Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை - பாகம் 8

இதயத்தில் ஓர் இசை - பாகம் 8

4 mins
348



வினிதா ரிஸப்ஷன் வந்து, நைட் டூட்டி ரிசப்ஷனிஸ்ட்களுக்கு வேண்டிய இன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கொடுத்து விட்டு, மேனேஜரிடம் பர்மிஷன் கேட்டு ஒரு வாட்ச்மேனை மஞ்சுவின் வீட்டு அட்ரஸ் கொடுத்து அனுப்பி வைத்தாள். பின் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து, அடையார் வழியாகச் சென்று, சரவணபவனில் இரண்டு தோசை பார்சல்கள் வாங்கிக் கொண்டு, மஞ்சுவின் பங்களாவை அடையும் போது, அந்த வாட்ச்மேன் ஏற்கெனவே அங்கு காத்திருந்தார். கேட்டைத் திறந்து, வாட்ச்மேனுக்கு அவருடைய கியூபிக்கிளை காட்டி விட்டு, ஒரு தோசை பார்சலையும் கொடுத்து சாப்பிடச் சொல்லி விட்டு, வீட்டின் கதவைத் திறந்தாள். டைசன் ஓடி வந்து இவள் மீது தாவியது. மஞ்சு கூறியபடி, டைசனுக்கு இரவு உணவை வைத்து விட்டு, பாத்ரூம் சென்று ஃபிரஷ்ஷாக ஒரு குளியல் போட்டாள். குளித்து முடித்து, உடம்பின் ஈரம் துடைத்து, உடைமாற்றிய பின்னர் நன்றாகப் பசிக்க ஆரம்பித்தது. டைனிங் டேபிள் வந்து வாங்கிவந்த தோசை பார்சலைப் பிரித்து சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பாலையும் குடித்தபின் பசி அடங்கியது. எல்லா கதவுகளும் ஜன்னல்களும் சரியாக பூட்டப்பட்டு இருக்கிறதா என்று சரிபார்த்தபின் Danielle Steel நாவல் ஒன்றை கையில் எடுத்து பெட்டில் படுத்துக் கொண்டு விட்ட இடத்தில் இருந்து படிக்க ஆரம்பித்தாள். ஒரு அரை மணி நேரம் படித்தாலே அவளுக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால் இன்று ஏனோ அவளுக்கு தூக்கம் வரவில்லை. இரவு விளக்கை அணைத்து விட்டு தலையணையில் தலைவைத்து நன்றாக படுத்துக் கொண்டாள். 


அவளது மனம் முழுமையும் அருண் வியாபித்து இருந்தான். அருணை பற்றி நினைக்கும் போது அவள் மனம் அவளை அறியாமலேயே மகிழ்ச்சியில் நிறைந்தது. அவள் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை உருவானது. அவன் இதுவரை தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் கேட்கவில்லை என்பது லேசான நெருடலாக இருந்தாலும் அவனுடைய காதலில் உண்மை இருப்பதை இவள் நன்கு உணர்ந்தாள். தன்னுடைய கடந்த காலம் இது வரை அவனுக்கு தெரியாது. அதைப்பற்றி தெரிந்த பின்னும் அவனுடைய காதல் தொடருமா என்பது ஒரு கேள்விக்குறியாக அவளுடைய மனதை அரித்தாலும், அருண் அதைப் பொருட்படுத்த மாட்டான் என்று அவள் உறுதியாக நம்பினாள். அவனுடைய ஸ்பரிசம் தனக்குள் உருவாக்கிய கிளர்ச்சியை அவள் மனம் மீண்டும் மீண்டும் நாடியது. அந்த அன்பும் அந்த மகிழ்வும் தன்னை விட்டு எப்பொழுதும் நீங்காது இருக்க வேண்டும் என்று ஒரு பயம் கலந்த ஏக்கம் அவள் மனதில் பரவியது. காதலைப் பொறுத்தவரை ஒரு சின்ன அதிருப்தி கூட பெரிதாக விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புண்டு என்பதால் அவளுடைய மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அருணுக்கு ஃபோன் செய்தால் என்ன என்று தோன்றியது. அப்போது தான் இருவரும் தங்களுக்குள் செல்ஃபோன் எண்களைப் பரிமாறிக் கொள்ளவில்லை என்பது அவளுக்கு உறைத்தது. இருந்தாலும் ஹோட்டலுக்கு கால் செய்து அவனுடன் பேசலாம் என நினைத்தாள். ஆனால், இன்று அவன் நன்றாக உறங்கினால் தான் நாளை நன்றாக விளையாட முடியும் என்பதால் அவனை எழுப்ப வேண்டாம் என்று தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டாள். திடீரென ஒலித்த செல்ஃபோன் சத்தம் அவள் சிந்தனையைக் கலைத்தது. அருணோ? என்று ஆவலுடன்

பார்த்தாள். இல்லை அவளுடைய அம்மா சியாமளா!


"எங்க இருக்க? ஏன் ரெண்டு நாளா ஃபோன் பண்ணல?"


"மஞ்சு வீட்ல. அவ உங்கிட்ட சொல்லலியா?"


"நேத்து மும்பை போறதா சொன்னாள். ஆனா, நீ வரப் போறதா சொல்லலை"


"வாட்ச்மேனும் சர்வென்ட்ஸூம் லீவுல இருக்காங்களாம். அதான் எனக்கு இங்க டூட்டி" 


"உன்னோட குடிசைல இருக்கிறதுக்குப் பதிலா, அவ வீட்ல தங்கறதுக்கு உனக்கு என்ன கஷ்டம்? ஏன் இப்படி சலிச்சுக்கறே?" அம்மாவின் இந்தப் பேச்சைக் கேட்டதும், வினிதாவிற்கு சுள்ளென்று கோபம் வந்தது.


"எனக்கு என் வீட்டில் இருப்பதே போதும். உன்னுடைய ரெண்டாவது பொண்ணு வீட்ட காவல் காக்கறதுதான் என் வேலையா?"


"சரி சரி, ஏன் கோவிச்சுக்கிறே? நீ அந்த கிராமத்த விட்டு விட்டு இங்க வந்து வசதியா இருக்கனும்னு ஒரு அம்மாவின் மனசு நினைக்காதா?"


அம்மாவின் இந்த பதிலால் அவளுடைய கோபம் சற்று தணிந்தது.


"சரி சரி, அதை விடு. நீ இப்ப என்ன கதை எழுதறே? அதைச் சொல்லு" பேச்சை மாற்றுவதற்கு தன் அம்மாவிடம் அவர்கள் எழுதும் கதை பற்றி கேட்டால் போதும் என்பது வினிதாவிற்கு நன்கு தெரியும். அம்மா உடனே குஷியாகிவிட்டாள் என்பது அவள் குரலில் இருந்து தெரிந்தது.


"இப்ப எழுதறது ஒரு காதல் கதை. அதுவும் உன்னைப்போல ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ விரும்பும் பெண்ணின் மனதில் தோன்றும் ஒரு அழகான காதல் கதை"


இதைக்கேட்டதும் வினிதாவிற்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. 


"ம்ம்... சொல்லு... சொல்லு.. பேர் என்ன வச்சிருக்கே?" என்றாள் ஆர்வத்துடன்.


"இரண்டாவது காதல்... தலைப்பு நல்லாருக்கா?"


"சூப்பரா இருக்கு. கதையோட தீம் சொல்லேன்"


"உன்ன மாதிரியே முதல் வாழ்க்கையை இழந்த ஒரு அழகான இளம்பெண்ணின் காதல் கதை"


"ஓ... அதான் தலைப்பு இரண்டாவது காதல்ன்னு வச்சிருக்கியா" அம்மா கதையில் தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற ஏக்கம் தெரிந்தது.


 "ஆமாம். கதையில் வரும் நாயகி ஒரு கிரிக்கெட் வீரன் மேல் காதல் கொள்கிறாள்"


'உண்மையிலேயே அம்மா அவள் எழுதும் கதை பற்றிச் சொல்கிறாளா அல்லது இன்று நடந்த விஷயங்களை யார் மூலமாகவோ கேள்விப்பட்டு என்னை டெஸ்ட் பண்ணுகிறாளா?' வினிதா யோசிக்க ஆரம்பித்தாள். 'கண்டிப்பாக அம்மாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இன்று காலையில் தான் முதன்முதலில் அருணைப் பார்த்தேன். இன்று மாலை தான் அவனுடன் குழந்தைகள் காப்பகம் சென்றேன். மேலும், அருண் என்னைக் காதலிப்பதை நான் சொன்னால்தான் அம்மாவுக்குத் தெரியும்' என்று எண்ணி தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள். ஆனால், அம்மாவிடம் சொல்லி அவளுடைய அறிவுரை கேட்கலாமா? என்றும் எண்ணினாள். அவளுடைய அம்மா சைக்காலஜியில் பி.ஹெச்.டி பெற்றவர். அனுபவம் மிக்கவர். அதுமட்டுமின்றி இவளைப் பெற்ற தாய். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று உளமார எண்ணுபவர். அவரிடம் அறிவுரை கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது? ஆனால், தன்னுடைய கடந்த காலத்தை அருணிடம் கூறியபின்னும் அருண் தன்னை உண்மையாகக் காதலிப்பான் என்பதை உறுதி செய்த பின்னரே இவள் அம்மாவிடம் கூறுவது என்று முடிவு செய்து விட்டாள். தேவையில்லாமல் அவளுடைய மனதில் ஏன் ஒரு நம்பிக்கையை வளர்ப்பானேன்? அதனால் நாளைக்கு உறுதி செய்த பின் சொல்லிக் கொள்ளலாம்.


"ஏய் வினிதா, லைன்ல இருக்கியா? தூங்கிட்டயா?" அம்மாவின் குரல் கேட்டு சிந்தனையில் இருந்து விடுபட்டாள். 


"கேட்டுக் கிட்டிருக்கேன். மேல சொல்லு"


"அந்த இரண்டாவது காதலால் அவள் வாழ்க்கையே மனரீதியாக மாறப் போகுது!"


"நீ கதை எழுதுறயா அல்லது என்னோட வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்ற உன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையாவது எழுதறியா?"


"கதையை முழுவதும் படித்தபின் தான் புரிந்து கொள்ள முடியும்"


"அம்மா, நீ ஒரு சைக்காலஜிஸ்ட். உன் எழுத்துக்களுக்கு வாசகர்கள் ரொம்ப அதிகம். கதையில் உள்ள கேரக்டர்களுக்கு வரும் பிரச்சினைகளை உளவியல் அடிப்படையில் சரி செய்ய உன்னுடைய கதைகளில் நிறைய அறிவுரைகள் ஆலோசனைகள் சொல்வாய். கதைகள் ஒவ்வொன்றிலும் ஒரு நல்ல மெஸேஜ் சொல்வாய். உன் கதைகள் ஒவ்வொன்றும் வாசகர்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடம். அதனால், ஏதாவது உன் சொந்தக் கதையை எழுதி வாசகர்களை ஏமாற்றாதே!"


"கதையை முழுவதும் படித்தபின் தான் புரிந்து கொள்ள முடியும் என்று சொன்னேனே!"


"சரிம்மா, எனக்குத் தூக்கம் வருது. நாளைக்குப் பேசறேன். குட் நைட்" என்று செல் ஃபோனை ஆஃப் செய்து விட்டு சிந்தனை வசப்பட்டாள். 


அம்மா சொல்வது போல் என்னுடைய இந்த இரண்டாவது காதலால் எனது வாழ்க்கையும் மாறி விடும் தான். நான் அந்த கிராமத்தில் இனிமேல் இருக்க முடியுயாது. இதுதான் அந்த மாற்றமா? மனரீதியாக என்று சொன்னாளே? என் மனதில் என்ன புதுசாக ஒரு மாற்றம் இனிமேல் வந்து விடப் போகிறது? என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென மண்டையில் உறைத்தது. ஒரே நாளில் காதல் என்னும் ஒரு அற்புதமான மாற்றம் என் மனதில் ஏற்படவில்லையா? அந்தக் காதலால் எனது மனதிலும் மாற்றம் ஏற்படாது என்று என்ன நிச்சயம்? அவ்வாறெனில் இந்தக் காதலால் என் மனதில் என்ன மாதிரியான உளவியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன? பல்வேறு சிந்தனைச் சுழல்களின் நடுவே உறக்கம் வினிதாவைத் தழுவியது.

                -தொடரும்






Rate this content
Log in

Similar tamil story from Romance