போதி மரம்
போதி மரம்


வீட்டிலிருந்த புத்தக அலமாரியை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள் வித்யா. கம்பீரமாய் முன்னறையில் வீற்றிருந்தது அந்த அலமாரி. அந்த அலமாரி சுமந்திருப்பவை எல்லாம் புத்தகங்களா ? அவை வித்யாவின் மனநிலைக்கேற்ப, விதவிதமாக பரிணாமம் எடுக்கக் கூடிய திறம் பெற்ற அமிர்த கலசங்கள்.
வித்யாவின் மனது சோர்வுற்று இருக்கையில், ஏற்கனவே நன்கு பரிச்சயமான, மனதிற்கு நெருக்கமான புத்தகங்களில் ஒன்றினை எடுத்து வாசிப்பாள். மனம் புத்துணர்வு பெறும்.
இதுவே, மகிழ்ச்சியாக இருக்கையில், இதுவரை படிக்காத புதிய புத்தகம் ஒன்றினை எடுத்து வாசிக்க, அதில் இயல்பாகவே ஒருவித இலயிப்பு ஏற்படுவதை உணர்வாள்.
துக்கமும் மனச்சோர்வும் ஆட்டிப் படைக்கையில், கையில் கிடைக்கும் புத்தகம் எதுவாயினும், அது அவளுக்கு வலி நிவாரணியாகவும், அவளது உணர்வுகளை மாற்றி, அவளை உற்சாகமாக்கும்.
ஆக மொத்தத்தில், அந்த புத்தக அலமாரி, வித்யாவுக்கு ஒரு போதி மரம்.