Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை - பாகம் 5

இதயத்தில் ஓர் இசை - பாகம் 5

4 mins
282


இதயத்தில் ஓர் இசை...!


பாகம் 5


"லவுஞ்சில் நடுநாயகமாக உட்கார்ந்திருந்த டீமோட கோச்சின் அருகில், கேப்டன் அசோக் மல்ஹோத்ரா அமர்ந்திருந்தான். மற்ற வீரர்கள் அனைவரும் சுற்றிலும் அமர்ந்து கேப்டனும் கோச்சும் டிஸ்கஸ் பண்ணும் விஷயத்தில் கவனத்தை வைத்திருந்தார்கள். செக்யூரிட்டிகள் ரசிகர்கள் கூட்டத்தையும், நிருபர்கள் கூட்டத்தையும் அப்புறப் படுத்துவதில் மிக மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். வினிதா, பம்பரமாகச் சுழன்று, அந்த வி.ஐ.பி கெஸ்ட்களுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொண்டும், மற்ற ரிசப்ஷனிஸ்டுகளுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுத்தும் மிக பிஸியாக இருந்ததாள். மொத்த டீம் மெம்பர்களும் அவரவர் சுவிட்களுக்குச் சென்றதும் மேனேஜரைப் பார்த்தாள் வினிதா.


"சார், நம்ம டீமோட ஓபனிங் பேட்ஸ்மேன், நம்ம தமிழ் நாட்டு வீரர் அருண் இன்னும் வரலியே.

அவர் நாளைக்கு நடக்கிற மேட்சில் விளையாடலியா?"


"அவர் சொந்த ஊருக்குப் போயிருக்கார். இன்னிக்கு அவர ரிசீவ் பண்ணி, அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டியது உன்னோட பொறுப்பு"


"என்ன சார் நீங்க? இதச் சொல்லணுமா? அதுதானே என்னோட வேலை!"


"சொல்ற வேலையெல்லாம் சரியா செய்றது இந்த ஹோட்டல்லயே நீதான்", என்ற மேனேஜர், ஏதோ நினைவுக்கு வந்தவராய்,

"அப்புறம் இன்னொரு விஷயம் வினிதா, அருண் வந்தவுடனே நீ எனக்கு இன்ஃபார்ம் பண்ணணும். நம்முடைய ஹோட்டல் சார்பில் நம்ம சேர்மன் அவருக்கு மட்டும் இருபது லட்ச ரூபாய்க்கு செக் தர்றதா சொல்லியிருக்கார். இது ரொம்ப கான்ஃபிடென்ஷியல். மற்ற பிளேயர்களுக்கெல்லாம் இது தெரிய வேண்டாம்னு நினைக்கிறார். இது விளம்பரத்திற்காக பண்றதில்லை. அருண் நம்ம தமிழ் நாட்டு பிளேயர் அப்படிங்கறதுக்காகப் பண்றது. ஸோ விஷயத்தை யார் கிட்டயும் லீக் அவுட் பண்ணிடாதீங்க"


"ஓகே சார். ஏஸ் யூ விஷ்", வினிதா சொல்லி முடிக்கும்போது அவளது செல் ஃபோன் சினுங்கியது.


மஞ்சு தான். 

"மும்பை போய்ச் சேர்ந்திட்டியா?" என்று வினிதா கேட்டு முடிப்பதற்குள்,"டைசனுக்கு நாளைக்கு பூஸ்டர் டோஸ் போடணும். மறந்துடாதே!" அவ்வளவு தான். கட் பண்ணி விட்டாள். டைசன் அவள் வளர்க்கும் ஜெர்மன் ஷெப்பர்ட். ரொம்ப புத்திசாலி. வினிதாவிடம் நன்கு ஒட்டிக் கொள்ளும். எல்லாம் சரி. ஆனால், இவ்வளவுதான் அக்காவுக்கு மரியாதையா? அவள் என்னைப் பற்றிக் கண்டு கொள்வதில்லை. 

நான் மட்டும் அவளிடம் நல்ல பேர் வாங்கனும்னு தவியாய்த் தவிக்கிறேன். ஏன்? என்னுடைய கோழைத்தனமா? அல்லது அக்கா என்ற பொறுப்புணர்வா? என்ன மண்ணாங்கட்டியோ? 


"எக்ஸ்கியூஸ் மீ, உங்களுடைய சிந்தனையைக் கலைத்ததற்கு மன்னிக்கவும்", என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். ஆறடி உயரத்தில் அழகான ஒரு திடகாத்திரன் நின்றிருந்தான்.


"சார்... நீங்க அருண்...மை காட்! உங்களுக்குத் தான் சார் வெய்ட் பண்ணிட்டருக்கோம்", பதட்டத்துடன் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் அவள் இதயத்தில் குடியேறியது.


"ஈஸி... ஈஸி... பதட்டப் படாதீர்கள். நீங்கள் பதட்டப் படும் போது இன்னும் அழகாகத் தெரிவதால், நான் பதட்டமடைகிறேன். இவ்வாறு பதட்டப் படுவது ஒரு பேட்ஸ்மேனுக்கு நல்லதல்ல", புன்னகைத்தான்.


அவன் புன்னகையில் ஒரு வசீகரம் இருந்தது. அவன் கண்களில் ஒரு ஈர்ப்பு இருந்தது. ஒரு கம்பீரம் இருந்தது. நீல நிற டீ ஷர்ட் அணிந்திருந்தான். உள்ளே வலிமையான மஸில்ஸ் தெரிந்தது. நீண்ட வருடங்களுப் பிறகு முதன் முறையாக வெட்கப் பட்டாள் வினிதா!


"ஐயோ, நீங்க வெட்கப் பட்டால் இன்னும் என் பதட்டம் அதிகமாகி விடும். பாருங்கள், என் இதயம் கன்னா பின்னானு துடிக்குது", இரு கைகளையும் தன் வலது பக்க மார்பின் மேல் வைத்து ஒரு பரிதாபப் பார்வை பார்த்தான்.


அவளுடைய தீரனும் இப்படித்தான். இவனைப் போலவே வாட்ட சாட்டமாக, இவனைப் போலவே அழகாக, இவனைப் போலவே நகைச்சுவையாக....ஓ மை காட்... நான் ஏன் தீரனுடன் இவனைக் கம்பேர் பண்ணுகிறேன்?


தன்னை ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவனைப் பார்த்து முறுவலித்து, லவுஞ்சில் வசதியாக அமரவைத்துப் பிறகு மேனேஜர் அறைக்குள் அவசரமாக ஓடினாள். 


"சார் அருண் வந்துட்டார், சார்"


மேனேஜர் இவள் சொன்னதைக் கேட்டதும் அவசரமாக வெளியே வந்து, லவுஞ்சில் அமர்ந்திருந்த அருணிடம் வந்து கைகுலுக்கி, முகம் மலர "வெல்கம் சார்! we are pleased to have you here"


"தேங்க்யூ சார்!" புன்னகைத்தான்.


"சார் உங்கள் அறைக்கு செல்வதற்கு முன் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் "


அருண் என்ன என்பது போல் பார்த்தான்.

"எங்க சேர்மன் உங்களை சந்திக்க விரும்புவதாகக் கூறுகிறார்"


"ஓகே, சந்திக்கலாமே!" என்று அருண் கூறிக் கொண்டிருக்கும் போதே, சேர்மன் வெளியே வந்து, "வெல்கம்,வெல்கம் மிஸ்டர் அருண். தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி",என்று அவனுடன் கைகுலுக்கி பின் மூவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். பின் வினிதா பக்கம் திரும்பி,

"மிஸ் வினிதா, அந்த லாக்கரில் இருந்து நான் சொன்ன அந்த செக்கை எடுத்து வாருங்கள்!"


அருண் மூவரையும் சற்று குழப்பமாக பார்த்தான்.


வினிதா செக்கை எடுத்து வந்து சேர்மன் இடம் நீட்டவும்,

அவர் வினிதாவை பார்த்து,

"மிஸ் வினிதா, உங்கள் கையாலேயே சாரிடம் செக்கை ஒப்படையுங்கள்"


அருண்,"சார் என்ன இதெல்லாம்?" என்று அவசரமாக எழுந்தான்.

சேர்மன் அவனை மீண்டும் இருக்கையில் அமரவைத்து,

"சார் நீங்க ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடிய அத்தனை மேட்ச் களிலும் செஞ்சுரி அடித்ததற்காக நாங்கள் தரும் ஒரு சின்ன பரிசு சார். அதை எங்களுடைய பெஸ்ட் எம்ப்ளாயி வினிதா கையால் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது எங்களுடைய ஒரு சின்ன வேண்டுகோள்"


"அப்படியானால் ஒன்று செய்யுங்கள். செக்கில் பெயரை மட்டும் 'சாரதா குழந்தைகள் காப்பகம்' என்று மாற்றிவிடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்",மீண்டும் அதே புன்னகை அவன் முகத்தில் வெளிப்பட்டது. அவன் புன்னகையின் வசீகரம் வினிதாவின் இதயத்தை என்னென்னவோ செய்தது.


சேர்மன் சந்தோசமாக மீண்டும் ஒரு செக்கில் 'சாரதா குழந்தைகள் காப்பகம்' என்று எழுதி கையெழுத்திட்டு வினிதாவிடம் கொடுத்து அருணிடம் கொடுக்கச் சொன்னார்.


அருண் அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்டு, ஹோட்டலின் சேர்மனைப் பார்த்து, 

"சார், உங்களிடம் ஒரு வேண்டுகோள்" என்று கேட்க 

"சொல்லுங்கள் மிஸ்டர் அருண் உங்களுக்கு இல்லாததா"


"சார், இந்தச் செக்கை இன்று மாலையே சாரதா குழந்தைகள்காப்பகத்தில் ஒப்படைக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு உங்கள் பெஸ்ட் எம்ப்ளாயி மிஸ் வினிதா வையும் என்னுடன் அனுப்பி வைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.ஏதாவது உங்களுக்கு சிரமம் இருந்தால் வேண்டாம்!"


"தாராளமாக அழைத்துச் செல்லுங்கள் மிஸ்டர் அருண். எங்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஈவினிங் அங்கு செல்ல உங்களுக்கு எத்தனை மணிக்கு வெகிக்கிள் அரேஞ்ச் செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்"


"ஈவினிங் சிக்ஸ் o'clock நான் ரெடி சார். மிஸ் வினிதா நீங்களும் ரெடியாய் இருங்கள்"


மூவரும் அருணை மரியாதை நிமித்தம் அவன் அறைக்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு திரும்பினர்.


வினிதா ரிசப்ஷன் திரும்பினாள். ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அவள் இதயத்தில் வந்து அழுத்தமாக அமர்ந்து கொண்டது. துள்ளி விளையாடியது. இதயம் படபடத்தது ஒவ்வொரு செல்லும் புத்துணர்ச்சி பெற்றது. சம்பந்தமே இல்லாமல் மனம் அருனையும் தீரனையும் ஒப்பிட்டுப் பார்த்தது. என்ன வினிதா உனக்குள் மீண்டும் ஒரு காதல் உருவாகிறதா என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அருகிலிருந்த கண்ணாடியை எதேச்சையாக பார்த்தாள். தன்னையே அறியாமல் தன்முகம் புன்னகையில் மலர்ந்து இருப்பதைக்கண்டு வெட்கப்பட்டாள். ஆனால் இது சரியா என்று அவளுக்கு தெரியவில்லை. அருணுக்கு திருமணம் ஆகிவிட்டதா இல்லையா என்பதுகூட அவளுக்கு தெரியாது. இப்பொழுது ஏன் இந்தக் கற்பனை? அறிவுக்கு இது சரி இல்லை என பட்டாலும் மனம் ஏன் அலைபாய்கிறது?


"என்ன வினிதா உன் முகத்தில் ஒரே சந்தோஷம்? ஈவினிங் அருணுடன் சாரதா குழந்தைகள் காப்பகம் செல்கிறாய் அதானே!"


ஆமாம் என்பது போல தலை ஆட்டினாள்.


"அப்ப அருணோட வைஃப் பூஜாவையும் நீ மீட் பண்ணலாம். அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களாம். அவங்கதான் அந்த குழந்தைகள் காப்பகத்தை நடத்தறாங்க"

    

             -தொடரும் 



Rate this content
Log in

Similar tamil story from Romance