில் ஒரே ஆரவாரம். தாத்தா அந்த சுட்டிப் படையைத் திரட்டிக்கொண்டு எலிசெபத் ராணியை சந்திப்பதற்குப் போய்க் கொண்டிருந்தார்.


துறைமுத்தின் அரியனையில் கம்பீரமாக வீற்றிருந்தாள் எலிசபத் ராணி. சுட்டிகள் அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் அன்னாந்து பார்த்தனர். உள்ளே செல்வதற்கான வரிசை சற்றே நீளமாக இருந்தது. பாலு தாத்தா மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார். பத்து சுட்டிகளைச் சமாளிப்பதென்றால் சும்மாவா? ஒரு வழியாக சுட்டிப் படை கப்பலின் உள்ளே நுழைந்தது.


தாத்தா சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் ரகு அந்தக் கப்பலில் கண்டான். அந்த கப்பலை சுற்றிக்காண்பிக்கும் கைடு கூறிய அனைத்தையும் அந்த சுட்டிகள் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அந்த கப்பலில் மொத்தம் மூன்று தளங்கள் இருந்தன. ஒவ்வொரு தளத்தையும் ரகு கூர்ந்து கவனித்தான். கடைசியாக அனைவரும் கப்பலின் மேல் தளத்தை வந்தடைந்தனர்.


ரகு ஆச்சரியத்தின் உச்சக் கட்டத்தில் இருந்தான். சுட்டிகள் அனைவரும் அந்த சமுத்திரத்தின் பிரமாண்டத்தை அந்தக் கப்பலின் மேல் தளத்திலிருந்து வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். வரிசையில் நிற்கும்போது பிரமாண்டமாய்த் தெரிந்த அந்த எலிசபத், இப்பொழுது அந்த சமுத்திரத்தின் பிரமாண்டத்தில் சிறிய புள்ளியாய்த் தோன்றினாள். இதுதான் இந்த பிரபஞ்சத்தின் வித்தை, ஒன்றைவிட ஒன்று பிரமாண்டமாய் வளர்ந்து கொண்டே போகும்.


இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றிலும் சிறுமையும், பிரமாண்டமும் கலந்தே கிடக்கிறது. இதை அறியாத மனிதர்கள் பாவம், ஏனோ அவமானத்திற்கும், கர்வத்திற்கும், இரையாகித் தவிக்கிறார்கள். 

ரகு, தூரத்தில் மிதந்து வரும் மற்றொரு கப்பலொன்றை அங்கிருந்து பார்த்தான். திடீரென எதையோ நினைத்துக் கொண்டு “பாலு தாத்தா இந்த கப்பல் எப்படி இங்க நிக்குது? சைக்கிள் மாதிரி இதுக்கும் ஸ்டேன்டு இருக்கா?” என்று கேட்டான். உடனே அத்தனை சுட்டிகளும் பாலு தாத்தாவை ஆர்வமாகப் பார்த்தனர். “கப்பலை பொதுவாக நங்கூரம் பாய்ச்சி நிற்க வைப்பார்கள்” என்று அதைப்பற்றி விளக்கமாகக் கூறினார் தாத்தா. அவர் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டான் ரகு. அவனுக்கு அந்த ‘நங்கூரம்’ என்ற வார்த்தை பிடித்திருந்தது. அவர்கள் அனைவரும் இறங்குவதற்கு முன், அந்தக் கப்பலின் மாலுமி அங்கே வந்தார்.


அனைவரும் அவருடன் நின்று புகைப்பபடம் ஒன்று எடுத்துக் கொண்டனர். அவரின் கம்பீர தோற்றமும், அந்த வெள்ளை நிற ஆடையும், தொப்பியும் ரகுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். வரும்போது கப்பலைப் பற்றியே பேசிக்கொண்டு வந்த சுட்டிகள், இப்போது கேப்டனைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தனர்.


ரகு வீட்டிற்கு வந்ததும், பத்மாவிடம் அத்தனை விஷயத்தையும் மூச்சு விடாமல் ஒப்பித்தான். அவன் கூறியற்றைக் கேட்டுக் கொண்டே அவனைத் தூங்க வைத்தாள் பத்மா. அடுத்த நாள் காலையில் எழுந்த உடனே ரகு பத்மாவை இழுத்துக்கொண்டு தாத்தா அறைக்குள் நுழைந்தான். “பாலு தாத்தா நான் கப்பல் கேப்டன் ஆகப் போறேன். அதுக்கு என்னலாம் பண்ணனும்?” என்று கேட்டுக்கொண்டே பத்மா மடியில் அமர்ந்தான் ரகு.


“வெரி குட், நீ அதைப்பத்தியே யோசிக்கனும், அதுக்கு தேவையான அறிவை வளத்துக்கனும், அந்த இலக்கை நோக்கியே நகர்ந்து போகனும்” என்று கூறினார் தாத்தா. “நீ சின்ன வயசுல என்னவாகனும்னு நெனச்ச பாலு தாத்தா?” என்று கேட்டான் ரகு. “நான் டீவில செய்தி வாசிப்பாளரா ஆகனும்னு கனவு கண்டேன்டா” என்று ஏமாற்றம் கலந்த புன்னகையோடு கூறினார் தாத்தா. “பின்ன ஏன் நீ ஆகல பாலு தாத்தா?” என்றான் ரகு. “அப்போல்லாம் எங்க வீட்ல அவ்ளோ வசதி இல்லடா.


அதுக்கெல்லாம் ரொம்ப நாள் ட்ரை பண்ணனும். ஆனா எனக்கு அப்ப அதுக்கு டைம் இல்ல. அதனால வேற வேல பாத்து பணம் சம்பாதிக்கப் போயிட்டேன்” என்றார் தாத்தா. “ஆனா என்னோட அப்பா வேலைக்கு போனப்றம் தான் நம்ம கிட்ட நெறய பணம் இருந்துதுன்னு சொன்னியே தாத்தா! அப்ப ஏன் நீ ட்ரை பண்ணல?” என்றான் ரகு. தாத்தா ஒரு கணம் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறினார். இலக்கை நோக்கி நகராம உன்னோட கனவுக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்திட்டயா பாலு தாத்தா? என்றான் ரகு.


பத்மாவும், தாத்தாவும் ஒருவரையொருவர் சில வினாடிகள் பார்த்துக் கொண்டனர். எப்பொழுதும் போல தாத்தா அன்றும் ரகுவை பள்ளிக்கு அழைத்துசுசென்றார். ஆனால் அவர் சற்றே சோகமாக இருப்பதை ரகு உணர்ந்தான். அவர் ஒன்றும் பேசாமல் ரகுவை பள்ளியில் விட்டு விட்டு வந்தார்.


அன்று பள்ளி முடிந்து, தன் நண்பர்களுடன் விளையாடிவிட்டு, வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் ரகு. “பாலு தாத்தா நம்ம மூணாவது வீட்டு ராமுவோட மாமா கேபிள் டீவி வெச்சு நடத்தறாரு. அவங்க கேபிள் டீவில லோக்கல் நியூஸ் வாசிக்கறயா?” என்று தலையை ஆட்டிக்கொண்டே கேட்டான் ரகு. “வயசானவங்களயெல்லாம் நியூஸ் வாசிக்க விடமாட்டாங்கடா” என்றார் தாத்தா. “அதெல்லாம் இல்ல பாலு தாத்தா, அந்த மாமா ஓகே சொல்லிட்டாரு” என்றான் ரகு.


தாத்தா முகத்தில் புன்னகை பூத்தது. உடனே ரகுவை அழைத்துக்கொண்டு அந்த கேபிள் டீவி அலுவலகத்திற்கு நடந்தார் தாத்தா. “வாங்க தாத்தா, ராமு எல்லாத்தயும் சொன்னான். ரெண்டு வாரம் கழிச்சு நீங்க நியூஸ் வாசிக்கலாம். அடுத்த வாரம் வந்து ஒரு தடவை சும்மா வாசிச்சு காமிங்க அப்றம் மத்ததெல்லாம் சொல்றேன்” என்றார் ராமுவின் மாமா. தாத்தாவிற்கு ஒரே பெருமிதம். வழி நெடுக தொண்டையை சரி செய்து கொண்டே வந்தார். வீட்டிற்கு வந்தவுடன், செய்தித்தாளை எடுத்து வாசித்துப் பார்த்தார் தாத்தா. “சூப்பரா வாசிக்கற பாலு தாத்தா” என்றான் ரகு. பத்மாவை ஆவலோடு பார்த்தார் தாத்தா. “நல்லா வாசிக்கறீங்க மாமா” என்றாள் அவள். தாத்தா பூரித்துப் போனார்.


ஒரு வாரமாக தாத்தா தினமும் ஐந்து மணி நேரமாவது செய்தி வாசித்துப் பழகினார். பத்மாவை தினமும் பனங்கல்கண்டு பால் காய்ச்சித் தரச் சொல்லிக் குடித்தார். டென்டிஸ்டிடம் சென்று, தன் பல் செட்டை சரி செய்து கொண்டார். டெய்லரிடம் சென்று, பேன்ட் சூட்டிற்கு அளவு கொடுத்தார். தினமும் சாயங்காலம், அந்த சுட்டிப் படைகளைத் திரட்டி லேப் டாப்பைப் பார்த்து நியூஸ் வாசித்தார். இவ்வாறாக அவர் தன்னை எல்லா வகையிலும் ஆயத்தப்படுத்திக் கொண்டார்.


அவரைப்பார்த்து ரகு பிரமித்துப் போனான். ஒரு வாரம் கழித்து தாத்தா சுட்டிப் படையுடன், கோட் சூட் அணிந்து கொண்டு கேபிள் டீவி அலுவலகத்தில் சென்று நியூஸ் வாசித்துக் காண்பித்தார். அங்கிருந்த அனைவரும் வியந்து போனார்கள். எழுபத்திரண்டு வயதிலும் அவரின் தமிழ் உச்சரிப்பும், குரலும் கம்பீரமாய் இருந்தது. “அடுத்த வாரம் திங்கட்கிழமை மாலை ஆறு மணி செய்தி வாசிக்க வேண்டும்” என்று ராமுவின் மாமா கூறினார். “பாலு தாத்தா! பாலு தாத்தா!” என்று சுட்டிகள் கை தட்டினார்கள்.


தாத்தாவிற்கு அன்றுதான் தன் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததாய்த் தோன்றியது. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அவர் ரகுவைத் தூக்கிக் கொண்டு அவனுக்கு முத்தமிட்டார். ரகு தானும் தாத்தாவைப் போலவே தன்னைத் தயார் படுத்திக்கொண்டு கேப்டன் ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.


ரகு வீட்டிற்கு வந்து பத்மாவிடம் தாத்தா நியூஸ் வாசித்த கதையைச் சொன்னான். பத்மா சமயலறையிலிருந்து பாயசம் கொண்டு வந்து கோபாலு தாத்தாவிடம் நீட்டினாள். “வாழ்த்துக்கள் மாமா” என்றாள் பத்மா. ஐந்து ஆண்டுகள் கழித்து அன்றுதான் அவள் முதன் முறையாக மனம் விட்டு சிரிப்பதை பார்த்தார் தாத்தா.


“என்னம்மா!” என்றார். “நான் டீச்சர் வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தேன் மாமா, அடுத்த மாசம் ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க” என்றாள் பத்மா. தாத்தா மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். “அம்மா டீச்சர் ஆகப்போறாங்க, அம்மா டீச்சர் ஆகப்போறாங்க” என்று கைதட்டிக்கொண்டே நண்பர்களைப் பார்க்க ஓடினான் ரகு.


திங்கட் கிழமை ஆறு மணிக்கு அந்தத் தெருவே தாத்தா செய்தி வாசிப்பதை பார்ப்பதற்காக ரகுவின் வீட்டில் கூடியிருந்தது. “வணக்கம், இன்றைய தலைப்புச் செய்தி” என்று ஆரம்பித்து திக்கல் திணறலில்லாமல் நியூஸ் வாசித்து முடித்தார் தாத்தா. அனைவரின் முகத்திலும் அப்படியொரு மகிழ்ச்சி. சுட்டிகள் பாலு தாத்தாவை டீவியில் பார்த்ததைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள்.


தாத்தா வீட்டிற்கு வந்து தன் மகனின் ஃபோட்டோ முன் நின்று அழுதார். ரகு அவரை இழுத்துக்கொண்டு வந்து அவன் ரெக்கார்டின்ங் செய்து வைத்த அவர் வாசித்த நியூஸை போட்டுக் காண்பித்தான். தாத்தா அவனை கட்டிக்கொண்டு முத்தமிட்டார். பத்மா அவர்கள் இருவரையும் பார்த்து உளம்மகிழ்ந்தாள்.


பல நேரங்களில் மனித இழப்புகளையும், ஏமாற்றங்களையும் கால நெருக்கடிகளையும், நாமே நமக்கு நங்கூரமாய்ப் பாய்ச்சிக் கொண்டு நின்று விடுகிறோம். அதைக் கழட்டி எரிந்து நகர்வதற்கு வயதோ, சூழ்நிலையோ தடையில்லை.


அடுத்த நாள் காலை, தாத்தா வாங்கிக் கொடுத்த தொப்பியை மாட்டிக்கொண்டு கேப்டன் போல சல்யூட் செய்து பார்த்து விளையாடிக் கொண்டிருந்தான் ரகு. ஆனால் தாத்தாவிற்கும், பத்மாவிற்குமோ தங்கள் வாழ்வை நகர்த்திச் செல்லும் உண்மை கேப்டனாகவே தெரிந்தான் ரகு.


Rate this content
Log in

Similar tamil story from Abstract