பரிணாம விளையாட்டு...!
பரிணாம விளையாட்டு...!
நான் அருண். இன்ஃபோசிஸில் டீம் லீடரா இருக்கேன். இன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். ப்ளீஸ் என் கதைய முழுதும் படிங்க. போரடிக்குதுன்னு பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால், உங்கள் ஆர்வத்தைத் தூண்டற மாதிரி காமெடியெல்லாம் எனக்கு எழுத வராது. இப்ப விஷயத்துக்கு வருவோம்.
மனதில் கோபத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தால், கோபத்திற்குக் காரணமான நபரின் மீது, அவர் நமக்கு மிகவும் நெருக்கமானவராகவே இருந்தாலும் ஒரு எரிச்சலும் ஆங்காரமும் திடீரென்று எங்கிருந்தோ முளைத்து பூதாகரமாகி வெடித்துவிடும் நிலைக்கு நம்மைத் தள்ளி விடுகிறது! அந்த நபர் மீது மீண்டும் மீண்டும் எரிச்சல் உண்டாக்கும் காரணங்களையே மனம் அசைபோட்டு நம்மைப் புதை குழியில் தள்ளி விடுகிறது. சில சமயம் கோபத்தின் உச்சத்தில் தன் மீது ஒரு கழிவிரக்கமும் ஏற்படும். தான்தான் உலகத்திலேயே ஒரு பாவப்பட்ட ஜென்மம் மாதிரியும், தன்னை இந்த உலகத்தில் யாருமே புரிந்து கொள்வதில்லை என்றும் தோன்றும்!
கோபத்தைத் தூண்டுவதற்குப் பெரிய காரணங்களெல்லாம் தேவையில்லை! சரியான நேத்தில் சாதாரணச் சொல் கூட பல சமயங்களில் கோபத்தைத் தூண்டிவிடும். கோபம் வரும்போது இதயம் படபடத்து, கண்கள் சிவந்து, மதியிழந்து, உடம்பு சூடாகி ஒரு மிருகம் போல இருப்போம். இதுபோல் தான் அன்று திவ்யாவிடம் நடந்து கொண்டேன்.
திவ்யா என் மனைவி. நான் கோபத்தில் இருக்கும் போது 'அவள் அழகானவள்' என்று சொல்லக்கூட எனக்கு மனம் வரவில்லை. கோபத்தின் தன்மை அப்படி! அன்று மாலை நானும் திவ்யாவும் சோஃபாவில்அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கிருந்தோ வந்து சனி என் நாக்கில் உட்கார்ந்து கொண்டது எனக்குத் தெரியவில்லை! டீவியில் காய்கறி மார்க்கெட்டில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, நரைத்த தலையுடன் கடைக்காரரிடம் பேரம் பேசி காய்கறி வாங்கும் பெரியவரைக் காட்டி,
"அவர் ஜாடையில் உன் அப்பா போல் இருக்கிறார் பார்" என்றேன்.
நான் கேலியாகவோ கிண்டலாகவோ சொல்லவில்லை. சாதாரணமாகத்தான் சொன்னேன். ஆனால், அந்தச் சொல் திவ்யாவின் நியூரான்களை எங்குத் தொட்டதோ தெரியவில்லை. விதி விளையாடிவிட்டது!
"என் அப்பா ஒண்ணும் சாதாரண ஆளில்லை. சப் கலெக்டரா இருந்து ரிடையர் ஆனவர்"
அதன்பிறகாவது நான் ஒழுங்கா இருந்திருக்கலாம். என் போறாத காலம்! என்ன செய்ய?
"உங்க அப்பா என்ன ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணியா சப் கலெக்டர் ஆனாரு? தாசில்தாரா இருந்து புரமோஷன்ல தான ஆனாரு!"
அதோடு நிறுத்தியிருக்கலாம் தான்! ஆனால் என்நாக்கு நீண்டுவிட்டது. "ஏன் சப்கலெக்டரா இருந்து ரிடையர் ஆனா மார்க்கெட்ல போய்க் காய்கறி வாங்கக் கூடாதுன்னு எதாவது சட்டமா?"
"உங்க அப்பாவும் ஒண்ணும் கடைக்குப் போறதில்லை. நான் தான் தினமும் மாரக்கெட் போறேன்!"
"வீட்ல சும்மாதான இருக்க. மார்க்கெட்டுக்குப் போயிட்டு வந்தா என்ன கொறஞ்சா போயிடுவே?"
என்ற எனது ஆண் அகங்காரப் பேச்சில் திவ்யா நிலைகுலைந்துபோனாள். அதைப்பார்த்த எனக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது.
"இந்தக் குடும்பத்துக்கு எவ்வளவு செஞ்சாலும் நன்றிங்கறது கொஞ்சம் கூட இல்லை"
என்ற திவ்யாவின் கண்களில் மேட்டூர் டேம் திறந்து கொண்டது. திரும்பி உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.
"இப்ப எதுக்கு ஒன்னோட அழு மூஞ்சியால என்ன டார்ச்சர் பண்றே?" மீண்டும் குரூரம்!
"ஆமாங்க,அழு மூஞ்சி, மக்கு எல்லாமே நாங்கதான். உங்க வீட்டு மனுஷாள் எல்லாம் புத்திசாலி. இல்லைன்னா கல்யாணத்தப்ப உங்கம்மா படுத்தின பாட்டுல எங்க வீட்டாளுங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்திருந்தா கல்யாணமே நின்னிருக்குமில்ல!"
இந்த இடத்தில் என் குரூரம் தலைவிரித்தாடியது.
"அப்படி நடந்திருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காதில்ல!"
இப்பொழுது திவ்யாவின் விசும்பல் அதிகமாகி,
"பிடிக்கலைன்னா அத்து விட்ற வேண்டியதுதானே! என்னோட ஆசைகள் எல்லாத்தையும் அடக்கிக்கிட்டு, புருஷனுக்குன்னு பார்த்துப்பார்த்து எல்லாம் செஞ்சேன்ல. எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்!"
முகம் சிவக்க, உதடுகள் துடிக்க கோபத்திலும் அழுகையிலும் அவளிடமிருந்து வந்த ஆங்கார வார்தைகள் என் நரம்புச் செல்களில் மேலும் அட்ரீனலினை ஓட விட, நானும் உஷ்ணமாகி,
"சே! வேல முடிச்சு வீட்டுக்கு வந்தா இங்கயும் நிம்மதியில்லைன்னா மனுசன் என்ன செய்வான்!" என்று சொன்னதுமட்டுமல்லாமல்,
"சீக்கிரம் டைவோர்ஸூக்கு ஏற்பாடு பண்ண வேண்டியதுதான்!"
என்றும் கத்திவிட்டு, டீவி ரிமோட்டை எடுத்து தரையில் போட்டு உடைத்து விட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு, கதவை டமாரென்று சாத்திவிட்டுத் தெருவில் இறங்கி நடந்தேன். கோபத்திற்கு ஒரு குரூர புத்தி உண்டு. அது எதிராளி மனதை மீண்டும் மீண்டும் காயப்படுத்தி இரசிக்கும். எதிராளிமீது கோபப் படுவதற்கான காரணங்களைத் தேடி ஆராயும். தன் மீது சுயபச்சாதாபத்தை அப்பிக் கொள்ளும். தான் செய்வதே சரி என்று ஈகோவுடன் சேர்ந்து சாதிக்கும். தன்னுடைய ஈகோ தாக்கப்படுவதை தன்னுடய சுயமே தாக்கப்படுவதாக தவறாய் மனதிற்குச் செய்தியனுப்பும்.
இதெற்கெல்லாம் காரணம் limbic system எனப்படும் emotional brain தான். இந்த எமோஷனல் மூளை பரிணாம வளர்ச்சியில் மிகப் புராதணமானது. அதனால் அதன் தாக்கம் மிக அதிகம். மனிதனைத்தவிர அத்தனை மிருகங்களும் இந்த எமோஷனல் மூளையை வைத்துக் கொண்டுதான் வாழ்க்கையை நடத்துகின்றன. பரிணாம வளர்ச்சியின் பிற்காலங்களில் மனிதனுக்கு மட்டும் neo cortex என்னும் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கும் மூளை தோன்றியது. இந்தச் சிந்திக்கும் மூளையின் வயது உலக வரலாற்றில் ரொம்பக் குறைவு. அதனால், இது ஸ்லோவாகத்தான் செயல்படும்.
தீடீர் ஆபத்துக்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுவது இந்த எமோஷனல் மூளைதான். Fight or flight response என்று சொல்வார்களே,'போராடு அல்லது ஓடு என்று. அந்த ரெஸ்பான்ஸிற்குக் காரணம் இந்த எமோஷனல் மூளைதான். ஒரு புலி வாந்தால் nano second களில் எமோஷனல் மூளை வேலை செப்து நம்மைக் காப்பாற்றும். அந்த நேரத்தில் நாம் தப்பிக்கும் strategy பற்றி நமக்குள்ளே மீட்டிங் போட்டுப் பேச மாட்டோம். ஆபத்து விலகியவுடன் எமோஷனல் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அடங்கும். அப்பொழுது சிந்திக்கும் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும்.
இப்போது என்னுடைய எமோஷனல் மூளை அடங்க ஆரம்பித்த படியால் எனது சிந்திக்கும் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கிறது.
இப்பொழுதான் யோசித்துப் பார்க்கிறேன். கல்யாணமாவுடனே, திவ்யா அவள் வாழ்ந்த வீட்டை விட்டு விட்டு என்னை மட்டுமே நம்பி எங்கள் வீட்டுக்கு வந்த நாள் முதல் என் பெற்றோரை மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறாள்.
காலையில் ஐந்தரை மணிக்கே எழுந்து குளித்துவிட்டு, சுப்ரபாதம் இசைக்க மணக்க மணக்கக் காபியுடன் தான் என்னை எழுப்புவாள். பல நாட்களில் வேலைமுடிந்து வந்ததும், நான் கேட்காமலேயே என் காலைப்பிடித்து விடுவாள். "உனக்குக் கைவலிக்குமே"என்றால், "வீட்டில் சும்மாதானே இருக்கிறேன்! உங்க காலைப் பிடிச்சு விட்றதுல ஒண்ணும் கொறைஞ்சிட மாட்டேன்!" என்பாள்.
பல நாட்கள் எனக்குப் பிடித்த உணவை நான் மூக்கு முட்டச் சாப்பிடும் வரை வைத்துவிட்டு அவள் பட்டினி கிடந்திருக்கிறாள்! ஓ மை காட்! இதெல்லாம் பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னால் ஏன் எனக்குத் தோன்ற வில்லை? திவ்யா! என் செல்லமே! உன்னை எவ்வாறெல்லாம் காயப்படுத்திவிட்டேன். அய்யோ என்னை மன்னித்துவிடு கண்ணம்மா! மானசீசமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன்.
தெருவில் பலர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள். காலிங் பெல்லைக்கூட அழுத்த மறந்து, கதவைப் பட பட வெனத் தட்டினேன். கதவைத் திறந்த திவ்யா என்னைப்பார்த்துச் சிரித்தாள். அவளுக்கும் emotional brain னின் வீரியம் குறைந்து neo cortex வேலை செய்திருக்க வேண்டும்!