இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 7)
இதயத்தில் ஓர் இசை...!(பாகம் 7)


இதயத்தில் ஓர் இசை...!
பாகம் 7
அருண் அவ்வாறு சொன்னதும் வினிதாவின் மனதில் ஒரு பக்கம் அதிர்ச்சி, ஒரு பக்கம் ஒரு சின்ன மகிழ்ச்சி, ஒரு பக்கம் அவன் மேல் ஒரு இரக்கம், ஒரு பக்கம் விதியின் மேல் ஒரு எரிச்சல் என்று பல கலவையான உணர்வுகள் மாறி மாறி வந்து அவள் இதயத்தை தாக்கின. அதற்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் மௌனமாக இருந்தாள். அருணிடம் இருந்து இந்த பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை. காலம் எப்படியெல்லாம் காய் நகர்த்துகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. சற்று நேரம் மௌனமாக இருந்தவள்," சாரி அருண்" என்றாள்.
"இதில் சாரி சொல்வதற்கு என்ன இருக்கிறது வினிதா, இதெல்லாம் சிலரது வாழ்க்கையில் நடக்கும் அதிசயமான வருந்தத்தக்க நிகழ்வுகள்தான். அதற்கு எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? அவரவருடைய வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து தானே ஆக வேண்டும்"
அதற்குள் அவர்கள் காப்பகத்தின் நுழைவுவாயில் அருகே வந்து விட்டார்கள். இவர்களைப் பார்த்த மேனேஜர் முத்துராமன் தன் இருக்கையிலிருந்து அவசரமாக எழுந்து ஓடிவந்தார்.
"வாங்க அருண் தம்பி, நீங்க வரப் போறதா சொல்லவே இல்ல. நீங்க ரெண்டு பேரும் குடிக்கிறதுக்கு காபி கொண்டு வர சொல்லவா" முகம் மலர இவர்கள் இருவரையும் வரவேற்று, நிர்வாகியின் பிரத்தியேக அறையில் அமர வைத்தார். குழந்தைகளுக்காக வாங்கிக் கொண்டு வந்திருந்த பிஸ்கட் பாக்கெட்களை மேனேஜரிடம் கொடுத்தாள் வினிதா.
விசாலமான அந்த அறையின் முகப்பில், டாக்டர் சாரதா எம் ஏ எம் ஃபில் பிஹெச்டி, நிர்வாகி என்ற வாசகங்களைத் தாங்கிய சிறிய போர்டு ஒன்று மாட்டப்பட்டிருந்தது. நீளமான வராண்டாவின் இருபக்கமும் இருந்த நிறைய அறைகளில் குழந்தைகள் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
வினிதாவின் கேள்விக்குறி தாங்கிய முகத்தைப் பார்த்து புன்னகைத்தான் அருண்
"சாரதா என்னுடைய அம்மா. அவர்கள்தான் இந்த குழந்தைகள் காப்பகத்தை நிர்வகித்து வருகிறார்கள். என்னுடைய அப்பா கோதண்டராமன், அருகிலுள்ள முதியோர் இல்லத்தை நிர்வகித்து வருகிறார்" அருண் தெளிவுபடுத்த, ஒரு அழகான புன்னகையை உதிர்த்தாள் வினிதா.
"நீங்கள் வருவது தெரியாததால் அம்மாவும் அப்பாவும் ஒரு ரிசப்ஷன் சென்றிருக்கிறார்கள். தெரிந்திருந்தால் இங்கேயே இருந்திருப்பார்கள்" மேனேஜர் சொல்ல
"பரவாயில்லை அங்கிள். நாங்கள் நாளைக்கு வருகிறோம்" மேனேஜர் வரவழைத்த காபியை பருகிவிட்டு இருவரும் அவரிடம் விடைபெற்று வெளியே வந்தனர்.
இவர்கள் வருவதைப் பார்த்த டிரைவர் காரின் கதவைத் திறந்து விட, இருவரும் உள்ளே அமர்ந்தவுடன், கார் ஹோட்டலை நோக்கி சென்னையின் ட்ராபிக் நெரிசலுக்குள் ஊர்ந்தது. ஸ்ட்ரீட் லைட்டுகளின் வெளிச்சம் மாறி மாறி வினிதாவின் வெண்ணெய் முகத்தில் வர்ணஜாலம் செய்தது. அருண் அவள் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்த வினிதா, சிறிது வெட்கப் பட்டாள்.
"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" என்றாள் ஒரு மிதமான புன்னகையுடன்.
"இந்த தேவதையின் அழகான முகத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன். சட்டென்று எனக்கு நினைவுக்கு வர மாட்டேனென்கிறது"
"போச்சுடா, மறுபடியும் ஆரம்பித்து விட்டீர்களா? நான் தான் சொன்னேனே நேற்று காலையில் ஹோட்டலில் பார்த்திருப்பீர்கள்!" என்றாள் வினிதா குறும்பாக.
"இல்லை வினிதா, ரியலி நான் பார்த்திருக்கிறேன்.எங்கே என்றுதான் எனக்கு ஞாபகம் வரவில்லை"
"சரி, நினைவு வந்தவுடன் சொல்லுங்கள். ஒன்றும் அவசரமில்லை" என்றாள் வினிதா ஒரு அழகான புன்னகை சிந்தியபடி.
"உங்கள் அழகான புன்னகையால் நான் மதிமயங்கிப் போவதால் எல்லாம் மறந்து விடுகிறேன். அதனால் தான் எனக்கு ஞாபகம் வரமாட்டேனென்கிறது" அருணின் குறும்பு பார்வையில், வினிதாவின் கன்னக் கதுப்புகளில் ஒரு மெல்லிய சிவப்பு நிறம் படர்ந்து அவளின் வெண்ணிலவு போன்ற முகத்தை மேலும் அழகூட்டியது.
"நீங்கள் கிரிக்கெட்டில் தான் பெரிய ஆள் என நினைத்தேன். ஒரு பெண்ணின் மனதைக் கவர்வதிலும் பெரிய ஆள்தான்"
வினிதா உதிர்த்த சொற்களில், வெட்கம் இன்பச் சாயம் பூசிக் கொண்டு விளையாடியது. அவளது கண்கள் அவளுக்கே தெரியாமல் ஒரு கிறக்கத்தில் மயங்கின.
"அப்படியானால் உங்கள் மனதை நான் கவர்ந்துவிட்டேனா?" ஆர்வத்துடன், கண்களில் காதல் மின்ன கேட்டான் அருண்.
"சில கேள்விகளுக்கு வார்த்தைகளால் பதில் சொல்ல முடியாது. உணர்வுகளினால் முகத்தில் ஏற்படும் மாறுதல்களாலும், உடல் மொழியினாலும் உங்களால் புரிந்து கொள்ள முடியாதா?" குறும்புடன் ஒரு காதல் பார்வை பார்த்தாள் வினிதா.
அந்தப் பார்வையின் மின்சாரம் அருணின் இதயத்தை தென்றலாய்த் தழுவியது. அவன் இதயம் வேக வேகமாய்த் துடித்து, காதல் ஆக்சிஜனை அவனுடைய ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பி, அவன் உடம்பில் ஒரு உஷ்ணம் தோன்றியது. வினிதாவின் வலது கையை தனது கரத்தால் மென்மையாகப் பற்றினான் அருண். இவ்வளவு மிருதுவாகக் கூட விரல்கள் இருக்குமா என்ன? வினிதாவும் அவனுடைய ஸ்பரிசத்தில் தன்னை மறந்த போது, கார் ஹோட்டல் வந்து நின்றது. இருவரும் தங்கள் கைகளை விடுவித்துக் கொண்டனர். டிரைவர் இறங்கி வந்து இரு கதவுகளையும் திறந்து விட இருவரும் காரை விட்டு இறங்கி, ரிசப்ஷன் நோக்கி நடந்தார்கள்.
ரிசப்ஷனில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஒரு மரியாதை நிமித்தம் வினிதா அருணுடன் அவனுடைய ரூம் வரை நடந்தாள். வராண்டாவில் இருவரும் மௌனமாகவே நடந்தார்கள். வினிதாவின் மனதில் ஏகப்பட்ட எண்ணங்கள். அவளது மனம் இறக்கை கட்டிக் கொண்டு வானில் பறந்தது. கடந்த இரண்டு வருடத்தில் இப்படி ஒரு ஆனந்தப் பரவசத்தில் அவள் மனம் இருந்ததில்லை. மறந்து போன இந்த உணர்வுகள் திடீரென்று புதிதாக இன்றுதான் முதன்முதலாக அனுபவிப்பது போல் உணர்ந்தாள். எப்படி அருணுடைய ஸ்பரிசத்தை நான் ஏற்றுக் கொண்டேன்? அவனது ஸ்பரிசம் என் இதயத்தில் ஏன் இவ்வளவு சிலிர்ப்பையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்தியது? நான் என்னை அறியாமலேயே அருணை காதலிக்கிறேன் என நினைக்கிறேன். இது சரியா இல்லை தவறா? இது உண்மையில் காதல்தானா அல்லது காமமா? நிச்சயமாக காமமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அருணை விட அழகான பல ஆண்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களும் என்னிடம் அன்பாக பேசி இருக்கிறார்கள். ஆனால் யார் மீதும் எனக்கு இந்த மாதிரி உணர்வுகள் வந்ததில்லை. ஆகவே இது கண்டிப்பாக காதல் தான். பலவாறாக வினிதாவின் மனம் சிந்தித்தது.
லிஃப்டினுள் நுழைந்து ஐந்தாவது ஃபுளோரில் வெளியே வந்தார்கள். அருண் தன்னுடைய அறைக் கதவைத் திறந்தான். இருவரும் அறைக்குள் வந்ததும், இருவரின் கண்களும் மொழிகள் இல்லாமல் பல விஷயங்களைப் பரிமாறிக் கொண்டன. காதலுக்கு மொழி தேவையில்லை. அது தானாகவே அதன் வேலையைப் பார்த்துக் கொள்ளும்.
அறைக் கதவு தானாக சாத்திக்கொண்டவுடன், அருண், வினிதாவின் தோள்களை மென்மையாகப் பற்றி தன்னுடன் அணைத்துக் கொண்டான். அவனுடைய மென்மையான அணைப்பில், வினிதாவின் மிருதுவான தேகம் தன்னை மறந்திருக்க,
"வினிதா, ஐ லவ் யூ" அருண் அவள் காதோரம் கிறக்கத்தில் கிசுகிசுத்தான்.
அருணின் அந்த சொற்களைக் கேட்டவுடன், வினிதா அவனை மேலும் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டாள். இருவரும் ஒரு பத்து நிமிடங்கள் தங்களை மறந்து விட்டார்கள். இது இன்னும் தொடரக்கூடாதா என்ற ஏக்கம் இருவருக்கும் இருந்தாலும், பெண்களுக்கே உரித்தான பாதுகாப்பு உணர்வுகளினால், வினிதா மெல்ல அருணுடைய அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். அருணும் தன்னை சுதாரித்துக் கொண்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள்.
தக்க
"வினிதா, இன்று என் வாழ்க்கையிலேயே மிகச் சிறப்பான நாள். இந்த நாளை என்றும் நான் மறக்க மாட்டேன்"
அருண் சொல்ல, வினிதா அவனைப்பார்த்து புன்னகைத்தாள். அந்தப் புன்னகையின் கிறக்கத்தில் இருந்து அருண் விடுபடும் முன்பாக, அவன் எதிர்பாராத விதமாய் அவனுடைய கன்னத்தில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத அருணின் இதயம் ஒரு குதிரையின் ஓட்டத்தில் துடித்து, இன்பத்தை அவனது ஒவ்வொரு செல்லுக்கும் பாய்ச்சியது. அந்த இன்ப மயக்கத்தில் இருந்து மீண்டு அவன் வருவதற்கு வெகுநேரம் ஆகியது.
அந்த நேரத்தில் கதவைத் திறந்து கொண்டு வினிதா வெளியே செல்லும்போது, அருணுடைய குரல், அவளைத் தடுத்து நிறுத்தியது.
"வினிதா, நாளைக்கு காலையில் சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒன் டே மேட்ச் இருக்கிறது. உனக்கு விஐபி கேலரியில் ஒரு இடம் ஏற்பாடு செய்கிறேன். நீ வந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். மேட்ச் முடிந்தவுடன் என் வீட்டிற்குச் சென்று உன்னை என் அம்மா அப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம் என்று இருக்கிறேன். நீ வருவாயா?"
"கண்டிப்பாக வருகிறேன் அருண். இப்பொழுது போய் நன்றாக ரெஸ்ட் எடுங்கள். அப்பதான் நாளைக்கு நன்றாக விளையாட முடியும்" என்றவள் மீண்டும் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு தன் வேலையை கவனிக்க விரைந்தாள்.
-தொடரும்