இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 6)
இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 6)


இதயத்தில் ஒரு இசை...!
பாகம் 6
வினிதாவின் தோழி அவ்வாறு சொன்னதும் அவளின் இதயம் ஒரு நிமிடம் நின்று பிறகே துடிக்க ஆரம்பித்தது. அவளின் நியூரான்கள் அனைத்தும் செயல் இழந்ததுபோல் தோன்றியது. அவள் இதயம் படபடத்தது. ஒரு லேசான மயக்கத்திற்கு ஆட் பட்டாள். இந்தச் செய்தியை அவள் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஒரு காதல் துளிர்விடும் போதே கருகிவிட்டது. இதுவரை அவள் தீரனைத் தவிர வேறு எந்த ஆணையும் மனதில் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், திடீரென்று அவள் மனதில் எப்படி ஒரு காதல் முளைத்தது? அதையும் ஒரு சில நிமிடங்கள் கூட அனுபவிக்க முடியாமல் ஏன் இப்படி ஒரு ஏமாற்றம்? ஒரு குழந்தையிடம் அது ஆசைப்படும் பொம்மையை காட்டி, பிறகு வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அதை அனுபவித்து விளையாடாமல் தடுப்பது போல ஒரு மிகப்பெரிய ஏமாற்றம்! காதல் என்பது இப்படித்தானோ? நாம் எதிர்பாராத சமயங்களில் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று தோன்றி விடுமோ? அதேபோல் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று பறிக்கப்பட்டு விடுமோ? மனது ஏன் இவ்வாறு வலிக்கிறது? எதிர்பார்த்த ஒன்று கைநழுவிப் போனால் இப்படித்தான் வலிக்குமோ? அவளால் இப்போது நிற்கக்கூட முடியவில்லை. அருகில் இருந்த ஒரு நாற்காலியில் தன் தலையில் கை வைத்தபடியே உட்கார்ந்தாள். அவள் மனதில் திடீரென்று ஒரு வெறுமை வந்து உட்கார்ந்து கொண்டது.
"ஏய் வினிதா, ஆர் யூ ஓகே? காலைல ஒழுங்கா சாப்டியா? இந்தா, கொஞ்சம் தண்ணி குடி"
அருகிலிருந்த தோழி வாட்டர் பாட்டிலை நீட்ட, அதை வாங்கி ரெண்டு மிடறு குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
"ஒன்னும் இல்லை. லேசா ஒரு தலைவலி. அவ்வளவுதான். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்"
"அப்ப ஒரு அரை மணி நேரம் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். நீ போய் ஸ்டாஃப் ரூம்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா", என்று அவள் தோழி சொல்ல, அவளுக்கு ஒரு தேங்க்யூவை உதிர்த்துவிட்டு ஸ்டாஃப் ரூம் நோக்கி நடந்தாள். ரூமிற்கு சென்று பெட்டில் படுத்த ஐந்தாவது நிமிடம் தன்னுள் ஒரு நிதானத்தை உணர்ந்தாள். என்ன ஒரு முட்டாள்தனம் இது என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். ஏன் என் மனம் இப்படி அலை பாய்கிறது? நான் என்ன டீன் ஏஜ் கேர்ளா? ஒரு ஆணைப் பார்த்த அரை மணி நேரத்திற்குள் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். அவனுக்கு திருமணம் ஆகியிருக்கும் என்று என்னால் ஏன் நினைக்க முடியவில்லை. அவன் எப்படிப்பட்டவன் என்றும் எனக்குத் தெரியாது. அவனுக்கு என்மீது காதல் இருக்கிறதா இல்லையா என்றும் எனக்கு தெரியாது. இவ்வளவு நாட்கள் யார் மீதும் வராத காதல் திடீரென இப்போது மட்டும் எப்படி? சில கேள்விகளுக்கு எப்போதுமே விடை கிடையாது. உணர்வுகளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. அறிவு தடுத்து நிறுத்தினாலும், சில சமயம் மனம் தறிகெட்டு ஓடும். ஓடும் பாதை தவறு என்று தெரிந்தாலும் ஓடும். மனதின் ஆற்றல் அப்படி. உணர்வுகளும் அறிவும் மனதின் உள்ளே தானே அடங்கியிருக்கிறது. உணர்வுகளின் தாக்கம் குறைந்த பின் தான் அறிவு வேலை செய்யும். அறிவு வேலை செய்யும் போது தான் மனம் அமைதியுறும்.
சரி! அப்படியே அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றே வைத்துக் கொள்வோம். இவளுடைய வாழ்க்கை முறை வேறு. அருணுடைய வாழ்க்கை முறை வேறு. இவள் எளிமையான வாழ்க்கையை விரும்புபவள். ஆனால், அருணோ பல நாடுகளை சுற்றும் ஆடம்பர வாழ்க்கையை வாழ்பவன். எப்படி இவர்கள் இருவருக்கும் ஒத்துவரும்? ஒரு மாதிரி தெளிவுற்றவளாய், ரெஸ்டாரன்ட்டிலிருந்து ஒரு தயிர் சாதத்தை வரவழைத்து சாப்பிட்டுவிட்டு, முகத்தைக் கழுவி, ஃபிரஷ்ஷாகி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். வேலையின் மும்முரத்தில் நேரம் நழுவிச் செல்வது மறந்துவிட்டாள்.
"மன்னிக்கவும், மீண்டும் உங்கள் வேலையில் குறுக்கிடுகிறேன்" குரல் கேட்டுத் திரும்பினாள். அருண் தான். முகத்தில் அதே வசீகரமான புன்னகை. அந்தப் புன்னகை இவளை ஒரு வினாடி சலனப் படுத்தினாலும், அது மற்றொரு பெண்ணுக்கு சொந்தமான புன்னகை என்று தன்னை சுதாரித்துக் கொண்டாள்.
"சாரி சார், வேலை மும்முரத்தில் மறந்துவிட்டேன். இதோ ஒரு நிமிடத்தில் கிளம்பி விடுகிறேன்"
"நோ ப்ராப்ளம், டேக் யுவர் ஓன் டைம். ஐ வில் வெயிட்" மறுபடியும் அதே அழகான புன்னகை. இவனுடைய இந்த புன்னகையை பார்த்துத்தான் இவன் மனைவி பூஜா மயங்கி இருப்பாளோ? சே, எனக்கு எதற்கு தேவையில்லாத எண்ணங்கள்? அவசரமாக ஒப்பனை அறைக்குச் சென்று தன்னை மிதமாக அலங்கரித்துக் கொண்டு கிளம்பினாள்.
டிரைவர் காரின் கதவைத் திறந்து விட, இருவரும் உள்ளே அமர்ந்தார்கள். கார் வடபழனியில் இருக்கும் சாரதா குழந்தைகள் காப்பகம் நோக்கி மாலை நேர சென்னை டிராபிக்கில் ஊர்ந்தது.
"மிஸ் வினிதா, உங்கள் வீடு எங்கே இருக்கிறது?"
சொன்னாள்.
"ஏன் அவ்வளவு தூரம் தள்ளி? போய்வருவது மிகவும் சிரமமாக இருக்குமே? இங்கே சிட்டி குள்ளேயே நீங்கள் வீடு எதுவும் பார்க்கவில்லையா?"
"எனக்கு அந்த எளிமையான வாழ்க்கை பிடிச்சிருக்கு சார். அதை விட்டு வர மனமில்லை. அதான் சார்"
"மிஸ் வினிதா ஒரு சின்ன ரிக்வெஸ்ட். ப்ளீஸ் என்னை சார் சார் என்று கூப்பிடாதீர்கள். ஜஸ்ட் அருண் போதும்"
"அப்படி என்றால் நீங்களும் என்னை மிஸ் வினிதா என்று அழைக்காமல் வினிதா என்றே கூப்பிடுங்கள்"
"ஓகே அக்செப்டட்" புன்னகைத்தான். மாலை நேரத்தில் இவ்வளவு நெருக்கத்தில் அவன் புன்னகையின் தாக்கம் இவளை நிலை குலையத்தான் செய்தது. இன்னொரு பெண்ணின் கணவன் மீது ஆசைப்படுவது நியாயமல்ல என்று அவள் மனது அடிக்கடி அவளுக்கு நினைவூட்டியது.
"உங்களை எங்கேயோ பார்த்தது போலவே இருக்கிறது. ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை"
"இங்கு தான் ஒரு அரை நாள் முன்னாடி ஹோட்டலில் பார்த்திருப்பீர்கள்"
"ஐயோ பயங்கரமாக நகைச்சுவையுடன் பேசுகிறீர்களே" கிண்டலடித்தான்.
அவனைப் பார்த்து போலியாக ஒரு முறை முறைத்தாள்.
"மாலை நேரத்தில் ஒரு அழகான தேவதையுடன் சென்னையின் தெருக்களில் பயணிப்பது சொர்க்கம்" கவித்துவமான வரிகளில் அவன் சொல்ல இவள் சிறிது வெட்கப்பட்டாள்.
"கிரிக்கெட் பிளேயர்கள் நிறைய பொய் சொல்வார்கள் போல" இவளும் நகைத்தாள்.
"சிரிக்கும்போது நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்"
"பதிலுக்கு நானும் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா"
"தேவதை பேசாது என நினைத்தேன். இந்த தேவதை மிக அழகாகவும் பேசுகிறது"
"நாளைக்கு எனக்கு குளிர் ஜுரம் வரும் என நினைக்கிறேன்"
"கண்டிப்பாக வராது. ஐஸ் வைத்தால் தான் வரும். ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன். அதனால் கண்டிப்பாக வராது"
மெல்லப் புன்னகைத்தவள்,"உங்களுக்கு சொந்தமான சாரதா குழந்தைகள் காப்பகத்தை உங்கள் மனைவி பூஜா கவனித்துக் கொள்கிறார்களா?" என்றாள்.
அதைக்கேட்டதும் அவன் முகத்தில் சிறிது மாற்றம் தென்பட்டது. புன்னகை மறைந்தது. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். அதன் பிறகு அவன் வடபழனியில் இருக்கும் அந்தக் காப்பகத்தில் காரை விட்டு இறங்கும் வரை எதுவுமே பேசவில்லை.
இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.
"ஒரு நிமிடம் மிஸ்டர் அருண். குழந்தைகளுக்கு அந்த பேக்கரியில் பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்"
"இருங்கள், உங்களுடன் நானும் வருகிறேன்", என்ற அருண், அவளுடன் சேர்ந்து நடந்தான்.
"மிஸ் வினிதா, நான் திடீரென மௌனம் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்"
"உங்கள் பர்சனல் விஷயங்களைப் பற்றி கேட்டதற்கு நான்தான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சாரி" என்றாள்.
"இதற்கு சாரி சொல்லத் தேவையில்லை. இது எல்லோரும் எல்லோரிடமும் கேட்க கூடிய ஒரு சாதாரண கேள்விதான். ஆனால், பதில் சொல்லும்போது சிறிது பிரைவசி தேவைப்பட்டது. அதனால் தான், உங்களுக்கு உடனடியாக என்னால் பதில் கூற முடியவில்லை"
"நோ ப்ராப்ளம் மிஸ்டர் அருண். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது" இருவரும் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு பில் பே பண்ணிவிட்டு வெளியே வந்தார்கள்.
சென்னையின் மாலை நேரக் காற்று இதமாக உடம்பைத் தழுவியது. மின் விளக்குகளின் வெளிச்சமும், வாகனங்களின் வெளிச்சமும் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டு நகரத்தை பிரகாசமாக்கின. வாகனங்கள் நெரிசல்களில் பல திசைகளிலும் விர்ரிக்கொண்டு பறந்தன. காரை அடைவதற்கு பத்தடி தூரம் இருக்கும்போது அருண் அந்த முக்கியமான விஷயத்தைச் சொன்னான்.
"மிஸ் வினிதா, உங்களிடம் சொல்வதற்கு என்ன, பூஜாவிற்கும், எனக்கும் விவாகரத்து ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறது"
-தொடரும்