உயில்
உயில்


கதிர் மிகவும் சோர்வாக வீட்டுக்கு வந்தான். வீடு பூட்டியிருந்தது உடனே மனைவி நிரஞ்சனாவுக்கு கால் செய்தான். நிரஞ்சனா வேலை பார்க்கும் பன்னாட்டு நிறுவனத்தின் கல்ச்சுரல்ஸ் டே வீட்டுக்கு வர லேட்டாகும் என்றவள் அவனை ஆன்லைனில் அவனுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு தூங்க சொன்னாள்.கணவனிடம் சொல்லாமல் போவது என்ன கல்ச்சுரல் ஷோ என அலுத்துக் கொண்டபடி அவனிடமிருந்த சாவியை கொண்டு கதவை திறந்து உள்ளே போனான். கதிர் குளித்துவிட்டு வந்து உணவு ஆர்டர்செய்ய மனமில்லாமல் படுத்துவிட்டான்.
கதிர் ஷிப்பிங் எக்ஸ்போர்ட் பிசினஸில் அவன் அனுப்பிய கண்டைனர் ஒன்று உரிய துறைமுகம் சேராமல் காணாமல் போய்விட்டது. அதை கண்டுபிடிக்க கொண்டு சென்ற கப்பல் நிறுவனத்திடம் புகார் செய்து இருந்தான்.கண்டனரில் இருந்த பொருளுக்கு உரிமையாளர்கள் கதிரிடம் 20 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக மிரட்டிக் கொண்டு இருந்தார்கள்.இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் எல்லா விசாரணைகளும் முடிந்த பின் தான் பொருளின் மதிப்பில் 75 சதவிகிதம் தர முடியும் என்றார்கள்.
கதிர் 20 நாள் டைம் கேட்டு வாங்கி இருந்தான், அதில் 10 நாட்கள் கடந்து விட்டன. அவனது கையிருப்பு நகை லோன் என்று அனைத்தையும் வைத்து புரட்டினாலும் ஐந்து கோடிக்கு மேல் புரட்ட முடியாது என்பதால் என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி கொண்டு இருந்தான்.ஊரில் அப்பாவிடமும் அவ்வளவு தொகை இல்லை, சொத்துக்களை விற்க வேண்டுமென்றால் தாத்தாவின் சம்மதம் வேண்டும் கண்டிப்பாக சொத்துக்களை விற்க சம்மதிக்க மாட்டார். எப்படி இந்த கடினமான சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்ன வழிதெரியாமல் மனம் கலங்கிய படி இருந்தான்.
11 மணிக்கு நிரஞ்சனாவை அவள் தோழிகள் வீட்டில் கொண்டு வந்து விட்டு போனார்கள். நிரஞ்சனா உள்ளே வந்தவுடன் கதிரிடம் சாப்பிட்டு விட்டீர்களா என கேட்டாள் கதிர் பதில் சொல்லாமல் படுக்கை அறைக்கு போனான்.சாப்பாட்டு மேசை சாப்பிட்ட அடையாளமின்றி காணப்பட்டது. நிரஞ்சனா கதிரை ஏன் சாப்பிடவில்லை ?நான் ஆர்டர் செய்கிறேன் என்று அலைபேசியை எடுத்தாள். கதிர் நிரஞ்சனாவை நோக்கி காலையில் போகும் போது நான் ஊர் சுற்றி விட்டு வருவேன் வர லேட்டாகும் என்று சொல்லித் தொலைத்தால் என்ன ? நான் வெளியிலேயே சாப்பிட்டு வந்திருப்பேனே இப்ப என்ன சாப்பாடு வேண்டி கிடக்கு தூங்குவோம் என்று குப்புற படுத்தான்.
நிரஞ்சனாவும் அழுதுகொண்டே அவன் அருகில் படுத்து தூங்கி விட்டாள். நிரஞ்சனா தூங்கிய பிறகு எழுந்து அமர்ந்த கதிர் தேவையில்லாமல் எங்கேயோ உள்ள டென்சனை நிரஞ்சனாவிடவும் காட்டியதாக நினைத்து வருத்தப்பட்டான்.நிரஞ்சனாவின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்த படி தூங்கிவிட்டான். கதிர் தூங்கிய சிறிது நேரத்தில் எழுந்த நிரஞ்சனா தன் கைகளை அவன் கன்னத்தில் வைத்திருப்பதைப் பார்த்து அவளும் அவனை இறுக்கி கட்டிக்கொண்டு தூங்க தூங்க ஆரம்பித்தாள்.
காலை ஐந்து மணி இருக்கும் போது கதிருக்கு போன் வந்தது. ஊரிலிருந்து அம்மா பேசினாள். தாத்தா மிகவும் சீரியஸாக இருப்பதாகவும், இன்றைக்குள் முடிந்துவிடும் என டாக்டர் சொல்லிவிட்டுப்போனார் என கூறி அழுதாள். தாங்கள் இருவரும் உடனே புறப்பட்டு வருவதாக கூறி போனை வைத்தான்.நிரஞ்சனா என்னவென்று கேட்டபோது விவரத்தைக் கூறினான். நிரஞ்சனா உடனே திருச்சி செல்லும் விமானத்தில் டிக்கெட் புக் செய்தால், காலை 9 மணி ஆனதும் இருவரும் தத்தம் அலுவலகத்தில் பிரச்சினை கூறி 5 நாளில் திரும்பி வருவதாக சொல்லி புறப்பட்டனர்.
விமானத்தில் அமர்ந்ததும் கதிருக்கு தாத்தாவைப் பற்றிய நினைவுகள் வரத்தொடங்கின. தாத்தா கதிரவன் 1950 களில் கல்லணை ஓரமாக காவிரி பாசனத்தில் இருந்த வளமான ஊரில் பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் எத்தனை வசதி இருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். ஊரே பசுமை புரட்சியில் செயற்கை உரங்களை பயன்படுத்த ஆரம்பித்த போதும் மண்ணின் தன்மை கெடக் கூடாது என்பதில் உறுதியாய் பாரம்பரிய விவசாயத்தை மேற்கொண்டவர். தாத்தாவிற்கு அவரது அப்பா தன் தங்கை மகளான விசாலாட்சியை மணம் முடித்து வைத்தார். தாத்தாவின் எளிமையும் பாரம்பரிய விவசாயமும் விசாலாட்சி பாட்டிக்கு பிடிக்காமல் போனது.
மாமா சக்திவேல் பிறந்தவுடன் விசாலாட்சி பாட்டிக்கு தன் பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து பயம் வந்தது, ஊரே நவீன விவசாயத்தில் இருக்கும் போது இவர் பிழைக்கத் தெரியாத மனிதராக இருக்கிறாரே என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தாள். இது நாளடைவில் பெரிதாகி மணமுறிவு வரை வந்துவிட்டது.தாத்தாவிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் மாமா சக்திவேல் பேரில் விசாலாட்சி பாட்டி எழுதி வாங்கிக்கொண்டார். பூர்விக சொத்துக்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு தாத்தா வெறும் ஆளாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்.
தனது நண்பனான ராமமூர்த்தியின் தோட்டத்தில் இருந்த சிறிய அறையில் தங்கிக்கொண்டு தனது உழைப்பை பயன்படுத்தி வாழ ஆரம்பித்தார். சிறிது நாளில் கொஞ்சம் பணம் சேர்த்து சாலையோரம் பயனற்று கிடந்த ஒரு தோப்பை குத்தகைக்கு எடுத்து அதில் தன் பணியை தொடர்ந்து செய்துவந்தார். என்னேரமும் தோப்பில் இருந்த வாய்க்காலில் பாய்ந்து வந்த ஆற்று நீரால் தாத்தாவின் உழைப்பின் பயன் கிடைக்க ஆரம்பித்தது. கொஞ்சமும் வருடங்களில் தாத்தா அந்த தோப்பை விலைக்கு வாங்கினார் அங்கேயே ஒரு அழகான ஓட்டு வீட்டை கட்டி வசிக்க ஆரம்பித்தார் . அதன் பின் சிறிது சிறிதாக சுற்றியிருந்த வயல்களையும் வாங்கி தனது இயற்கை விவசாயத்தை தொடர்ந்தார். நண்பன் ராமமூர்த்தி தனது தங்கை கல்யாணியை தாத்தாவிற்கு மணமுடித்து வைத்தார்.
தாத்தாவுக்கும் கல்யாணி பாட்டிக்கும் பிறந்தவள் தான் தனது தாய் கற்பகம். மகளுக்கு ஆறு வயது இருக்கும்போது கல்யாணி பாட்டி உடல்நிலை சரியில்லாமல் காலமானபின் மகள் கற்பகத்தை வளர்க்க அவரது நேரத்தை செலவிட்டார். கற்பகம் வளர வளர தாத்தாவின் இயற்கை விவசாயத்தால் அவரது வயலும் தோப்பும் நன்றாக செழித்தன.அம்மா கற்பகம் பதின்பருவத்தில் உள்ளூரில் மைனர் அரசியல்வாதியாக சுற்றிக் கொண்டிருந்த அப்பாவை கை பிடிக்க நினைத்தால், அப்பாவை தாத்தாவிற்கு பிடிக்காமல் போனாலும் அம்மாவின் விருப்பத்திற்காக மணமுடித்து வைத்தார், அதன்பின் நான் பிறந்தேன் அம்மா தனது தந்தையின் பெயரான கதிரவன் என்பதையே எனக்கும் வைத்தாள். அந்த சமயங்களில் தாத்தாவின் விவசாயம் பொய்த்துப் போக ஆரம்பித்தது. ஊர் செழித்து வளர ஆரம்பித்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு தண்ணீர் வரத்து குறைந்து போய் சிறிது நாளில் முற்றிலும் நின்று போனது. தாத்தாவின் தோப்பை ஒட்டிய சாலை நெடுஞ்சாலையாகவும் பஸ் நிறுத்தம் மாறியவுடன் தாத்தாவின் வயலுக்கும் தோப்புக்கும் பெரும் விலை கொடுக்க பலரும் போட்டி போட்டுக்கொண்டு தயாராக இருந்தனர்.
தாத்தா பிடிவாதமாக விளைநிலத்தை தரமாட்டேன் என கூறி போர் தண்ணீரில் இயற்கை வேளாண்மையை தொடர்ந்தார். விசாலாட்சி பாட்டி கூறியது போல அப்பாவும் தாத்தாவை பிழைக்கத் தெரியாத மனிதர் என கூற ஆரம்பித்தார்.எனக்கு ஐந்து வயது இருக்கும்போது தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது நல்ல பாம்பு ஒன்று வந்தது. அப்போது அங்கே வந்த அப்பா அதை அடிக்க போன போது, தாத்தா வேகமாக அந்த கம்பை தட்டிவிட்டு என்னை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு உள்ளே வந்துவிட்டார்.பாம்பை கொல்ல கீரிகளும் மயில்கள் உள்ளன, பாம்பை நாம் கொல்வதால் எலிகள் பெருகும் உணவு சங்கிலி உடைபடும் என்று கூறினார். அப்பா இனி இந்தப் பைத்தியக்காரன் வீட்டுக்கு நானும் என் பிள்ளையும் வர மாட்டோம் என என்னை தூக்கிக்கொண்டு வந்து விட்டார். அம்மா மட்டும் போய் தாத்தாவிற்கு சமைத்து தருவார்கள்.
விசாலாட்சி பாட்டி காலம் முழுவதும் தாத்தாவிடம் முகம் கொடுத்து பேசாமலேயே போய் சேர்ந்தார். விசாலாட்சி பாட்டியின் இறுதி காரியங்களை தாத்தா முன்னின்று செய்தார். அப்போதுதான் தாத்தா யார் என சக்திவேல் மாமாவின் குடும்பத்துக்கு தெரிய வந்தது. சக்திவேல் மாமாவுக்கு இரண்டு பிள்ளைகள் பெரியவன் நரேன் சிறியவள் நிரஞ்சனா. நிரஞ்சனாவும் நானும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்க ஆரம்பித்தோம். சக்திவேல் மாமா அவ்வப்போது தாத்தாவிடம் வந்து பேசினாலும் எங்களது குடும்பத்தை கடைசிவரை ஏற்கவே இல்லை.
தாத்தா கடைசிவரை தனது பாரம்பரிய விவசாயத்தை தொடர்ந்து செய்து வந்தார், ஆனால் காலம் அவரை வஞ்சிக் ஆரம்பித்தது. ஊரில் நீர் மூழ்கி மோட்டார் அதிகரிக்க ஆரம்பித்தது, போர் தண்ணீரும் குறைந்து போக ஆரம்பித்தது. தாத்தா மனம் தளராமல் விக்ரமாதித்தனின் வேதாளம் போல போரின் ஆழத்தை அதிகப்படுத்தி விவசாயத்தை தொடர்ந்தார். அம்மாவும் சில நேரங்களில் அப்பா உங்களுக்குத் தான் வயசாகிவிட்டது கொஞ்ச நாள் ஓய்வு எடுக்க கூடாதா என்று கேட்க ஆரம்பித்தாள். ஏர் பிடித்து விவசாயம் செய்பவன் என்றும் ஓய்வு எடுக்கக்கூடாது என சொல்லி அவருடன் பாடுபடும் வயதான தொழிலாளர்கள் மற்றும் இயற்கை விவசாயத்தை நேசிப்பவர்களும் இணைந்து நீராதாரங்களை மீட்டெடுக்க ஒரு குழுவை அமைத்து அதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்த்தாரைகள் மீட்க போராட ஆரம்பித்தார்.
கல்லூரி காலத்தில் நானும் நிரஞ்சனாவும் காதலிக்க ஆரம்பித்தோம். கல்லூரிப் படிப்பு முடிந்து மும்பையில் எனக்கு வேலை கிடைத்தவுடன் அப்பா அம்மாவிடம் சொல்லி நிரஞ்சனாவை பெண் கேட்கப் போன போது மாமாவும் அவரது மகன் நரேனும் தட்டை வீசியெறிந்து விரட்டினர். நிரஞ்சனாவும் நானும் பதிவு திருமணம் செய்து கொண்டபின் சக்திவேல் மாமா தலை நிரஞ்சனாவை தலை முழுகி விட்டார். தாத்தா கடந்த மாதம் கலெக்டர் ஆஃபீஸ் எதிர்புறம் நீர்த்தாரைகள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது எப்படியோ நெஞ்சில் அடி விழுந்து முடியாமல் கிடக்கிறார் என அம்மா இப்போதுதான் சொல்கிறார். திருமணத்திற்க்கு பிறகு இப்போது தான் ஊருக்கு போகிறோம்.
மாலை 6 மணி அளவில் ஊரை அடைந்து நேர தாத்தா வீட்டுக்குப் போனபோது அம்மா மட்டும் அங்கே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். என்னவென்று கேட்டபோது தாத்தாவை சக்திவேல் மாமாவும் நரேனும் வந்து காரில் தூக்கி சென்று விட்டார்கள் என எனக் கூறினாள். அம்மாவை காரில் ஏற்றிக்கொண்டு சக்திவேல் மாமா வீட்டுக்கு போனபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து எங்களை உள்ளே வர விடாமல் தடுத்தனர். அதற்குள் அப்பா ஊரில் உள்ள பெரிய மனிதர்களை கூட்டி வந்து பஞ்சாயத்தை ஆரம்பித்து வைத்தார்.
பஞ்சாயத்து செய்பவர்கள் ஏம்பா பெரியவர் கடைசிவரை அந்த வீட்டிலேயே வாழ்ந்து முடித்த மனிதர், பெரியவரின் வீட்டிலேயே கடைசி மூச்சை விட செய்யுங்கள் அதன்பின் உங்கள் பஞ்சாயத்தை வைத்துக் கொள்ளுங்கள் என முடிவாக கூறினார்கள். ஊரின் இயற்கை விவசாய குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுந்து பெரியவரின் சொத்துக்காக தான் இப்படி நடக்கிறது என்றால் அது நடக்காது,இயற்கை விவசாயக் குழுவை சாட்சியாக வைத்து பெரியவர் கடந்த வருடம் ஒரு உயில் எழுதி பேங்க் லாக்கரில் வைத்துள்ளார். அதை அவரது மறைவுக்குப்பின் தான் படிக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் என அவரும் அவரது குழுவைச் சேர்ந்தவர்களும் சொன்னார்கள்.
சக்திவேல் மாமாவின் வீட்டில் இருந்து தாத்தாவை அவரது வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டோம். சக்திவேல் மாமா, நரேன் மட்டும் வீட்டிற்கு உள்ளே வந்தனர். சொந்தக்காரர்கள் அனைவரும் வெளியே நின்று தாத்தா எப்போது போய் சேர்வார் என காத்திருக்க தொடங்கினர். தாத்தாவிற்கு பேச முடியாமல் போனாலும் என்ன நடக்கிறது என்பதை உணரும் சக்தி இருந்தது போல என்னையும் நிரஞ்சனாவையும் அழைத்து கையை பிடித்துக் கொண்டு அழுதார்.தாத்தாவின் கண்கள் பின்னாலே தோட்டத்து பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதால் அனைவரும் தோட்டத்தின் மரநிழலில் அவரை படுக்க வைக்கச் சொன்னார்கள்.
தாத்தாவை சந்திக்க அவரது போராட்ட குழுவினர் வந்து இருந்தார்கள், தாத்தாவிடம் ஐயா நாம் ஜெயித்து விட்டோம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நமது வாய்க்காலில் இன்று தண்ணீர் வருகிறது, அதை காண நீங்கள் வரவேண்டும் என சொன்னார்கள்.அதைக் கேட்டவுடன் தாத்தாவின் துவண்டு போயிருந்த கால்கள் புது தெம்புடன் எழுந்து நின்றது . அவரது போராட்டக்குழுவினர் இருபக்கமும் பிடித்துக்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்காலை நோக்கி நடந்தார். பாதுகாப்பாய் பிடித்திருந்த இருவரின் கைகளை உதறிவிட்டு வாய்க்கால் தண்ணீரில் பாதத்தை நனைய விட்டபடி சிறிதுநேரம் அப்படியே சாய்ந்து மண்ணை முத்தமிட்டபடி தன் கடைசி மூச்சை நிறுத்தினார்.
எப்போது போய்ச் சேருவார் என காத்திருக்க தொடங்கிய கூட்டம் உள்ளே வந்த அஞ்சலி செலுத்தத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் இருந்து இயற்கை விவசாய அணியினர் பெருந்திரளாய் வந்தபோது தாத்தாவின் மதிப்பு அப்போதுதான் ஊருக்கும் வீட்டுக்கும் தெரிய வந்தது. சக்திவேல் மாமா தாத்தாவுக்கு கொல்லி போட்டு தனது கடமையை முடித்தார்.
தாத்தா இறந்து போன மூன்றாம் நாள், பேங்கில் இருந்து உயிலை எடுத்துவந்து பஞ்சாயத்தார் முன்னிலையில் வக்கீல் படிக்க ஆரம்பித்தார். தனது சுய சம்பாத்தியத்தில் சேர்த்த இந்த சொத்தை தனது வாரிசுகளின் சொந்த நலனுக்கு கொடுக்க விரும்பவில்லை, மாறாக நிலத்தின் இன்றைய மதிப்பில் இரண்டில் ஒரு பங்கை நீர்த்தாரைகள் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு சங்கத்திற்கு கொடுத்துவிட்டு தனது வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயத்திற்காக பாடுபடும் ஒரு வாரிசுக்கு இந்த சொத்துக்களை உரிமை ஆக்குவதாக கூறியிருந்தார்.
தனது வாரிசுகள் கதிரவன், நரேந்திரன் , நிரஞ்சனா மூவரில் யார் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்கிறார்களா அவர்களுக்கு சொத்து சேரும் என தனது சொந்த புத்தியுடன் உயிலில் எழுதியிருப்பதாக இருந்தது. இதனைக்கேட்ட நரேன், சக்திவேல் மாமாவிடம் உங்க அப்பன் ஒரு லூசு அவன் பிரச்சனைக்கு போக வேண்டாம் என முன்பே கூறினேன். நீங்கள்தான் கேட்காமல் அழைத்து வைத்து வந்து அசிங்கப்படுத்தி விட்டீர்கள் என்று கோபப்பட்டு வெளியேறினான்.
எனக்கும் தாத்தாவின் மேல் முதலில் கோபம் வந்தது, எனக்கு பிசினஸில் இருக்கும் பைனான்ஸ் ப்ராப்ளத்தை எப்படி சரி செய்ய போகிறேன் என தெரியாமல், அப்படியே தூங்கிப்போனேன். கனவில் வந்த தாத்தா உனது பிரச்சனை சரியானால் நீ எனது பிரச்சனையை சரி செய்வாயா என கேட்டவுடன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். கனவு என நினைத்து மீண்டும் தூங்கி விட்டேன்.
இரண்டு நாளில் மும்பை புறப்பட்டபோது அம்மா காரியங்கள் முடிக்கும்வரை இருக்கலாமே என கேட்டாள் எனக்கும் ஆசை தான் அம்மா ஆனால் கம்பெனியில் ஒரு பெரிய பிரச்சனையில் உள்ளேன், அதை முடித்தவுடன் தான் எனக்கு அமைதி கிடைக்கும் என சொல்லிவிட்டு விமானத்தை பிடித்தேன். மறுநாள் ஆபீஸ் போனதும் ஒரு ஆச்சரியமான செய்தி காத்திருந்தது காணாமல் போன கண்டைனர் கிடைத்து சரியான துறைமுகத்திலும் போய் சேர்ந்துள்ளது இதனைக் கேட்ட போது தாத்தா கனவில் வந்து போனது ஞாபகம் வந்தது.
நிரஞ்சனாவிடம் அனைத்தையும் கூறி போது அவள் தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். தாத்தாவின் காரியம் நடக்க இருந்த முதல் நாள் நிரஞ்சனா உடன் கதிர் ஊர் போய் சேர்ந்தான். தனது கம்பெனியை விற்று மேலும் சில கடன் வாங்கி தாத்தா கேட்ட தொகையை நீர்த்தாரை ஆக்கிரமிப்பு எதிர்க்கும் அமைப்பிற்கு வழங்கி தாத்தாவின் நிலத்தில் மண்ணை வணங்கியபடி இயற்கை வேளாண்மை செய்ய கையில் மண்வெட்டியுடன் இறங்கினான் .