Arivazhagan Subbarayan

Romance

4.4  

Arivazhagan Subbarayan

Romance

மறுமணம்...!

மறுமணம்...!

5 mins
1.7K   மழையின் ஈரம் காற்றில் தவழ்ந்து முகத்தைத் தொட்டது. பெய்த மழையின் அடையாளமாக, ஆங்காங்கே தேங்கியிருந்த தண்ணீரில் ஷூக்கள் நனையாமல் வளைந்து, தாண்டி OMR இல் உள்ள அந்த கஃபே காஃபிடேயை நெருங்கினான் விக்ரம். சாலையின் இருபக்கமும் சிக்னலில் நின்று, ஊர்ந்து பின் வேகம் பெற்று விரையும் சிறிதும் பெரிதுமான வண்ண வண்ணக் கார்கள்! கார்களின் இடைவெளிகளில் திடீரெனெப் புகுந்து சட்டென அதிரவைத்து விரையும் பைக்குகள்! சென்னையின் மாலை நேர வேகமும், உற்சாகமும் கண்முன்னே விரிய, தினசரிப் பழக்கத்தால் அவற்றில் கவனமின்றி, கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். 


   ஜன்னலோர இருக்கையில் பூஜா தெரிந்தாள். இவனைப்பார்த்துக் கையசைத்தாள். பூஜா இருபத்தேழு வயது அழகுச்சிலை. ஊதா நிறச் சுடிதாரில் மின்னலடித்தாள். இவன் கம்பெனிக்கு பூஜா வந்து ஆறு மாதம்தான் ஆகிறது. அந்த ஆறு மாதமும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் அவளைக் காதலிக்கிறான்! இன்று கண்டிப்பாக பூஜாவிடம் சொல்லிவிட வேண்டியதுதான். அவளை நோக்கிச் சென்று எதிர் இருக்கையில் அமர்ந்தான்.


   "என்ன விக்ரம்? ஏதோ பேசனும்னு என்னை வரச் சொல்லிட்டு நீ லேட்டா வர்றே!"

  "சாரி பூஜா, நம்ம சாய்ராம் நடுவுல பிடிச்சிக்கிட்டான்"

  "ஹேய் என்ன இட்ஸ் ஓகே. இதுக்கெல்லாம் எதுக்கு சாரி சொல்றே!"

  "பூஜா வந்து நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"

  "அதுக்குத்தானே வரச்சொன்னே! சொல்லுப்பா"

  "இல்ல, அத எப்படிச் சொல்றதுன்னு தெரியல, அதான்!"

  "ஏய் நாமெல்லாம் என்ன டீன்ஏஜ் பசங்களா? உனக்கும் எனக்கும் வயசு இருபத்தேழு ஆகுது. என்ன இப்படித் தடுமாறுறே! என்னை லவ் பண்றேதானே! அதச் சொல்லத்தானே தயங்கறே!"


   இதுதான் பூஜா! அவளிடம் பிடித்ததே அவளுடைய தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும், துணிச்சலும், அவளுடைய வெளிப்படையான பேச்சும் தான்.

  "அதான் பூஜா! உனக்குப் பிடிக்கவில்லையென்றால் நாம் நண்பர்களாகவே இருப்போம்."


  "உன்னை எனக்குப் பிடிக்கும் விக்ரம். உண்மையில் இந்தக் கேள்வியை எப்போது நீ கேட்பாய் என்று காத்திருந்தேன்!"

  பழம் நழுவிப் பாலில் விழுந்து மீண்டும் நழுவித் தேனில் விழுந்த சுவையை உடனே இதயத்தில் உணர்ந்தான் விக்ரம்! அவன் இதயம் கன்னாபின்னாவென்று துடித்து அட்ரீனலினை உடலின் ஒவ்வொரு செல்லிலும் பாய்ச்ச ஒரு சந்தோஷ வெப்பத்தை உணர்ந்தான்.


   "உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே உன்னுடைய இந்தத் துணிச்சல் தான் பூஜா! உன்னை நான் முதன் முதல்ல பார்த்த போதே நீ என்னுடைய இதயத்துல பாதியைத் திருடிக்கிட்டே! அப்புறம் போகப்போக உன்னுடைய தைரியம், வெளிப்படையான பேச்சு இதெல்லாம் உன்மேலுள்ள மதிப்பையும் காதலையும் அதிகப்படுத்திடுச்சி. நீ என்கூட இருந்தால் என் வாழ்க்கை நல்லா இருக்கும் பூஜா"

  "என்னுடைய கடந்த காலம் உனக்குத் தெரியுமா விக்ரம்? என்னைப்பற்றி முழுவதுமாய் நீ தெரிந்து கொள்ள வேண்டும்."


  "சொல்லு பூஜா"

  "விக்ரம், நான் ஒரு டைவர்ஸி"

  விக்ரம், பூஜாவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

   "என்ன விக்ரம்? உன் காதல் கொஞ்சம் குறையற மாதிரித் தெரியுதா? என்னைப்பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, என்னை லவ் பண்ணுவதா வேண்டாமா? என்று முடிவெடு. உனக்கு என்மேல் விருப்பமில்லையென்றாலும் உன்னை நான் குறை சொல்ல மாட்டேன். ஒவ்வொருவர் இயல்பும் வெவ்வேறாக இருக்குமல்லவா? இனி நீதான் முடிவு சொல்ல வேண்டும்."


  "என்னைப் பற்றி நீ அறிந்து கொண்டது இவ்வளவுதானா பூஜா. உன்மேல் உள்ள காதல் எந்தக் காரணத்தாலும் குறையாது. நீ டைவர்ஸியாக இருப்தற்கு

ஏதாவதொரு அழுத்தமான காரணம் நிச்சயமாக இருக்கும். ஏனென்று நான் கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை பூஜா. உன் கடந்தகால வாழ்க்கை எதுவாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீதான் எனக்கு வாழ்க்கைத் துணையாய் வேண்டும் பூஜா"


  "இல்லை விகரம், என் கடந்த கால வாழ்க்கையை நீ கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்!"

  அதை அவள் சொல்லாமலே இருந்திருக்கலாம்.

  "சரி உன் இஷ்டம் கேட்கிறேன். சொல்!"

  "விவேக்கும் நானும், எங்கள் இருவர் வீட்டாரின் சம்மதத்துடன் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம். விவேக் மிகவும் நல்ல பையன்தான். அவனுக்கு அவனுடைய பேரண்ட்ஸ் மேல் நல்ல மரியாதை, அன்பு! அதைத் தவறென்று நான் சொல்ல மாட்டேன். அது அவன் இயல்பு. அவங்க மனசு நோகாம பார்த்து நடந்துக்கன்னு அடிக்கடி என் கிட்டே சொல்வான். எனக்கு என் மனசும் ரொம்ப முக்கியம். யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும். என்னால முடியல. விலகிட்டேன்!"


  "பூஜா, காரணம் எதவாயிருந்தாலும் நீ எடுத்த முடிவு சரியாகத்தானிருக்கும். எனக்கு அது முக்கியமில்லை"

  "இல்லை விக்ரம்! உனக்கு இது தெரிஞ்சுதான் ஆக வேண்டும். அப்போது, நான் வேலை பார்த்த கம்பெனியில் எனக்குப் புரமோஷன் கொடுத்து, அடுத்த ஒரு மாதத்தில் என்னை திடீரென்று யு எஸ் செல்லும்படிக் கூறினார்கள். அப்பொழுது நான் எதிர்பாராத விதமாய்க் கர்ப்பமாயிட்டேன். விவேக்கிட்ட பேசினேன். கலைச்சிடறேன்னேன்.


அவன் முதலில் மறுத்தாலும் பிறகு எனக்காக ஒப்புக் கொண்டான். ஆனால் அவனுடைய பெற்றோரும் என்னுடைய பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை! ஆனால், நான் கலைத்துவிட்டு யு எஸ் சென்றுவிட்டேன். திரும்பி வந்தவுடன் டைவர்ஸ்! விவேக் எவ்வளவோ சொன்னான்! அம்மா அப்பாவைக் கன்வின்ஸ் பண்ணிக்கலாம் என்று. என்னால் முடியவில்லை! ஒருதடவை அனுபவித்ததே போதுமென்று விலகி விட்டேன். இதில் விவேக் பாவம் தான். என்ன செய்வது? எனக்கு என் கேரியர் முக்கியமில்லையா? ஒரு பெண் தன்னுடைய சொந்தக்காலில் நிற்க நினைப்பது தவறா? இனி நீதான் முடிவு சொல்ல வேண்டும் விக்ரம். உனக்கு விருப்பமில்லையென்று சொன்னால் நான் கண்டிப்பாக உன்னைத் தவறாக நினைக்க மாட்டேன்"


  "இவ்வளவு வெளிப்படையாக நீ பேசப்பேச உன்மேல் எனக்கு இன்னும் அன்பு அதிகமாகிறது பூஜா. ஏன் அந்தக் கம்பெனியை விட்டு விலகி இங்கு வந்து சேர்ந்தாய்?"

   "அதைவிட இங்கு எனக்கு ஸேலரி அதிகம் விக்ரம். அதனால் தான் இங்கு வந்து சேர்ந்தேன்"

  "உன்னுடைய கேரியர் என்று எதைச் சொல்கிறாய் பூஜா? உன்னுடைய சம்பளம் அதிகமாவதையா?"


  "அதுவும் தான்! நம்முடைய வேலையில் நாம் முன்னேறிச் செல்வதின் ஒரு அளவுகோல்தானே சம்பள உயர்வு?"

  "வேறு என்னவெல்லாம் உன்னுடைய கேரியர் என்று நினைக்கிறாய் பூஜா?"

  "என்னுடை வேலையில் படிப்படியாக முன்னேறி ஒரு கம்பெனியின் சி ஈ ஓ ஆக வேண்டும்! ஏன்?"


  "என்னுடைய கனவும் அதுதான் பூஜா!"

  "வெரி குட். அதுதானே நல்ல முனனேற்றத்திற்கு அடையாளம்! போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்யலாம்! உன்னுடைய கனவை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக்கொடுக்காதே!"

  "தேங்க்ஸ் பூஜா. நாம் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வது?"

  "எப்போது நமக்குத் தோன்றுகிறதோ, அப்போது பெற்றுக் கொள்ளலாம்!"

  "அப்போது நமக்குக் கேரியர் ஆப்பர்சூனிட்டீஸ் ஏதாவது குறுக்கே வந்தால் என்ன செய்வது பூஜா?"


  "அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்"

  "இல்லை பூஜா, இது இப்போதே யோசித்து முடிவு பண்ணவேண்டிய விஷயம். என்னை நீ டைவர்ஸ் பண்ணினால் என்னால் தாங்க முடியாது. இப்போது என்னை நீ காதலிக்கவில்லை என்று சொன்னால் அது வேறு. தாங்கிக் கொள்வேன். நாம் சேர்ந்து வாழ்ந்த பிறகு என்னை நீ விட்டு விலகினால் நான் உடைந்துபோய் விடுவேன். ஒவ்வொருவர் மனதும் வெவ்வேறு உறுதிகொண்டது அல்லவா?"

   பூஜா சிறிது நேரம் காஃபியை ஸிப்பினாள். ஏனோ விவேக் அவள் மனதில் திடீரென்று தோன்றினான். யு. எஸ் இல் இருந்து திரும்பியவுடனே அவனைச் சந்தித்தது இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது.

  "பூஜா, தயவு செய்து என்னை விட்டுப் போகாதே. நம் பேரண்ட்ஸைக் கன்வின்ஸ் செய்து கொள்ளலாம்"


  "என்னால் முடியாது விவேக்! என்னுடைய நியாயமான விருப்பத்தைக் கூடச் சொல்லவும், செய்யவும் எனக்கு உரிமையில்லையா?"

  "இனிமேல் இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது குழந்தை பெற்றுக் கொள்ளலாம்"

  "பெண் என்பவள் குழந்தை பெறும் மெஷினா? அவளுக்கு வேறு விருப்பங்களே இருக்கக் கூடாதா?"

  "என்ன யோசனை பூஜா?" என்ற விக்ரமின் குரல் கேட்டுத் திடீரென நிகழ்காலத்திற்கு வந்தாள்.


  "பெண் என்பவள் வெறும் குழந்தை பெறும் மெஷினா, விக்ரம்? அவளுக்கு வேறு விருப்பங்கள் இருக்கக் கூடாதா?"

  "நான் அவ்வாறு ஒருக்காலும் சொல்ல மாட்டேன். ஆனால், தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை! அதை யாராலும் மறுக்க முடியாது. வேறு எல்லா விருப்பங்களையும் நீ நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால், தாய்மையை உதாசீனப் படுத்த முடியாது பூஜா! அது ஒவ்வொரு உயிர்க் கூட்டத்தையும் வாழ்விப்பதற்காக பரிணாமம் நமக்குள்ளே விதைத்திருக்கிற வித்து! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துதானே ஆகவேண்டும்"


  "அப்படியானால் ஒரு பெண் தனியாக வாழ முடியாதா?"

  "கண்டிப்பாகத் தனியாக வாழலாம். ஏன் முடியாது? ஆனால் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பிற்குள் வந்துவிட்டால், பார்ட்னரின் கருத்துக்களுக்கும் ஒரளவு உடன்பட வேண்டுமல்லவா? இதில் நீ உடன்படுகிறாயா? இல்லையா?"

   "உடன் படுதல, விட்டுக்கொடுத்தல் என்பதில் எல்லாம் வரைமுறைகள் இருக்கிறதா விக்ரம்?"


   "அது ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொருவர் மனதைப் பொறுத்து மாறும். எல்லோரும் எதையாவது விட்டுக்கொடுத்துதான் வாழ்ந்தாக வேண்டும். உண்மையில் நீயும் விட்டுக்கொடுத்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறாய்!"

  "இல்லையே, நான் என் மனதின் படித்தானே வாழ்ந்து கொணடிருக்கிறேன்!"

  "அப்படிச் சொல்ல முடியாது. உனக்கு சீக்கிரமே இரவில் தூங்க வேண்டும். இதை நீ பல முறை என்னிடம் சொல்லியிருக்கிறாய்! ஆனால், பல நாட்கள் இரவு நீண்ட நேரம் வேலை செய்திருக்கிறாய்!"


  "அது என் கேரியரில் நான் முன்னேற வேண்டுமென்பதற்காக!"

  "ஸோ, கேரியருக்காக தூக்கத்தை விட்டுக் கொடுத்திருக்கிறாய்! அதில் தவறில்லை. ஆனால், கேரியருக்காக உன் காதலையும், தாய்மையையும் விட்டுக் கொடுத்திருக்கிறாயே! அதுதான் சிறிது தவறு போல் எனக்குத் தெரிகிறது. தூக்கம் என்பது நீ மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம்! ஆனால், தாய்மை என்பது நீ மட்டுமன்றி உனது லைஃப் பார்ட்னர், உங்களது இரு குடும்பங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்டதல்லவா?"


  "அப்படியானால் நான் என் கேரியரை விட்டுக்கொடுக்க வேண்டுமா?"

  "கேரியர், முன்னேற்றம் எல்லாம் ஓரளவுக்குமேல் ஒரு விதமான மாயை. உனக்கு அப்போதைக்குக் கொஞ்சமே கொஞ்சம் சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். உன் அமெரிக்கப் பயணத்தால் என்ன உனக்கு முன்னேற்றம்?


டீம் லீட் ஆகிவிட்டாய். ஒரு இருபதாயிரம் ரூபாய் அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் அவ்வளவுதானே! ஆனால், குடும்பம், தாய்மை உன்னுடைய நீண்ட காலச் சந்தோஷம். உன் பாதுகாப்பு. உன்னுடைய நீண்ட காலச் சந்தோஷங்களுக்காக உன் குறுகிய காலச் சிறு சந்தோஷங்களை விட்டுக் கொடுப்பதுதானே நல்லது. அதைத் தானே அனைத்து மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்ஸூம் சொல்கிறார்கள்!"

  "அது எனக்குப் பெருமைதானே!"


  "உன் கம்பெனியில் மட்டும்தான் அந்தப் பெருமை! ஒரு டீக்கடை முதலாளியிடம் கேட்டுப்பார்! உன்னைவிட இரு மடங்கு சம்பாதிப்பார். அவரிடம் போய் 'நான் டீம் லீட்' என்றால் சிரிப்பார். ஏனென்றால் ஒரு கம்பெனிக்கு அவர் ஓனர்"

  பூஜாவின் உள்ளே ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தன. சிறிது நேரம் கண்களை மூடித் தலையைக் கவிழ்ந்து யோசனையில் இருந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவளாக எழுந்தாள்.


  "ஏய் பூஜா என்ன எழுந்திட்டே?"

  "சாரி விக்ரம், நான் போய் விவேக்கைப் பார்க்கப்போறேன்!"

  "பார்த்து?"

  "அவரையே மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். மறுமணம்!"

  "அவருக்குக் கல்யாணம் ஆகியிருந்தால்?"

  "ஆகவில்லை! முந்தாநாள் அவருடைய ஃபரென்ட் என்கிட்ட சொன்னான். எனிவே, தேங்க் யூ விக்ரம், என் கண்களைத் திறந்ததற்கு!"


  அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், ஒருமணி நேரத்திற்குள் தன் காதலுக்குத் தானே ஆப்பு வைத்துக் கொண்டதை நினைத்து அழுவதா? அல்லது பூஜாவின் காதலை வாழவைத்ததை நினைத்துச் சந்தோஷப் படுவதா என்று புரியாமல் குழம்பினான்.Rate this content
Log in

Similar tamil story from Romance