STORYMIRROR

Salma Amjath Khan

Inspirational

5  

Salma Amjath Khan

Inspirational

மிடுக்கா தான் இருக்கணும்

மிடுக்கா தான் இருக்கணும்

10 mins
541


"மேம் , ஆப்கி நாம் (உங்க பேர்) ப்ளீஸ்." என கையில் பெயர்கள் தாங்கிய சீட்டை வைத்து பார்த்துக் கொண்டிருந்தவன், அவன் கேட்ட கேள்விக்கு எந்த எதிர்வினையும் இல்லாமல் இருக்க, தன் எதிரே இருந்த பெண்ணை நிமிர்ந்து பார்க்க,அவளோ எங்கோ இலக்கின்றி வெறித்த வண்ணம் இருந்தாள்.


" மேடம்?" 


பதில் இல்லை


"ஹலோ !!!!" என அவள் கவனத்தை பெற மேஜையை தட்ட, அவள் அவரை பார்த்து விழித்தாள்.


அவனுக்கு சலிப்பு வந்தாலும் அவளை தலை முதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்த பின் ஹிந்தி காரனுக்கு கொஞ்சம் பரிதாபமும் வந்ததோ என்னவோ. 


" நாம் போலியே (பேர் சொல்லுங்க.) மேடம் ஜி." என்றான் மரியாதையாக.


அவளுக்கு ஹிந்தி தெரியாவிட்டாலும் அவன் கேட்பது புரியவே,


"சக்தி... சக்தி அரவிந்த்." என கணீர் குரலில் பெண் அவள் கூற, அந்த பெயரோ அவர்களை தாண்டி தன் மேல் அதிகாரியுடன் பேசிக்கொண்டே சென்ற வீரின் காதில் ஒலிக்க அவன் கால்கள் தன்னிச்சையாக நிற்க, அவளை நிமிர்ந்து பார்த்தான்.


அவளின் பாதிமுகம் மட்டுமே தெரிய, அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, " க்யா ஹீவா வீர்?" என அவன் மேல் அதிகாரியின் குரலில் தான் உணர்வு அடைந்தான்.


அவளை ஒரு பார்வை பார்த்தவன், "நத்திங் சார்." என அவளுடன் பேசியவாறு நடந்து சென்றான்.


அவ்வளவு நேரம் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தவள், பெயரை சொன்னதும் அதில் தெரிந்த நிமிர்வும் கர்வமும், அந்த பேருமே, பெயரை சரி பார்த்தவனுக்கு அவளின் மேல் மேலும் மரியாதையை பெருக்க அருகில் நின்றிருந்தவனை காட்டி,


" இன்கே ஸாத் ஜாயியே(இவரோட போங்க) மேடம் ஜி." என எழுந்து நிற்க அவரிடம் தலையைசைத்தவள், அன்ன நடையிட்டு அவன் கைகாட்டியவரின் பின் சென்றாள்.


"மேம் , பெஹட்டியே. (உட்காருங்க)" என்றவன் சக்தி அமர்ந்ததும், அவளிடம் ஏதும் வேண்டுமா என கேட்ட பின்னரே அங்கிருந்து அகன்றான்.


அவளின் பெயரை தாங்கிய கதிரையில் அமர்ந்தவள் சுற்றிலும் நோட்டம் விட்டாள்.


ஏறக்குறைய 150 பேர் இருப்பார்கள். ஆனால் எவரின் சத்தமும் வெளியில் கேட்கவில்லை. பூட்ஸ் காலுடன் ஆயுதமேந்தி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த கருப்பு உடை காரர்களின் பூட்ஸ் சத்தம் மட்டுமே அறை எங்கும் எதிரொலித்தது.


அதில் சக்தியின் மனஅழுத்தம் சிறிது தளர, சிறு முரட்சியுடன் அருகில் திரும்பி பார்க்க, எல்லோருடைய பார்வையும் முன்னாள் இருந்த அந்த கம்பீர நாற்காலியில் நிலைத்தது.


'என்னடா இது. திருமலை நாயக்கர் மஹால்ல நைட் லைட்டை போட்டுட்டு ஒரு சேர் மட்டும் நடுல போட்டு, சலங்கை சத்தம் கேட்கிற மாதிரி. இங்க ஒரு சேர போட்டு பூட்ஸ் சத்தத்தை கேட்க விடுறாங்க. அச்சோ மதுரையில் இருந்து டெல்லி டிராவல் பண்ணி வந்ததுல டயர்ட்டா வேற இருக்கு. இந்த அமைதில தூங்கிட்டா என்ன பண்றது. ஆமா திருமலை நாயக்கர் மஹால்ல ஒரு மியூசிக் வருமே அது மிஸ் ஆகுது.' என அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போதே ஒருமித்தமாய் ஓசை கேட்க, 'இதோ அதுவும் கேட்டுட்டு.' என சத்தம் வந்த திசையை பார்க்க அனைவரும் எழுந்து நின்றார்கள். அவளும் மெதுவாக எழுந்து நின்றாள்.


(கதைக்களம் டெல்லியில் இருப்பதால் எல்லா உரையாடல்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலே இருக்கும். வாசகர்களின் வசதிக்காக தமிழிலே கொடுக்கிறேன். எல்லா உரையாடல்களும் அறிவிப்புகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்.)


கருப்பு பூனை மின்னல் படையுடன் (பிளாக் கேட் கமாண்டோஸ்), இன்னும் சில பெரிய தலைகளுடனும் ( துணை குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி, இன்னும் சிலர்..) உள்ளே நுழைந்தார், இந்தியாவின் குடியரசுத் தலைவர்.


அவர் அவையின் நடுவில் நிற்க அவரை சூழ்ந்திருந்த கருப்பு பூனைகளோ அங்கும் இங்கும் சிதறி ஓடி ஆளுக்கொரு இடத்தில் தலைவர்களின் பாதுகாப்பிற்காக நின்றுவிட, குடியரசுத் தலைவரோ அனைவருக்கும் பொதுவாக பொதுவான வணக்கத்தை வைத்துவிட்டு கம்பீர நாற்காலியில் அமர்ந்தார்.


'கடவுளே எதையும் தாங்குற இதயத்தை கொடு. எக்காரணத்தைக் கொண்டும் அழ கூடாது.அதுக்கு நீ தான் பொறுப்பு. ' என கடவுளிடம் மன்றாடிய சக்தி வெளியே மட்டும் இறுக்கமான முகத்துடன் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.


நிகழ்ச்சியை ஒரு பெண்மணி ஒருவள் துவங்கி வைக்க, சக்தியோ அதிவேகமாக துடிக்கும் இதயத்துடன் தன் அடிவயிற்றில் கைகோர்த்து, பதட்டத்தில் கைவிரல்களை முறித்தவாறு அமர்ந்திருந்தாள். தன் மனதை மாற்ற நிகழ்ச்சியை கவனிக்க தொடங்கினாள்.


"இன்று நம் தேசத்து மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டி எண்ணற்ற நபர்கள் தங்கள் மகிழ்ச்சியை தள்ளி நிறுத்தி, நிம்மதியை தூர தள்ளி, அமைதி இல்லாத, எப்பொழுதும் பதட்டத்திலேயே நமக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


நான் இங்கு சுதந்திரமாக சுற்றுவதற்காக, நம் நாட்டின் எல்லைகளிலே எல்லை கோடுகளாக மாறிவிட்ட ராணுவ அதிகாரிகளுக்கும், இரவு பகல் பாராது நமக்கு நேரும் தீயவைகளிடமிருந்து நம்மை பாதுகாக்க நம்முடனே நம்மை சுற்றியே வலம் வருகிற காவல் அதிகாரிகளும், சாமானியர்களாய் நம்முடன் கலந்து உரிய நேரத்தில் வீரனாய் மாறி நம்மை காக்கும் சில நிஜவாழ்வு ஹீரோவாக மாறும் சாமானிய மக்களுக்காகவும், அவர்களின் வீர தீர செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்திற்காகவும், அவர்களுக்கு நன்றி கூறி, பெருமைப்படுத்தி, கௌரவிப்பதற்காக இந்நாட்டு மக்களின் சார்பாக நம் குடியரசுத் தலைவர் அந்த தியாக செம்மல்களுக்கு நம் நாட்டின் உயர்ந்த மற்றும் வீர தீர விருதான அசோகச் சக்கரம், கீர்த்தி சக்கரம், சௌரிய சக்கரம் விருது அளித்து பெருமைப்படுத்த உள்ளது.


அதில் முதலாவதாக வீர தீர செயல்களுக்காகவும், தன்னலமற்ற தியாகத்திற்காகவும், அசோகச் சக்கரம் வழங்கப்பட உள்ளது.


என சொன்னதுமே இதயம் எகிரி குதிக்காத குறை தான். ஒரு சில நிமிடம் கண்களை மூடி தன்னை நிதான படுத்தினாள். 'மிலிட்டரிகாரன் பொண்டாட்டியாக்கும் மிடுக்கா இருக்கணும்.' என மனதிற்குள்ளே ஜபிக்க ஆரம்பித்தாள். அதற்குள் அரவிந்த் பெயர் காதில் ஒலிக்க கண்களை திறந்தாள்.


"கார்னல் அரவிந்த் அவர்களின் சார்பாக அவரது மனைவி ஸ்ரீமதி சக்தி அரவிந்த் அவர்களை சிவப்பு கம்பளத்தில் மரியாதையாக அழைத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என அறிவிக்கும் பெண் கூறிவிட்டு நகர, அந்த இடத்தை ஒரு ஆண் ஆக்கிரமித்தான்.


தன் முன்னாள் ஒரு வீரன் சல்யூட் அடித்த வண்ணம் நிற்க, சக்தி தன் ஒட்டுமொத்த தைரியத்தையும் திரட்டி எழுந்து நின்றாள்.


அவளை சிவப்பு கம்பளத்தை நோக்கி வழி நடத்தினார், அவர். 


எவ்வளவுதான் தைரியத்தை திரட்டினாலும் சிவப்பு கம்பளத்தை அடையும் முன் அவளது எண்ணங்களோ பழையதை நினைவு மீட்டி புதுப்பித்தன.


சக்தி அந்த கோவில் குளத்தின் படித்துறையில் அமர்ந்திருக்க கையில் பொரியுடன் அவளை இடித்த வண்ணம் வந்தான்,அரவிந்த்.


திரும்பி அவனை முறைத்தவள் தள்ளி அமர்ந்தாள். அரவிந்த் மீண்டும் அவளை இடித்த வண்ணம் தள்ளி அமர்ந்தான்.


"என்ன மேடம், ரொம்ப விறப்பா இருக்கீங்க?"


"மிலிட்டரிகாரன் பொண்டாட்டி இவ்வளவு கூட விரைப்பா இல்லைனா எப்படி?" என உதடு சுழித்து திரும்பிக் கொண்டாள்.


"அப்படியா.. அப்போ சரி." என அவன் கையை எடுத்து அவள் தோளில் வைக்க தள்ளி விட்டாள்.


"என்னடா கொடுமையா இருக்கு.மிலிட்டரிகாரன் பொண்டாட்டி விறப்பாய் இருக்கணும்னு தெரிஞ்ச உனக்கு மிலிட்டரி காரனுக்கு பொண்டாட்டி மேல கை போடவும் உரிமை இருக்குன்னு தெரியாம போச்சே." என மீண்டும் அவளின் தோளில் கை போட மீண்டும் தள்ளி விட்டாள்.


"என்ன பண்றீங்க? இது கோவில்."


"அப்போ வீட்டுக்கு போலாமா?" என்றான், அவள் காதலி கிசுகிசுப்பாக.


"எதுக்கு வீட்டுக்கு? நீங்க கிளம்புங்க உங்க பார்டருக்கு. " 


"கிளம்பதான் போறேன். நாளைக்கு காலைல 10 மணிக்கு." 


அவனை திரும்பிப் பார்த்தவள் கண்கள் குளம் கட்டின.


"ஓய்... இப்ப எதுக்கு இந்த அழுகை?" என துடைத்து விட்டான்.


"ரெண்டு மாசம் கழிச்சு தான் போவேன்னு சொன்னீங்க. ஒன்ற மாசத்துலயே கெளம்புறேன்னு சொல்றீங்க."


"அதுக்கா இப்படி அழுகுற. ஒரு அவசர ஆப்ரேஷன் நான் போய் தான் ஆகணும்."


"போய் தான் ஆகணுமா?" என ஏக்கமாக கேட்டவள் கண்கள் மீண்டும் கலங்கியது


"போய் தான் ஆகணும். இதானே என் வேலையே. தெரிஞ்சு தானே கட்டிக்கிட்ட. இப்போ இப்படி கண் கலங்கினா எப்படி?"


"அப்ப எதுவும் தெரியல. பெருமையா இருந்தது. இப்போ சுயநலமா இருக்க தோணுது."


"சுயநலம்னா?"


"நீங்க இங்கேயே இருந்துட்டா நல்லா இருக்கும்ல்ல" 


அவளை முறைத்தவன் நீண்ட பெருமூச்சு விட்டான்.


"உனக்கு குயிலி தெரியுமா சக்தி?"


"யாரது?" என்றால் அவனை முறைத்தவாறு.


சன்னமாக சிரித்தான், அவன்.


" வேலுநாச்சியார் தெரியுமா?"


"ம்... ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.சிவகங்கை ராணி தானே?"


"ஆமா குயிலி, வேலுநாச்சியாருக்கு கீழ அவங்களோட பெண்களோட படைக்கு தலைமை பொறுப்புல இருந்தவங்க."


"ஓ..."


"என்ன ஓ .... கேளு. பிரிட்டிஷ்காரங்க சிவகங்கை கை பற்றினதுக்கு அப்புறம் அதை மீட்க போராடின படை தான் அது. விஜயதசமி அன்னைக்கு கோட்டைல உள்ள அம்மன் ராஜராஜேஸ்வரிக்கு பூஜை நடந்தது. அதுல கலந்துக்க ஊர் பெண்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தாங்க.ஏன்னா அப்போ பெண்கள் எல்லாம் போருக்கு வர மாட்டாங்க. ஒன்னு ரெண்டு பெண்கள் தான் இருப்பாங்க. வேலுநாச்சியார் மாதிரி. அதனாலதான் பெண்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்தாங்க. 


இந்த குயிலியோட படை அந்த மக்களோட கலந்து அவங்களோட ஆடையில ஆயுதத்தை ஒழிச்சு வச்சுருக்காங்க. உள்ள நுழைஞ்சதும் குயிலுக்கு தெரிந்து போச்சு இது வேலைக்கு ஆகாதுன்னு."


"ஏன்?"


"சொல்றேன். ஏன்னா பிரிட்டிஷ்காரனும் ஆற்காடு நவாப்பும் அவ்ளோ பலமா காவல் வச்சிருந்தாங்க. அவங்க கூட போராடுறது அவ்வளவு ஈசி இல்லைன்னு புரிஞ்சது. ஒரு யோசனை பண்ணாங்க.


அவங்க ஆயுதக் கிடங்கு எங்க இருக்குன்னு நோட்டம் விட்டு கண்டுபிடிச்சாங்க. அங்க நிறைய ஆயுதம், வெடிகுண்டு, புல்லட் இருந்தது. 


நேரா பூஜை நடக்கிற இடத்துக்கு போய் தன்னோட சேலையில நெருப்பு வச்சுக்கிட்டு அப்படியே ஓடிப் போய் ஆயுத கிடங்குல இருக்கிற வெடிகுண்டு மேல போய் விழுந்தாங்க. மொத்த ஆயுதமும் அழிஞ்சிருச்சு.


கைல இருக்கிற சொற்ப ஆயுதத்தால அவங்களால போராட முடியாது. தொடர்ந்து கேட்ட குண்டுவெடிப்பில வெளிய இருந்த வேலுநாச்சியார் படை உள்ள வந்து அவங்கள அழிச்சு சிவகங்கை மீட்டு எடுத்தாங்க.


இதுவரைக்கும் பிரிட்டிஷ் கைக்கு போய் திரும்ப வந்த ஒரே இடம் சிவகங்கை தான். இந்த வரலாற்றுக்கு காரணம் குயிலி.


குயில் தான் உலகின் முதல் தற்கொலை போராளி. சிவகங்கை அரசு வேலுநாச்சியாருக்கு மணிமண்டபம் கட்டும்போது அங்கேயே வீர தமிழச்சின்னு குயிலுக்கு நினைவு சின்னம் கட்டி இருக்கு.


அதுமட்டுமல்ல புலிய முறமால அடிச்ச விரட்டின பெண், அப்பாவையும் கணவனையும் போர்ல பறிகொடுத்தும் பச்சிளம் பாலகன கையில ஆயுதத்தை கொடுத்து போருக்கு போய் ஜெயிச்சுட்டுவான்னு சொன்ன பெண், என் பையனுக்கு முதுகுல போர்ல காயம் பட்டது உண்மை அவன் பால் குடிச்ச மார்பை கூட வெட்டி போடுவேன் சொன்ன பெண்ணும் பிறந்த நாடு இது.


அவங்கள மாதிரி இருக்க முயற்சி பண்ணு. உங்க வீட்ல உன்ன என்ன சொல்லி வளதாங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா எங்க வீட்ல வரலாறையும் சுதந்திர போராட்டத்தையும் தான் சொல்லி சொல்லி வளர்த்தாங்க. என்னால உன்னை மாதிரி சுயநலமா இருக்க முடியாது.


இந்த நாட்டோட வரலாறுல நான் இடம் பிடிக்கனும்னு நினைக்கல. நாளைக்கு சாகுறப்போ என் நாட்டுக்காக நான் ஏதோ பண்ணுனேங்குற தன்னிறைவு எனக்கு வரணும். நீ இந்த நாட்டோட பிரஜையா இருக்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்குன்னு இந்த பூமி என்ன பெருமையா தாங்கணுங்குற ஆசைதான் எனக்கு. 


எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதே அளவு இந்த நாடும் முக்கியம். இரண்டு பேரையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது.


உன்ன மாதிரியே எல்லா பொண்ணுங்களும் நெனச்சிருந்தா இந்நேரம்&

nbsp;யாரும் இங்க இருந்திருக்க மாட்டாங்க. இந்த நாடு சுடுகாடா மாறி இருக்கும்.


இந்த நாட்டுல மிலிட்டரி காரன் தியாகம் பண்றான்னா இது அவனோட தனிப்பட்ட தியாகம் இல்ல. அவங்களோட அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள்ன்னு எல்லாரும் தியாகம் பண்ணி தான் ஆகணும். அவங்க எல்லாரோட தியாகமும் சேர்ந்து தான் ஒரு மிலிட்டரிக்காரனுடைய தியாகம்.


நீயும் கொஞ்சம் தியாகம் பண்ணி தான் ஆகணும். புரிஞ்சுக்கோ."


"சாரி நான் ஏதோ எமோஷனல்ல பேசிட்டேன். இனி இப்படியே பேசமாட்டேன்." என்றவள் அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.


அவள் தன்னை புரிந்து கொண்டால் என்பதை புரிந்து கொண்டவன் அவளை சகஜமாக அவள் காதில் "நாம இன்னும் கோவில்ல தான் இருக்கோம். நான் கை போட்டால் தப்பு. நீ தோள்ல சாய்ஞ்சா தப்பில்லையா?" என்று கேட்க வெடுக்கென எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.


"யாரும் பாக்கல. நீ இப்போ ஓகே தானே. நான் மார்னிங் கிளம்பனும். நீ சிரிச்ச மாதிரி அனுப்புனா தான் நானும் அங்கே திருப்தியா இருக்க முடியும்.கிளம்பலாம் தானே நான். பிரச்சனை இல்லையே உனக்கு."


"கிளம்பலாம் . அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க."


"என்ன ப்ராமிஸ்?"


"முதல்ல பண்ணுங்க."


" கண்டிப்பா பண்றேன். அதுக்கு முன்னாடி நீ ஒரு ப்ராமிஸ் பண்ணு."


"என்ன?"


"எப்பவும் நான் இல்லாத தனிமையை நீ வெறுக்க கூடாது. நான் இல்லாத ஏக்கம் உன் முகத்தில் தெரியக்கூடாது. மிலிட்டரி காரன் பொண்டாட்டி விரப்பாய் இருக்கிறது முக்கியமில்லை. மிலிட்டரிக்காரன் பொண்டாட்டி மிடுக்கா இருக்கணும். கெத்தா இருக்கணும். என்னை நினைக்கும்போது பெருமை தான் இருக்கணுமே தவிர வருத்தம் இருக்கக் கூடாது.


எப்பவும் கலங்கக்கூடாது. எப்பவும் ஸ்ட்ராங்கா இருக்கணும். நான் எப்பவும் உன் கூட இருக்க முடியாது. அதனால எந்த ஒரு சூழ்நிலையும் தனியா தைரியமா பேஸ் பண்ணனும். ப்ராமிஸ் பண்ணு."


"ப்ராமிஸ்."


'மிலிட்டரிகாரன் பொண்டாட்டி மிடுக்க இருக்கணும். ஸ்ட்ராங்கா இரு சத்தி. ஸ்ட்ராங்கா இரு சக்தி.' அதே வசனத்தை மீண்டும் மீண்டும் உரு போட்டபடி கம்பளத்தின் நடுவே வந்து நின்றாள்.


அவள் முன்னால் வந்த கமாண்டோ ஒரு சல்யூட்டுடன் நகர்ந்து விட அரவிந்தின் தைரியத்தை துணைக் கொண்டு தனியாக நின்றாள். ஆனால் மனதில் அதே ஜெபம் மீண்டும் மீண்டும் நடந்தது.


"கர்னல் அரவிந்த், 2012 ஆம் ஆண்டு மிலிட்டரி ஆபீஸராக பதவியேற்று திறமையாக இருந்ததால் ஜூன் மாதம் கர்னலாக பதவி உயர்வு பெற்றார்.


அவர் கர்னலாகிய பிறகு இரண்டு ஆப்ரேஷங்களை வெற்றிகரமாக முடித்து இருந்தார். 


16 டிசம்பர் 2022 அன்று ஜம்முவில் 16 பேர் கொண்ட குடும்பத்தை 5 தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக மாற்று வைத்திருந்த பொழுது அவர்களை மீட்க தன்னலம் இன்றி இருக்கும் ஆறு ஆபிஸர்களுடன் கர்னல் அரவிந்த் குழு கிளம்பியது.


பயங்கரமான மோதலுக்குப் பிறகு கர்னல் அரவிந்த் குழு 3 தீவிரவாதிகளை கொன்று முன்னேறியது. நான்காவது தீவிரவாதியை நோக்கி நம் வீரரான கர்னல் அரவிந்த் முன்னேறிய போது தீவிரவாதியின் ஒரு குண்டு அவரின் கையை துளைத்துக் கொண்டு சென்றது."


சக்திக்கு ஹிந்தி மொழி அவ்வளவாக தெரியாத போதிலும் உணர்வுகளுடன் ஒருவர் நடந்த கதைகளை சொல்லும்போது அவர் சொல்லிய அழுத்தத்திலே அவர் சொல்லுவது புரிந்து போக தன் கணவர் போது நடந்தவைகள் மீண்டும் அவள் காதுகளில் ஒலிக்க, உடைந்து விடுவோமா என கையை அழுத்தி தன் வயிற்றுக்கு கீழே அழுத்தமாக பற்றி இருக்க இதயம் அதிவேகமாக துடித்தது.


"இருந்தும் கர்னல் அரவிந்த் தன்னுடைய வலிகளை காயங்களை பொருட்படுத்தாது முன்னேறி சென்று அந்த தீவிரவாதிகளை அழித்து 15 பிணை கைதிகளை மீட்டு எடுத்தார்.


பிணை கைதிகளை மீட்டெடுத்த போது தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தை காணாமல் போய் இருப்பதையும் இன்னொரு தீவிரவாதி அகப்படாமல் இருப்பதும்.


உடனே பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மூன்று ஆபீசர்களுடன் அனுப்பி வைத்த வரும் வைத்தவன் அவளுடன் ஆபீசர் ஒருவரை மட்டும் வைத்துக்கொண்டு அந்த ஐந்தாவது தீவிரவாதியை தேட துணிந்தார்.


அவர்கள் இருந்த வீட்டை தேடி பார்க்க, ஏணிகள் அற்ற அந்த மொட்டை மாடியின் மண் ஓட்டின் சத்தம் கேட்டது. 


உற்று பார்த்த போது தான் தெரிந்தது அங்கு இருந்த ஏணியை அந்த தீவிரவாதி மேலே தூக்கி விட்டிருந்தான். மேலும் அவன் கையில் ஒரு குழந்தையும் இருக்க, குழந்தையை காப்பதற்காக வேண்டி ஆபிஸர் வீர் மேலே ஏற தீவிரவாதியின் தாக்குதலில் ஆபிஸர் வீர் கீழே விழுந்து காலில் பலத்த அடிபட அவரால் நகர முடியாமல் போனது.


கர்னல் அரவிந்த் தொய்ந்து விடாமல் குண்டு பாய்ந்த கையினால் அவரால் ஏற முடியாவிட்டாலும் முயன்று ஏறி அந்த தீவிரவாதியுடன் ஆயுதம் இருந்தும் குழந்தையின் நலன் கருதி ஆயுதம் இல்லாமல் சண்டை இட்டார்.


அவரின் தன்னலமில்லாத வீரமிக்க இந்த செயலில் மிரண்டு போன தீவிரவாதி தன்னை காத்துக் கொள்வதற்காக கர்னல் அரவிந்தின் இதயத்திற்கு சற்று மேலே இன்னொரு குண்டை பாய்ச்சி விட்டு, குழந்தையையும் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிக்க நினைத்தான்.


மீண்டும் ஒரு குண்டு இதயத்தின் அருகே பாய்ந்தும் ஓடில் உருண்ட கர்ணல் அரவிந்த் குழந்தையை எண்ணி, தன் உயிரையும் பொருட்படுத்தாது அவர் கையில் இருந்த துப்பாக்கியால் குழந்தையை தூக்கி வீசி இருந்த தீவிரவாதியை சுட்டார்.


மேலும் அந்த குழந்தையை அவரால் முடியாவிட்டாலும் தன் தைரியத்தையும் உடலையும் ஒரு நிலைப்படுத்தி அந்த குழந்தையை கையில் எடுக்க, அவரால் நிற்க முடியவில்லை. இருந்தும் முயன்று ஓரத்தில் கிடந்த ஏணியை கீழே இறங்குமாறு ஏதுவாக இறக்கி வைத்து குழந்தையை தன்னோடு அணைத்த வண்ணம் கீழே இறங்க முயல தடுமாறி ஓடிலிருந்து குழந்தையுடன் கீழே தரைத்தளத்தில் விழுந்தார்.


விழுந்தும் குழந்தையின் தலையில் அடிபடாதவாறு தலையை தன் வலது கையால் அழுத்தமாக தாங்கிப் பிடித்து, மற்றொரு கையால் குழந்தைக்கு அடிபடாத வகையில் அணைத்தும் கீழே விழுந்தார். 


ஆபீஸர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவரது விலைமதிப்பில்லாத இன்னுயிர் பூமிக்கு நன்றி கூறி இவ்வுலகிற்கு விடை பெற்றுவிட்டது. 


அவரின் இந்த தியாக வீர செயலால் அவரது இன்னுயிர் பிரிந்தாலும் அதை பெருமைப்படுத்துவதற்காக இந்த வீர தீர விருதுகளில் உயரிய விருதான அசோகச் சக்கர விருதை அவரின் மனைவி ஸ்ரீமதி சக்தி அரவிந்தர்க்கு குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார். என கூற


குடியரசுத் தலைவர் எழுந்து வந்து சக்தியின் கையில் விருதினை வழங்கினார்.


உடைந்து விழும் நிலையில் இருந்த சக்தியை அதை வாங்கும் பொழுது தன் கணவனின் தியாகம், தன் கணவனின் ஆசை, தன் கணவனின் பெருமை என கர்வத்துடன் அதை வாங்க வயிற்றுக்குள் உருளும் உணர்வு ஏற்பட வயிற்றை ஆறுதலாக தடவி அவர்களின் குழந்தைக்கும் ஆறுதல் அளித்தாள்.


அவளின் செயலை பார்த்து கொண்டிருந்த அந்த பெண் குடியரசு தலைவர், " எத்தனையாவது மாதம்?" என்றாள், பரிவாக.


"எட்டு மாசம்" என்றாள்.


"இந்த நாட்டை காப்பாத்த இன்னொரு அரவிந்த் விட்டுட்டு தான் போய்ருக்காரு. " 


" ஆமாம். அதான் அவருடைய ஆசையும். இந்த குழந்தை ஆணோ பெண்ணோ இந்த நாட்டுக்கு சேவை செய்யனும் னு சத்தியம் வாங்கிட்டு தான் போய்ருக்காங்க."


" இந்த நாடு அவர இழந்தது பெரிய இழப்பு." என குடியரசு தலைவரும் உண்மையான வருத்தத்துடன் தெரிவித்தார்.


ஒரு கர்வ புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.


அந்த விருதை தொடும் போது தனக்குள் ஏற்பட்ட உணர்வினை அவளால் சொல்லில் வடிக்க இயலாது.


நிகழ்ச்சி முடிந்து அரைமணி நேரமாக அங்கே இருந்த திடலின் அருகே இருந்த படியில் அமர்ந்திருந்தவள் அந்த விருதினை தான் முப்பது நிமிடங்களாக தொட்டு சிலாகித்தாள்.


இந்த பெருமைக்காக, இந்த கர்வத்திற்காக, இந்த தியாகத்திற்காக தானே இன்னுயிரை துச்சாகமாக மதித்து சென்றான்.


அவனின் தியாகங்கள் அவனின் ஆசை நிறைவேறியதை எண்ணியே மனதை தேற்றிக்கொண்டு இருந்தாள்.


"சிஸ்டர்..." என வீரின் குரலில் எழுந்து நின்றாள்.


"ஹலோ. என் பெயர் வீர். கர்னல் அரவிந்த் டீம்."


"தெரியும். அவர் சொல்லி இருக்காரு. எப்படி இருக்கீங்க. உங்களுக்கு அந்த ஆப்ரேஷன்ல அடிபட்டதுன்னு சொன்னாங்க."


"ஆமா. இப்போ பரவாயில்ல. அது..." என தயங்கியவன் தன் கையில் இருந்த பையிலிருந்து ஒரு பாக்ஸை எடுத்து அவளிடம் நீட்டினான்.


"சாரி , எனக்கு இரண்டு நாள் முன்னாடி தான் டிஸ்சார்ஜ் ஆனேன். இல்லாட்டி இதை முன்னாடியே கொடுத்துருப்பேன்.


இது உங்க பேபி ஷவருக்காக தர்ற அரவிந்த் ரெடி பண்ணுனது உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு."


அத்தனை ஆச்சரியம் தன் கணவனின் கடைசி பரிசு என நினைத்து கண்கள் கலங்க அதை வாங்கினாள்.


பொறுமையின்றி அதை பிரித்து பார்க்க, அது என்னவென்று பார்க்க முடியாத அளவிற்கு கண்கள் கலங்கி நிற்க, இமையை மூடி திறந்து கண்ணீருக்கு விடுதலை அழித்தாள்.


இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறிவிட, அந்தப் பெட்டியின் உள்ளே உல்லனால் செய்யப்பட்ட குட்டி ஸ்வட்டருடன் ஒரு கடிதமும் இருந்தது.


அதை பிரித்து பார்க்க,


"ஹோய் மிலிட்டரிகாரன் பொண்டாட்டி இன்னும் விரப்பா தான் இருக்கியா? என்னால பேபி ஷார்க்கு வர முடியுமான்னு தெரியல. அன்னைக்கி உனக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்‌டெலிவரி அப்போ உன் பக்கத்துல இருப்பேன்னு‌.இப்போ லீவு போட்டா டெலிவரி அப்போ லீவ் கிடைக்கிறது கஷ்டம்.


அதனால தான் இந்த கிப்ட்ட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட குடுத்து கொடுக்கிறேன். என்னோட குட்டி மிலிட்டரிக்காக . 


அம்மா தான் ஸ்வெட்டர் பின்னணுமா என்ன ? இந்த அப்பா மிலிட்டரி கூட, குட்டி மிலிட்டரிக்காக என் கையாலேயே செஞ்சது. இத பேபிக்கு பத்திரப்படுத்தி வச்சுக்கோ. உனக்கு கிப்ட் இல்லன்னு கோவிச்சுக்காத. உனக்கு ஆல்ரெடி கெத்துடனே. என்னன்னு யோசிக்கிறியா? உன் வயித்துல இருக்குற என்னோட குட்டி தான் அந்த கிஃப்ட்.'


என இருக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த அழுகையும் வெளிவர அழ தொடங்கினாள்.


அவளை அழவிட்டவன் அங்கிருந்து நகராமல் நிற்க, இன்னும் என்ன என அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


"உங்ககிட்ட ஒன்னு காட்டணும். ரொம்ப எமோசனல் ஆகாதீங்க. பேபிக்கு நல்லது இல்ல." என தன் அலைபேசியை எடுத்து , ஒரு காணொளியை போட விட்டவன், அவளின் கையில் திணித்தான்.


 அதில் அரவிந்தன் தெரிய ,சக்தியின் கண்கள் விரிந்தன. அவன் தலையில் காயத்துடனும் நெஞ்சில் புல்லட்டுடன் படுத்திருக்க, அவளுக்கு புரிந்து போனது அது அரவிந்தன் கடைசி நொடிகள் என.


அதை பார்க்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் பார்க்க முடிவெடுத்தாள். ஏற்கனவே வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரோடு மேலும் கண்ணீர் பெருகியோட அரவிந்தின் குரல் காணொளியில் கேட்டது.


"ஹோய் மிலிட்டரி காரன் பொண்டாட்டி வ எப்பவும் போல வெறப்பா இருக்கியா. சாரி என்னால உனக்கு பண்ணுன சத்தியத்தை காப்பாத்த முடியல. அதுக்காக நீ எனக்கு பண்ணுன சத்தியத்தை மறந்துடாத."


"மாட்டேன்." என கண்களில் நீருடன் தலையை ஆட்டினாள்,சக்தி. 


அவளின் கைகள் தானாக அவள் வயிற்றில் பதிந்தன. 


"என்ன நெனச்ச வருத்தப்படக்கூடாது. கண் கலங்க கூடாது. மிலிட்டரிகாரன் பொண்டாட்டி எப்பவும்....” என அவன் நிறுத்த மூச்சு வாங்கியது அவனுக்கு.


ஆனால் தொடர்ந்து பேசினான்.


" எப்பவும் என் பொண்டாட்டி மிடுக்கா தான்இருக்கணும் என்னோட இறப்புல வருத்தப்பட்டதுக்கே எதுவும் இல்ல நீயும் நம்ம குழந்தையும் பெருமதான் படணும். இனி அழுக மாட்ட தானே." என கேட்க கொண்டான்.


அவள் தண்ணீரை துடைத்து கொண்டாள். கண்களை துடைத்தவள் காணொளியை காண, அரவிந்தன் முகம் நிர்மலமாய் இருந்தது. "அரவிந்த்!!!" என்ற வீரின் கத்தலுடன் காணொளி முடிவிட்டது.


வீரின் அனுமதியுடன் அந்த காணொளியை தன் அலைபேசிக்கு மாற்றியவள், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு மிடுக்குடன் எழுந்து நடந்தாள்.



Rate this content
Log in

Similar tamil story from Inspirational