கோமாளியின் சிரிப்பு
கோமாளியின் சிரிப்பு


மாநகராட்சி பூங்காவில் புதிதாய் போடப்பட்டிருந்த சர்க்கஸ் கூடாரத்தை சுற்றிப் பார்த்தான் சார்லஸ். அங்கே இருந்த ஒருவர், " இப்போ இங்கே வரக்கூடாது பய்யா, போ...போ...." என்றே சொல்ல அவ்விடத்தை விட்டு அகன்றவன், சற்று தூரம் தள்ளிப்போய் அமர்ந்து கொண்டான். இப்படியே இரண்டு நாட்கள், அந்த பூங்காவையும் சர்கஸ் கூடாரத்தையும் சுற்றிச்சுற்றி வந்தான்.
மாலைக் காட்சிக்காக சர்கஸ் கலைஞர்கள் அரிதாரம் பூசிக்கொண்டிருக்க, அதை நின்று பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு நாட்களாக இவனும் சுற்றிச்சுற்றி வருவதைக் கண்ட சர்கஸ் கம்பெனி முதலாளி,
" ஏ தம்பி ! இங்க வா. நீ யாரு? ரெண்டு நாளா இங்கயே சுத்தி சுத்தி வர்ற, சர்க்கஸ் பாக்க வந்த மாதிரியும் தெரியலை, நீ யாரு? உனக்கு என்ன வேணும்? " என்றார்.
" சார், எனக்கு தஞ்சாவூர் பக்கம் கிராமம். விவசாயம் இல்லாததால, வேற வேலை தேடீட்டு இருந்தேன். இந்த ஊர்ல ஒரு செக்யூரிட்டி வேலை இருக்குன்னு தெரிஞ்சு, அதை கேட்டு வந்தேன். ஆனா, வேலை கிடைக்கலை. ஊருக்கு போயிரலாம் தான். ஆனா, வேலையில்லாம என்ன பண்றதுன்னு புரியாம, இங்க சுத்தீட்டு இருக்கேன். விவசாயம் தவிர வேறெதுவும் தெரியாது. ஊருக்கு போய் என்ன பண்ணன்னு தெரியாம இங்க சுத்தீட்டு இருக்கேன் " என்றான் சார்லஸ்.
" உனக்கு வேலை தான வேணும், இப்போதைக்கு, ஒரு கோமாளி வேஷத்துக்கு ஆள் தேவையா இருக்கு, உன்னால செய்ய முடியுமா? என்றார்.
" எனக்கு வித்தை எல்லாம் காட்டத் தெரியாதுங்களே" என்றான் சார்லஸ்.
"ஒரு வாரம் நீ வேஷம் போட்டு, சர்க்கஸ் அரங்குல சுத்தி வா. கோமாளின்னா, குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். கையில கொஞ்சம் சாக்லேட், பொம்மை வச்சிக்கோ. காட்சி இல்லாத நேரத்துல, கொஞ்சங் கொஞ்சமா வித்தைய கத்துக்கோ. சம்பளம் போட்டு தரேன். என்ன சம்மதமா?" என்ற முதலாளிக்கு நன்றி சொல்லி விட்டு, முதலாளியுடன் நடந்தான் சார்லஸ்.
தன் கஷ்டம் மறைத்து, உலகை சிரிக்க வைத்து மகிழ்ந்த சார்லஸ்ஸை, இறைவனும் மகிழ்சியோடு சிரிக்க வைத்து பார்த்தான்.