ஞாயம்தானா? – ஆறு
ஞாயம்தானா? – ஆறு
அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
சென்ற ‘ஞாயம்தானா?’ பதிவில் ஒரு அநியாயத்திற்கு எதிரான இன்னொரு அநியாயம் ஞாயம் அல்ல என்பதைப் பார்த்தோம். இந்த ஆறாவது பதிவில் மற்றொரு சம்பவம் பற்றிப் பார்ப்போம்.
ராமு மணமான புதிதில் தன் மனைவியோடு ஒரு உறவினர் வீட்டிற்கு கிளம்பினான். கல்பாக்கத்திலிருந்து பேருந்தில் தாம்பரம் வந்து அங்கிருந்து மற்றொரு பேருந்தில் குன்றத்தூர் சென்று பேருந்து நிலையத்தில் இறங்கினான்.
‘என்னங்க.. குழந்தைங்க இருக்கற வீடு.. எப்பிடி வெறும் கையோடு போவது?’ என்று இழுத்தாள் ராமுவின் மனைவி.
இருவரும் அருகில் இருந்த பழக் கடையில் சில பழங்களை வாங்கிக் கொண்டு உறவினர் வீட்டினுள் நுழைந்தனர். புதுமணத் தம்பதிகள் என்பதால் நல்ல வரவேற்பு. பழப்பையை அந்த வீட்டின் மேசை மேல் வைத்து விட்டு பேச ஆரம்பித்தார்கள்.
சில நிமிடங்களில் அந்தப் பழங்களை ஆராய்ந்த அந்த வீட்டின் தலைவர் ‘அடடே ஆப்பிள் ரொம்ப மோசமாக இருக்கிறதே.. எங்கே வாங்கினீங்க?’ என்று கேட்டார்.
‘இரண்டு தெரு தள்ளி இருக்கும் கடையில்’ என்று ராமுவின் மனைவி கடையின் இருப்பிடம் சொல்ல, உடனே. வீட்டின் தலைவர் அந்தப் பழங்களை எடுத்துக் கொண்டார். ‘வாருங்கள் அவனை கேட்டு விட்டு வருவோம்..’ என்று ராமுவையும் அழைத்துக் கொண்டார். அந்தக் கடைக்குப் புறப்பட்டார்.
‘விடுங்கள்’ என்று அந்த வீட்டின் தலைவி எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லை. ராமுவுக்கும் செல்ல விருப்பமில்லை. என்றாலும் வேறு வழி இன
்றி செல்ல வேண்டியதாயிற்று.
‘என்னப்பா.. இப்பிடிதான் மோசமான பழங்களைக் கொடுப்பதா என்று அந்தப் பழங்களை அந்தக் கடைக்காரரிடம் எடுத்துக் கொட்டினார். இருவருக்குள்ளும் தர்க்கம் தொடர்ந்தது.
ராமுவுக்கோ தர்ம சங்கடம். ‘சரி விடுங்கள்’ என்று எவ்வளவு சொல்லியும் இவர் கேட்ட பாடில்லை.
கடைக்காரர் ‘கிலோ நூறு, நூற்று முப்பது, இருநூறு என்று மூன்று வகை ஆப்பிள்களைக் காட்டினேன். அவர்கள் கிலோ நூற்று முப்பது பழங்களைக் கேட்டார்கள். அதைக் கொடுத்தேன். இன்னும் நல்ல பழம் வேண்டுமானால் கிலோ இருநூறு விலை உள்ள பழம் இருக்கு. வாங்கிக்கோங்க’ என்றார்.
ராமுவுக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அந்த உறவினர் ஒரு வழியாக திட்டிக் கொண்டே திரும்பினார்.
இந்த சம்பவம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாதது’ என்று ராமு என்னிடம் கூறி வருத்தப் பட்டார்.
இப்படி ஒரு சம்பவம் யார் வாழ்விலாவது நடந்திருக்குமா என்று தெரியவில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் அந்த உறவுக்காரர் நடந்து கொண்டது ஞாயமா? வருபவர்களெல்லாம் மிக உயர்ந்த விலை கொடுத்து வாங்கிக் கொண்டு வர முடியுமா?
அவரது செயல் ஞாயமானதுதானா என்று உங்கள் கருத்தை பதிவிடுங்களேன்!
‘ஞாயம்தானா?’ அடுத்த பதிவு ஓரிரு நாளில்!